சாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தவன்

'சாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தாய் கால வெளியில் சுவடுகள் பதித்தாய் காலக் கரைவிலும் உந்தன் சுவடுகள்..."

பொன். சிவகுமாரனின் 15 ஆவது ஆண்டு நினைவின் போது 1989 ஆம் ஆண்டில் என்னால் எழுதப்பட்ட கவிதையின் சில வரிகள் இவை.

34 ஆண்டுகள் காலத்துள் கரைந்து சென்றாலும் அவனது சுவடுகள் இன்னமும் ஒளிர்ந்த வண்ணமேயே உள்ளன. அவனுடனான நினைவுகளும் என்னுள் கிளர்ந்த வண்ணமேயே உள்ளன.

1974 ஜனவரி 10 ஆம் நாளில் இருந்து அவனது இறுதி நாளான 1974 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் நாள் வரையில் நான் அவன் கூடவே இருந்தேன். அந்த ஐந்து மாதங்களும் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் எழுச்சிக்கான ஒரு காலகட்டமெனவும் குறிப்பிடலாம்.

திரவியம் என வீட்டாராலும் நெருக்கமானவர்களாலும் அழைக்கப்பட்ட உரும்பிராய் கிராமத்தைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் தனது மரணத்தின் மூலம் ஈழப் போராட்டத்திற்கு சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப் போராளியாகி ஈழப்போராட்டத்தை முன்நகர்த்தினான்.

தன் சாவின் மூலம் தமிழ்ச் சமூகத்தை, குறிப்பாக அன்றைய இளந்தலைமுறையை ஒரு உலுக்கு உலுக்கினான்.
அவன் தனது மாணவப் பருவத்தில் ஒரு சமூகப் போராளியாகவே அரசியலுக்குள் நுழைந்தான்.

1960-களின் பிற்கூறு இலங்கைத்தீவின் இன்றைய நிலைமைக்கான பல முகிழ்ப்புகளைக் கொண்டிருந்தது என்றால் மிகையில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட சாதிய தீண்டாமைக்கு எதிரான வெகுஐன இயக்கப் போராட்டங்கள், சீனக் கலாச்சாரப் புரட்சி, பிரான்சில் எழுந்து உலகெங்கும் பரவிய மாணவர் கிளர்ச்சிகள், தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட, தமிழரசுக் கட்சியின் மூளையென வர்ணிக்கப்பட்ட நவரெத்தினம் அமைத்த சுயாட்சிக் கழகத்தின் தோற்றம், இரசியாவில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ரோஹண விஐயவீர இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் தனியான கட்சியை அமைத்தும் இளம் கிளர்ச்சிக்காராக தோற்றம் பெற்றமை போன்ற இன்னோரன்ன நிகழ்வுகளை உள்ளடக்கிய காலகட்டம் அது.

இவை யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சிவகுமாரனைப் பாதித்தது ஆச்சரியம்தான். சிவகுமாரன் கம்யூனிசக் கருத்துக்கள் கொண்ட நண்பர்களுடன் உறவுகளைப் பேணுவதிலும் சமூக நீதிக்கான செயல்பாடுகளை முன்னெடுப்பதிலும் ஈடுபாடு கொண்டவனாக இருந்தான்.

யாழ்ப்பாணக் குடநாட்டில் எழுச்சிபெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டத்தால் சிவகுமாரன் ஈர்க்கப்பட்டான். ஆர்வத்துடன் அதில் பங்கேற்றான்.
இவ்வேளையில்தான் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய முன்னணி அரசமைத்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட ஐக்கிய முன்னணியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஐக் கட்சியும் இணைந்திருந்தன.

ஐக்கிய முன்னணி அரசில் கல்வியமைச்சராக பதவியேற்ற பதியுதீன் முகமது அவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு புள்ளிகள் அடிப்படையிலான தரப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை எதிர்க்கும் வகையில் மாணவர் பேரவை அமைக்கப்பட்டது. அந்த மாணவர் அமைப்பில் சிவகுமாரனும் முக்கிய பங்கெடுத்தான்.

இந்த ஐக்கிய முன்னணி அரசில் இணைந்திருந்த லங்கா சமசமாஐக் கட்சியின் மூத்த தலைவரான கொல்வின் ஆர் டி சில்வாவினால் வரையப்பட்ட புதிய அரசியல் யாப்பின்படிதான் 1972 மே 22 ல் இலங்கைத்தீவு சிறிலங்கா பொளத்த குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது.
1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தரப்படுத்தலுக்கு எதிரான கண்டன ஊர்வலத்தை மாணவர் பேரவை யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. பின்னர் திருகோணமலை, மட்டக்களப்பு நகரங்களிலும் நடாத்தப்பட்டது. இந்நடவடிக்கைகளில் பற்கேற்ற சிவகுமாரன் சாத்வீக நடவடிக்கைளில் திருப்தியுறாமல் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கினான்.

ஆதலால் பத்திரிகைச் செய்திகளில் அவனது பெயர் அடிபடத் தொடங்கி இருந்தது. யாழ்ப்பாண பிரதான வீதிக்கு அருகே அப்போதைய யாழ்பாண மேயர் துரையப்பாவின் காருக்குக் குண்டு வைத்தது, அப்போதைய ஐக்கிய முன்னணி அரசின் அமைச்சராக இருந்த சோமவீர சந்திரசிறியின் காருக்கு உரும்பிராயில் வைத்துக் குண்டெறிந்தது என்பன போன்ற சம்பவங்களில் அவனது பெயர் பரபரப்பாகப் பேசப்பட்டது. இவற்றிற்காக அவன் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண விளக்கமறியலில் வைக்கப்பட்டான்.
சிறைக்குள்ளும் அவன் கலகக்காரனாகவே இருந்ததனால் அவன் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தான். அவனது வழக்குகளுக்கான ஒவ்வொரு தவணையின் போதும் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படுவான்.

அவனது வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமல் தவணைகளாக இழுத்தடிக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே அலைக்கழிக்கப்பட்டான். அப்படியாக யாழ்ப்பாணச் சிறைக்கு கொண்டு வந்த ஓரு பொழுதினில்தான், 1972 மே மாதத்தில் நான் சிவகுமாரனை முதலில் சந்தித்தேன். நான் அப்போது மே 22 ஆம் நாள் குடியரசுப் பிரகடனத்தை எதிர்த்து இடம்பெற்ற கிளர்ச்சியில் கைதானவர்களில் ஒருவனாக யாழ்ப்பாணம் சிறையில் இருந்தேன்.

1973 இன் பிற்பகுதியில் மலையக மக்களுடன் உறவைப் பேணவேண்டும் என்ற வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டபோது அதில் சிவகுமாரன் ஆர்வத்துடன் பங்கேற்று எங்களுடன் மலையகம் வந்திருந்தான்.
மலையகத்தில் இருந்து நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பியபோது நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. (மாநாட்டை கொழும்பில்தான் நடத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் நெருக்குதல்களை மீறி அமைப்பாளர்கள் யாழ்பாணத்தில் நடத்த முடிவெடுத்திருந்தனர.) ஆனால், எங்களைப் போன்ற இளம் சமூக ஆர்வலர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே கணிக்கப்பட்டிருந்தோம். இது எங்களுக்குச் சினத்தை மூட்டியது.

சிவகுமாரன் தலைமையில் யாழ்ப்பாண பிரதான வீதியில் அமைந்திருந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் செயலகத்திற்குச் சென்றோம். மாநாட்டுப் பொறுப்பாளர்களைச் சந்தித்து நாங்களும் பங்களிக்கும் வகையில் செயல் திட்டத்தை வகுக்கும்படி கோரினோம்.

முதலில் அவர்கள் மறுத்தார்கள். அப்படியானால் எங்கள் பங்களிப்பு இல்லாமல் மாநாடு நடைபெற முடியாது என சிவகுமாரன் எச்சரித்தான். அதன் பின் தொண்டர் அமைப்பில் எங்களையும் இணைப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. சிவகுமாரன் பொறுப்பாளர்களில் ஒருவனாக அறிவிக்கப்பட்டான். நானும் வேறு பல நண்பர்களும் தொண்டாராகப் பணியேற்றோம்.

எங்கள் பணிகள் சுமுகமாகவே நடைபெற்றன. ஆனால், இருபாலைச் சந்தியில் இருந்து புறப்பட்ட இறுதி நாள் காண்பிய ஊர்திகள் பங்கேற்ற ஊர்வலத்தில் பண்டாரவன்னியன் பற்றிய காண்பிய ஊர்தி கலந்து கொள்வதற்கு மாநாட்டு அமைப்பாளர் அனுமதி மறுத்திருந்தனர்.

அரச நெருக்கடியை சமாளிக்க அமைப்பாளர்கள் எண்ணியிருக்கக்கூடும். சிவகுமாரன் தலைமையிலான தொண்டர்களாகிய நாங்கள் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்துபவர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இந்தத் தகவல் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதும் ஊர்வலம் நகராதபடி தெருவை மறித்தபடி நாங்கள் மறியல் செய்தோம். மாநாட்டு அமைப்பாளர்கள் எத்தனையோ விளக்கங்கள் அளித்து கெஞ்சினர். ஆனால் சிவகுமாரன் எதற்கும் மசியவுமில்லை விட்டுக்கொடுக்கவும் இல்லை. கடைசியாக பண்டாரவன்னியன் காண்பிய ஊர்தியுடன் ஊர்வலம் நடைபெற்றது.

1974 யூன் 10 இறுதிநாள் நிகழ்வாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாநாட்டுப் பேராளர்கள் உரையாற்றும் பொதுக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருநது. இந்த மாநாடு திட்டமிடப்பட்டபோது இத்தனை எழுச்சியாக மக்கள் ஆதரவு இதற்குக் கிடைக்கும் என்று அமைப்பாளர்கள் எதிர்பாத்திருக்கவில்லை.

ஆதலால் சில நூற்றுக்கணக்கானவர் கலந்து கொள்ளக்கூடிய வீரசிங்கம் மண்டபத்தைப் பொதுக்கூட்டத்திற்கு ஒழுங்குபடுத்தியிருந்தனர். ஆனால் மாநாடு நடைபெறுவது தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களிடையே எழுச்சியைத் தோற்றுவித்து விட்டது. ஆதலால், யாரும் எதிர்பாராத வகையில் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு பல்லாயிரக் கணக்கில் மக்கள் வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர்.

மண்டப ஒழுங்கைக் கவனித்துக் கொண்டிருந்த தொண்டர்களாகிய எங்களுக்கு நிலமையின் தீவிரம் தெரியத் தொடங்கி விட்டது. உடனடியாக சிவகுமாரன் எங்களை அழைத்து மாற்று வழிகளை யோசிக்கும்படி கோரினான். அப்போதுதான் நாங்கள் கூட்டத்தை எல்லாப் பொதுமக்களும் பார்க்கவும் கேட்கவும் வசதியாக மண்டபத்திற்கு வெளியே நடத்தக் கோருவதென்று தீர்மானித்தோம்.

எங்கள் அழுத்தம் காரணமாக அமைப்பாளர்கள் வெளியே கூட்டம் நடாத்தச் சம்மதித்தனர். நாங்கள் வெளியே கட்டப்பட்டிருந்த சிகரத்திற்குக் கீழே வாங்குகளை அடுக்கி தற்காலிக மேடை அமைத்தோம்.
வீரசிங்க மண்டபக் கட்டடிடத்தின் சிறு முற்றம் அதற்கும் எதிரே கோட்டைச் சுவரில் இருந்து சரிவாக அமைந்த புல்வெளி. இதனைப் பிரித்தபடி தார்ச்சாலை. நாங்கள் மேடைக்கு அருகே இருந்தோம். தார்ச்சாலை புல்வெளி எங்கும் மக்கள் தலைகளே தெரிந்தன.

திருச்சி போராசிரியர் நயினார் முகமது பேசத் தொடங்கினார். நாங்கள் பேச்சை இரசிக்க தொடங்கியிருந்தோம். அப்போதுதான் அந்த நாமெல்லாரும் அறிந்த துயரம் நிகழ்ந்தது. மேடையின் இடது பக்கத்தே அதாவது புல்லுக்குளம் பக்கத்தே சலசலப்பு ஏற்பட்டது.
பொலிசார், அமர்ந்திருந்த மக்களை கலைக்க முயற்சித்தித்து கொண்டிருந்தனர். சலசலப்பு உடனேயே அல்லோலகல்லோலமாக மாறத்தொடங்கியது. மக்கள் நெருக்கியடித்தபடி நகரத் தொடங்கினர்.

மேடையில் இருந்தவர்கள் மக்களை அமைதியாக இருக்கும்படியும் பொலிசாரை விலகிச் செல்லும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டது. மக்கள் மிரண்டு ஓடத்தொடங்கினர்.
அவ்வேளையில்தான் அது நடந்தது. தொண்டர்கள் என்ற நிலையில் மேடையின் அருகே இருந்தோம் என்பதால் எல்லாவற்றையும் எங்களால் தெளிவாகவே பார்க்க முடிந்தது. அந்த மேடை அமைக்கப்ட்டிருந்த சிறு முற்றத்தையும் தார்த்தெருவையும் பிரித்த மறிப்புக் கம்பியை தாண்டுவதற்காக ஒருவர் தொட்டபோது எங்களைப் பார்த்து அலறியபடி வீழ்ந்தார்.

பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டினால் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியில் இருந்து மின் ஒழுக்கு அந்த மறிப்புக் கம்பியிலும் பரவியிருப்பதை அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம். ஆதலால் அதனைத் தொடவேண்டாம் என்று நாங்கள் கத்தித் தடுத்துக் கொண்டிருந்த போதும் அதைத் தொட்டவர்கள் அலறியபடி செத்து வீழ்ந்தார்கள்.
எல்லாம் அடங்கிய இறுதி நேரம் வரையில் நானும் சிவகுமாரனும் அங்கிருந்தோம். இதற்குப் பழிக்குப் பழி வாங்குவதென்று நாங்கள் இருவரும் சபதம் செய்து கொண்டோம்.

காலையில் சந்திப்பதற்கான இடத்தையும் தீர்மானித்துக் கொண்டோம். ஆனால் விடிவதற்கு முன்பாகவே நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டிற்குக் காவலாக நின்ற பொலிசார் மீது சிவகுமாரன் வெடிகுண்டை வீசி விட்டான். பொலிசார் காயமடைந்தார்கள். சிவகுமாரன் தேடப்படுபனாக மாறிவிட்டான். இது அவனது குண இயல்பை விளக்கப் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

1974-01-10 ஆம் திகதியில் இருந்து 1974-06-05 ஆம் திகதி வரையில் நான் அவனுடன் கூடவே இருந்தேன். அந்த ஐந்து மாத எல்லாச் செயல்பாடுகளிலும் பங்கேற்றேன். வெடிமருந்துகள, ஆயுதங்கள் தேடி சாதிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு அவனுடன் கூடவே சென்றிருக்கிறேன். நானும் சாவகச்சேரியை சேர்ந்த ஜீவராசாவும் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் சயனட்டைத் தேடிப் பெற்று வந்ததும், இது எனக்கு மட்டும்தான் உங்களுக்குத் தேவையில்லை என்று சிவகுமாரன் கட்டளையிட்டதும் ஓரு முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னான நிகழ்வு.

இனி ஒரு தடவை பொலிசின் கையில் தான் பிடிபடுவதில்லை என்பதில் சிவகுமாரன் உறுதியாகவே இருந்தான். எங்களைப் பொலிசார் பிடித்தால் எல்லாப் பொறுப்பையும் தனது தலையில் சுமத்தி விடும்படியும் கூறியிருந்தான். இந்த ஐந்து மாத காலமும் ஒரு காவியத்திற்கான சம்பவங்கள் நிறைந்து கிடக்கின்றன, எல்லாவற்றையும் இப்போது கூறுவதும் தேவையற்றதாகும்.

தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் துயர நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அதிபர் சந்திரசேகராவை பழிவாங்குவதே எங்களின் நோக்கமாக இருந்தது. மிகச் சரியான அந்தத் திகதி எனக்கு நினைவில் இல்லை. கைலாசப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் சந்திரசேகராவை மறித்துக் கொலை செய்வது என்பது எங்கள் திட்டமாக ஏற்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த முயற்சி எங்களுக்குப் பாரிய தோல்வியையே தேடித்தந்தது. சந்திரசேகரா உயிர் தப்பிவிட்டான். சிவகுமாரன் மிக உயர் தேடலுக்கு உரியவனாக அறிவிக்கப்பட்டான். அவனது தலைக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

1974 ஆம் ஆண்டில் அவனது ஊரான உரும்பராய்க் கிராமம் எழுநூறு பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டைக்கு உள்ளானாது.
இன்றைக்கு போராட்டம் முதிர்ந்த நிலையில் இவையெல்லாம் சாதாரணமாக இருக்ககூடும். இந்நிலையில் சிவகுமாரனை இந்தியாவுக்கு அனுப்ப முடிவெடுத்தோம்.

இரகசிய கடல் வழிப் பயணத்திற்குத் தேவையான பணம் எம்மிடம் இருக்கவில்லை. தெரிந்தவர்களிடம் பணம் கேட்டுச் சேகரிப்பது எனது பணியாயிற்று. அப்போது புகழ்மிக்க பெண்மணி ஒருவர் 'என்னிடம் தாலிக்கொடி மட்டும்தான் இருக்கின்றது" என்ற பொன்மொழியை உதிர்த்தார். எல்லோரும் கைவிரித்து விட்டார்கள். இந்நிலையில்தான் பணம் தேடும் வேறு முயற்சிகளை ஆராயத் தொடங்கினோம். கோப்பாய் கிராமிய வங்கி எங்கள் கவனத்திற்கு வந்தது.

