தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதிலும் புலிகளின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும்: இளந்திரையன்


யாழ். மற்றும் கிழக்குப் போன்று தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.08) அவர் அளித்த நேர்காணலின் எழுத்து வடிவம்:

கேள்வி: மணலாறில் கடந்த வாரம் முதல் பாரிய படை நடவடிக்கை ஒன்றினை சிறிலங்காப் படையினர் ஆரம்பித்து அதில் அவர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. அங்குள்ள உண்மை நிலவரம் என்ன?
பதில்: சிறிலங்காப் படையினர் வழமையாகக் கூறும் ஒரு விடயமே இது. தரையைத் தக்கவைப்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முன்னேறுகின்றோம் என்று அவர்கள் கூறுவதனையே அகலக்கால் வைக்கின்றனர் என்று நாம் கூறுகின்றோம். அந்த விடயம் பார்வையில் இருக்கின்றது. அதனைத்தவிர அவர்கள் கூறுவதனைப்போன்று பாரியளவிலான ஒரு முன்னேற்றமோ அல்லது பாய்ச்சல் நடவடிக்கையோ அங்கு இடம்பெறவில்லை.
கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.தகுந்த பதிலடிகளைக் கொடுத்து வருகின்றோம். அவர்களுக்கு நிறைய இழப்புக்களும் பல தாமதங்களும் ஏற்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் இடம்பெறும் நடவடிக்கைகள் பல மாதங்களாக இழுபட்டு வருகின்றன என்பதுதான் உண்மை.
கேள்வி: மணலாறில் உள்ள வண்-போ (1-4) என்ற முக்கிய முகாம் படையினரின் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவை தாம் நெருங்குவதாகவும் "தினமின" பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியிருக்கின்றார். இது குறித்து உங்களின் கருத்து என்ன?
பதில்: வண்-போ (1-4) என்ற முகாம் என்ற கட்டமைப்பு அவர்கள் கூறும் விடயமாகவே உள்ளது.20 வருடங்களுக்கு முன்னர் அங்கே அப்படியொரு தளம் இருந்தது. அந்தத் தளம் ஒரு அழைப்பு சமிக்ஞைக்குரிய இடமாகவே தொழிற்பட்டது. அதற்கும் அப்பால் அவர்கள் சித்தரிப்பது போன்று அங்கே ஒரு பாரிய படைக்கட்டுமாணத்தினை- அதுவும் ஒரு எல்லைப் பகுதியிலேயே அதனை அமைத்து வைத்திருக்கின்ற அளவுக்கான சூழ்நிலைகளோ அல்லது அறிவியல் நிலைகளோ அங்கு இல்லை.
அதனைத்தவிர முல்லைத்தீவையும் அவர்கள் நெருங்குவதான ஒரு கருத்தையும் சரத் பொன்சேகா கூறி வருகின்றார். ஓமந்தையில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரம் தெற்கே முன்னேறிவிட்டு நாம் அனுராதபுரத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் என்று கூறினால் அதில் எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கின்றதோ அந்தளவுக்கான உண்மைத்தன்மையே சரத் பொன்சேகா கூறுவதிலும் இருக்கின்றது.
கேள்வி: மணலாறு படை நடவடிக்கை தனது நேரடிக் கண்காணிப்பிலேயே இடம்பெறுவதாக சரத் பொன்சேகா கூறியிருக்கின்றார். சரத் பொன்சேகா நேரடியாகக் கண்காணிக்கும் அளவுக்கு மணலாறின் முக்கியத்துவம் என்ன?
பதில்: அவரின் கண்காணிப்பில் அல்லாமல் இதற்கு முன்னர் பல நடவடிக்கைகள் நடந்ததாகவும் அவர் ஒருபோதும் சொல்லவில்லை. வட போர்முனையில் கூட அவரின் நேரடிக் கண்காணிப்பில், அவரின் மூளையின் குழந்தையாகிய கவசப் படையணி பங்குபற்றிய நடவடிக்கைகள் இடம்பெற்றன.
மணலாறைப் பொறுத்த வரை கரையோரங்களைக் கைப்பற்றிக்கொண்டு வருவதே அவர்களின் தற்போதைய மூலோபாயமாக உள்ளது. அந்தப் பகுதிகளில் அவர்களுக்கு ஒரு ஆழமான ஆசை ஏற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது.எனினும் எல்லாக்களமுனைகளையும் போலவே மணலாறு களமுனையும் நன்றாகவே எம்மால் எதிர்கொள்ளப்படுகின்றது. பலத்த இழப்புக்கள் அவர்களுக்கு ஏற்படுத்தப்படுகின்றன.
கேள்வி: 61 ஆவது படையணி களம் இறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் படையணியின் தாக்குதல்களில் புதிதாக ஏதாவது உத்திகள் தென்படுகின்றனவா?
பதில்: அண்மைக்காலமாக அவர்கள் அமைத்து வருகின்ற விகிதத்திற்கு குறைவான அணிகளில் ஒன்றாகவே 61 ஆவது படையணியும் உள்ளது. மற்றும்படி அந்த படையணியில் எதுவித வித்தியாசத்தையும் இதுவரை நாம் களமுனையில் காணவில்லை.
வழக்கமாக ஒரு டிவிசன் என்றால் அதில் அமைய வேண்டிய ஆட்தொகை, அதில் உள்ள பற்றாலியன்களுக்கான ஆட்தொகை, கொம்பனிகளுக்கான ஆட்தொகை, பிரிகேட்டுகளுக்கான ஆட்தொகை என்றெல்லாம் இருக்கின்றது.
அவ்வாறான விகிதங்களைக் கைவிட்டு சிறிய, சிறிய அணிகளுக்குப் பெரிய, பெரிய பெயர்களைச் சூட்டியே களத்தில் இறக்குகின்றனர். இது அவர்களின் படைத்துறை தேவையா? அல்லது அரசியல் தேவையா என்பது எமக்குத் தெரியவில்லை. இந்த 61 ஆவது படையணியும் பத்தோடு பதினொன்றுதான் என்பதனையே எமது களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேள்வி: மன்னார் களமுனையில் மதவாச்சி, அடம்பன், பெரியமடு, மடுப் பகுதிகளில் சுமார் 26 கிலோமீற்றர் தூரம் வரை முன்னேறியிருப்பதாக சிறிலங்கா இராணுவத்தினர் கூறுகின்றனர். மன்னார் களமுனையின் பிந்திய நிலவரம் என்ன ?
பதில்: படை நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற இடங்களின் பரப்பளவுகள் குறித்த தகவல்களை வெளியிடுவதில் படைத்தரப்பு ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டிவருகின்றது. ஒரு அரசாங்கத்தின் படைகள்- ஏனைய நாடுகளின் ஆதரவு பெற்றுள்ள படைகள்- பெரும்பாலும் உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தியே போரிடும் உள்ளுர் விடுதலை அமைப்பிடம் ஒரு கயிறு இழுத்தல் போட்டியில் பங்குபற்றுவதனைப் போன்று முன்னே செல்வதனையும் பின்னே வருவதனையும் கணக்கிடுவதானது ஒரு நகைப்புக்கிடமான செயற்பாடகவே கருதப்படுகின்றது.
அவ்வளவு சக்தி, அவ்வளவு வலிமை, அவ்வளவு ஆதரவுபெற்ற படைகளால் இன்னும் ஏன் முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. அந்தப் பகுதிகளை கைப்பற்ற விடாதளவுக்கு எமது பலம் இருக்கின்றது.
எமது பலத்தைத்தான் இப்போது இடம்பெறுகின்ற சண்டைகள் நிரூபித்து வருகின்றன. அதுதவிர, ஆரம்பத்தில் காட்டிய வேகத்தை இப்போது அவர்களால் களமுனைகளில் காட்ட முடியவில்லை. பல இடங்களில் சிறு, சிறு சண்டைகளைக்கூட நடத்துவதற்கு அவர்கள் திணறிக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் மிகப்பிந்திய களநிலவரம் ஆகும்.
