தமிழின உணர்வாளர்கள் இடையே ஒற்றுமை அவசியம்: சுப.வீரபாண்டியன் வலியுறுத்தல்

ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழின உணர்வாளர்கள் இடையே ஒற்றுமை அவசியம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருக்கும் அவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை (24.06.08) வழங்கிய நேர்காணல்:

சிறிலங்காவுக்கு இந்திய உயர்மட்டக்குழுவொன்று திடீரென கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்தது. அக்குழுவில் இடம்பிடித்தவர்கள் பாதுகாப்புத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களாகவும் உள்ளனர். அதேவேளை, இராணுவ உதவிகளை வழங்கும் பயணமாகவே இதனை இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. நீங்கள் இவர்களின் பயணத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

அமெரிக்காவில் இருந்தவாறு நானும் அச்செய்திகளை கவனித்துக்கொண்டே இருக்கின்றேன். ஈழ மக்களின் நன்மைக்கான பயணமே இது என முதலில் கூறப்பட்டது. ஆனால் என் போன்றவர்களுக்கு முதலில் இருந்தே அதில் நம்பிக்கை இல்லை. இப்போது வருகின்ற செய்திகள் எமக்கு ஒருவகையில் அதிர்ச்சியையும் இன்னொரு வகையில் இப்படித்தான் நடக்கும் என்பதையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன.

சிறிலங்காவுக்கு இராணுவத் தளபாடங்களை வழங்குவதும், தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கும் சிங்கள அரசுக்கு மறைமுகமாக உதவுவதும் இந்திய அரசின் நிலைப்பாடாக இருப்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பெரும் வேதனையாக உள்ளது.

அதிலும் குறிப்பாக உயர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் எம்.கே.நாராயணன் எப்போதும் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துடையவராகவே இருக்கின்றார். அவர் இந்திய அரசின் உயர் அதிகாரப் பொறுப்பில் இருக்கின்றார்.

சிறிலங்காவுக்கான இவரது பயணத்தில் என்ன நடந்திருக்கின்றது என்பது எனக்கு அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை. இருந்தாலும் இந்த உயர் அதிகாரிகளின் போக்கை கணிக்கின்றபோது, தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடந்துள்ளதா என்ற வேதனைதான் ஏற்படுகின்றது.

இந்தியப் பிரதமரை சந்திப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் டில்லி சென்றிருந்தபோது பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வலது புறத்தில் எம்.கே.நாராயணனும் இடதுபுறத்தில் சிவசங்கர் மேனனும் அமர்ந்திருந்தனர்.

அச்சந்திப்பில் எம்.கே.நாராயணன் பேசும்போதும் அவரது பேச்சின் தொனி தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரானதாகவே இருந்தது. அந்த இடத்திலேயே பிரதமருக்கு முன்பாகவே நாம் அதனை சுட்டிக்காட்டினோம்.

எனவே இந்திய அரசு இந்த அதிகாரிகளின் போக்கை நம்பாமல் தமிழ் மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தொடர்ந்தும் முன்வைப்போம்.

இந்திய அரசின் இந்தப்போக்கு நீடிக்கக்கூடாது என்பதை உலகத் தமிழ் மக்களின் ஒருமித்த கருத்தாக மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இத்தகைய கோரிக்கைகளை பலரும் தொடர்ச்சியாக அனுப்பியிருந்த போதும் இந்திய அரசின் நிலைப்பாட்டில் இதுவரை மாற்றம் ஏற்படவில்லை. அப்படி இருக்கும் போது இந்திய அரசின் நிலைப்பாடு எதிர்காலத்தில் மாற்றமடையும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எம்மைப் போன்றவர்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. ஏனெனில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டில்லியில் இருக்கும் உயர் அதிகாரிகள் சிலரே இந்தியாவின் கொள்கைகளை தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.

