ஆப்பிழுக்கத் தயாராகும் பொன்சேகா

எல்லோரும் ஏறிவிழுந்த கழுதையில் சக்கடத்தாரும் எறி சறுக்கி விழுந்தாராம் என்ற நக்கல் மொழி ஒன்று எம் மக்களிடையே வழக்கத்தில் உள்ளது.

பிரபாகரனை பிடிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு வடக்கில், மேல்வெடி வைத்துக்கொண்டிருக்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் அண்மைக்கால அறிக்கைகளைப் பார்த்தால் இவர் இராணுவத்தளபதிகள் வரிசையில் அடுத்த சக்கடத்தார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சிங்கள தேசமும் அதன் படைகளும் எதனை எல்லாம் புரிந்து வைத்திருக்கின்றன என்பதனை நோக்குவதை விட எவற்றை எல்லாம் இன்னமும் புரியாமல் இருக்கிறது என்பதனை பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

தற்போது விடுதலைப் புலிகளின் பெருங்கோட்டையாக விளங்குவது வன்னி. இதனை முற்றாகப் பிடித்துவிட்டால் புலிகளும் அவர்களின் தலைவர் பிரபாகரனும் அவ்வளவுதான்.

இதில் எந்த ஐயமும் இல்லை. இதனை கொழும்பில் இருந்துகொண்டு அரசின் ஊடகப்பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல போன்று பேசலாம் அல்லது காகிதத்தில் எழுதி வைத்து அழகு பார்க்கலாமே தவிர.
யதார்த்தத்தில் இது நடக்கக்கூடியதா? சாத்தியமானதா என்று பார்த்தால்தான் உண்மை நிலை புரியும்.

கடந்த சில மாதங்களாக மன்னாரில் நின்று பூச்சாண்டி காட்டிய கதை போன்று வன்னிக்கதையையும் தமது ஊடகங்களில் அளந்து தள்ளி சிங்கள மக்களின் காதுகளில் பூச்சுற்றுவதற்கே பொன்சேகா தலைமையிலான அரச படைகள் பெரும் பிரயத்தனம் செய்கின்றன.

உண்மையில் வடபோர் முனையில் புலிகளின் தந்திரோபாயங்கள் என்ன என்று சற்று ஆராய்ந்தால்தான் சிறிலங்கா இராணுவத்தளபதியின் எதிர்பார்ப்புக்களும் அதில் உள்ள பாரிய சிக்கல்களும் புரியும்.

மன்னார் எனப்படுவது இராணுவ ரீதியில் பார்க்கப்போனால், புலிகளுக்கு தமது கடற்பலத்தை உறுதி செய்தற்கான இடமாகவே ஆரம்பம் முதல் கருதப்பட்டு வந்த ஒன்று.தமிழீழ கடற்பரப்பு என்று பார்க்கையில் கிழக்கு முதல் வடக்கு ஊடாக சுற்றிவந்து மேற்கு வரை பெரும்பாங்கான கடலை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எந்தப் பெரிய போருக்கும் பெரும் பக்கபலமாக அமையும் என்பதில் புலிகள் என்றுமே அசையாத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆனையிறவு யாருக்குச் சொந்தமோ அவர்களுக்குத்தான் யாழ்ப்பாணம் சொந்தம் என்று தளபதி பிரிகேடியர் பால்ராஜ் கூறியது எவ்வளவு உண்மையோ தமிழீழத்தின் கடற்பரப்பு யாருக்கு சொந்தமோ அவர்களுக்குத்தான் தமிழீழம் சொந்தமானது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

அந்த வகையில் மன்னார் கடல் எனப்படுவது கடந்த காலங்களில் புலிகளின் சிறிலங்காவின் தென்பகுதி நோக்கிய நகர்வுக்கு நீர்கொழும்பு, புத்தளம் பகுதிவரை தடையின்றி பயன்படுத்தப்பட்டு வந்தமை அரச படைகள் ஒன்றும் அறியாதது அல்ல.

இருந்தும், அவர்களின் கண்ணில் மண்தூவி விட்டு கனகச்சிதமாக தமது காரியங்களை புலிகள் அரங்கேற்றி வந்தனர்.இராணுவம் கைப்பற்றி விட்டதாக அறிவித்துவிட்ட பின்னரும் மன்னார் எருக்கலம்பிட்டி பிரதேசத்திற்கு கடல் வழியாக சென்று தாக்குதல் நடத்தி முகாமை இரண்டு மணிநேரம் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து விட்டு அங்கிருந்து ஆயுதங்களையும் அள்ளி வந்துள்ளனர் என்றால் அது மன்னார் கடலில் புலிகளின் கை எவ்வளவு ஓங்கியுள்ளது என்பதற்கு சரியான சாட்சி.

மன்னாரில் கடந்த காலங்களில் 90-கள் முதல் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் முறியடிப்பு எல்லாமே படையினருக்கு பாரிய இழப்பை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டவையே தவிர, அங்கு தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டவை அல்ல.

அவ்வளவுக்கு மன்னார் இராணுவ ரீதியில் புலிகளுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ, பல்லாயிரக்கணக்கான போராளிகளை நிறுத்தி வைத்து அவசியம் தக்க வைத்திருக்க வேண்டிய பிரதேசமாகவோ இருக்கவில்லை.

இது கடந்த கால படை நடவடிக்கைகளிலேயே தெளிவான விடயம்.புலிகள் தமது படையணிகளை இப்பகுதிகளில் நிறுத்துவதும் பின்னர், பிரதான படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது அங்கிருந்து அப்புறப்படுத்தி வடக்கு களமுனைகளுக்கு அனுப்புவதும் காலகாலமாக நடந்து வந்த ஒன்று.

அந்த வகையில், இன்று புலிகள் மன்னார் விடயத்தில் பேணிவரும் இராணுவ உபாயமும் அதுவே.நாளையே, தாம் கைப்பற்றிய பகுதிகள் என்று இராணுவம் மார் தட்டிக்கொண்டிருக்கும் மன்னார் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை நோக்கி புலிகள் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டாலோ அல்லது மன்னார் இராணுவத்துக்கான பிரதான வழங்கல் பாதையாக இருந்து வரும் வவுனியா - மன்னார் வீதியை ஊடறுத்து ஒரு தாக்குதலை மேற்கொண்டாலோ நாளை மறுநாள், இராணுவம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் எங்கு நின்றதோ அங்கு போய் சரணாகதி அடைந்துவிடும்.

இராணுவத்தைப் பொறுத்த வரை ஒரு பற்றாலியன் பின்வாங்கி ஓடினால், அடுத்தடுத்த பற்றாலியன்கள், முதல் பின்வாங்கிய பற்றாலியனுக்கு முன்னரே இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்து விடும்.இந்த விடயம் இராணுவத்துக்கும் தெரியும்.

அதனால்தான் ஜெயசிக்குறு காலத்தில் தாம் விட்ட பிழையை மன்னார் விடயத்தில் விட்டு விடக்கூடாது என்ற அச்சத்துடன், தாம் கைப்பற்றிய பிரதேசங்களை தக்க வைத்துக்கொள்ளவும் அதன் பாதுகாப்பை முடிந்தளவு உறுதி செய்து கொள்ளவும் புதிய புதிய படைகளை களம் இறக்கியுள்ளது.

செயலணிப்படை 2 என்றும் 61 ஆவது படையணி என்றும் தப்பியோடிய இராணுவத்தினரை அழைத்து வந்து ஒருங்கிணைத்து புதிய படையணிகளாக்கி அவற்றை, தாம் கைப்பற்றிய இடங்களில் நிறுத்தி வைத்திருக்கிறது.ஆனால், இங்கு படைகளை குவிக்குமளவுக்கு புலிகள் அங்கு எந்த அசுமாத்தமும் காட்டவில்லை.

ஏனெனில், படையினருக்கு பாரிய இழப்பை கொடுக்கும் அளவுக்கு அங்கு சிறிலங்காவின் முக்கிய படைகளின் செறிவு இல்லை. மன்னாரை நோக்கி அரசு தனது முக்கிய படையணிகளை நகர்த்தி அங்கு தனது முழுக்கவனைத்தையும் திசை திருப்பினால் புலிகளின் பதில் வேறு மாதிரி அமையலாம்.
புலிகளின் இந்த உபாயத்தின் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு.அதாவது, இராணுவத்தின் மன்னார் நடவடிக்கை என்பது, பெயரளவில் இராணுவ நடவடிக்கை என்று கூறப்படுகின்ற போதும், அது தெற்கில் அரசியல் நடத்துபவர்களின் வாய்களுக்கு பொரி கடலையாக நடத்தப்படும் ஒரு அரசியல் நடவடிக்கை ஆகும்.

ஆட்கள் இல்லாத குடாநாட்டை கைப்பற்றிவிட்டு, யாழ். செயலகத்தில் தனது மாமனார் கொடியேற்ற, கொழும்பில் இருந்து எப்படி சந்திரிகா அம்மையார் புளகாங்கிதம் அடைந்தாரோ அதேபோன்று, புனித தலமாக மடுவை கைப்பற்றி விட்டு அதனை தெற்கில் காட்டி அரசியல் நடத்த வேண்டும் என்பது மகிந்தவின் நீண்டநாள் ஆசை.

மகிந்தவின் மடு ஆசை இன்று நேற்று வந்தது அல்ல அது அவர் ஆட்சிக்கு வரும்போது கூடவே வந்தது. (மகிந்த முன்னர் மடுவுக்கு போக புலிகளிடம் அனுமதி கேட்டதும் அதற்கு தமது பகுதிக்குள் வந்தால் அவருக்கு தமது பாதுகாப்பே அளிக்கப்படும். அரச படைகளின் பாதுகாப்போடு வரமுடியாது என்று புலிகள் அறிவித்தவுடன் தனது மடுப் பயண கனவை மகிந்த மூட்டை கட்டி வைத்ததும் பழைய கதைகள்)

ஆகவே, தென்னிலங்கையில் இவ்வாறு அரசியல் நடத்துவதற்காக நடத்தப்படும் இந்த இராணுவ நடவடிக்கைகளை எல்லாம் எதிர்த்து சமரிட்டு, முக்கியத்துவம் இல்லாத மன்னாருக்காக தமது போராளிகளை பலி கொடுக்க புலிகள் தயார் இல்லை. அதில் புலிகள் நூற்றுக்கு இரு சதவீதம் உறுதியாகவே உள்ளனர்.

ஆனால், இதே போன்றதொரு கள மௌனத்தை மணலாற்றிலோ முகமாலையிலோ வவுனியாவிலோ புலிகள் பேணுகிறார்களா என்பதனைப் பார்த்தால் புலிகளின் சமச்சீரற்ற இராணுவ அணுகுமுறையும் அதனுள் இராணுவத்தினருக்கு விரித்துள்ள வலையும் தெளிவாகப் புரியும்.

மன்னார் போன்றுதான் கடந்த மாதம் முகமாலையில் இருந்து இராணுவத்தினர் பெரும் எடுப்பில் முன்னேறினர். நடந்தது என்ன?

அடிக்கடி மணலாற்றிலும் வவுனியா குஞ்சுக்குளம் பகுதியாலும் இராணுவம் இவ்வாறான நடவடிக்கைகளில்தான் முனைப்படைந்து போய் உள்ளது. நடப்பது என்ன?

முகமாலையில் ஒரே நாளில் நடந்தது, மணலாற்றிலும் வவுனியாவிலும் தவணை முறையில் நடக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். படையினரின் உடலங்கள் தெற்கிற்கு அனுப்பப்பட்ட வண்ணமே உள்ளன.ஆனையிறவை மீண்டும் கையகப்படுத்தும் இராணுவத்தின் நப்பாசை அக்கினிச்சுவாலையில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டே உள்ளது.

அதற்கு அகரம் எழுதும் வகையில் முகமாலையால் அடம்பிடித்துக்கொண்டிருக்கும் படையினருக்கு புலிகள் வைத்திருக்கும் மருந்து மன்னாருக்கு ஏன் தேவையற்றது என்பது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு புரிய வாய்ப்பில்லைதான்.அதே போன்றுதான் மணலாறும்.

மணலாற்றால் முன்னேறி முல்லைத்தீவுக்குள் கால் பதித்து விடலாம் என்பது படையினரின் அடுத்த திட்டம்.புலிகள் மணலாற்றிலிருந்து திருப்பி ஒரு தாக்குதல் தொடுத்தால், அங்கு குடியமர்த்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களின் கதி என்ன என்பதை எல்லாம் கணக்கெடுக்காமலேயே இராணுவம் அங்கு அடம்பிடித்துக்கொண்டுள்ளது.

மணலாற்றுக்குள் கால் வைத்த இந்தியப் படைகள் உட்பட எல்லாப் படைகளும் புலிகளிடம் நல்ல பாடம் கற்று திரும்பியதே வரலாறு.மணலாறு காட்டுக்குள் விதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளினால் தாம் பட்டபாடு குறித்தும் புலிகளின் காடு சார்ந்த இராணுவ உபாயங்களுக்குள் எப்படி அகப்பட்டோம் என்பது பற்றியும், பிரபாகரனை பிடிப்போம் என்று புறப்பட்டு வந்த பல முன்னாள் இந்திய இராணுவத் தளபதிகள் இன்றும் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

இராணுவம் கூறுவதனைப் போன்று வன்னிக்குள் வந்து விடுவது அவ்வளவு சுலபம் என்றால் ஜெயசிக்குறு நடவடிக்கை ஏன் இரண்டு வருடங்கள் நடந்தது என்பதை பொன்சேகா அன் கொம்பனி கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆனையிறவை கையில் வைத்துக்கொண்டே வன்னிக்குள் வர இரண்டு வருடங்களாக தவில் அடித்தவர்கள் கடைசியில் புலிகளின் பதிலடியில் ஒரு வாரத்தில் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் போய் நின்றார்கள்.

இன்று எந்தக்கேந்திர முக்கியத்துவமும் இல்லாத மன்னாரை பின்னணியாக வைத்துக்கொண்டு முல்லைத்தீவை பிடித்து புலிகளின் தலைவரை பிடிக்கப்போவதாக அறிக்கை விடுகின்றனர்.

ஆகவே, புலிகளின் இராணுவ தந்திரோபாயம் என்பது ஆளணி ரீதியான இழப்பை கூடியளவுக்கு குறைத்துக்கொள்வதை அடிப்படையாக கொண்டதே தவிர, எந்த திட்டமிடலும் இன்றி தென்னிலங்கை அரசியல்வாதிகள் நடத்தும் போருக்கு எல்லாம் பதில் சொல்லும் நிலையில் இல்லை.

இந்த வகையில், மகிந்த சகோதரர்களின் கைப்பொம்மையாக களத்தில் நின்றுகொண்டு மன்னார் பற்றியும் மணலாறு பற்றியும் நகைச்சுவை அறிக்கைகளை அள்ளிவீசும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவால் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மகிழ்ச்சியடையலாம். மகிந்த வீட்டில் பாற்சோறு பொங்கலாம்.

ஆனால், வன்னிக்குள் கால்லைத்த படைகள் ஆப்பிழுத்த குரங்காக அடிவாங்கும் போதும் காலி வீதியில் இரத்மலானைக்கும் கொழும்பு மருத்துவமனைக்கும் இடையில் அம்புலன்ஸ் வாகனங்கள் ஓடும் போதுதான் விடயங்கள் அம்பலத்துக்கு வரும். சிங்கள தேசத்துக்கு உண்மைகள் புரியும்.

-ப.தெய்வீகன்-

Comments