'தமிழ்த் தேசியம்"-.பொங்கு தமிழாய் வீறு கொண்டு எழுக!!

உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள், தமது தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக, அளித்து வருகின்ற ஆதரவின் சக்தி மிகப்பலம் வாய்ந்த ஒன்றாகும்.

தங்களது தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்தும், புரிந்தும், தெளிந்தும் உள்ளார்கள்.
ஆகவே, புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் நாம் இன்றைய தினம் தர்க்கிக்க முன் வரவில்லை!

மாறாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற, தமிழீழ மக்கள் கொண்டுள்ள வலிமையின் பரிமாணத்தை வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்!

தமிழ்த் தேசியம் என்கின்ற சொல்லாக்கம் குறித்துப் பல விதமான கருத்துருவாக்கங்கள் தர்க்கிக்கப்பட்டு வருகின்றன. இன்றும் சிறிலங்காவின் சிங்களப் பேரினவாதம் பல தர்க்கங்களை வெளியிட்டு வருகின்றது.

உலகளாவிய வகையில் தமிழ்த் தேசியம் என்கின்ற கருத்துருவாக்கம் அதிக அளவில் விவாதிக்கப்பட்டும் வருவதை நாம் காண்கின்றோம். தமிழ்த் தேசியம் குறித்து ஓர் எளிமையான விளக்கத்தை நாம் அளிப்பதன் மூலம் இந்தக் கட்டுரையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தலாம் என்று எண்ணுகின்றோம்.

தேசியம் என்கின்ற சொல்லாக்கம் வெறும் உணர்வுகளால் மட்டும் உருவானது என்றும், அந்த உணர்வுகளால் கட்டப்படுகின்ற மனக்கோட்டைதான் அவசியம் என்கின்ற கருத்து என்றும் - தேசியத்திற்கு எதிரான தர்க்கங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுமுள்ளன.

அதாவது, தேசியம் என்பது ஒரு கற்பனையாகும். அதற்கு அடித்தளமாக, ஆதாரமாக எதுவும் இல்லை என்று உலகளாவிய ரீதியில் நீண்ட காலமாகவே தேசியத்துக்கு எதிரான கருத்துக்கள் தர்க்கிக்கப்பட்டு வருகின்றன.

கற்பனையான ஒன்றின் மீது கட்டப்பட்டு எழுகின்ற வெறும் வெற்று உணர்வுகள்தான் தேசியம் என்று தேசியத்துக்கு எதிரானவர்கள் கூறி வருகி;ன்றார்கள். தேசியம் ஒரு கற்பிதச் சமூகம் என்று பெனடிக்ட் அன்டர்சன் என்பவர் வாதிடுவார்.

இந்தக் கூற்றை நாம் முற்றாக மறுக்கின்றோம். தாயக நிலப் பகுதி, இனக்குழு வழிப்பட்ட ரத்த உறவிலிருந்து தொடங்குகின்ற மனித ஒற்றுமை, அதன் மொழி, பொருளியல் போன்ற பௌதிக கூறுகளால்தான் ஒரு தேசிய இனம் கட்டமைக்கப்படுகின்றது.

வெறும் அகநிலை விருப்பங்களாலோ கற்பிதல்களாலோ அல்ல! மேற்கூறிய பௌதிகக் கூறுகள் ஓர் அகநிலையை உண்டாக்குகின்றன. அதுதான் ~நாம், ~நம்மவர் என்கின்ற உணர்வு! - இவ்வாறு தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் திரு பெ. மணியரசன் விளக்கமளிப்பார்.

அதாவது உணர்விலிருந்து தமிழ்த் தேசியம் உருவாகவில்லை. தமிழ்த் தேசியத்திலிருந்துதான் உணர்வு உருவாகின்றது.

அன்புக்குரிய வாசகர்களே!

தமிழ்த் தேசியம் என்பது குறித்து இவ்வேளையில் நாம் தர்க்கித்தற்கு முக்கியமான அடிப்படைக் காரணங்கள் உண்டு.

உலகெல்லாம் புலம் பெயர்ந்து வாழுகின்ற நாம், ஒத்த உணர்வுகளால் ஒருமைப்படுவதற்கு அடிப்படைக் காரணம் தமிழ்த் தேசியம்தான்!

இந்த உணர்வுகள் நமக்குப் பொதுவாக இருப்பதற்குக் காரணம், நம்மெல்லோருக்கும் பொதுவாக தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்பட்டு இருப்பதுதான்!

இதே தர்க்கம் எமது தமிழீழத் தேசியத் தலைமைக்கும் பொருந்தும்.
தமிழீழ தேசியத் தலைமை, வெறும் கற்பிதத்தால் கட்டமைக்கப்படவில்லை! அது நாம் மேற்கூறிய கூறுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அது கிடைத்தற்கரிய தலைமையாகவும் அமைந்துள்ள அற்புதத்தைத்தான் எம்மால் விளக்க முடியாமல் இருக்கிறது.

ஆகவே புலம்பெயர்ந்துள்ள நாம் இயல்பாகவே தமிழ்த் தேசிய இனம் என்ற கட்டமைப்பில் இருக்கின்றோம். அந்தத் தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடுகின்ற, தேசியத் தலைமையின் வழி நடத்தலின் ஊடாக, எமது தேசியத்திற்கான கடமையை இயல்பாகவே செய்கின்றோம்.

எமது தார்மீகக் கடமையை நாம் முற்றே அறிவோம். அதன் அவசியம் குறித்தும் நாம் நன்கு அறிவோம். அதன் முக்கியத்துவம் குறித்தும் நாம் நன்கு அறிவோம்.

ஆனால் ஒரே ஒரு விடயத்தை மட்டும்தான் நாம் நன்றாக அறிந்திருக்கவில்லை என்ற ஐயம் எனக்கு உண்டு. அந்த விடயம் மிக முக்கியமான விடயமாகும்.

இவ்வளவு கடமைகளையும் அறிந்து, புரிந்து, அதற்கேற்பச் செயலாற்றுகின்ற எமது சர்வதேச தமிழ்ச் சமூகம் ஒன்றை மட்டும் சரியாகப் புரிந்து வைக்கவில்லை. சர்வதேச தமிழ்ச் சமூகம் சரியாகப் புரிந்து கொள்ளாத விடயம் தன்னுடைய வலிமையைக் குறித்துத்தான்!

புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள் சமூகம், இதுவரை காலமும் தம்மின மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றி வந்துள்ள பணி அளப்பரியது என்று நாம் முன்னரும் குறிப்பிட்டிருந்தோம்.

புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் ஒருங்கிணைப்பின் ஊடே மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாடுகள் காரணமாகவும், தமிழீழத் தேசியத் தலைமை காரணமாகவும், தமிழீழத் தேசத்தின் மாவீரர்கள் காரணமாகவும் தமிழ்த் தேசியம் தனது சுயத்தை இழக்காமல் எத்தனையோ சோதனைகளுக்கு முகம் கொடுத்துப் போராடி வென்றது.

சிறிலங்கா அரசு மேற்கொண்ட மிகப் பாரிய இராணுவ நடவடிக்கையான ~சூரியக்கதிர் காரணமாக, ஓர் இரவிலேயே ஐந்து இலட்சம் தமிழ்மக்கள் வரலாற்று ரீதியாக முதல்முறையாக யாழ் குடாநாட்டை விட்டு அகதிகளாக வெளியேறியபோது, எந்த ஒரு உலகநாடும் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

எந்த ஒரு மனிதாபிமான உதவிகளையும் செய்வதற்கும் உலக நாடுகள் முன்வரவில்லை. எமது மக்களின் அவலத்தை, உலக மக்களின் கவனத்திற்கு முன் முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கு எந்தச் சர்வதேச ஊடகமும் முன்வரவில்லை.

~யாப்ப பட்டுன - நேரம் அது!

ஆயினும் புலம்பெயர்ந்த தமிழீழத்தவர்கள் துடித்து எழுந்தார்கள். தமிழ்த் தேசியக் கட்டமைப்பின் ஊடே வெளிப்பட்ட தேசிய உணர்வு காரணமாக, புலம்பெயர்ந்தோர் ஆற்றிய தேசியக் கடமை எமது மக்களுக்கு அரு மருந்தாயிற்று.

புலம் பெயர்ந்தவர்கள் ஆற்றிய மிகப்பெரிய பணி அது. எந்த உலக நாடுகளையும் நம்பியிருக்காமல் தமிழ் மக்கள் தமது பங்களிப்பினை உணர்வு பூர்வமாக அளித்தார்கள். புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள், தங்களது பலத்தை உணராமலேயே பங்களித்த விடயம் அது.

அடிக்குமேல் அடியாக ~ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா அரசு ஆரம்பித்துத் தமிழ்த் தேசியத்தையே முற்றாக வேர் அறுக்க முனைந்தது.

தமிழ்த் தேசியத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அனைத்தையும் தன் தோளில் தாங்கிக்கொண்ட அந்த தேசியத் தலைவனுக்கும், அவன் பின்னால் அணிவகுத்து நின்ற போராளிகளுக்கும் அன்றைய தினம் பக்கபலமாக நின்ற காரணிகளில் முக்கிய சக்தி எது?

அது எமது புலம்பெயர்ந்த தமிழீழத்தவர்களின் சக்தி அல்லவா?

~சமாதானத்திற்கான காலம் என்று சொல்லப்பட்ட காலகட்டத்தில், சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு ஏதும் கிட்டவில்லை.

அது மட்டுமல்லாது ~சமாதானத்திற்கான காலம் தரக்கூடிய எந்த ஒரு நிரந்தரப் பலனையும் தமிழீழ மக்கள் பெறவில்லை!

தமிழ் மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இதற்கான தமிழீழ அதிகார சபைக்குரிய ஆலோசனை வரைவையும், சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. உலக நாடுகள் தருவதாக வாக்களித்த எந்த ஒரு நிதி உதவியும், வந்து சேரவில்லை.

ஆயினும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் சோர்ந்து போய் விடவில்லையே? எந்த ஓர் உலக நாட்டையும் நம்பியிராது, கடந்த ~சமாதானத்திற்கான காலம் என்று சொல்லப்பட்ட காலகட்டத்தின்போது தமிழீழத் தேசத்தின் கட்டுமானத்திற்கான நிதியுதவியையும், தொழில்சார் நிபுணத்துவ உதவிகளையும் வழங்கினார்களே!

இன்னமும் வழங்கி வருகின்றார்களே!
அன்றைய தினம் தமிழீழத்தில் பணிபுரிந்த புலம்பெயர்ந்த தமிழீழத்தவர்கள்தான் எத்தனை எத்தனை பேர்! அது எத்துணைப் பேருதவி!

தமது வலிமை குறித்து முழுமையாக அறியாத போதிலும், தமிழ்த் தேசியத்திற்காகத் தமது வலிமையைப் புலம்பெயர்ந்த தமிழீழத்தவர்கள் உபயோகித்த காலம்; அல்லவா அது!

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட வராத ஆழிப்பேரலை தமிழீழக் கரையோரப் பகுதிகளைத் தாக்கி, மக்களுக்கும், தேசத்திற்கும் அவலத்தைக் கொண்டு வந்தபோது, உள்ளம் துடித்தெழுந்து உதவிக் கரம் நீட்டியவர்கள் எமது புலம் பெயர்ந்த தமிழீழ மக்களல்லவா!

இந்த ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பொதுக் கட்டமைப்பினைக்கூட சிறிலங்காவின் நீதி(?)த்துறை புறம் தள்ளியபோது உலகத் தமிழர்கள் அயர்ந்து போய் விடவில்லையே! அந்த ஆழிப்பேரலையின் வலிமையையும் விட எமது உலகத் தமிழர்களின் ~அன்புப் பேரலை வலிமை கூடியது அல்லவா!

ஆகவே, போர்க்காலமாக இருந்தாலும் சரி, சமாதானத்திற்கான காலமாக இருந்தாலும் சரி, இயற்கை கொடுக்கக் கூடிய அழிவுக்காலமாக இருந்தாலும் சரி, புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் தங்களது தார்மீகக் கடமையைப் புரியத் தவறுவதேயில்லை.

தமிழ்த் தேசியத்திற்காக உலகத் தமிழர்கள் வீறுகொண்டு எழுகின்ற போது, அவர்கள் யாருடைய தயவையும் எதிர்பார்த்து நிற்பதில்லை. ~ஒற்றுமையே பலம் - வலிமையே வாழ்வு என்பதை அவர்கள் நிரூபித்தே வந்துள்ளார்கள்.

இவ்வாறாகத் தமது வலிமையூடாகத் தமிழ்த் தேசியத்திற்கு உறுதுணையாக இருக்கின்ற உலகத் தமிழர் சமூகம், ஒரு சில விடயங்களில் மட்டும் தளர்ந்து போவது ஏன்?

அங்கலாய்ப்பது ஏன்?
ஐயப்படுவது ஏன்?

தமிழீழ மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் உள்நோக்கோடு உலக நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முனையும்போதோ அல்லது தடை செய்யும்போதோ எமது உலகத் தமிழர்கள் அடைகின்ற பரபரப்பிற்கு அளவேயில்லை.

நிலைமை எல்லாம் சிக்கலாகப் போகின்றதே என்ற அங்கலாய்ப்பும், தளர்வும் உடனடியாகத் தொற்றுநோய் போல் எம்மவரைத் தொற்றிக்கொள்ளும்!
இப்படிப்பட்ட அழுத்தங்களும், தடைகளும் அதிருப்தியைத் தரக்கூடியவைதான்! இவற்றை நாம் கடுமையாகக் கண்டிக்கவும், எதிர்க்கவும் வேண்டும்தான்! இவற்றை அகற்றுவதற்காக நாம் முழு மூச்சாக உழைக்கவும் வேண்டும்தான்!

ஆனால் அச்சப்படத் தேவையில்லை. அங்கலாய்க்கத் தேவையில்லை. ஐயம் கொள்ளக்கூடிய அவசியமும் இல்லை.

அன்புக்குரிய வாசகர்களே!

நாம் பல காலமாகத் தர்க்கித்து வந்துள்ள ஒரு கருத்தை இப்போது மீண்டும் தர விழைகின்றோம்.

இந்தக் கருத்தில் உள்ள உண்மையும், யதார்த்தமும் பல விடயங்களைத் தெளிவுபடுத்தக்கூடியவை என்றே நாம் நம்புகின்றோம்.

உலக வரலாற்றில் எத்தனையோ உரிமைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. தற்போதைய காலத்திலும் எத்தனையோ உரிமைப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. உருவாகியும் வருகின்றன.

இவ்வாறு உலகின் பல பாகங்களிலும் நடைபெறுகின்ற, நடைபெற்ற, உருவாகின்ற உரிமைப் போராட்டங்களைப் பொதுவாக மேற்குலகம் ஏற்றுக்கொண்டதில்லை.

மேற்குலகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக அந்த விடுதலைப் போராட்டங்கள் நடைபெறாமல் போனதில்லை.

ஆகவே, ஒரு யதார்த்தத்தை நாம் இங்கே உணரக் கூடியதாக உள்ளது.
அதாவது,

மேற்குலகத்தினைக் கேட்டோ, அல்லது மேற்குலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றோ, ஒரு மக்கள் சமுதாயம் தங்களுடைய விடுதலைப் போராட்டங்களை ஆரம்பிக்கப் போவதில்லை.

இந்த மேற்குலக நாடுகளின் அங்கீகாரம் இல்லையென்பதால் அம் மக்கள் தங்கள் போராட்டத்தைக் கை விடவும் போவது இல்லை.

வரலாறு எமக்கு ஒரு உண்மையைப் புலப்படுத்தி நிற்கின்றது. மேற்குலக நாடுகளின் அழுத்தங்களையும் மீறி எத்தனையோ போராட்டங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.

அடிமைப்பட்டிருந்த நாடுகள் சுதந்திரம் பெற்றிருக்கின்றன. ஒரு விடுதலைப் போராட்டம் பலம் வாய்ந்து - வலிமையோடு விளங்கினால், உலக நாடுகள் ~சமாதானம் குறித்தும், ~தீர்வு குறித்தும் பேசத் தொடங்கும்.

தமிழ்த் தேசியம் குறித்தும், அதன்பால் எழுகின்ற ஒருங்கிணைந்த உணர்வு குறித்தும் நாம் பல விடயங்களைத் தர்க்கித்தோம். இதன் காரணமாகப் பிறர் உதவியை எதிர்பாராது, உலகத் தமிழர்கள் தொடர்ந்தும் புரிந்து வருகின்ற தமிழ்த் தேசியத்திற்கான கடமையையும் தர்க்கித்தோம்.

புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் வலிமையின் பரிமாணம் குறித்து கருத்துக்களைத் தந்திருந்தோம். எந்த விடுதலைப் போராட்டத்தின் வெற்றியும், தோல்வியும் அந்த இன மக்களின் எழுச்சியிலும், வலிமையிலும், தலைமையிலுமே இருக்கின்றது என்பதையும், அவை வேற்றுச் சக்திகளின் ஆதரவிலோ, எதிர்ப்பிலோ தங்கியிருக்கவில்லை என்பதையும் தர்க்கித்திருந்தோம்.

ஆகையால் அன்புக்குரிய புலம்பெயர்ந்த தமிழீழ மக்களே!

எம்முடைய வலிமை மகத்தானது. அதனை நாம் மீண்டும்; மீண்டும் நிரூபித்தே வந்திருக்கின்றோம். உண்மையில் உலகம் எமக்கு வெளியே இல்லை. அது எங்களுக்குள்ளேதான் இருக்கின்றது.

ஆகையால் வலிமையுள்ள நாம், எமது வலிமையின் பரிமாணத்தை நன்கு உணர்ந்து கொண்டு, அதன் வீச்சை உரிய முறையில் உபயோகிப்போம்.
அஞ்சற்க!


பொங்கு தமிழாய் வீறு கொண்டு எழுக!!

சபேசன்

Comments