1974 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் திகதி காலை பத்து மணியளவில் மருதனார்மடத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட வாடகை வண்டியில் உரும்பிராயில் இருந்து நாங்கள் நால்வர் (சிவகுமாரன், மகேந்திரன், ஜீவராசா, நான்) கோப்பாய் நோக்கிப் பயணித்தோம். எங்கள் திட்டம் சொல்லளவில் மிகச் சிறந்ததாகவே இருந்தது. ஆனால் நடைமுறையில் இறங்கியபோது கட்டுத் தோட்டாக்கள் கொண்ட எங்கள் ஆயுதங்கள் எதுவும் ஒத்துழைக்கவில்லை. ஒன்று பிழைக்க மற்றவையெல்லாம் குழப்பமாகிவிட்டன.

கார்ச்சாரதி திறப்புடன் ஓடிவிட்டான். திறப்பில்லாமல் காரை இயங்கச் செய்ய யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஊர்மக்கள் கூடிவிட்டார்கள். எங்கள் கால்களை நம்பி குடிமனைகளுக்கு ஊடாக ஓடத்தொடங்கினோம். கொள்ளைக்காரர் என்றபடி மக்கள் எங்களைத் துரத்தத் தொடங்கினர். கற்காளால் எறியத் தொடங்கினர்.

ஊர்மனை தாண்டி தோட்டப்பகுதிக்கு வந்துவிட்டோம். வெடிக்காத கட்டுத் தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியைக் காட்டி துரத்தி வருபவர்களைத் தடுத்து நிறுத்தினோம். நாம் யார், எதற்கு வந்தோம் என்பதை விளங்கப்படுத்தினோம். சிவகுமார் தன்னை அறிமுகப்படுத்தியதும் சிலருக்கு அவனைத் தெரிந்திருந்தது. நாங்கள் மெதுவாக ஆசுவாசப்படுத்தியபடி நீர்வேலி நோக்கி தோட்ட வரப்புகள் வழியே நடக்கத் தொடங்கினோம். ஊர்மக்கள் பின்னே எங்களைப் பார்த்தபடி நின்றிருந்தனர். நேரம் நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் எதிரே மண்பாதையில் விரைந்து வந்த பொலிஸ் வாகனங்கள் எங்களை வழிமறித்தன. பின்னால் திரும்பிய போது அங்கேயும் பொலிசார் எங்களை நோக்கி வருவது தெரிந்தது. நாங்கள் முற்றுகைக்குள் அகப்பட்டோம். இப்போது எல்லோரது கைகளிலும் இருந்த குண்டுகள் இல்லாத ஆயுதங்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன. நால்வரும் ஓன்றாகப் பிடிபடாமல் நான்கு திசையில் பிரிந்து செல்வதுபோல் போக்கு காட்டுவதென்றும் தீர்மானித்துக் கொண்டோம்.

இதனால் சிவகுமாரன் உட்பட எல்லோரும் தப்ப முடியுமென்று நம்பினோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக சிவகுமாரனே பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டான்.

ஏறத்தாழ நண்பகல் நேரம். உச்சி வெயிலை உயர்த்திப் பிடித்தபடி சூரியன். மரவள்ளித் தோட்டத்து செம்மண்ணில் அவன் வீழ்ந்து கிடந்தான். அவனது குதிக்காலில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. துப்பாக்கியால் குறிபார்த்தபடி காக்கிச் சட்டைக் காவலர்கள் சூழ்ந்து நின்றனர். இனித் தப்ப வழியில்லை என்னும் நிலையில் தன் சட்டைப்பையில் இருந்த சிறிய வெற்று வாசனைத் திரவிய குப்பிக்குள் பத்திரப்படுத்தியிருந்த சயனைட்டை அவன் அருந்தினான்.

ஈழப் போராட்டத்தின் முதல் வித்தாய், முன்னறிவித்தவனாய், மாணவர் எழுச்சியின் குறியீடாய் மாறிப்போனான் சிவகுமாரன்.

'நண்பா உந்தன் இளவயதில் உயிரை வெறுக்கவும் சயனைட் குப்பியை உயிரெனக் கொள்ளவும் செய் அல்லது செத்துமடியென பிரகடனம் செய்யவும் எவை உன்னை உந்தியதோ இன்னமும் அவை அப்படியே உள்ளன உந்தன் ஒளிரும் சுவடுகளும் எம்மெதிரே விரிகின்றன..."

-கி.பி.அரவிந்தன்-

Comments