எட்டுக் கோடித் தமிழர்களும் குரல்கொடுத்தால், தமிழீழத்தை உலகம் அங்கீகரிக்கும் - பா.நடேசன்

எட்டுக் கோடித் தமிழர்களும் குரல் கொடுத்தால், தமிழீழத்தை உலகம் அங்கீகரிக்கும் என, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


பொங்கு தமிழாக, டென்மார்க் மண்ணில் அணி திரண்ட புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகளை நோக்கி, தமிழீழ தாயகத்தில் இருந்து காணொளி நேரஞ்சல் வடிவில் உரையாற்றிய, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைகளை நீக்கி, தமிழீழ தனியரசுக்கு அங்கீகாரம்பெற்று , விடுதலையை வென்றெடுப்பதற்கான பொறுப்பு, உலகெங்கும்வாழும் தமிழ் மக்களையே சார்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் வாழும் எட்டுக் கோடி தமிழ் மக்களும், தமிழீழவிடுதலைக்காக ஒருமித்துக் குரல்கொடுக்கும் பட்சத்தில், அதற்கு செவிசாய்த்து தமிழீழ தனியரசை உலகம் அங்கீகரிக்கும் என்றும்,தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த 1985ஆம் ஆண்டு, தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்பாலசிங்கம் அவர்களை, தமிழ்நாட்டில் இருந்து இலண்டனுக்கு இந்திய மத்திய அரசாங்கம் நாடு கடத்திய பொழுது, அதனை ஆட்சேபித்து வீதிகளில் இறங்கி, தமிழகத்தின் ஆறு கோடி தமிழ்மக்களும் முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக, அவரை மீண்டும் தமிழகத்திற்கு அழைப்பதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டதையும் பா.நடேசன் அவர்கள் நினைவூட்டியுள்ளார்.

மக்களின் எழுச்சி, எந்தவொரு உலக அரசினதும் மனச்சாட்சியை தொட்டுவிடும் என்பதை, இந்த நிகழ்வு தெளிவாக உணர்த்திநிற்பதாகவும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் தோறும் உள்ள அரசியல் தலைவர்கள், அரசியல்அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்களை சந்தித்து, தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும், வரலாற்றையும் எடுத்துவிளக்கி, தமிழீழ தனியரசுக்கான அங்கீகாரத்தை பெறும் வரலாற்றுப்பணியை, உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் ஆற்ற வேண்டும் என்றும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

எல்லா நாடுகளிலும் உள்ள தமிழ் மக்களும் ஒன்றிணைந்து, ஒரேசக்தியாகப் போராடி, தமிழீழீவிடுதலைப் போராட்டத்திற்கு வெளிநாட்டுமக்களின் உதவியைப் பெறுவதற்கான அரசியல் பணிகளை,விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், பா.நடேசன் கோரியுள்ளார்.

மேலும், ஈழத்தீவின் வரலாற்றில் தமிழீழ தனியரசை தவிர வேறுஎந்தத் தீர்வும் சாத்தியமில்லை என்பதை, உலக அரசுகளுக்கும்,கொள்கை வகுப்பாளர்களுக்கும், ஆணித்தரமாக புலம்பெயர்வாழ்தமிழீழ உறவுகள் எடுத்துரைக்க வேண்டும் என்றும், தமிழீழஅரசியல்துறைப் பொறுப்பாளர் அறைகூவல் விடுத்துள்ளார்.

Comments