உலகளாவிய ஈழத் தமிழின அழிப்பு ! சிங்களத்தின் வெற்றிகரப் பரப்புரை !!

கருத்துருவாக்கப் பரப்புரையில் தமிழின ஒழிப்பு வேலையைச் சிங்களம் இரகசியமாக ஆனால் மிகச் சாதுரியமாக உலக அளவில் சாதித்து வருகிறது.

அறுபது நாடுகளில் அமைப்பு ரீதியாகச் செயற் பட்டும் ஈழத் தமிழினம் ஏமாந்து நிற்கிறது. ஈழத் தமிழருக்கு தனியான தேசியமோ, இறையாண்மையோ கிடையாது என்பதை உலகம் ஏற்கச் செய்யவும் இலங்கையில் இருப்பது இனப் பிரச்சனை அல்ல புலிப் பயங்கரவாதமே என்பதையும் நிரூபிக்கும் வகையிலும் நிரந்தரமான பரப்புரையை சிங்களம் உறுதிப் படுத்தி விட்டது.

கத்தோலிக்க தேவாலயங்களைக் குண்டு போட்டு அழித்தும் மதகுருமாரையும் தொண்டர்களையும் கொன்றொழித்த பின்னரும் மகிந்த ராஜபக்ஸ இத்தாலியில் பாப்பாண்டவரைப் பார்த்துப் பேச முடிந்திருக்கிறது.

அவ்வாறு பேசிய பின்னரும் கூட மடுமாத கோயில் மீது படை ஆக்கிரமிப்புச் செய்தார் என்றால், கருணாரத்தினம் அடிகளைக் கொன்றார் என்றால் என்ன அர்த்தம்?

இவ்வளவும் நடந்த பின்னரும் கத்தோலிக்க கொழும்பு மேற்றிராணியார் எதுவித கருத்தும் வெளியிடவில்லை என்றால் ஈழத் தமிழர் மீதான இன ஒழிப்பு எத்தனை பலமாயும் பரவலாயும் வேரூன்றி உள்ளது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

உலக அளவில் ஈழத் தமிழினத்தை நாடற்றவர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் எப்படிச் சிங்களத்தினால் பரப்புரை செய்ய முடிகிறது?

1960 முதல் திட்டமிட்டு இலங்கையின் பாடப் புத்தகங்களில் சிங்கள அரசின் கல்வித் திணைக்களம் தனது இன மேலாதிக்கத்தைப் புகட்டியதின் விளைவாக இன்று எந்த ஒரு சிங்களவனும் தமிழனை மனிதனாக, சமமாக, சக மனிதனாகப் பார்க்கும் நிலை இல்லாது போய் விட்டது.

இத்தோடு மட்டும் சிங்கள இன வெறி நின்று விடவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைச் சிங்களத்தின் நலனுக்காக பயங்கர வாதிகள் பட்டியலில் சேர்த்துப் பழிவாங்கிய பிரித்தானிய, அமெரிக்க, இந்திய அரசுகளும், மனித நேய வாதிகளும், அரசியல் நாகரிகம் கொண்டவர்களும் நடுநிலை விமர்சனங்களை வெளியிடும் போது அவர்களையும் புலிப் பயங்கர வாதிகள் எனக் கூறி எசச்சரிக்கை செய்கிறது சிங்களம்.

இத்தனைக்கு மத்தியிலும் சிங்களம் தனது பொய்ப் பிரச்சாரங்களை உண்மைகளாகப் பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இலங்கையின் ஆதிக் குடிகளின் வழி வந்தவர் சிங்களவரே என்றும் தமிழ் இனம்; இந்தியாவிலிருந்து 12 ஆம் நூற்றாண்டில் வந்து காலத்துக்குக் காலம் குடியேறிய திராவிடர் என்றும் பிரித்தானியக் கலைக் களஞ்சியம் (Britanica Concise Encyclopedia) பதிவை மேற்கோள் காட்டிAnswers .com என்ற அமெரிக்க இணையத்தளம் குறிப்பிடுகிறது.

பிரித்தானியக் கலைக் களஞ்சியம் எத்தனை பிரபலம் வாய்ந்தது?

அதிலே இப்படி ஒருதலைப் பட்சமாகத் தவறான தகவலை சிங்களம் புகுத்தி விட்டுள்ளது என்றால் அது சிங்களத்துக்கு வெற்றிதானே! அந்தப் பதிவின்; ஆங்கில மூலம் இதோ!

The Sinhalese people are probably the result of aboriginal inhabitants mixing with Indo-Aryans who began migrating from India c. the 5th century BC. The Tamils were later immigrants from Dravidian India, migrating over a period from the early centuries AD to c. 1200. Buddhism was introduced during the 3rd century BC. As Buddhism spread, the Sinhalese kingdom extended its political control over the island but lost it to invaders from southern India in the 10th century. Between 1200 and 1505, Sinhalese power gravitated to southwestern Sri Lanka, while a southern Indian dynasty seized power in the north and established the Tamil kingdom in the 14th century.

(கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய இந்தோ- ஆரிய மக்களுக்கும் பூர்வீகக் குடிகளுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கக் கூடிய கலப்பினால் உருவானது சிங்கள இனம்.

தமிழர் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு முதல் நெடுங்காலமாகப் பின்னர் வந்து குடியேறிய இந்திய திராவிடராவர். புத்த மதம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் அறிமுகமானது.

புத்த மதம் பரவியதால் சிங்கள அரசு தனது அரச ஆதிக்கத்தை முழுத் தீவின் மீதும் ஏற்படுத்தியது. ஆனால் 10 ஆம் நூற்றாண்டு முதல் தென் இந்தியப் படையெடுப்பாளிரிடம் தனது அதிகாரத்தைப் பறி கொடுத்து விட்டது.

1200 க்கும் 1505 க்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்களவர் தமது கவனத்தை சிறி லங்காவின் தென் மேற்குப் பகுதியில் செலுத்திய வேளையில் தென்னிந்திய அரசுகள் வடக்கைக் கைப்பற்றி தமிழ் இராச்சியத்தைப் 14 ஆம் நுற்றாண்டில் நிலை நாட்டிவிட்டனர்.)

இத்தகைய தவறான தகலை அமெரிக்க இணையத்தளம் உலக அளவில் எடுத்துக் கொடுக்க உலக அரசியல் தலைவர்களின் கருத்தாக்கம் இதன் வழியில் அமைந்து விட எமது இனத்தின் அழிப்பைச் சிங்களம் நியாயப் படுத்த எத்தனை வசதியாய் உள்ளது.

சிங்களத்தின் செயற்பாடு ஆங்கிலத்தில் மட்டும் நின்று விடாது யேர்மன் தமிழ் மொழி அகராதிகளிலும் காணப் படுகின்றது. இது போன்ற பதிவுகள் இத்தாலி, பிரஞ்சு, ரசிய மொழிகளிலும் காணப்படும் வாய்ப்புகளே அதிகம்.

எனவே, அந்தந்த மொழிகளில் அறிவு படைத்த புலம் பெயர் ஈழத் தமிழர்கள் இத்தகைய பதிவுகளைக் கண்டறிந்து அவற்றை மாற்றும் வழிகளை கடைப் பிடிப்பது அவசியமாகும்.

யேர்மனியின் பிரபலமான கலைக் களஞ்சியம் பேர்டல்மன் லெக்சிக்கோன் (Bertelmanns Lexikon) என்பது பிரித்தானிய கலைக் களஞ்சியம் போன்று மிகப் பிரபலமானது. யேர்மனி, ஒஸ்ரியா, சுவிற்சர்லாந்து மக்களின் கல்விக்கான வழிகாட்டியாகும்.

அதன் முன்னைய பதிப்பில் 'தமிழர் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வசித்து வருகின்றனர்" எனப் பதிவு செய்திருந்தது. ஆனால் அதன் 2005 ஆம் ஆண்டுப் பதிப்பில், 'தமிழர் வடக்கு கிழக்கில் வாழ்ந்த சிங்களவரை விரட்டிவிட்டு குடியேறியவர்" எனப் பதிவு செய்துள்ளது.

அடுத்து தமிழகத்திலிருந்து வெளியாகும் தழிழ் அகராதியையும் கூடச் சிங்களம் விட்டு வைக்க வில்லை. சென்னை மணிமேகலைப் பிரசுரமான தமிழ்-தமிழ் அகராதி 2006 ஆம் ஆண்டின் பதிப்பில் ஈழம் என்ற சொல்லுக்கு சிங்கள நாடு, கள், கள்ளி, பொன் என்று பொருள் தந்துள்ளது.

சிங்களத் தீவு எனப் பாரதி பாடல் ஒன்றில் உள்ளதே அல்லாது சிங்களத்தீவு என்பதற்கான வரலாற்றுப் பதிவுகள் ஏதும் கிடையாது. அப்படி இருந்தும் இது யார் செய்த சதி?

இத்தகைய பாரிய மாற்றங்கள் சிங்கள அரசின் பிச்சார அழுத்தங்களால் மட்டுமே சாத்தியமாகும். இப்படியான நிலையில் தமிழரின் இன, நில, அரசியல் உரிமைகள் பற்றி எங்கள் வரலாற்றோடு மிக நெருக்கமான ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், பிரித்தானியரையே எமது பக்க நியாயங்களை நம்பச் செய்வது இமாலய சாதனையாக ஆகிவிட்டது.

நாம் இது பற்றி என்ன செய்யப் போகிறோம்?

காலத்தின் தேவையும் கட்டாயமும் அறிந்து நாம் தனி இனமாகச் செயற் படுகிறோமா எனச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். தவறினால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தன் தேசத்தை விட்டு ஓடிய யூத இனம் உலகநாடுகள் எங்கும் அகதிகளாகி அலைந்தும், 70 இலட்சம் யூத மக்கள் நாசிகளின் கொலைக் கூடங்களில் அழிக்கப் பட்டும் இன்றும் தான் மீட்டெடுத்த இஸ்ரவேல் தேசத்தில் பாதுகாப்பாக வாழ முடியாத நிலையே எமக்கும் ஏற்படும்.

இத்தகைய பின்னணியில் நிலைமை தெரியாத தமிழகத் தமிழ் அறிஞர்கள் தமிழரின் தொடர் ஆண்டுக் கணக்கைத் திருவள்ளுவர் ஆண்டு என 2039 எனக் கையாள அதனையே நாமும் கைக்கொள்வதன் மூலம் சிங்களத்தின் வரலாற்று முதன்மைக்கு துணைசெய்வது எத்தகைய அறிவு பூர்வமானது எனச் சிந்திக்கத் தவறுவதுதான் வேதனையானது.

புலம் பெயர்ந்த நாடுகளில் எமக்கு வீடுகள் கடைகள் சொத்துக்கள் குடியுரிமை கூடக் கிடைக்கலாம். அதற்காக ஈழத் தமிழனத்துக்கு உள்ள ஒரே ஒரு பூர்வீக நிலத்தையும் அந்நியர் பறித்துப் போக விடலாமா?

இன்று கையில் இருப்பதைப் போக விட்டுப் பறப்பதில் ஆசை கொண்டு அவதியில் எமது முழு உறவுகளும் தவிக்க விடலாமா?

எமது பொறுப்பற்ற தன்மையால் எமது பரம்பரை வீடு வாசல்களை சிங்களக் குடியேற்றங்களுக்கு இடம் அளிப்பதா?

நாளைய எமது சந்ததிக்கு எமது பாரம்பரிய தேசத்தையும் தொலைத்து விட்டு நாடோடி இனமாக வாழும் நிலையை கொடுத்துவிடப் போகிறோமா ?

தினமும் வன்னியிலும் வடக்கிலும் கிழக்கிலும் விமானக் குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள், கிளைமோர் தாக்குதல், வெள்ளை வான் கடத்தல், பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடு என அநியாயங்கள் நடந்தேறுகின்றன.

ஆனாலும், வாரம் தவறாமல் கொழும்பில் தமிழறிஞர்(?) கூட்டம் ஒன்று எதுவித சூடு சுரணையும் இல்லாமல் விழாக்களும் பொன்னாடை போர்த்தலும் செய்து அட்டகாசம் செய்து வருகிறது.

இவற்றைப் பார்க்கும் எவரும் தமிழருக்கு என்ன குறை எனக் கேட்கவும் இலங்கையில் நடப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதமே என முத்திரை குத்திவிடவும் எவ்வளவு நேரம் தேவை?

இலங்கை அரசின் பிரச்சாரம் இலகுவில் எடுபட வேறு என்ன வேண்டும்?
ஓடுவதும் ஒளிவதும் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாகாது என்பதை யூத மக்களின் வரலாறு எமக்குக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக உள்ளது.

1995 இல் தமிழினம் புலிகளின் ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்திருந்தால் யாழ்பாண இடப் பெயர்வு நிகழாது தடுத்து விட்டிருக்க முடியும்.

அந்த இடப்பெயர்வின் பின்னரும் தமிழினம் மீளத் திரும்பாது வன்னியிலேயே உறுதியாகத் தங்கியிருந்தால் என்றோ புலிகள் யாழ்ப்பாணத்தை மீளக் கைப்பற்றி விட்டிருப்பர்.

மீளத் திரும்பிய மக்கள் இன்று வரை மரணத்துக்குள் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. எந்த உலக நாடும் புலிகளைப் பயங்கரவாதிகள் எனச் சொல்ல முடியாத நிலையும் கிடைத்திருக்கும்.

இலங்கை இந்திய இராணுவம் செய்த அப்பாவி மனிதப் படுகொலைகள் கொஞ்ச நஞ்சமா?

குமுதினிப் படகுக் கொலை, துரையப்பா விளையாட்டரங்கு, யாழ் முற்ற வெளி முதல் செம்மணி, கொக்கட்டிச்சோலை, கிளிநொச்சி என வடக்கு கிழக்கு எங்கும் உள்ள மனிதப் புதை குழிகளுக்கும் காணாமல் போக்கடிக்கப் பட்டவருக்கும் நீதி கேட்கும் உரிமை கூடவா தமிழனுக்குக் கிடையாது?

இந்த விநாடி வரையும் தொடரும், தொடரப் போகும் தமிழர் படு கொலைக்கும் யார் பதில் சொல்வது?

எம்மைப் பயங்கரவாதிகள் எளச் சொல்ல இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ?

ஈழத் தமிழினம் தனது அப்பட்டமான சுயநலம் காரணமாக தன் இனத்தின் காவலாய் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்குத்துக்கு உறுதுணையாக நிற்பதில் காட்டும் தயக்கமே சிங்களம் தனது தமிழன அழிப்பைச் செய்யத் தூண்டுகோலாக அமைவது கண்கூடு.

இன்னும் கூட அமைதி வழித் தீர்வு எனப் பழைய புராணம் படிக்கும் புத்தி ஜீவிகள் காணப்படுவதுதான் அதிசயம். அமைதிப் பேச்சில் ஐந்து வருடமாய் ஆரூடம் பேசிவந்த பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், உலக அளவில் வலை விரித்து கருணாவை விலைக்கு வாங்கியதாகச் சாதனைப் பட்டியல் போட்டு மகிழும் ரணில் ஆகியோரின் நிலை தெரிந்தும் இனியும் அமைதிப் பேச்சாம்.

சிங்களமும் இந்தியாவும் அமைதிப் பேச்சுக்குத் தயார் என்று கூறிக் கொண்டே புலிகளை அழித்துத் தமிழினத்தை அடிமைப் படுத்தி அம்மணமாக்கி அரைக்குக் கோவணம் தந்து தமது வள்ளல் தன்மையைக் காட்டிவிட ஆசைப் படுகின்றன.

இதற்குத் தமிழினம் தயார் என்றால் தொடர்ந்தும் என் வாழ்வு, என் வீடு, என் மனைவி, என் பிள்ளை என மானம் இழந்து புலிகள் வேறு தாம் வேறு என மனம் போன படி தமிழனம் வாழ்ந்து தொலையட்டும்.

இலங்கையில் இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவக் கோயில்களை இடித்து புத்த விகாரைகள் கட்டும் சிங்களம் தமிழகத்திலும் புத்த கோயில்கள் கட்டும் காட்சிகள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருக்கும் இந்தியாவோ, தமிழகத் தமிழனோ எமக்கு நியாயம் கிடைக்க துணை வரமாட்டார் என்பது தெளிவாகிறது.

தமிழகச் சட்ட சபையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு விட்டது எனச் சிலர் புளகாங்கிதம் அடைகிறார்கள். இனியும் அவை போலப் பிதற்றும் புத்திஜீவிகள் எமக்குத் தேவையா?

அவர்கள் பேச்சை நாம் நம்ப வேண்டுமா?

எனவே புலம் பெயர் ஈழத் தமிழர் தமிழனத்தின் நன்மை கருதி உறுதியாகப் புலிகளுக்குத் துணைநிற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த வரலாற்றுக் கடமையை நாம் ஒரு மனதாகச் செய்ய முனைவோமா?

இலங்கையிலோ இந்தியாவிலோ எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும் ஈழத் தமிழனுக்கு எந்த ஒரு நல்ல மாற்றமும் ஏற்படாது என்ற உண்மையை புரிந்து கொள்ளத் தவறினால் மீண்டும் மீண்டும் ஏமாற்றப் படும் நிலைதான் ஏற்படும்.

வன்னித்தம்பி தங்கரெத்தினம்

Comments