அமெரிக்காவையே முடக்கும் செக் குடியரசு மக்கள்

ஜுன் 22 ஆம் நாள்.
உலகெல்லாம் பரந்து வாழும் செக் குடியரசு மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக அணிதிரளவுள்ள நாள்.

இதன் பின்னணியில் உள்ள சம்பவங்கள் ஈழத்தமிழன் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டியவை.

அணு ஆயுத பயன்பாடுள்ள நாடுகள் உலகெங்கும் வளர்ச்சியடைந்து வருவதால், தொடர்ச்சியாக தான் கொண்டாடி வரும் உலக காவல்துறைக்காரன் என்ற வகிபாகம் தன்னிடமிருந்து பறிபோய் விடுமோ என்ற பயம் அமெரிக்காவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒன்றும் புதிய விடயமல்ல.

இதனால், எதிர்காலத்தில் இந்த அணு ஆயுத வளமுள்ள நாடுகளுக்கு இடையில் இடம்பெறக்கூடிய பனிப்போரிலிருந்து தன்னை எவ்வாறு காத்துக்கொள்வது என்பதிலும் அதில் தான் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதிலுமே அமெரிக்காவின் அனைத்துக்கவனமும் குவிந்துபோயுள்ளது.
அணு ஆயுத புழக்கம் உள்ள நாடுகளைக் கண்காணிப்பதும் அவர்களின் தொழில்நுட்ப முறைகளை மோப்பமிடுவதும்தான் அமெரிக்காவின் அன்றாட தொழில்களில் ஒன்றாகிவிட்டது.

உலகெங்கும் அமைத்துள்ள அறுநூறுக்கும் அதிகமான அதனது இராணுவத் தளங்களை அந்தந்த பிராந்தியங்களின் அமைதி காக்கும் தளங்கள் என்று அமெரிக்காவால் செல்லமாக அழைக்கப்பட்டாலும் அதன் முழுநேரப் பணி இராணுவ, அணுசக்தி சார்ந்த மற்றும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளை மோப்பமிடுவதுதான்.

இதன் பிரகாரம், ஐரோப்பாவில் அமைத்து வரும் தனது ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக, ஐரோப்பாவின் மத்தியில் அமைந்துள்ள செக் குடியரசில் தனது ராடார் கண்காணிப்புத் தளமொன்றை அமைப்பதென்பது அமெரிக்காவின் நீண்ட காலத்திட்டம்.

செக் குடியரசில் அமைக்க உத்தேசித்துள்ள ராடார் தளத்தை, ஈரானினால் ஏற்படக்கூடிய அணு ஆயுத ஆபத்துக்களை கண்காணிப்பதற்காகவே என அமெரிக்கா கூறினாலும், அது தம்மையும் தமது அணு ஆயுத விவகாரங்களையும் துப்பறியும் நோக்கத்திலேயே நிறுவப்படவுள்ளது என்று ரஷ்யா போர்க்கொடி தூக்கியுள்ளது. அத்துடன் நின்றுவிடாமல், அமெரிக்காவின் இந்த ராடார் தளத்துக்கு செக் குடியரசு இடமளிக்குமானால், தமது ஏவுகணைகள் ஐரோப்பாவை நோக்கி வரும் என்றும் அது அச்சுறுத்தல் விடுத்திருக்கிறது.

இவையெல்லாவற்றையும் மீறி, தமது நாட்டில் அமெரிக்காவுக்கு இடமளிப்பது என செக் குடியரசின் அமெரிக்க சார்பு அதிகார வர்க்கம் தீர்மானித்துவிட்ட போதும், இதற்கு மக்கள் எதிர்ப்பு நிச்சயம் கிளம்பும் என்ற அச்சத்தினால் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வரை அமெரிக்காவுக்கு அங்கீகாரமளிக்கும் இந்தத் திட்டத்தை இரகசியமாக வைத்திருந்தனர்.

தேர்தல் முடிவடைந்து ஆட்சியமைத்தவுடன் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது என அரசு முடிவெடுத்தது.
நடந்தது என்ன?

அந்நாட்டின் உருவாக்கத்தின் போது இடம்பெற்ற போராட்டங்கள் முதல் பல போராட்டங்களை வழிநடத்திய இரண்டு சமாதான ஆர்வலர்களான ஜேன் டமாஸ் - ஜேன் பெட்னர் ஆகியோர், செக் அரசின் இந்த தான்தோன்றித்தனமான போக்குக்கு எதிராக வீதியில் இறங்கினார்கள்.

தமது அரசு மேற்கொள்ளவுள்ள செயலையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறினார்கள்.
நாட்டைப் பாதுகாக்கும் வகையில் இந்த ராடார் அமைக்கும் ஒப்பந்தத்தில் செக் அரசை அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய விடக்கூடாது என்று பிரசாரம் செய்தார்கள்.

இந்தப் பிரசாரத்தின் பாரிய ஒரு திருப்புமுனையாக கடந்த மே மாதம் 13 ஆம் நாள் முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்தனர். இவர்களின் இந்தப் போராட்டமும் அதன் ஊடான பிரசாரமும் உலகை ஒருகணம் திரும்பி பார்க்க வைத்தது.

இந்த இரண்டு பேரும் போராட்டம் செய்வது யாருக்கு எதிராக? உலகெங்கும் தனது ஆதிக்க கரங்களை அகல விரித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் தான் நினைத்ததை செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு எதிராக.
அமெரிக்கா நினைத்திருந்தால் தனக்குச் சார்பான செக் அரசுக்கு ஊடாகவே இவர்கள் இருவரையும் ~போட்டுத் தள்ளியிருக்க முடியும்.

ஆனால், அது அங்கு நடக்காது என்பது அமெரிக்காவுக்கே தெரிந்திருந்தது. ஏனெனில், அவர்களின் போராட்டம் ஆரம்பமாகி சில நாட்களுக்குள்ளேயே உலகமயமாகி விட்டது.

தமது நாட்டுக்காக மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டம் பற்றி கேள்விபட்ட புலம்பெயர்ந்து வாழ்ந்த ஒவ்வொரு செக் நாட்டவனும் சிலிர்த்தெழுந்தான். தானும் இந்தப் போராட்;டத்தில் பங்குகொண்டு தனது தேசத்தை காப்பாற்ற வேண்டும் என கைகளை உயர்த்தினான்.

உலகெங்குமிருந்து தமது போராட்டத்துக்கு திரண்ட ஆதரவை சரியாகப் பயன்படுத்தி- நெறிப்படுத்த எண்ணிய இவர்கள் இருவரும் கடந்த ஜூன் 2 ஆம் நாள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார்கள். தமது போராட்டத்தில் இணைந்துகொள்ள முன்வந்த ஏனையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கினார்கள்.

அதற்கு புதிய முறையொன்றையும் அறிமுகம் செய்தனர். தமது போராட்டத்தை விளக்கும் இணையத்தளம் ஒன்றினை ஆரம்பித்து அதில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளும் வகையில் சந்தர்ப்பம் அளித்தார்கள்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள், செக் - அமெரிக்க கூட்டு முயற்சியான ராடார் தள அமைப்புத் திட்டத்துக்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதம் இருப்பர்.

இணையத்தில் பதிவு செய்த அடுத்த நபர் அடுத்த நாள் தனது போராட்டத்தை நடத்துவார். இப்படியாக உலகெங்குமுள்ள செக் நாட்டின் புலம்பெயர் உறவுகளுக்குப் பாலம் அமைத்து தமது தேசத்தின் பால் போராட வகை செய்யப்பட்டது.

இந்தப் போராட்டத்தின் உச்சகட்டமாக, ஜூன் 22 ஆம் நாள். பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒரேயடியாக உண்ணாவிரதத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளனர். இது மாபெரும் அடையாள போராட்டமாக அமையும் என ஜேன் டமாசும் ஜேன் பெட்னரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், தமது போராட்டத்தின் இன்னோர் அங்கமாக இரு நாட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக உலகெங்கும் கையெழுத்து கோரும் நடவடிக்கையையும் இவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

தமது திட்டத்துக்கு எதிராக உலகெங்கும் திரண்டெழும்பியுள்ள செக் நாட்டு மக்களின் எழுச்சியால் மிரண்டு போயுள்ளது அமெரிக்கா.

ராடார் தளம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு பரகுவேயிற்கு செல்லவிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொண்டலிசா றைஸ், தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார். ஒப்பந்தம் ஜூலை 10 ஆம் நாள் கைச்சாத்தாகும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆனால், பெரும் நெருக்கடியை சந்தித்துள்ள செக் குடியரசு, தனது திட்டத்தை பின்வாங்கப் போவதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டின் நாடாளுமன்றம், மக்கள் போராட்டத்தால் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாகவும் இந்தத் திட்டம் தொடர்பான பிரேரணை விவாதத்துக்கு வரும்போது அது தோற்கடிக்கப்படக்கூடிய சாத்தியமே நிலவுவதால் திட்டத்தை முன்கூட்டியே கைவிடவே அரசு தீர்மானித்துள்ளதாகவும் அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

(2)
சர்வதேச அரங்கில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் ஈழத்தமிழன் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய உதாரணம்.

செக் விவகாரத்தில் நாம் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டியது அங்கு இருவர் ஆரம்பித்த அந்த போராட்டம் எவ்வளவு தூரம் உலக மயமாக்கப்பட்டது என்பதும் அதற்கு மக்கள் சக்தி எவ்வளவு தூரம் பலமாக அமைந்தது என்பதுமே ஆகும்.

இன்று அறுநூறுக்கும் மேற்பட்ட இராணுவ தளங்களை உலகமெல்லாம் நிறுவி வைத்திருக்கும் அமெரிக்காவால், செக் குடியரசின் மண்ணில் நுழைய முடியவில்லை என்றால் அங்கு மக்கள் சக்தி எவ்வளவு தூரம் தாக்கம் செலுத்தியுள்ளது என்பதே வியக்கத்தக்க விடயமாக உள்ளது.
இந்த வகையான மக்கள் சக்தி போராட்டங்களின் வாசல்களை நோக்கி புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்கள் விரைய வேண்டிய காலகட்டம் நெருங்கி விட்டது.

நாங்கள் எமது கடமையை செய்யத்தவறிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதிரி தனது பிரசார நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறான் என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இவ்வளவு காலமும் எமது மண்ணுக்காக ஆற்றிய பங்களிப்பு என்பது வார்த்தைகளில் வர்ணித்துவிட முடியாதது.
அதேபோன்ற பங்களிப்புடன் எமது போராட்டம் தொடர்பான பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எதிரி மேற்கொள்ளும் உத்திகளை முறியடிக்க வேண்டிய வரலாற்றுக்கடன் எம்மை தேடிவந்துள்ளது.

கோடி கோடியாக பணத்தை அள்ளி வீசி தனது பொய்ப்பிரசாரத்துக்காக சிங்கள அரசு படாதபாடு பட்டு அதில் ஒருசில வெற்றிகளையும் கண்டிருக்கிறது.

புலம்பெயர்ந்து வழும் மக்களுக்கு அந்தந்த நாடுகளில் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு தெளிவான புரிதல் வேண்டும்.
வெளிநாடுகள் இன்று எமது பலத்தை அடக்குவதற்கு சிங்கள தேசத்தின் சொல்லைக்கேட்டு நடவடிக்கை எடுக்கின்றது என்றால் எமது சக்தி அங்கு மேலோங்கி நிற்கின்றது என்பதே அர்த்தம்.

ஆகவே, அந்தந்த நாட்டுச் சட்டங்களுக்கு அமைய எமது சக்திமிக்க போராட்டத்தை உலகமயமாக்குவதில் மக்கள் தன்முனைப்புடன் செயற்படவேண்டும்.

இன்று சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத சட்டத்தின் கீழ் எமது போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கவோ ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ முடியாதபடி ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஜனநாயகத்தின் விழுமியங்களை பாதுகாக்கும் வெளிநாடுகளில் அந்த நிலையில்லை என்பது யாவருக்கும் தெரிந்த விடயம்.

எமது போராட்டம் சம்பந்தமான கருத்துக்களை பரப்புரை செய்வதிலோ எழுதுவதிலோ அல்லது மக்கள் பேரணிகளாக சென்று எமது ஆதரவை தெரிவிப்பதிலோ எந்த சிக்கலும் இல்லை. எமது கருத்துக்களை மதிக்கக்கூடிய ஒரு மதிப்பு மிக்க ஆட்சிமுறையின் கீழேயே புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, இது விடயத்தில் தெளிவு நிலையற்று அச்சமுறத் தேவையில்லை
இப்படியான நடவடிக்கைகள் மூலம் நாம் எமது ஒற்றுமையின் பலத்தில் நின்று சிங்கள அரசின் பொய்ப்பிரசாரத்தை தோற்கடிக்கலாம். அதற்கு எல்லோரும் அணிதிரள வேண்டும்.

அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு களத்தில் பயங்கர அடிவாங்கி தமிழனின் இராணுவ சக்தி என்ன என்பதை புரிந்துகொண்டு பதவிக்காலத்தை முடித்துக்கொண்டார் சந்திரிகா அம்மையார்.

தற்போது, அகலக்கால் வைத்து தனது அதிகார அட்டகாசங்களை கட்டவிழ்த்து விட்டிருக்கும் மகிந்த அரசுக்கு, இம்முறை தமிழனின் ஒன்றுபட்ட புலம்பெயர் வாழ் சக்தி என்ன என்பதை அடித்து புரிய வைப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

பிரசார ரீதியில் புலம்பெயர்ந்துள்ள மக்கள் கொடுக்கப்போகும் இந்த பதிலடி, அவர் தனது பதவிக்காலத்தை முடித்த பின்னரும் வாழ் முழுவதற்கு அசரீரியாக ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும்.

களத்தில் தமிழன் சேனை பெறும் தோல்விகளுக்கு எல்லாம் அவ்வப்போது நடத்தப்பட்ட பதிலடிகள் எதிரியை பழிவாங்கி தமிழனின் வெற்றிகளின் இருப்பை அவை உறுதி செய்திருக்கின்றன.

ஆனால், தமிழன் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் சிங்களத்தின் பிரசாரத்தால் எமது போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடைகளுக்கும் நெருக்குவாரங்களுக்கும் இவ்வளவு காலமாக நாம் என்ன பதிலடி கொடுத்தோம்.

எமது பிரசாரத்தின் உச்ச வேள்வியால் நாம் சாதித்த வெற்றிப்பட்டியல் சிறுதுண்டாகவே இன்னமும் உள்ளது. இந்த நிலை மாறவேண்டும்.

அதனைப் பிடித்தோம் இதனை இடித்தோம் என்று தமிழர் தாயகத்தில் நின்றுகொண்டு வெற்றுக்கோசமிடும் சிங்களப் படைகளுக்கு போர்ச்சங்கு ஊதும்
மகிந்தவுக்கு இம்முறை சற்றும் எதிர்பாராத வகையில் களத்துக்கு வெளியிலிருந்துகொண்டு அடி கொடுக்கவேண்டும்.

அதற்கு சர்வதேசத்தின் காதுகளை நாம் நெருங்க வேண்டும்.

-ப.தெய்வீகன்

Comments