ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைக்கின்றது: வைகோ குற்றச்சாட்டு


ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்றது என்று தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று திங்கட்கிழமை (23.06.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்கு, குறிப்பாக இலங்கையில் வாழும் பூர்வீகத் தமிழர்களுக்குப் பெரும் துரோகத்தை இழைத்து உள்ளது என்பது, சிறிலங்கா அரசு மற்றும் அதன் இராணுவ அதிகாரிகளின் அறிக்கைகளால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அரசின் வெளிப்படையான இரகசியமான நயவஞ்சகமான கண்டிக்கத்தக்க செயல்களால் அது மேலும் தெளிவாகத் தெரிய வருகிறது.
2008, ஜூன் 20 ஆம் நாள் வெளியுறவுச் செயலாளர் திரு.சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன், தேசிய பாதுகாப்புச் செயலாளர் திரு.விஜயசிங் ஆகியோர் அடங்கிய இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக் குழு, சிறிலங்கா அரசுடன் இருதரப்புச் செய்திகளையும் கலந்தாலோசிப்பதற்காக கொழும்பு சென்றடைந்ததாக இந்தியாவிலும், இலங்கையிலும் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி இருந்தது.

அங்கு சென்ற இந்தியக் குழு, அந்நாட்டு அரச தலைவர் திரு.மகிந்த ராஜபக்சவையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.கோத்தபாய ராஜ்பக்சவையும், அதிபரின் செயலாளர் திரு.லலித் வீரதுங்க அவர்களையும் சந்தித்தாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது. அவர்களின், பயணம் ஒரு பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா அரச தலைவர் அலுவலகத் தரப்பில் ஆதாரபூர்வமாக பத்திரிகையாளர்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியில், வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இங்கு வந்துள்ள இந்திய உயர்மட்டக் குழு இலங்கைத் தீவின் பாதுகாப்பு அம்சங்கள், வடக்குப் பகுதியில் எல்.டி.டி.ஈ.க்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவத் தாக்குதல், வடமேற்கு இலங்கைக் கடற்பகுதியில் ஊடுருவும் இந்திய மீனவர்கள் பிரச்சினை, மேலும் ஓகஸ்ட் முதல் வாரத்தில் கொழும்புவில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாடு தொடர்பான செய்திகள் உள்ளடக்கிய பல்வேறு செய்திகளையும், பிரச்சினைகளையும் விவாதிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பூர்வீகத் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலையில் ஈடுபட்டும் வரும் சிறிலங்கா இனவாத அரசுக்கு இந்த அரசு செய்யும் எல்லாவித இராணுவ உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென்று நேரிலும், கடிதம் மூலமாகவும் நான் மீண்டும், மீண்டும் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது, சிறிதும் அக்கறையின்றி பொறுப்பற்ற முறையில் தூக்கி வீசப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 ஆம் ஆண்டில் இந்திய - சிறிலங்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும்- இந்திய அரசு, சிறிலங்கா அரசுக்குத் தேவையான அனைத்து இராணுவத் தளபாடங்களையும் வழங்கி அந்நாட்டு இராணுவம் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலை செய்வதற்குண்டான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments