உறக்க நிலையில் உள்ள உலகத் தமிழினமே விழித்திடுவீர்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்கு கொள்ளும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு பிரித்தானியா வாழ் ஈழத தமிழர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்.

பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அனைத்துலகத்தின் கவனத்தை ஈழத்தமிழர் விவகாரத்தின் பால் மற்றொரு முறை ஈர்த்திருக்கின்றது.அதேவேளை, இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு விட்டு அவற்றினை அனைத்துலகத்தின் கண்முன்னே மூடிமறைத்தவாறே சமாதான வேடம் போடலாம் என நினைத்திருந்த ராஜபக்ச சகோதரர்களின் கனவுக்கும் அது ஆப்பாக அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்குழுவின் நிர்வாகத்தில் இடம்பிடித்து விட சிறிலங்கா மேற்கொண்ட முயற்சி பிசுபிசுத்துப் போனமை அனைத்துலக ரீதியாக ஒரு புரிதல் உருவாக வாய்ப்பாகி விட்டது.தொடர்ந்து பூதாகரமாகப் பேசப்பட்ட வளர்முக நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஏற்றுமதிச் சலுகையை சிறிலங்காவுக்கு நீடிப்பதை மீள்பரிசோதனை செய்வதாக வெளிவந்த சேதியும் சிறிலங்காவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் விவகாரத்தை உலகம் மீண்டும் விவாதிக்கும் ஒரு நிலைக்கு இட்டுச் சென்றது.

இத்தகைய பின்னணியில் புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களால் தத்தம் நாடுகளில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் பிரமாண்டமாக முன்னெடுக்கப்பட இருக்கின்றன. இதற்கு ஊடாக, தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கைகள் அனைத்துலக சமூகத்துக்கு மற்றுமொரு முறை பொதுமக்களின் வாயாலேயே எடுத்துச்செல்லப்பட இருக்கின்றது.

ஈழத் தமிழர் வரலாற்றில் 2008 ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டுகளில் ஒன்றாகும். 1958 மே மாதத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான முதலாவது திட்டமிட்ட வன்முறை சிங்களவர்களால் அரங்கேற்றப்பட்ட 50 ஆவது ஆண்டு இது.

அதேபோன்று, கறுப்பு ஜூலை எனத் தமிழ் மக்களால் வர்ணிக்கப்படும் 1983 ஜூலை இனவெறிக் கொடுமைக்கு தமிழ் மக்கள் ஆளான 25 ஆவது ஆண்டும் இதுவே.

இத்தனை கொடுமைக்கும் பின்னரும் சிங்கள தேசம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும் நீதியுடன் நடாத்தும் எனப் பகற்கனவு காணும் ஒரு சிலரைத் தவிர்த்துப் பார்த்தால் எமது உரிமைப் போராட்டம் இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்?

இன்னும் எவ்வளவு காலம் நாம் காத்திருக்க வேண்டி வரும்?

என்பன போன்ற கேள்விகளும் ஆதங்கமும் எம் முன்னே நிழலாடுகின்றன

இதுவரை எமது உரிமைகளுக்காக நாம் மாத்திரமே தனித்துக் குரல் கொடுத்த காலம் படிப்படியாக மறைந்து வருகின்றமையைக் காண முடிகின்றது.

இன்று தமிழர்களுக்காக அவர்களின் உரிமைகளுக்காகக் குரல்தர தமிழர்கள் அல்லாத பலரும் முன்வந்துள்ளமையை ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவுக்கான தேர்தல் சமயத்தில் பார்த்தோம்.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகின்றமை ஒரு நல்ல சகுனமாகப் பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவில் இருந்து செயற்பட்டு வரும் ஈழத்தமிழர் ஆதரவுக் குழுவான நீதிக்கான தமிழர்கள் அமைப்புப் பிரதிநிதியான சட்டத்தரணி புரூஸ் பைன், அண்மையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான அவரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு ஒரு பகிரங்கச் சவாலை விடுத்திருந்தார்.

தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் தரும் புரூஸ் பைன் அவர்களை விடுதலைப் புலிகளின் அனுதாபி என வர்ணித்ததுடன், அவர் பொய்களைக் கூறி வருவதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அண்மையில் செய்திகளை வெளியிட்டிருந்தது.

இதனைக் கண்டித்த புரூஸ் பைன், சிங்களம் கூறி வருவதைப் போல் தமிழர்கள் இலங்கைத் தீவில் அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வதாயின் அதனை நேரில் பார்வையிட விரும்புவதாகவும் தமிழ் மக்களிடையே அதனைக் நேரில் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் அதற்காக இலங்கைத் தீவுக்கு பயணம் செய்யத் தன்னை அனுமதிக்குமாறும் கேட்டிருந்தார்.

இதற்கு சிறிலங்கா அனுமதி தரப் போவதில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

ஆனாலும் அவர் இவ்வாறு கேட்டதன் ஊடாக ஈழத் தமிழர் விவகாரத்தை அனைத்துலக அரங்கில் மீண்டுமொரு முறை விவாதப் பொருளாக ஆக்கியிருக்கிறார்.

இதற்காக அவருக்கு நன்றி கூற தமிழ்ச்சமூகம் கடமைப்பட்டிருக்கின்றது.

இத்தகைய பணிகள் உண்மையிலேயே தமிழ் கல்விமான்களால் மேற்கொள்ளப்பட வேண்டியவை.

ஆனால், அவர்களுள் அநேகர் ஒருவித உறக்க நிலையில் இருக்கிறார்கள்.

அவர்கள் உறக்கத்தில் இருந்து விழிப்பதற்கு இடையில் தமிழர்களுக்கு சொந்த நாடு கிடைத்து விடலாம்.

அப்போது உறக்கத்திலிருந்து விழிக்கப் போகும் அவர்கள் தாம் இழைத்த வரலாற்றுத் தவறுக்காக நிச்சயம் வருந்தியே தீருவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments