கனடிய அரசின் நடவடிக்கையானது தமிழர்களின் அடிப்படை உரிமைகளை அழிக்கும் வழுக்கல் பாதையின் முதற்படி: உ.த. முன்னாள் தலைவர்

உலகத் தமிழர் இயக்கத்துக்கு எதிரான கனடிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது கனடாவில் உள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழுக்கல் பாதையின் முதற்படி என்று நம்புவதாக உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் இயக்கம் கனடிய அரசினால் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை (19.06.08) ரொறன்ரோவில் உள்ள Ruby and Marlys Edwardh அலுவலக நூலகத்தில் நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவர் சித்தா சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கனடாவில் உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்டமைக்கு எதிரான வழக்கிற்காக Ruby & Edwarde வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த Malys Edwarde என்பவரை உலகத் தமிழர் இயக்கம் அமர்த்தியுள்ளது.

அவரோடு வழக்கறிஞர் Adriel Weaver ஐயும் அமர்த்தியுள்ளோம். மேலும் Jackman and Associates குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் Barbara Jackman இணை வழக்கறிஞராகச் செயற்படுவார். தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் இங்கு வருகை தர முடியவில்லை. கனடிய குற்றவியல் சட்டத்தின் (Criminal Code) கீழ் கடந்த திங்கட்கிழமை (16.06.08) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Stockwell Day உலகத் தமிழர் இயக்கத்தினை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவித்திருப்பது நீங்கள் அறிந்த சங்கதியே.


ஒரு சமூகத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு அமைப்பின் மீது குற்றவியல் குற்றம் சுமத்தி கனடிய அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவு உலகத் தமிழர் இயக்கத்தின் இயக்குநர் சபை, உலகத் தமிழர் இயக்கம் வழங்கிய சேவைகளால் பயனடைந்த பல்லாயிரக்கணக்கான கனடிய தமிழர்கள் மற்றும் கனடிய தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சிக்கும் திகைப்புக்கும் உள்ளாக்கியுள்ளது.
கடந்த பல நாட்களாக உலகத் தமிழர் இயக்கத்தின் தன்மை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் தவறுதலான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
எனவே இன்று எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி உலகத் தமிழர் இயக்கம் என்ன செய்கின்றது, அது எதற்காக உழைக்கின்றது என்பதனை தெளிவாக்க விரும்புகின்றேன்.

உலகத் தமிழர் இயக்கம் 1986 ஆம் ஆண்டில் ஒரு இலாப நோக்கற்ற குழுமமாக ஒன்ராறியோவில் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 22 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான கனடிய தமிழர்களுக்கு குடியமர்வு, உளவளத்துறை மற்றும் பண்பாட்டுச் சேவைகளை வழங்கி வந்துள்ளது.

ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் 2 லட்சம் கனடிய தமிழர்கள் வாழ்கின்றனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையோர் சிறிலங்கா அரசாங்கத்தின் இன அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு அஞ்சி புலம்பெயர்ந்து இங்கு வந்தவர்கள் ஆவர்.

தமிழ்க் குடிவரவாளர் கனடாவில் புதிய வாழ்வைத் தொடக்குவதற்கும் அவர்கள் பண்பாட்டு உறவுகளை சமூகத்தில் ஒன்றிணைப்பதற்கும் வேண்டிய எல்லாவித உதவிகளையும் உலகத் தமிழர் இயக்கம் அக்கறையோடு வழங்கியது.

கடந்த காலங்களில் ஆவண மொழிபெயர்ப்பு, மொழிபெயர்த்தல், மொழி மற்றும் தொழிற் பயிற்சி, பிள்ளைகளுக்குத் தமிழ் மற்றும் பண்பாட்டு வகுப்புகள், மகளிரின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் மகளிர் அமைப்பு, 16,000 நூல்கள் கொண்ட நூலகம், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் உட்பட கனடிய தமிழர்களுக்குப் பல்வேறு வேலைத் திட்டங்களையும் சேவைகளையும் உலகத் தமிழர் இயக்கம் வழங்கி வந்துள்ளது.

உலகத் தமிழர் இயக்கம் முற்றிலும் தன்னார்வத் தொண்டர்களின் உழைப்பினாலும் மக்களின் நிதிப்பங்களிப்பினாலும் இயங்கி வந்த ஒரு அமைப்பாகும்.

உலகத் தமிழர் இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் பட்டியலிட்ட காரணமாக இந்தச் சேவைகளை தொடர்ந்து கனடிய தமிழர்களுக்கு வழங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

உலகத் தமிழர் இயக்கம் இல. 39 கொன்சென்ரினோ வீதி, ஸ்காபரோவில் உள்ள கட்டடத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது. இயக்குநர் அவை உறுப்பினர்கள் தங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைத்துள்ளனர்.
இன்று முதற்கொண்டு உலகத் தமிழர் இயக்கத்தின் சேவைகளும் நிறுத்தப்படும். 16,000 நூல்களைக் கொண்ட நூலகமும் பொதுமக்களுக்கு மூடப்படும்.

உலகத் தமிழர் இயக்கம் இலங்கையின் வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ்மக்களின் தன்னாட்சி உரிமையை ஆதரிக்கின்றது என்பது ஒன்றும் இரகசியமல்ல.

இது ஒரு அரசியல் நிலைப்பாடாகும். எல்லோரும் அதனை ஆதரிப்பார்கள் என்றில்லை. ஆனால் அரசியல் சட்டத்தின்படி அதனைச் சொல்வதற்கு எமக்கு உரிமை இருக்கின்றது.

எங்களில் பெரும்பாலானோர் கனடாவுக்கு வந்ததே இந்த நாடு ஒவ்வொரு குடிமகனும் தனக்கு விருப்பமான கருத்தை வைத்திருக்கவும் தெரிவிக்கவும் உரிமையுடையவர்கள் என்பதைக் கட்டிக் காப்பதாலேயே.

துரதிர்ஷ்டவசமாக இந்த உரிமைகள் சிறிலங்காவில் சமமாகக் கடைப் பிடிக்கப்படுவதில்லை. உலகத் தமிழர் இயக்கத்தைப் பட்டியலிட்டது சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கையை மேலும் ஊக்கப்படுத்துவதோடு வன்முறை மற்றும் பயமுறுத்தல்கள் மூலம் மாற்றுக் கருத்துக்கள் நசுக்கப்படும் நிலை நீடிக்க வழிவகுக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்.
சிறிலங்காவின் பாரதூரமான மனித உரிமை மீறல்களை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக பொதுமன்னிப்புச் சபை போன்றவை மீண்டும் மீண்டும் கண்டித்து வருவது தெரிந்ததே.

கனடாவில் உள்ள சமூக அமைப்புக்கள் குற்றவாளிகளாக சித்திரிக்கப்படுவதற்குப் பதில் கனடிய அரசாங்கம் சிறிலங்காவில் அமைதி முயற்சியை முன்னெடுத்திருக்கலாம். தற்போதைய மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை நல்கி இருக்கலாம்.
கனடிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது எங்களின் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழுக்கல் பாதையின் முதற்படி என்று நம்புகின்றோம்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் குரலை அடைத்து விடும் முற்று முழுதான ஒரு அரசியல் நகர்வாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.
கனடிய அரசாங்கத்தின் அறிவித்தல் எம்மைக் கறைபடுத்துவதாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றது என்று முழுச்சமூகமும் நினைக்கின்றது.
2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை பயங்கரவாதப் பட்டியலில் இட்ட பின்னர் கனடிய தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகக் குறிப்பிடத்தகுந்த எதிர்விளைவுகள் ஏற்பட்டன.

பாடசாலைகள், வேலைத்தளங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலர் பாரபட்சமாக நடத்தப்பட்ட அனுபவத்துக்கு உள்ளானார்கள்.
இப்போது உலகத் தமிழர் இயக்கம் பட்டியலிடப்பட்டது முன்னரை விடப் பாரதூரமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கவலை கனடிய தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட கனடிய தமிழர்களிடம் இருந்து எமக்குக் கிடைத்த பேராதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். அவர்களின் எதிரொலிப்பும் எங்களின் எதிரொலிப்பும் சொல்லும் செய்தி என்னவென்றால் எமது வாயை யாரும் அடைத்துவிட முடியாது என்பதுதான்.

எனவே உலகத் தமிழர் இயக்கம் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதனை எதிர்த்து உலகத் தமழர் இயக்குநர் சபை முழுப்பலத்தோடு நீதிமன்றத்தில் வழக்காடுமாறு தனது வழக்கறிஞர்களை பணித்துள்ளது.
கனடிய அரசின் இந்த நடவடிக்கை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றி யாப்பில் போற்றிப் பதிக்கப்பட்ட அடிப்படை கருத்துரிமை மற்றும் கூடல் உரிமை ஆகியவற்றின் மீதான தாக்குதலாக நாங்கள் பார்க்கின்றோம்.

கனடிய அரசியல் சட்டத்தைத் கனடிய நீதித்துறை உறுதியாகக் கடைப்பிடிக்கும் என்பதில் எமக்கு முழு அளவிலான நம்பிக்கை இருக்கின்றது. எனவே எங்களுக்கு இருக்கும் சட்டப் பரிகாரங்களை நாங்கள் முழு அக்கறையோடு முன்னெடுப்போம் என்றார் அவர்.

Comments