கடற்புலிகளின் தாக்குதல்களால் தோன்றியுள்ள புதிய நெருக்கடி

அண்மைக்காலமாக இலங்கை மீதான மேற்குலகத்தின் அழுத்தங்கள் படிப்படியாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பேச்சுக்களும் மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகின்றன.

உலகின் இந்த மாற்றத்திற்கு இந்துமா கடலில் ஏற்பட்டுவரும் முனைவாக்கம் ஒரு முக்கிய காரணமாகும். தென் ஆசியாவை பொறுத்தவரையில் அங்கு அமைந்துள்ள எட்டு நாடுகள் மீதான பார்வைகள் தற்போது அதிகம். ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் என்பன மீதான மேற்குலகத்தின் கவனம் தற்போது அதிகரித்து செல்கின்றது. இந்த வலையத்திற்கு வடக்கு மற்றும் மேற்காக சீனா அமைந்துள்ளது, மத்திய கிழக்கு, பல்கன் நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இதற்கு மேற்காக அமைந்துள்ளன.

உலகின் கவனப்புள்ளியை பொறுத்தவரையில், 19 ஆம் நூற்றாண்டு அத்திலாந்திக் பிராந்தியத்தையும், 20 ஆம் நூற்றாண்டு பசுபிக் பிராந்தியத்தையும், 21 ஆம் நுõற்றாண்டு இந்து சமுத்திர பிராந்தியத்தையும் நோக்கி முனைப்பு பெற்று வந்துள்ளதும், வருவதும் நோக்கதக்கது.

இதனை எதிர்கொள்வதற்காக இந்து சமுத்திரத்தின் வலையத்தில் உள்ள 14 நாடுகள் 1997 ஆம் ஆண்டு தமக்கிடையில் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கியிருந்தன.

இதன் முக்கிய நோக்கம் அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்களை பேணுவதாகும்.ஆனால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் யார் ஆளுமையை கொண்டுள்ளனரோ அவர்கள் அத்திலாந்திக் மற்றும் பசுபிக் சமுத்திரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களை கட்டுப்படுத்தும் தகமை பெற்றவர்கள் என்பதும் முக்கியமானது.

இதற்கு காரணம் இந்து சமுத்திரம் அத்திலாந்திக் மற்றும் பசுபிக் கடல்களுடன் தொடர்பை கொண்டுள்ளதாகும். எனவேதான் இந்து சமுத்திர பிராந்திய கூட்டமைப்பில் அதனை சூழவுள்ள 35 நாடுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இந்து சமுத்திர பிராந்தியம் 40 சதவீத எண்ணை உற்பத்தியை கொண்டுள்ள போதும் அதன் முக்கியத்துவம் கடற்போக்குவரத்திலேயே அதிகம் சார்ந்துள்ளது. இது உலகின் அரைப்பங்கு கொள்கலன்கள் ஏற்றிய சரக்கு கப்பல்கள், மூன்றில் இரு பகுதி எண்ணை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்து பாதையாகும்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் எரிபொருள் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. எனவே தனது எரிபொருள் வர்த்தகத்தை முன்னிறுத்தி கடல் பாதைகளை தன்னகப்படுத்த சீனா முனைப்புக் காட்டி வருகின்றது.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் உலக சனத்தொகையில் கால் பங்கினர் வசிக்கின்ற போதும், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளிடம் பிரிவினைகளை பேணுவதற்கே முயன்று வந்துள்ளன.

ஆனால் இந்து சமுத்திர பிராந்தியத்தின் வல்லரசாக இந்தியா தன்னை நிலைநிறுத்த முற்பட்டு வருகின்றது.ஆனால் கடலிலும், வானிலும் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை இந்தியாவுக்கு உண்டா என்பது கேள்விக்குறியானது. எனினும் இந்தியாவினால் அயல்நாடுகள் மீது படை பலத்தை பிரயோகிக்க முடியும். பொருளாதாரத்திலும், படை பலத்திலும் ஆசிய பிராந்தியத்தில் பிந்திய வரவை கொண்டுள்ள இந்தியா தற்போது ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசிய நாடுகளுடன் தனது பொருளாதார அபிவிருத்திகளில் முனைப்பு காட்டி வருகின்றது.

1950 களில் இருந்து நடைபெற்ற போர்களில் அமெரிக்க படையினர் தமது ஆயுதங்களின் மூலம் வெற்றியீட்டவில்லை, அவர்களின் பொருளாதார வளர்ச்சியே வெற்றிகளை பெற்று கொடுத்திருந்தது என்பது பல ஆய்வாளர்களின் வாதம். எனினும் இந்தியாவினதும் சீனாவினதும் வளர்ச்சிகள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆளுமைக்கு பெரும் சவாலாக மாறி வருவது கவனிக்கத்தக்கது.

இலங்கையில் உள்ள தொழிற்சாலைகள், துறைமுகங்கள், அபிவிருத்தி திட்டங்கள், இயற்கை வளங்கள் என்பவற்றில் தமது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு அவை முனைப்புக் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பலம் பொருந்திய நாடுகளின் பூகோள அரசியலில் இலங்கை இனப்பிரச்சினையும் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அதாவது தென்னாசிய பிராந்தியத்தின் ஆழுமை தொடர்பான இந்த இழுபறிகள் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான விடங்களை புறம்தள்ள முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ளது.

கடல் ஆதிக்கம் தொடர்பான பலப்பரீட்சைகள் வலுப்பெற்றுவரும் இந்து மாகடலில் கடற்புலிகளின் வலிமையும், தாக்குதல் திறனும் அதிகரித்து வருவதும் நோக்கத்தக்கது.


கடந்த மாதம் சிறுத்தீவு பகுதியில் அமைந்திருந்த இராணுவ மற்றும் கடற்படை கூட்டுப்படை காவல்நிலை மீது தாக்குதலை நடத்திய விடுதலைப்புலிகளின் ஈரூடகப்படையினர் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நாகர்கோவில் கரையோரத்தில் தரையிறக்கம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலில் இராணுவத்தின் காவலரண்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர். கடந்த மாதம் மன்னார் நகரத்தின் கரையோரம் அமைந்திருந்த கொந்தைபிட்டி காவல்நிலையத்தின் மீதும் சிறுத்தீவில் அமைந்திருந்த படைநிலை மீதும் தாக்குதலை நடத்திய விடுதலைப்புலிகளின் ஈரூடகப்படையினர் இந்த மாதத்திலும் குறுகிய காலப்பகுதியில் மிகவும் துணிச்சல் மிக்க இரு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் மன்னாரில் விடத்தல்தீவு பகுதியில் இருந்து 6 விசைப்படகுகளில் வந்த விடுதலைப்புலிகளின் ஈரூடகப்படையினர் மன்னார் நகரத்திற்கு வடமேற்காக 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள எருக்கலம்பிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவ கடற்படை கூட்டு காவல்நிலையத்தை தாக்கி அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பத்து நிமிடங்களில் முகாமை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த விடுதலைப்புலிகளின் கொமோண்டோக்கள், அதனை அதிகாலை 4.00 மணிவரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், பெருமளவான ஆயுதங்களையும், நவீன ராடர் சாதனத்தையும் கைப்பற்றியதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

21 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட்டின் ஆளுமையின் கீழ்வரும் இந்த பகுதியில் இராணுவத்தின் கஜபா றெஜிமென்டை சேர்ந்த ஏ கொம்பனி இராணுவத்தினரும் கடற்படையினருமாக ஒரு பிளட்டூன் துருப்புக்கள் நிலை கொண்டிருந்தன.

எருக்கலம்பிட்டி கடற்படைத்தளம் மன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பகுதிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததுடன், மன்னார் நகரத்திற்கு விடுதலைப்புலிகளின் ஊடுருவல்களை தடுப்பதற்கான செயற்பாடுகளையும் கொண்டிருந்தது.

81 மி.மீ மோட்டார்கள், 0.50 கலிபர் துப்பாக்கி போன்ற கனரக ஆயுதங்களை கொண்ட இந்த முகாமில் ஏறத்தாள 5,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடல் கண்காணிப்பு ராடரும் பொருத்தப்பட்டிருந்தது. ஜப்பானிய தயாரிப்பான ஊக்கீக்NO கடற்கண்காணிப்பு ராடர் 36 தொடக்கம் 48 கடல்மைல் தூரவீச்சுக் கொண்டது. மிகவும் உணர்திறன் மிக்க இந்த ராடர் நீர்ப்பாதுகாப்பு கொண்டதுடன், இலகுவாக கையாளக்கூடியதுமாகும்.

இந்த தாக்குதலை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை திட்டமிட, கடற்புலிகளின் கடல் தாக்குதல் கட்டளை தளபதி லெப். கேணல் இளங்கோ வழிநடத்த, ஈரூடகப்படையினரின் தாக்குதலை கடற்புலிகளின் கட்டளை தளபதி லெப். கேணல் விடுதலை வழிநடத்தியிருந்தாகவும் இந்த தாக்குதலில் தமது தரப்பில் 5 போராளிகள் பலியானதாகவும் விடுதலைப்புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எதிர்த்தாக்குதலை நடத்தும் பொருட்டு தலைமன்னார் கடற்படைத்தளத்தில் இருந்து நீருந்து விசைப்படகுகள் புறப்பட்ட போதும், கடற்புலிகளின் வழி மறிப்பு தாக்குதல்களினால் அது பின்னர் கைவிடப்பட்டிருந்ததாக புலிகள் தெரிவிக்கின்றனர்.

கடற்புலிகளின் தாக்குதலை தொடர்ந்து விமானப்படையின் எம்ஐ24 ரக தாக்குதல் உலங்குவானுõர்தி ஒன்று தாக்குதலில் ஈடுபட்ட போதும் தளத்தில் இருந்து கனரக ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் வெளியிட்ட புகைப்படங்களில் நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழியில் இருந்து 200 இற்கும் மேற்பட்ட 81 மி.மீ மோட்டார் எறிகணைகளும் அதற்குரிய இரு 81 மி.மீ எறிகணை செலுத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏறத்தாள 5.6 கி.மீ தூரவீச்சுக் கொண்ட இந்த மோட்டார்களை விடுதலைப்புலிகளின் இலகுகாலாட்படையினர் பெருமளவில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் அண்மைக்காலமாக அவர்களின் கடல்சார் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரு மாதங்களில் நான்கு தரையிறக்கங்களையும், நடைபெற்றுவரும் நான்காம் ஈழப்போரில் 6 இற்கு மேற்பட்ட தரையிறக்க தாக்குதல்களையும் புலிகள் மேற்கொண்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் கடற்புலி கொமாண்டோக்களின் இந்த தாக்குதல்கள் பல நோக்கங்களை கொண்டவை.
அதாவது,
தமது கொமாண்டோ அணியினருக்கான பயிற்சிகள்,
சிறிய தாக்குதல் மூலம் அதிகளவான கனரக ஆயுதங்களையும்,
ராடர் போன்ற நவீன படைக்கல ஆதரவு சாதனங்களையும் கைப்பற்றுதல், பரந்த நீண்ட கடல் எல்லைகளை நோக்கி படையினரின் வளங்களை திருப்புதல் போன்ற பல நோக்கங்களை கொண்டவை.

கடந்த இரு வருடங்களில் நடைபெற்ற நெடுந்தீவு, சிறுத்தீவு, எருக்கலம்பிட்டி படை கண்காணிப்பு நிலைகள் மீதான தாக்குதல்களில் மொத்தமாக 03 கண்காணிப்பு ராடார்கள், ஐந்து 0.50 கலிபர் துப்பாக்கிகள், இரு 81 மி.மீ மற்றும் இரு 60 மி.மீ மோட்டார்கள் என்பவற்றுடன் பெருந்தொகையான சிறிய ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மூன்று நடவடிக்கைகளிலும் ராடர் நிலையங்களை கைப்பற்றுவதே விடுதலைப் புலிகளின் பிரதான தாக்குதல் இலக்காக இருந்துள்ளது. இங்கு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் நீண்ட தூர கனரக ஆயதங்கள் கணிசமானவை.


அதாவது ராடரின் பாதுகாப்புக்கும், வான் எதிர்ப்புத் தாக்குதலுக்கும் என்றே அவை அங்கு குவிக்கப்பட்டிருந்தன. மேலும் ராடர் நிலையத்தின் பாதுகாப்பே இந்த நிலைகளில் முதன்மைப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த ராடர் நிலைகளின் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் படையினரிடம் மேலோங்கி இருந்தது.
அதாவது கண்காணிப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிலைகள் பெருமளவான படைபலம் குவிந்துள்ள யாழ். குடாநாட்டுக்கான மேற்குப்புற நுழைவாயிலின் எல்லைகளில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எருக்கலம்பிட்டி தளத்தில் யாழ். குடாநாட்டில் படையினர் வசம் உள்ள ராடர்களில் மிக நவீனமான ராடர் பொருத்தப்பட்டிருந்ததுடன், அதிக தூரவீச்சுக்கொண்ட இந்த ராடரின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான பூநகரி தொடக்கம் விடத்தல்தீவு வரையான பகுதிகளும் மன்னாரின் மேற்குப்புற கடற்பகுதிகளும் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வந்தது.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் ஆரம்பமாகிய பின்னர் இலகுவாக நகர்த்தப்படும் வான்பாதுகாப்பு ராடர்களின் தேவை படையினருக்கு அதிகரித்திருந்தது.

மன்னார் வான்பரப்பில் பறக்கும் விடுதலைப் புலிகளின் விமானங்களை அவதானிப்பதுடன், விடுதலைப் புலிகளின் விமானங்கள் மேற்கு வாசலின் ஊடாக குடாநாட்டுக்குள் ஊடுருவுவதை கண்காணிக்கும் பணியையும் நெடுந்தீவு, எருக்கலம்பிட்டி தளங்கள் மேற்கொண்டு வந்திருந்தன.

ஆனால் விடுதலைப்புலிகளின் உத்திகள் வேறுபட்டவை, அதாவது வான் தாக்குதல்களை தடுப்பதற்காக படையினர் குவித்துள்ள கனரக ஆயுதங்களை சிறிய அதிரடிகள் மூலம் இலகுவாக கைப்பற்றி சென்றுவிடுகின்றனர்.

தமது இழப்புக்களை குறைவாக பேணியபடி தமக்கு தேவையான நவீன ராடர் கருவிகள், நீண்டதூர கனரக ஆயுதங்கள் என்பவற்றை விடுதலைப்புலிகள் அண்மைக்காலமாக குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது நோக்கத்தக்கது.

விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்படும் இந்த நவீன ராடர்கள் வருங்காலத்தில் படையினரின் நடமாட்டங்களை கண்காணிக்க உதவும் என்பதும், தமது கண்காணிப்பு நிலைகளை பாதுகாப்பதற்கு படையினருக்கு அதிக படை வளங்கள் தேவை என்பதும் படையினருக்கு தற்போது தோன்றியுள்ள புதிய நெருக்கடிகள்.
- வேல்ஸிலிருந்து அருஷ்

Comments