அடுத்து இந்தியாவிலிருக்கும் கட்சிகளும் தமிழர்களின் பிரச்சினைகளை நுணுகிப் பார்ப்பதில்லை. அவர்கள் அதிகாரிகளின் பேச்சை அடிப்படையாகக் கொண்டே முடிவெடுக்கின்றனர். இது ஒரு வேதனையான செய்தி. இதில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனில் அந்த மாற்றம் தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

தமிழக மக்களிடையே ஒரு எழுச்சியும் இந்த போக்கிற்கு எதிரான ஒரு வேகமும் ஏற்படுமானால் அதுதான் டில்லியில் இருக்கும் உயர் அதிகாரிகளின் மனநிலையை மாற்றும். அந்நிலை ஏற்படாதவரை டில்லியில் இருக்கும் உயர் அதிகாரிகளின் மனநிலையை மாற்றமுடியாது.

அதாவது, தமிழின உணர்வாளர்களின் குரல் மட்டும் அந்நிலையை மாற்றிவிடும் என்றும் நான் கருதவில்லை. அதற்காக எமது செயற்பாடுகளை கைவிட்டுவிட வேண்டியதில்லை. எமது தொடர் செயற்பாடுகளால் ஒரு மாற்றம் வரலாம்.

தமிழின உணர்வாளர்கள் அங்கே இருக்கும் பெரிய அரசியல் கட்சிகளை மிக நெருக்கமாக அணுகி அக்கட்சிகளின் மூலமாகத்தான் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றமுடியும் என்பதுதான் சாத்தியமாக இருக்கும் என கருதுகின்றேன். அப்பணியை இன்னமும் நாம் போதுமானதாக மேற்கொள்ளவில்லை என்பது எமது பக்கத்தில் இருக்கும் குறைபாடாகும்.

தமிழகத்தில் உள்ள சில தமிழின உணர்வாளர்கள் இந்திய அரசின் இந்த நிலைப்பாடு குறித்து சில அறிக்கைகளை வெளியிடுகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விவகாரம் குறித்து எந்தவித கண்டனத்தையோ அல்லது கருத்துக்ளையோ வெளியிடாது மௌனம் காட்டுகின்றார். இதன் காரணமாகத்தான் தி.மு.கவிலிருந்து பா.ம.க தற்போது பிரிந்து சென்றிருக்கிறது என்று கருதலாமா?

தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு இன்று எப்படி உள்ளது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். பா.ம.க. பிரிந்த பின்னர் தி.மு.க முழுமையாக காங்கிரசை நம்பியே கூட்டணி ஆட்சியை நடத்த வேண்டிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

பா.ம.க, திராவிடர் கழம், விடுதலைச் சிறுத்தைகள், நெடுமாறன் ஐயாவின் தமிழர் தேசிய இயக்கம் போன்ற கட்சிகள் கலைஞரின் அருகில் இருந்து கொண்டு ஈழப் பிரச்சினையில் ஒரு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே என் போன்றவர்களின் கருத்து.

கலைஞரின் போக்கில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. ஏனெனில் அவரும் ஏனைய கட்சிகளின் பலத்தை நம்பியே செயற்பட முடியும். வைகோ, இராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன், வீரமணி ஆகிய ஐவரும் கலைஞரின் அருகில் இருந்து கலைஞருக்கு ஆதரவாக நின்று ஈழத்தின் செய்திகளை எடுத்துக்கூறினால் தமிழகத்தில் ஒரு மாற்றம் வரும்.

இவர்கள் ஐவரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள். பெரிய கட்சியைச் சேர்ந்தவர்கள். நான் சில நூறு அல்லது ஆயிரம் இளைஞர்களிடம் மட்டும் தொடர்பு வைத்திருக்கும் ஒருவராகவே உள்ளேன். ஆனால், மேற்படி ஐவரும் பெரிய இடங்களில் செல்வாக்குள்ளவர்கள்.

எனவே இவர்கள் ஐவரும் கலைஞரை அணுகி ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பது எனது அழுத்தமான கருத்தாகும்.

ஆனால் இதற்கு எதிராக வைகோவும் நெடுமாறன் ஐயாவும் கலைஞருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர். தற்போது இராமதாசும் எதிர்நிலைக்கு போய்விட்டார். இப்படி எதிர்நிலையில் இருந்துகொண்டு சொல்லும்போது ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது.

எனவே ஒரு மாற்றம் வரவேண்டும் எனில் கலைஞருக்கு ஆதரவாக இவர்கள் இருக்க வேண்டும். அந்த ஆதரவை வைத்துக்கொண்டுதான் அவர் காங்கிரசையும், பா.ஜ.கவையும் சமாளிக்க முடியும். தற்போது இவர்களின் ஆதரவு அனைத்தும் விலகிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை மட்டுமே நம்பி செயற்படும் அவர், காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது.

இதுதான் அங்கே உள்ள ஈழ மக்களுக்கு எதிரான சூழ்நிலை.

தனது அரசியல் எதிர்காலம், தனது குடும்பத்தின் எதிர்கால நலன் ஆகியனவற்றினை கருதாமல் தமிழக முதல்வர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?

தமிழக முதல்வரை மட்டுமே நம்பி ஒரு நாட்டின் அரசியலை நடத்த முடியாது. தமிழக முதல்வரின் அல்லது ஒரு கட்சியின் தலைவரின் அரசியல் என்பது பெரும்பான்மையான மக்களின் போக்குச் சார்ந்ததாகத்தான் இருக்க முடியும். நான் மேற்கூறிய ஐந்து பேரும் அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள்.

எனவே இவர்கள் ஈழத் தமிழர்கள் விடயத்தில் தமிழகத்தில் ஒரு எழுச்சியைக் கொண்டு வருவதன் மூலம்தான் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நம்புகின்றேன்.

என்னதான் நாம் கூறினாலும் தமிழகத்தில் கலைஞரும் ஜெயலலிதாவும்தான் இன்று செல்வாக்கு மிக்க பெருந்தலைவர்களாக இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. இவர்களில் ஜெயலலிதா நேர் எதிர் கருத்துடையவராக – தமிழீழ மக்களை அழித்துவிட வேண்டும் என்ற கருத்துடையவராக இருக்கின்றார்.

எனவே கலைஞரைச் சார்ந்தும், அவரை அணுகியும், அவருக்கு சில செய்திகளை எடுத்துச்சொல்லியும் அவருக்கு நெருக்கமாக இருந்துகொண்டு அதன் மூலமாக ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம். கலைஞர் ஈழத்திற்கு எதிரானவர் இல்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். எனினும் அவரின் கட்சி, அரசியல் சூழ்நிலைகளை நாம் மறந்து விடக்கூடாது.

ஈழத்தின் செய்திகளை கலைஞருக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லக்கூடிய கட்சிகள் இன்று அவரிடத்தில் இல்லை. திருமாவளவனைத் தவிர வேறு எவரும் இன்று அவருடன் ஈழச் செய்திகள் குறித்து பேசும் நிலையில் நெருக்கமாக இல்லை. எனவே அனைவருமாக இணைந்து இப்பணியைச் செய்ய வேண்டும்.

தமிழின உணர்வாளர்கள் ஒன்றிணைவதைத் தடுக்கும் காரணிகள் என்ன?

தமிழின உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்ந்தவர்களாக இருப்பதே இதற்கு காரணம். அவர்கள் கட்சி நலனை மறைத்து விட்டு வெறுமனே ஈழத்தமிழர் உணர்வாளர்களாகச் செயற்படுகின்றனர் என்று சொல்ல முடியாது. ஈழத்தை ஆதரிக்கும் வைகோ இன்று ஜெயலலிதாவை ஆதரிக்கின்றார். ஈழத்தை ஆதரிக்கும் நான் கலைஞரை ஆதரிக்கின்றேன். அதாவது, இந்த கட்சிப் பாகுபாடு என்பது வெளிப்படையாக இருக்கின்றது. இந்த கட்சி பாகுபாட்டை மறைத்துவிட்டு அனைவரும் ஈழத் தமிழர் விடயத்தில் ஒன்றிணைய வேண்டும்.

தி.மு.கவை இன்று நெடுமாறன் ஐயா விமர்சிப்பதால் அவரது ஈழத்தமிழர் தொடர்பான செயற்பாடுகளுக்கு பின்னால் தி.மு.கவினர் திரள்வதற்கு சிக்கல் உள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சியில் கடுமையான பொடாச் சட்டம் இருந்தபோது கடுமையாகப் பேசாமல் இருந்து விட்டு இப்போது பேசுவதற்கான உரிமை வந்த பின்னர் கலைஞரையே கடுமையாக பேசுவது என்பது ஜனநாயக உரிமை என்று வைத்துக்கொள்கின்றனர்.

ஈழத் தமிழர் விடயத்தில் நெடுமாறன் ஐயாவுக்குப் பின்னால் இன்று தமிழின உணர்வாளர்கள் திரளாமைக்கான பிரதான காரணம் நெடுமாறன் ஐயா இன்று வைகோவுடன் இணைந்து கலைஞரை கடுமையாகத் தாக்கிக்கொண்டிருப்பதே ஆகும். இது போன்ற சிக்கல்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

எனவே தமிழின உணர்வாரள்கள் ஒன்றிணைவதற்கு தமிழ் நாட்டில் இருக்கும் கட்சிப் பிரிவினைகள் தடையாக இருக்கின்றன என்பதுதான் உண்மை.

ஈழத் தமிழர் விடயத்தினை எடுத்துச் சொல்வதற்கு தமிழகத்தில் இருக்கும் ஊடகங்களை எந்த வகையில் பயன்படுத்த முடியும்?

அதுதான் நாம் செய்ய வேண்டிய முதற்பணி எனக் கருதுகிறேன். அங்குள்ள பெரும்பாலான ஊடகங்கள் உண்மையைச் சொல்லவில்லை. தமிழீழ மக்களுக்கு ஆதரவாக எதனையும் சொல்ல வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும். அது மிகப்பெரிய ஆதரவை நமக்கு திரட்டித் தரும்.

உண்மையைச் சொல்வதற்கும் அவற்றை வெளியிடுவதற்கும் அங்கே பல்வேறு தடைகள் இருக்கின்றன. ஈழத்தில் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றனர். இங்கே நாம் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு கடுமையாகப் போராட வேண்டி உள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்கள் எந்த வகையில் ஒரு ஊடகத்துடன் ஒரு கருத்தாடலை ஏற்படுத்த முடியும்?

ஊடகங்கள் மீது நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஊடகங்களில் வருகின்ற செய்திகளை மக்கள் அப்படியே நம்புகின்றனர். நாம் பொய்யையோ அல்லது திரித்தோ சொல்ல வேண்டியதில்லை. உண்மையைச் சொல்வதற்கு ஊடகங்கள் தேவை என்பதுதான் இன்றைய எமது தேவை.

தற்போதுள்ள ஊடகங்கங்களைக் கவர்வது என்பது ஒரு வழி. அதேநேரம் புதிய ஊடகங்களை உருவாக்குவது என்பது இன்னொரு வழி. அதற்கு மிகப்பெரிய பணத் தேவை உள்ளது. இருந்தாலும் அதனை நாம் உருவாக்க வேண்டிய கட்டத்திற்கு வந்திருக்கின்றோம்.

எமக்கு என்று உண்மையான வலிமையான ஊடகத்தை உருவாக்க வேண்டும். வலிமையான ஊடகங்கள் தேவை. இரண்டாயிரம், மூவாயிரம் பேருக்கு செல்லக்கூடிய பத்திரிகைகள் இன்று எம்மிடம் இருக்கின்றன. ஆனால் அவைகளால் ஒரு கருத்து மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது.

எனவே லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகக்கூடிய பத்திரிகைகள் தேவை. அதேநேரம் லட்சக்கணக்கான நேயர்களைக் கவரும் தொலைக்காட்சிகளில் வாரத்திற்கு ஒரு அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் என நாம் எமக்கான நிகழ்ச்சிகளை அமைத்துக்கொள்ளும் நிதி வலிமையைப் பெற்றாக வேண்டும். அதுதான் ஒரு முதல் மாற்றத்தை உருவாக்கும்.

அடுத்து ஈழத்தின் போராட்ட நியாயத்தை உணர்ந்துள்ள தமிழின ஆதரவாளர்கள் ஏனைய விடயங்களில் மாற்றுக் கருத்து இருந்தாலும் ஈழத்தமிழர் போராட்ட விடயத்தில் ஒருமித்த கருத்தை வெளியிடும் நிலை வரவேண்டும்.

மேற்கூறிய இரண்டு விடயங்களும் நடக்குமானால் கண்டிப்பாக தமிழக மக்களின் போக்கிலும் எண்ணத்திலும் கண்டிப்பாக ஒரு மாற்றம் வந்து சேரும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான கடமை நான் உட்பட அத்தனை பேருக்கும் இருக்கின்றது என்பதையும் நான் அறிவேன்.

எனினும் என் போன்றவர்களுக்கு இருக்கும் வலிமை மிகக் குறைவானது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன். எனவே வலிமை கூடுதலாக இருப்பவர்கள் இதற்கான முன்முயற்சியை எடுக்க வேண்டும்.

இத்தகைய ஊடகத்தை சட்ட ரீதியான சிக்கல்களை கடந்து தமிழகத்தில் உருவாக்க முடியுமா?

இப்படியான சிந்தனைகளை நாம் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள், ஆர்வம் உள்ளவர்கள் தொலைபேசி மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தமிழகத்தில் உள்ள பொதுவானவர்களைக் தொடர்புகொண்டு முழுமையாக ஒரு மக்கள் பத்திரிகையாக இதனை உருவாக்க வேண்டும். அதேபோன்று வாரம் ஒருமுறையாவது உண்மைகளைச் சொல்லும் வாய்ப்பை ஏதாவது ஒரு வடிவிலேனும் பெற்றாக வேண்டும். அதற்கான சிந்தனைகளை நாம் தொடங்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

தமிழகத்திற்கு அப்பால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் தமிழர்களிடமுள்ள நியாயத்தை எந்த வகையில் எடுத்துச் செல்வது?

இதுவொரு சிறந்த முயற்சி. நானும் தனிப்பட்ட முறையில் இத்தகைய ஒரு முயற்சியை மேற்கொண்டேன். எனினும் வேலைப்பழு காரணமாக என்னால் அப்பணியைச் செம்மையாக முடிக்க முடியவில்லை.

மிகச் சிறிய முயற்சியாக உண்மைகளை எல்லாம் தொகுத்து "ஈழம் இதயமுள்ளோர் பார்வைக்கு" என்ற புத்தகத்தினை வெளியிட முயற்சித்தேன். அப்புத்தகத்தை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்த்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொண்டுசெல்வதே எனது முயற்சியாகும்.

டில்லிக்குச் சென்று அதிகாரிகளை மட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து அமர்ந்து பேசுவது என்கிற முயற்சிகளில் எல்லாம் ஈடுபட வேண்டும் என்ற திட்டம் உள்ளது. அதனை நாம் ஒரு கூட்டாகக்கூட மேற்கொள்ளலாம் என்றும் கருதினேன்.

மிகக் கடுமையான வேலைகளாலும் வெளிநாட்டுப் பயணங்களினாலும் அந்த முயற்சி தடைப்பட்டுப் போய் நிற்கின்றது. ஆனாலும் அதனைச் செய்ய வேண்டும். இது ஒரு தனிப்பட்ட மனிதனின் முயற்சியில் நடந்து விடாது. பலரும் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நாடாளுமன்றத்தில் இப்படிப்பட்ட கருத்துகளை உருவாக்கும் தன்மையைப் பெற்றாக வேண்டும்.

பல்வேறு முனைகளில் நாம் முயற்சித்தால் தான் பலன் கிடைக்கும். கலைஞரை மட்டும் நம்பிக்கொண்டிராமல் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததை தங்களின் எல்லைகளில் இருந்துகொண்டே செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மாற்றம் கண்டிப்பாக வரும்.

கலைஞர் மீதான ஈழத்தழிழ் மக்களின் எதிர்பார்ப்போடு ஒப்பிடும் இடத்து பிற விடயங்களை ஈழத்தமிழர்கள் கவனியாது உள்ளனர் என கருதுகின்றீர்களா?

தமிழ்நாட்டில் இரு பெரும் தலைவர்கள்தான் உள்ளனர். ஜெயலலிதாவை எவரும் அணுகவே முடியாது. கலைஞரைத்தான் நாம் அணுகமுடியும். கலைஞரிடத்தில்தான் உண்மைகளை இயல்பான நிலைமைகளை எடுத்துச்சொல்ல முடியும். இன்று அவருக்கு முழுமையான செய்திகள் போய்ச் சேரவில்லை.

எனவே அதற்கான முயற்சி என்பது ஒருவழி.

இன்னொரு வழியில் நாம் ஊடகங்களைக் கைப்பற்றுவது, நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் இந்தியில் மொழிபெயர்த்து இந்தப் பிரச்சினைகளைக் கொண்டுபோவது, அங்கே இருக்கும் ஒலி, ஒளிப்படங்களைக் கொண்டுபோவது என்கிற முயற்சிகளை எல்லாம் நாம் எடுக்க வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளில் தமிழ் மக்கள் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

இந்நிகழ்வுகள் மிகத் தேவையான ஒன்று. மிகச் சரியான ஒன்று. 2002 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் நானும் பங்குகொள்ளும் ஒரு பெரிய வாய்ப்பை பெற்றேன். அதற்குப் பின்னர் எனது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டு நான் வெளிநாடு செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் நான் அப்போது ஏனைய நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியவில்லை.

இப்போது இத்தாலியில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுக்காக அழைத்தார்கள். எனினும் அமெரிக்காவில் ஒரு கூட்டத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்ட காரணத்தினால் அதற்கு இசைவு தெரிவிக்க முடியவில்லை.

உலகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த பொங்கு தமிழ் நிகழ்வு பெரியதொரு எழுச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் எமது நியாயத்தை எடுத்துச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கின்றது. தமிழ் மக்கள் ஒன்றாக ஓரணியில் நிற்கின்றனர் என்பதனை சிங்கள அரசுக்கு எடுத்துக்காட்டுகின்ற நிகழ்ச்சியாகவும் அது இருக்கின்றது.

இந்த பொங்கு தமிழ் நிகழ்வு என்பது சரியான நேரத்தில் தேவையான நிகழ்வு என்பதில் எதுவித மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை.

எனவே ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் இந்த பொங்கு தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொள்வதனை தமிழ் மக்கள் தமது கடமையாக கருத வேண்டும். வேறு எந்தப் பணி இருந்தாலும் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு பொங்கு தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும்.

உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கும் போராளிகள் இருக்கும்போது எம்மால் செய்யக்கூடிய ஒரு கூட்டத்திற்கு போய் வருவது என்பதை ஒரு அடிப்படையாகச் செய்ய வேண்டும். அதனை புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் சரியாகவே செய்துகொண்டிருக்கின்றனர் என்றே நான் கருதுகின்றேன்.

ஈழப்போராட்டம் மூன்று முனைகளில் தங்கியுள்ளது.

அதன் முதல் முனையானது ஈழத்தில் உள்ளது. அங்கே உயிரைப் பணயம் வைத்து அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இரண்டாவது முனையானது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடையே தங்கியுள்ளது. அவர்கள் காட்டும் தார்மீக ஆதரவு குறிப்பாக தார்மீக அடிப்படையிலும் நிதி அடிப்படையிலும் பிற வகையிலும் தங்கியுள்ளது.

மூன்றாவது முனையானது இந்தியாவில் இருக்கின்றது. இந்திய அரசின் போக்கில் ஏற்படும் மாற்றமும் ஈழப் போராட்டத்திற்கு மிகப்பெரிய தேவையாக இருக்கின்றது. இந்திய அரசின் மாற்றம் என்பது தமிழக கட்சிகளின் மாற்றத்தை பொறுத்ததாக அமையும். தமிழகக் கட்சிகளின் மாற்றம் என்பது தமிழக மக்களின் மாற்றத்தை பொறுத்ததாக அமையும்.

இந்த மூன்று முனைகளில் முதல் முனை மிகச்சரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டாவது முனையை மேலும், மேலும் உறுதிப்படுத்த வேண்டிய கட்டத்தில் இருக்கினறோம். மூன்றாவது முனையில்தான் எமது போராட்டம் மிகக் கடுமையாகவும் பின்னடைந்தும் இருக்கின்றது.

இதனை நான் வெட்கத்தோடும் வேதனையோடும்தான் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த மூன்று முனைகளிலும் தங்கியுள்ள ஈழப் போராட்டம் மூன்று முனைகளிலும் சரி செய்யப்பட்டு அதன் வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றார் அவர்.


Comments