பொங்கு தமிழாய் பொங்குக

'இலட்சியத்தால் ஒன்றுபட்டு, எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கி விடமுடியாது!"- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

சிங்கள பௌத்தப் பேரினவாதம் மீண்டும் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையைத் தமிழர் தாயகத்தில் ஆரம்பித்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருக்கும்போதே, அதுகுறித்து எந்தவித அக்கறையும் கொள்ளாது, தமிழர் தாயகப் பகுதிகளை வன்கவர்ந்து கொண்டும், தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களை வஞ்சகமாகக் கொன்றும், பகிரங்கமாகவே மனித உரிமை மீறல்களைப் புரிந்து கொண்டும் வந்திருந்த மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசு, இந்த ஆண்டு ஆரம்பத்தில் தன்னிச்சையாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தூக்கியெறிந்த பின்னர், தனது அரச பயங்கரவாதத்தை மிக உச்ச நிலைக்குக் கொண்டு போயுள்ளது.

உண்மை நிலையை அறிந்து கொண்டும், சிறிலங்கா அரசின் சிங்களப் பௌத்தப் பேரினவாதப் பயங்கரவாதத்திற்கு உலக நாடுகள் பல உறுதுணையாவே இருந்து வருகின்றன. இத்தகைய ஓர் இன்னல் மிக்க வேளையில்தான், உலகெங்கும் வாழ்கின்ற புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வுகளை மிக்க உணர்வெழுச்சியுடன் நடாத்தி வருகின்றார்கள்.

சி;ங்களப் பௌத்தப் பேரினவாத அரசுகள், சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கும், நாளாந்த வாழ்வியல் பிரச்சனைக்கும் எந்தவிதமான உரிய தீர்வையும் தராது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட விடயமாகும்!

கடந்த சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகியதற்குக் காரணம், அப்போது உலக நாடுகள் பலவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இதில் சம்பந்தப்பட்டு, ஆதரவும், அனுசரணையும் வழங்கியமைதான்!

ஆனால் அந்தச் சம்பந்தப்பட்ட உலக நாடுகள் தமக்கென்று ஒரு நிகழ்ச்சி நிரலையும் உள்ளுரக்கொண்டிருந்த காரணத்தினால், சிங்கள அரசுகளுக்கு உரிய அழுத்தங்களைக் கொடுக்க முன்வரவில்லை. இதனால் தமிழீழ மக்களுக்குரிய நீதியான சமாதானத் தீர்வு இதுவரை கிட்டவில்லை.

மாறாகத் தொடர்ந்தும் தமிழீழ மக்களுக்கு அநீதியே இழைக்கப்பட்டு வருகிறது. இதற்குச் சர்வதேசமே தார்மீகப் பொறுப்பையும், நேரடிப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இத்தகைய காலகட்டத்தில்தான் புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் உலகளாவிய வகையில் பொங்கு தமிழ் நிகழ்வுகளை உணர்வெழுச்சியுடன் நடாத்த ஆரம்பித்துள்ளார்கள்.

பொங்கு தமிழ் நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை நாம் நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பொருட்டு சில முக்கிய விடயங்களை நாம் ஆழமாகத் தர்க்கிப்பதானது சற்றுத் தெளிவைக் கொண்டு வர உதவக் கூடும் என்று கருதுகின்றோம்.

'இலங்கைத் தீவில் ~அமைதி ஏற்பட வேண்டும்" என்று சர்வதேசம் அன்று கூறியதற்கு வேறோர் அடிப்படைக் காரணம் உண்டு. அதாவது அந்த ~அமைதி மூலம், தங்கள் நாடுகளுடைய சுயநலன் பேணப்பட வேண்டும் என்பதாகும். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு ஒன்றிற்கு ஆதிக்க சக்தி இணங்காத பட்சத்தில், அந்த ~அமைதி எவ்வாறு பெறப்பட வேண்டும் என்பதற்கும் சர்வதேசம் திட்டமொன்றை வைத்திருந்தது.

அதாவது, சர்வதேசம் போர் மூலம் அமைதி என்ற திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்தது.

~போர் மூலம் ~அமைதி என்ற கோட்பாடு என்னவென்றால், இரண்டு தரப்புக்கள் தம்மிடையே முரண்பட்டுச் சண்டை பிடித்துக் கொண்டு நின்றால், அவர்களாகப் பேசி ஒரு தீர்வைக் கண்டு, அந்தத் தீர்வினூடே வருகின்ற அமைதியைக் காட்டிலும், ஒரு தரப்பைப் போர் மூலம் தோற்கடிப்பதன் மூலம் காணப்படுகின்ற ~அமைதி நீண்ட காலம் நீடிக்கும் என்பதாகும்!

