மூன்று ஜெயசிக்குறு நடவடிக்கைகளுக்கு எதிராக புலிகள்: கேணல் தீபன்

சிங்களப் படைகளின் மூன்று ஜெயசிக்குறு நடவடிக்கைகளை ஒரேவேளையில் நாம் எதிர்கொண்டு வருகின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார்.

போர் முனைகளில் சிறப்பாகச் செயற்பட்ட பூநகரிப் படையணிப் போராளிகளை மதிப்பளிக்கும் நிகழ்வில் கேணல் தீபன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஜந்து ஆண்டுகால அமைதிச் சூழலை முறித்துக்கொண்டு சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது பெரும் போரைத் தொடுத்துள்ளது. மக்களைக் காப்பதற்காக பலமுனைகளில் நாம் போராடி வருகின்றோம்.

பூநகரிப் படையணி களமுனைகளில் பல வெற்றிகளைப் படைத்திருப்பதை தளபதிகள் ஊடாக அறிந்தேன். மன்னார் களமுனையில் அடம்பன் பகுதியில் நிகழ்ந்த சண்டைகள் இப்படையணியின் செயற்பாட்டின் திறனை வெளிப்படுத்தியது.

ஒவ்வொரு போராளியினதும் செயற்பாடு அர்ப்பணிப்பு என்பவற்றினால்தான் களமுனைகளில் எமக்கு வெற்றியைத் தேடித் தருகின்றன. எதிரியின் நடவடிக்கைகளை நாள்தோறும் முறியடிப்பதில் போராளிகளின் அர்ப்பணிப்பு என்பது அளவீடு செய்ய முடியாதது.

எமது பகுதிகளை வன்பறிப்புச் செய்ய வேண்டும் என்ற சிங்களப் படைகளின் திட்டங்களுக்கு போராளிகள் தகுந்த பதிலடிகள் கொடுத்து வருகின்றனர். சிங்களப் படை நினைத்தபடி வெற்றிகளை அடைய முடியாதவர்களாக உள்ளனர்.

சிங்களப் படையினர் மூன்று ஜெயசிக்குறுக்களை இன்று நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். வட களமுனை, மன்னார், மணலாறு, நான்காவதாக வவுனியாவிலும் ஜெயசிக்குறு தொடங்கவுள்ளதாக அறிக்கைகள் விடுத்து வருகின்றன.

சிங்களப் படைகள் எந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் வெற்றி அடையப் போவதில்லை. எதிரிகள் இழப்புக்களை மூடிமறைத்து வருகின்றனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 4,000-க்கும் அதிகமான சிங்களப் படையினர் உயிரிழந்துள்ள போதும் இழப்புக்களை சிங்களப் படையினர் மூடிமறைத்து வருகின்றனர் என்றார் அவர்.


Comments