கேள்வி: கடந்த வருடத்திற்குப் பின்னர் மன்னார் களமுனையில் படையினர் பல இடங்களில் முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்ற போது அந்தக்களமுனையில் புலிகள் இன்னமும் பலமாகத்தான் இருக்கின்றனர் என்று எப்படிக் கூறமுடியும்?
பதில்: விடுதலைப் போராட்டம் ஒன்றின் பலத்தையும் பலவீனத்தையும் நிரூபிப்பது கயிறு இழுத்தல் போட்டியில் முன்னே வருதல், பின்னே செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் அல்ல. கொழும்பின் பரப்புரை உண்மையில் எல்லோருக்கும் மயக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு முன்னர் நிகழாத சம்பவம் ஒன்று போன்று கூறுகின்றனர்.
இவை எல்லாம் முன்பு நிகழ்ந்தவைதான். அதற்கு மறுதலையான சம்பவங்களும் நிகழ்ந்தன. முன்னர் நான் குறிப்பிட்டது போன்று, ஒரு அரச கட்டுமாணத்தில் இருக்கின்ற, ஆட்தொகை அதிகரித்த, படை வளங்கள் அதிகரித்த படையோடுதான் விடுதலைப் போராளிகளாகிய நாம் மோதி வருகின்றோம். இந்தப் போரை வலு என்ற அடிப்படையையும் தாண்டி உத்திகள் என்ற அடிப்படையிலேயே நகர்த்த வேண்டியதொரு சூழ்நிலை இருக்கின்றது.
"பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது"- என்று வள்ளுவர் கூறியிருக்கின்றார். எமது பலம் சரியான தருணத்தில் அங்கே நிரூபிக்கப்படும் என்பதனை உங்களுக்கு உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
கேள்வி: வடபோர் அரங்கில் நாகர்கோவில் முதல் முகமாலை ஊடான கிளாலி வரையான முன்னரங்க நிலைகளின் பிந்திய நிலவரம் எப்படி உள்ளது?
பதில்: 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்தே இப்படியான முயற்சிகளை அவர்கள் செய்துகொண்டு இருக்கின்றனர். அவர்கள் தங்களால் இயன்ற அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி விட்டார்கள். அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி விட்டார்கள். உச்சக்கட்ட வலிமையையும் பயன்படுத்தி விட்டார்கள். உச்சநிலை தளபதிகள் கூட வந்து நின்று குறிப்பாக சரத் பொன்சேகா கூட வந்து நின்று போரிட்டுப் பார்த்தார்.
ஆனாலும் ஒரு அங்குலத்தைக்கூட இதுவரை அவர்களால் எமது போராளிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதே நிலமைதான் இப்போதும் தொடர்கின்றது. அண்மைக்காலத்தில் சிறிய தாக்குதல்கள், பெரிய தாக்குதல்கள் என பல வகையான தாக்குதல்களைச் செய்து அந்த முயற்சிகள் தோற்றுவிட்ட நிலையில் மீண்டுமொரு படையெடுப்பிற்கான ஆயத்தங்களை அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற போதும் அத்தகையதொரு படை நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகத்திலும் அவர்கள் தற்போது திணறுவதாகத் தெரிகின்றது.
கேள்வி: கிழக்கில் இப்போது புலிகள் இல்லை. குடாநாடு முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. வன்னியில் நான்கு முனைகளிலும் போர் தீவிரம் பெற்றுள்ளது. அப்படியானால் படைவலுச் சமநிலை மாற்றமடைந்து விட்டது எனக் கூறலாமா?
பதில்: ஆரம்ப காலத்தில் சமச்சீரற்ற ஒரு சமநிலையைத்தான் படையினருடன் பேணக்கூடியதொரு நிலை இருந்தது. ஆனால் மரபுக்களங்களில் மிக நேர்த்தியான சமச்சீருடைய வலுச்சமநிலை நிலவுகின்றது. அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்கள் படைவலுச் சமநிலையிலேயே நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்கபடுத்தக்கூடியதாகவே இருப்பதனை அவதானிக்கலாம்.
தரைப்பிரதேசங்களைத் தக்கவைப்பதற்கு சிறிலங்காப் படையினர் ஆர்வம் காட்டுவதோடு ஏற்கனவே அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கின்ற தாயகப் பகுதிகள் மற்றும் சிறிலங்காவின் பகுதிகளில் அதிகளவான படைகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டு வருகின்றன.
அதேவேளையில் களமுனைகளில் அவர்களுக்கு முன்னர் கிடைத்திருக்ககூடிய சில சாதக நிலைகளை இழந்து மந்தச்செறிவை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். ஆட்செறிவை அவர்கள் கூட்டியபோதும் அந்த மந்த செறிவில் இருந்து அவர்களால் மீளமுடியவில்லை. இன்னும் ஆண்டுக்கணக்கில் நடவடிக்கைகள் இழுபடுவதற்கான சாத்தியக்கூறுகளை கொழும்பில் உள்ள ஆய்வாளர்களே தெட்டத்தெளிவாக கூறியிருக்கின்றனர்.
அதேநேரம் சிறிலங்கா கடற்படை அண்மைக்காலமாக கடலில் பரவலாக பலத்த இழப்புகளைச் சந்தித்து வருகின்றது. வலுச்சமநிலையில் சலனத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்வகையான சம்பவங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அது எவ்வகையான மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது என்பதனை இப்போதைக்கு கணித்துச் சொல்லமுடியாது.
கேள்வி: இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதி வரை புலிகளின் 207 உடலங்களை சிறிலங்காப் படையினர் கையளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனது உண்மைத்தன்மை குறித்து கூற முடியுமா?
பதில்: சமர்கள் நடக்கும்போது வீரச்சாவுகள் நிச்சயமாக இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எண்ணிக்கை, புள்ளி விபரங்களை பட்டியலிடுவதில் சிறிலங்காப் படையினர் மிகவும் ஆர்வம் உடையவர்களாகக் காணப்படுகின்றனர்.
விடுதலைப் புலிகள் தரப்பு வீரச்சாவு குறித்த தகவல்கள் புலிகளின் குரல், உள்ளுர் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் ஆகியவற்றின் ஊடாக அவ்வப்போது வெளிவந்தவண்ணம் உள்ளன. இருதரப்பிலும் இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக சிறிலங்காப் படையினர் தங்களின் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதனை இதுவரை ஒத்துக்கொள்ளவில்லை.
ஆனால் புலிகள் தரப்பில் நிச்சயமாக வீரச்சாவுகள் உள்ளன. ஆனால் அவர்கள் கூறுவது போன்று பெரும் தொகையிலான வீரச்சாவுகள் இடம்பெறவில்லை.
கேள்வி: சிறிலங்காப் படையினருக்கு ஏற்படும் இழப்புகள் தென்னிலங்கை மக்களிடத்தில் பெரியளவில் எதுவித தாக்கங்களையும் உண்டு பண்ணவில்லை. எதிர்காலத்தில் படையினருக்கு ஏற்படும் இத்தகைய இழப்புகள் தென்னிலங்கை மக்களிடத்திலோ அல்லது அரசியல் கட்சிகளிடமோ தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகின்றீர்களா?
பதில்: தென்னிலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் அதனோடு இணைந்த புறச்சூழலோடு இந்த விடயத்தை முதலில் பார்க்க வேண்டும். இழப்புகள் ஏற்படுவதனை மக்கள் உதாசீனம் செய்கின்றனர் என்பது ஒருபுறமிருக்க, அந்த இழப்புக்கள் ஏற்படும்போது அதற்கான விழிப்புச் சக்தியை ஏற்படுத்தும் மாற்றுச் சக்திகள் அங்கே இல்லை.
சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை ஒடுக்குவது போன்று சிங்களவர்களையும் ஒடுக்கி வருவதால் அவர்களுக்கு ஊடகச் சுதந்திரம் இல்லை, மாற்றுக்கட்சிகள் வாய் திறந்து பேசுவதற்கு வழி இல்லை. அதாவது, இழப்புகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு அங்கே மார்க்கம் இல்லை. சிங்கள மக்கள் தாங்கள் ஒரு இருட்டுக்குள் வாழ்கின்றனர் என்ற உண்மையை உணர்ந்த பின்னர், அவர்களின் உண்மையான நிலையை நாம் பார்க்க வேண்டும்.
இதனைத்தவிர படையினருக்கு ஏற்பட்டு வரும் இழப்பானது முன்னரங்க நிலைகளில் படையினரின் செறிவை கோதாக மாற்றி வருகின்றது. வருடக்கணக்கான போரில் நிலத்தில் முளைக்கின்ற புற்கள் போன்று படையினர் முளைக்க முடியாது.
எமது ஒவ்வொரு அங்குலத்தில் வீரச்சாவடைகின்ற ஒவ்வொரு போராளிக்கும் எதிராக பல கொத்துக்கணக்கான படையினர் அங்கே அழிக்கப்படுகின்றனர், காயமடைகின்றனர், களத்தில் இருந்து அகற்றப்படுகின்றனர்.
எமது தாக்குதல் சம்பவங்கள் குறித்து நாம் ஆதாரங்களுடன் வெளியிடும் தகவல்களைப் பார்த்து நீங்கள் அதனைக் கணித்துக்கொள்ளலாம். இத்தகைய சூழ்நிலைகளில் விரித்து வைக்கப்பட்டுள்ள படைச்செறிவு குறைந்த நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. அதன் விளைவுகளை எதிர்காலத்தில் பார்க்கலாம்.
அதேநேரம் படிப்படியாக ஏற்படும் இத்தகைய இழப்புக்கள் திடீர் சூழ்நிலைகளை ஏற்படுத்தும் வாய்ப்புக்களை வரலாற்றில் கண்டுள்ளோம். எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேள்வி: சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியான ஆட்சேர்ப்பிலும் ஆயுதக்கொள்வனவிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற போதும் புலிகள் இதுவரை பாரிய வலிந்த தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பது ஏன் என்று கூறமுடியுமா?
பதில்: அத்தகைய தாக்குதல்களுக்கான தேவை, அதற்கான சூழல், அதனைத் தொடர்ந்து நிகழும் விளைவுகளின் மதிப்பீடுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே எமது தாக்குதல்கள் முன்னரும் அமைந்திருந்தன. இனிமேலும் அந்த வகையில் அத்தகைய தாக்குதல்கள் அமையும்.
கேள்வி: அண்மைக்கலமாக புலிகளின் ஈருடகப் படையணியின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. புலிகளின் படைத்துறை வளர்ச்சியில் இந்த ஈருடகப் படையணியின் வளர்ச்சியை எவ்வாறு பார்க்க வேண்டும்?
பதில்: தேசியத்தலைவரின் மிக ஆழமான திட்டமிடலின் ஒரு பகுதியாகத்தான் நாம் ஒவ்வொருவரும் அதனைப் பார்க்கின்றோம். பார்த்து வியக்கின்றோம். ஏனெனில் குறிப்பிட்ட தாக்குதல் ஒன்றிற்கான- படைக்கட்டுமாணத்திற்கான அந்தச் சிந்தனையை- அதற்கான பயிற்சியை- அதற்கான வலு வளங்களை அவர் ஒழுங்குபடுத்துகின்ற விதம்- பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் அதனைச் செய்திருப்பார்.
திடீரென்று அந்தப் படையானது நடவடிக்கைகளைக் காட்டி வெளியே வருகின்ற போது அதனைப் பார்ப்பவர்களுக்கு அது புதிய விடயமாக இருக்கும்.
ஆனால் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான திட்டங்களைச் செய்திருப்பார். தேசியத் தலைவரின் உத்திப் பரிணாமங்களில் ஒன்றாக, புதிது காண்கின்ற, புதியன புனைகின்ற உயரிய பண்புகளின் ஒரு அங்கமாகவே இவ்வாறான படையணிகளும் தோற்றம் பெற்று களமுனைகளில் பல சாதனைகளைச் செய்து வருகின்றன.
அத்தகையதொரு வளர்ச்சி நிலையில் கடற்புலிகளின் ஈருடகம் சார்ந்த அந்த கொமாண்டோ அணியினர் தங்களின் பணிகளைச் திறம்பட செய்து வருகின்றனர். அவர்கள் இன்னும் அவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
கேள்வி: கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் அண்மைக்காலமாக புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து?
பதில்: அவ்வாறானதொரு தோற்றம் அண்மையில் காணப்பட்டிருப்பது உண்மைதான். அங்கு மட்டுமல்ல
தமிழர் தாயகம் முழுவதும் எமது நடவடிக்கைகள் இனிமேல் விரிவாக்கம் பெற்று தீவிரமடையும்,
அதற்கான ஒரு ஆரம்ப நிலைகள்தான் இவையாகும்.
கேள்வி: சிறிலங்கா வான்படை தனது காலைக்கடன்களை கழிப்பது போன்று அன்றாடம் காலையில் வந்துபோவதாக கவிஞர் புதுவை இரத்தினதுரை கூறியிருக்கின்றார். இந்த நிலைமையில் அங்குள்ள மக்கள் எப்படி தமது அன்றாட காரியங்களை மேற்கொண்டு வருகின்றனர்?
பதில்: கவிஞர் அதனை அழகாகத்தான் கூறியிருக்கின்றார். காலைக்கடன்களைப் போன்று ஒரு சாதாரண விடயமாகத்தான் மக்கள் இந்த வான் குண்டுத்தாக்குதல்களைப் பார்த்திருக்கின்றனர். எனினும் ஒரு வேதனை அங்கு ஏற்படுவது உண்மைதான்.
பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும்போது இடம்பெறும் வான்குண்டுத்தாக்குதல்களால் ஒருவித உளநிலை பாதிப்பு ஏற்படுகின்றது. அண்மையில் கூட புதுக்குடியிருப்பில் பாடசாலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு இருந்த சிறிய குழந்தைகளும் பாதிக்கப்படக்கூடிய அளவுக்கு பாடசாலைக்கு அண்மையில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.
எனினும் இந்த மண்ணில் உள்ள மக்களின் சிறப்பு என்னவென்று சொன்னால், எவ்வளவு தூரம் எதிரியின் நெருக்கம்,எவ்வளவு தூரம் எதிரியின் அழுத்தம் அதிகரிக்கின்றதோஅவ்வளவு தூரம் எமது மக்கள் வீரியமாக எழும்புகின்றனர்.தமது வாழ்வை இந்த மண்ணில் இருந்தே தேடி எடுப்பதற்காக அவர்கள் நிற்கின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் தருகின்ற உற்சாகம், ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் நாம் பார்க்கின்ற உணர்வு எம்மை மேலும், மேலும் இந்த போராட்டத்தில் பங்களிக்கவும் அதிகமாக போராடவும் தூண்டுகின்றது என்பதே இங்குள்ள நிலைமை. இங்குள்ள மக்கள் அத்தனை வேதனைகளுக்கு மத்தியிலும் போராட்டப் பாதையில் இருந்து சிறிதும் வழுவாமல் தமது முழுமனதுடன் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.
தமது வேதனைகளை போராட்டத்திற்கான முதலீடாக வழங்கி தோழோடு தோள் நின்று போராடுகின்றனர் என்பதனை பெருமையுடனும் மனநிறைவுடனும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பல்வேறு வகையிலும் தமது பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடாக பல்வேறு நாடுகளிலும் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டிய பரப்புரைகள் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில்: பொங்கு தமிழ் என்பது மிகவும் வேண்டப்பட்ட, மிகவும் முக்கியமான, இந்தக் காலத்தின் கட்டயமான ஒரு நிகழ்வு. அது நிச்சயம் நடந்தேயாக வேண்டும். அது போராட்டத்தின் ஒரு அங்கம், விடுதலைக்கான பாதையின் ஒரு அங்கம் என்றுதான் இங்குள்ள ஒவ்வொருவரும் நினைக்கின்றோம்.
தமிழர்களின் உணர்வு பொங்கிப் பிரவகிக்கும் நேரம் இங்கே உள்ளவர்கள் அதனைக் களத்தில் காட்டுகின்றனர். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் அதனைக்கருத்தில் காட்ட வேண்டும். அதற்கான ஒரு தளம்தான் இந்தப் பொங்குதமிழ் நிகழ்வு.
பொங்கு தமிழ் இடத்தில் நாம் இணைகின்ற போது தனித்தனியே இருந்த சுடர்கள் ஒன்றாக எரிந்து பெரிய அனல் எழுவது போன்று அந்த உணர்வுள்ள தமிழர்கள் ஒன்றாகக் கூடி நின்ற தமது கைகளை உயர்த்தி, குரல்களைச் சேர்த்து, தமிழுக்கான தமது குரலை அவர்கள் வெளிக்காட்டும்போது இந்த உலகமே எமது பக்கம் திரும்பிப் பார்க்கின்றது.
எமது உரிமைக்குரலின் ஓசையை ஒரு தடவை தனது காதுகளால் கேட்கின்றது.அங்கே எமது பலம், ஒற்றுமையின் அந்தக் கம்பீரம், தேசியத் தலைவரின் கீழ் நாம் அனைவரும் அந்த ஒரே இலட்சியத்திற்காக நிற்கும் அந்தச் செய்தி பொங்கு தமிழ் நிகழ்வின் மூலம் இந்த உலகிற்கு ஆணித்தரமாக அறைந்து கூறப்படுகின்றது.
உலகு எங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கு தமிழ் நிகழ்வில் ஒன்றாகச் சேருகின்ற போது அந்த நிகழ்வின் மூலம் அவர்கள் இங்கே போராடுகின்ற தமிழர்களுக்கு உற்சாகத்தில் மேலும் ஒரு துளியைக் கொடுக்கின்றனர்.
தாயகத்திலும் அனைத்துலகத்திலும் இத்தகைய பொங்கு தமிழ் நிகழ்வுகள் தமிழீழத்திற்கான பாதையை அகலப்படுத்தும், விரைவுபடுத்தும் என்பதே எமது தீவிரமான நம்பிக்கை.
கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் எனும் போது சிறிய ஒரு எண்ணிக்கையிலானோர் இத்தகைய போராட்ட நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர். தமிழ் மக்களின் விடுதலை என்று வரும் போது இப்படி ஒதுங்கி இருப்பவர்களும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்து என்ன கருதுகின்றீர்கள்?
பதில்: தனது உடலில் தமிழ் இரத்தம் ஓடுகின்ற ஒவ்வொரு தமிழனும் தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய உலகத் தருணம் இது.
இந்த வரலாற்றுத் தருணம் இன்னொரு முறை கிடைக்கப்போவதில்லை. அவர்களின் பரம்பரைக்கு அதாவது அவர்களின் பாட்டன்களுக்கும் அது வாய்த்தது இல்லை, அவர்களின் பேரன்களுக்கும் அது வாய்க்கப் போவது இல்லை.
தமிழர்களுக்காக உலகு எங்கும் இருக்கக்கூடிய தமிழர்கள் குரல் கொடுக்கக்கூடிய ஒரேயொரு வாய்ப்பு இந்த தலைமுறையில் - தேசியத் தலைவரின் காலத்தில்தான் கிடைத்திருக்கின்றது.
இதனை ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று தமிழ் என்ற ஒரே உணர்வில் சுதந்திரம் என்னும் அந்த உன்னதமான தத்துவத்தின் அடிப்படையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
அனைவரும் இந்த வரலாற்றுத் தருணத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே எமது பணிவான கோரிக்கையாக இருக்கின்றது.

Comments