இந்தக் கோட்பாட்டைப் பரீட்சித்துப் பார்க்கின்ற ஒரு பரீட்சார்த்தக் களமாகத்தான் இலங்கைத் தீவு இன்று சர்வதேசத்தால் உபயோகப்படுத்தப்படுகின்றது. அதன்படி, தமிழர் தரப்பைத் தோற்கடிப்பதற்காக, சிறிலங்கா அரசிற்குச் சர்வதேசம் சகல உதவிகளையும் செய்துவிட்டு இப்போது அங்கே நடப்பதை மௌனமாகப் பார்த்துக் கொண்டு நிற்கின்றது.

இதனடிப்படையில்தான் சிங்கள தேசம், இணைத் தலைமை நாடுகளோடு இணக்கப்பாடு ஒன்றைச் செய்து கொண்டு, நீண்ட திட்டமொன்றைச் சமர்ப்பித்திருந்தது.

இந்த நீண்ட திட்டத்தின் அடிப்படையில், 2009 ஆம் ஆண்டுக்குள் தமிழீழப் பிரதேசம் யாவற்றையும், சிங்கள அரசு கைப்பற்றும் என்றும், அதற்குப் பின்னர் மேலும் இரண்டு ஆண்டுக்காலத்துக்குள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சிறிலங்கா அரசு முற்றாகத் துடைத்து அழிக்கும் என்றும் சொல்லப்பட்டது.

அதாவது 2011 ஆம் ஆண்டுக்குள், தமிழர்களது பிரச்சினையை முற்று முழுதாகத் ~தீர்த்து விடுவோம் என்று சிறிலங்கா அரசு சர்வதேசத்திற்குத் தெரிவித்துள்ளது.

இனித்தான் முக்கியமான விடயம் வருகின்றது!

இந்தத் திட்டத்தைச் செயலாக்கும்போது, வரக்கூடிய எதிர்விளைவுகள் குறித்தும், சிறிலங்கா அரசு சர்வதேசத்திடம் ஏற்கனவே பேசி வைத்துள்ளது.

அதாவது, இவ்வாறு போர்மூலம் அழிவுகள் வரும்பொழுது ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள். இதனை ஒட்டி மேலும் சிக்கல்கள் உருவாகும்.

குறிப்பாக வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் கொதித்து எழுவார்கள். இவ்வாறான எழுச்சி, சிறிலங்கா மீது அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்த வழிவகுக்கும்.

ஆகவே வெளிநாட்டு அரசுகள், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து, அவர்களது எழுச்சியைத் தணிக்கவோ, தடுக்கவோ முயல வேண்டும் என்று, சிறிலங்கா அரசு சர்வதேசத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளது என்ற கருத்து நிலை ஏற்கனவே உண்டு.

இன்று உலகளாவிய வகையில் தமிழர் அமைப்புக்கள், தமிழ் ஊடகங்கள், அவர்தம் செயற்பாட்டாளர்கள் மீது தேவையற்ற தடைகளும், அழுத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் பார்க்கின்றோம். அந்த வகையில் சிறிலங்கா அரசின் வேண்டுகோளுக்கு ஏற்பச் சர்வதேசம் நடந்து வருவதை நாம் உணரக் கூடியதாக உள்ளது.

ஓரிரு உதாரணங்களை இவவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கக்கூடும்.

சிறிலங்காவிற்கான முன்னாள் பிரித்தானித் தூதுவர் திரு டொமினிக் சில்கொட் கடந்த 10-12-2007 அன்று கொழும்பில் நடைபெற்ற, டட்லி சேனநாயக்கா நினைவு நிகழ்வில் உரையாற்றியபோது சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது குறித்து 17-12-2007 அன்று நாம் எழுதிய நாம் எழுதிய கட்டுரையில் கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்:-

~............. பிரச்சினை இன்று தீராமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணம், சர்வதேசமயப்படுத்தப்பட்ட தமிழரின் தேசியப் பிரச்சினை தீர்வதற்கான உரிய அழுத்தங்களைச் சர்வதேசம் (பிரித்தானிய உட்பட), சிறிலங்கா மேல் பிரயோகிக்காமல் இருப்பதுதான் என்பதையும், சில்கொட் நன்கறிவார்.

இங்கு சாத்தான் வேதம் ஓதவில்லை. ஆனால் சாத்தானுக்காகப் புது வேதம் மற்றவர்களால் ஓதப்படுகின்றது.

அதனால்தான் நாசூக்காக இரண்டு விடயங்களைச் சில்கொட் சொல்லியுள்ளார். இந்த வரவு-செலவுத் திட்டம் நிறைவேறிய பின்னர் 2009 ஆம் ஆண்டுவரை தேர்தல்கள் எதுவும் இல்லை என்பதையும், கிட்டத்தட்ட பதினெட்டு மாதம் திடமாகத் தற்போதைய அரசு இருக்கும் என்பதையும் ஓரிடத்தில் சொல்லிக் காட்டிவிட்டு, இன்னுமொரு இடத்தில் கீழ்வருமாறு சில்கொட் கூறுகின்றார்:-

~போர் ஒன்று வரவேண்டியிருந்தால் மக்களின் இன்னல்கள் குறைவாக இருக்கும் வகையில் போர் புரிய வேண்டும்.

இவ்வாறு சில்கொட் சொல்லியிருப்பதன் மூலம், மறைமுகமாகச் சிறிலங்கா அரசின் போருக்கு ஆதரவையும், ஊக்கத்தையும் கொடுக்கின்றார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இரண்டாவதாகச் சில்கொட் இன்னுமொரு விடயத்தைச் சொல்கின்றார்:

~தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பொது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை, நாம் பிரித்தானியாவில் மேற்கொள்வோம்.

அதாவது, ஜனநாயக உயர் விழுமியங்களைப் போற்றிப் பேணுவதில் உலகில் தாங்கள் முதன்மையானவர்கள் என்று தம்மைப் பெருமையோடு அழைத்துக் கொள்கின்ற தேசமான பிரித்தானியாவைச் சேர்ந்த சில்கொட் அவர்கள் ~ஜனநாயக ரீதியான அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிப்போம் என்று வாய் கூசாமல் பேசுகின்றார்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாகப் பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் அவர்கள் கூறிய ஒரு கருத்தானது, பிரித்தானியா மீது தமிழ் மக்கள் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்த்து எறிந்து விட்டது.

(இவ்வாறு அவர் கூறியிருந்தார்:-)

'சர்வகட்சிக் குழுவானது முன்வைக்கவிருக்கின்ற சமாதானத் தீர்வானது மிதவாதத் தமிழ் மக்களின் கருத்தைக் கவருவதாக இருக்க வேண்டும்."

மிதவாதத் தமிழ் மக்கள்(!) என்று சில்கொட் யாரைச் சொல்கின்றார் என்று தெரியவில்லை. அது ஆனந்தசங்கரியாக, டக்ளஸ் தேவானந்தாவாகக்கூட இருக்கலாம்.

மேற்கூறியவாறு நாம் 17-12-2007 அன்று எழுதியிருந்தோம். இப்போது மிதவாதத் தமிழர் பட்டியலில் பிள்ளையானையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நாம் கடந்த ஆண்டு சில்சொட்டின் கூற்றைப் பற்றிச் சந்தேகப்பட்டது போன்றே இன்று காரியங்கள் நடந்தேறி வருகின்றன. இதனடிப்படையில்தான் சிறிலங்கா அரசு தன்னிச்சையாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த ஆண்டு ஆரம்பத்தில் தூக்கி எறிந்தமையை நாம் பார்க்க வேண்டும்.

நாம் முன்னரும் பலதடவைகள் கூறி வந்ததுபோல் மகிந்தவின் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தூக்கி எறிந்தமைக்குத் தமிழர்கள் மீதான யுத்தம் (மட்டும்) காரணமல்ல! அதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்றால், புரிந்துணர்வு ஒப்பந்தம் தெரிவித்துள்ள சில சரத்துக்கள்தான்!

~தமிழீழ விடுதலைப் புலிகளோடுதான், சிறிலங்கா அரசு இனத்துவ முரண்பாடு குறித்துப் பேசித் தீர்க்க வேண்டும் என்றும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்ற வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சில சரத்துக்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டு சிறிலங்கா அரசு அந்த ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டிருந்தது.

இப்போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தூக்கி எறிந்ததன் மூலம், இனத்துவ முரண்பாடு குறித்துத் தனது கைப்பொம்மைகள் ஆன டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், ஆனந்தசங்கரி போன்றோரோடு பேரம் பேசலாம் என்று மகிந்தவின் அரசு மனப்பால் குடிக்கின்றது. இதனடிப்படையில்தான் தமிழர் தாயகத்தின் மீதான பாரிய போரையும், புலம்பெயர் வாழ் தமிழர்கள் மீதான அழுத்தங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போதைக்கு அழிக்கப்பட்டிருந்தால் சர்வதேசம் ~நல்ல விடயம் என்று சொல்லிக்கொண்டு, தனது அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் போயிருக்கும்.

இப்போது விடுதலைப் புலிகளை அழிக்க முடியில்லை என்றவுடன் புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முயல்கின்றது.

இதனடிப்படையில்தான் புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் மீதான, சர்வதேசத்தின் தற்போதைய நெருக்குவாரங்களை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இங்கே நாம் சொல்ல வருவது என்னவென்றால், துணிச்சல் இருந்தால் இந்த உலக நாடுகள் எல்லாம் ஒரு கருத்துக்கணிப்பை நடாத்திப் பார்க்கட்டும்!

இலங்கைத் தீவில் மட்டுமல்லாது, சர்வதேசங்களிலும் வாழுகின்ற தமிழ் மக்களிடமும் கூட, ஒரு நேர்மையான கருத்துக் கணிப்பைச் சர்வதேசம் நடாத்திப் பார்க்க முன் வர வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள்தான், தமிழ் மக்களின் பிரதிநிதிகளா என்பதை அறிய தமிழ் மக்களிடமே ஒரு கருத்துக் கணிப்பை நடாத்திப் பார்க்கட்டும்.

அத்தோடு தமிழீழத் தனியரசு என்பது குறித்தும் தமிழ் மக்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடாத்தச் சர்வதேசம் முன் வர வேண்டும்.

இலங்கைத் தீவிலே பிள்ளையானுக்காகத் தேர்தலை வைத்தது போல் அல்லாது, அங்கேயும் ஒரு தேர்தலை அல்லது கருத்துக் கணிப்பை நேர்மையாகச் செய்து பார்க்கட்டும்.

இலங்கைத் தீவில் மட்டுமல்லாது, சர்வ தேசத்திலும் வாழ்கின்ற தமிழ் மக்களின் வேட்கை என்னவென்று அப்போது தெரிந்து விடும்.

சர்வதேசத்திற்குத் துணிவிருந்தால், மனச் சாட்சியிருந்தால் இதனைச் செய்து பார்க்கட்டும் என்பதை ஓர் அறை கூவலாகவே சொல்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது விடுதலைப் புலிகளின் போராட்டமல்ல! அது எமது மக்களின் போராட்டம்!

தமிழ் மக்கள்தான் தமது விடுதலைக்காக, தம் சுதந்திரத்திற்காகத் தமிழீழத்தைக் கோரினார்கள். அந்த விடுதலைக்கான போராட்டத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்துகின்றார்கள்.

சிங்கள பௌத்தப் பேரினவாதப் பயங்கரவாத அரசுகளின் அடக்குமுறையை எதிர்த்துப் புலிகள் போராடுகின்றார்கள். விடுதலைப் புலிகள் ஊடாகத்தான் தமிழீழ மக்களின் போராட்டம் நடாத்தப்படுகின்றது!

இது தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டம்!!

இங்கே புலம்பெயர் வாழ் தமிழ் மக்களாகிய எங்களுடைய பங்கும், கடமையும் என்னவென்றால்
~தமிழீழ விடுதலைப் புலிகளே எமது பிரதிநிதிகள் என்பதையும்

~தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்தான் எம்முடைய ஒரே தலைவர் என்பதையும்,

~தமிழீழத் தனியரசே எம் மக்களுடைய வேட்கை என்பதையும்
பகிரங்கமாக அறைகூவல் விடுவதும்,

நாங்கள் எல்லோரும் எமது மக்களின் பின்னால் ஒருங்கிணைந்து நிற்போம் என்பதைத் துணிவோடு சொல்லிச் செயலில் இறங்குவதும்தான்!

ஆகவேதான் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களாகிய நாம் இன்றைய தினங்களில் முற்றாக ஒருங்கிணைந்து எமது தாயக மக்களின் வேட்கைகளைப் பறை சாற்றி,

அவர்களுக்கு ஆதரவாக,
அவர்தம் காவலர்களுக்கு ஆதரவாகப்

பொங்கி எழுந்து எம்தேசத்திற்கான கடமையைச் செய்வோம்.

பொங்கு தமிழராகப் பூரித்துப் புதுப் பொலிவுடன் பொங்கி எழுவோம். வழமையாக, அறுவடைக்குப் பின்னர்தான் பொங்கல் நடக்கும். இம்முறை பொங்கலுக்குப் பின்னர்தான் அறுவடை வரும்!

ஆகவே

எமதருமைத் தமிழ் மக்களே!
பொங்குக!

-.சபேசன் (அவுஸ்திரேலியா)-

Comments