பிரிகேடியர் பால்ராஜ் - ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன் :வண. பிதா ஜெகத் கஸ்பார்


வானம் அளந்தது அனைத்தும் அளந்து, வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து, வளர்ந்து வாழ்கின்ற எம் தமிழ் மொழியின் வரலாறு எத்தனையோ மிகப் பெரிய வீரர்களைக் கண்டிருக்கின்றது.
வீரர்களின் வீரத்தைப் போற்றுகின்றோம். போர்களை நாங்கள் விரும்புகிறவர்கள் அல்ல. போர்கள் இல்லாத எவ்வித சச்சரவுகள் இல்லாத சமாதான உலகமே எம் அனைவருடைய கனவாகவும் இருக்கின்றது.

ஆனால், அந்த உலகம் வருகின்ற வரை, நீதி வருகின்ற வரை, நீதிக்காக, மனித உரிமைகளுக்கான, மனித இருப்புக்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அக்கிரமங்களை, ஆக்கிரமிப்புக்களைச் செய்தவர்களை நாங்கள் வாழ்த்துவதும் இல்லை. வணங்குவதும் இல்லை. ஆனால், ஒடுக்கப்படுகின்ற மக்கள் இனத்தினுடைய இருப்பிற்காக, அவர்களினது வாழ்வாதார உரிமைகளுக்காக போராடுகின்றவர்களை, களம் நின்று தம்மையே ஆகுதி ஆக்குகின்றவர்களை மகத்தான வீரர்களாக நாம் பதிவு செய்கின்றோம்.

வரலாற்றில் வணங்கி வருகின்றோம். அவ்வகையில் தமிழ் கண்ட வரலாற்றில் படித்தறிந்த மாவீரர்கள் சிலர் இருகின்றார்கள். நாம் நமது காலத்தில் கண்ட அப்படியான வீரர்களில் முதலானவராக தளபதி பால்ராஜ் அவர்களை வரலாற்றில் உங்களோடு இணைந்து நானும் பதிவு செய்யத் தலைப்படுகிறேன்.
இவரைப்பற்றி சிங்கள இராணுவ வட்டத்திலேயே உலவுகின்ற பேசப்படுகின்ற இரண்டு அனுபவங்களை காது வழி கேட்டு அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் அவருடைய ஆளுமையினுடைய ஆழமான தன்மையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு பால்ராஜ் அவர்கள் மருத்துவ தேவைக்காக சிங்கப்ப+ர் சென்று திரும்பி வருகின்ற பொழுது கொழும்பு விமான நிலையத்திலே அவருக்கொரு அனுபவம் காத்திருக்கிறது. அப்போது அமைதிப் பேச்சுவார்த்தைக் காலம் எனவே எவ்விதமான சதிகளையும் எவரும் எதிர்பார்க்கவில்லை.
பால்ராஜ் அவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் இளம் சிங்கள இராணுவ தளபதிகள் ஒரு முப்பது முப்பத்தைந்து பேர் இராணுவ உடை அணிந்து பொதுவாக இராணுவ மரியாதை செலுத்துகின்ற அந்த தொப்பி யாவும் அணிந்து அவரைச் சூழ்ந்து கொள்கின்றார்கள். சதி நடந்து விட்டதோ! நம்மை ஒரு மரணவலையில் சிக்க வைத்து விட்டார்களோ! என்று ஒரு கணம் அச்சப்படுகிறார் பால்ராஜ்.
அப்பொழுது ஓர் இளம் சிங்களத் தளபதி அவரைப் பார்த்து 'பயப்படாதீர்கள.; எங்களுக்கு குடாரப்பு தரையிறக்கத்திற்குப் பிறகு 40 நாட்களுக்கு மேலாய் அந்தப் பகுதியில் பெட்டிச் சண்டையை நடத்திய பால்ராஜ்யை பார்க்க வேண்டுமென்பது வாழ்நாள் ஆசை. எங்கள் வாழ் நாளில் அந்தத் தளபதியை பார்க்க வேண்டுமென்பதை ஒரு கனவாக வைத்திருந்தோம். அதற்காகத்தான் ஒரு நிமிடம் உங்கள் முகத்தைப் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தோம்" என்று சொல்லுகின்றான்.
எதிரிகளின் ஆர்த்மாத்தமான புரொப்னிசியஸ் அப்றினியஸ் ????? என்று சொல்வோமே அதி உச்ச தகுதி தமிழீழ விடுதலைப் போரில் அதிகம் பேருக்கு இருந்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. அதே போன்று அவரைப் பற்றிய இன்னொரு அனுபவமும் உள்ளது.
நான் முன் அனுபவத்தில் குறிப்பிட்ட அதே களம் தான் குடாரப்பு தரையிறங்கிய பின் பளைப்பகுதியில் பளைக்கும் ஆனையிறவிற்கும் இடையில் ஏ-9 பாதையை இடைமறிக்கும் அந்தத் தீர்க்கமான முக்கியமான யுத்தத்தில் பெட்டிச் சண்டை நடக்கிறது. அப்பொழுது ஆட்சியிலிருப்பது அம்மையார் சந்திரிகா அவர்கள இராணுவ மமதை கொண்ட அமைச்சராக அனுரத்த ரத்வத்த. இங்கே களத்தில் சிங்களப் படைகளை வழி நடத்துகின்றவராக ஹெட்டியாராச்சி என்பவர் இருக்கிறார். ஹெட்டியாராச்சி அமெரிக்காவிலே படித்தவர். யுத்தத்தை மரபு ரீதியாக சட்ட திட்ட ரீதியாக நடத்த விரும்புகின்றவர்.
2000 ஆம் ஆண்டு ஆனையிறவு தமிழீழப் படைகளினுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்ததை நாம் அறிவோம். உலகெங்கும் நாம் அதைக் கொண்டாடினோம். ஆனால், ஆனையிறவிற்கான சண்டை ஆனையிறவில் நடக்கவில்லை. ஆனையிறவில் நடக்காத சண்டை முக்கிய மூன்று முனைகளில் நடந்தது.
ஆனால், அதன் ஆதார முனை என்பது வதுரயின் பகுதியில் தான் நடந்தது. குடாரப்பில் தரையிறங்கி வதுரயின் பகுதி பரந்த மணல்வெளி. அங்கே எந்தவிதமான தடுப்புச் சுவர்களோ, மரங்களோ இல்லை. அந்தப் பொட்டல் பரப்பிலே சண்டை நடந்தது. அதுவும் கடற் பரப்பு சிங்கள கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
அந்தப் பக்கம் போனால் பலாலியில் ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள். அப்படியே வந்தால் பளையில் ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்கள் அப்படியே சுற்றி வருகின்ற போது ஆனையிறவில் பல்லாயிரக் கணக்கான இராணுவ வீரர்கள்.
சுற்றிலும் முற்றுகையிடப்பட்ட நான்கு திசைகளிலும் ஏறக்குறைய நாற்பதினாயிரம் சிங்கள வீரர்களை எதிர் கொண்டு வெறும் 400 வீரர்களை மட்டும் கொண்டு ஒரு பொட்டல் காட்டிலே தரையிறங்குகின்ற தளபதி பால்ராஜினுடைய படைகள். அந்த இடத்திலே குழி வெட்டி அந்த குழிக்குள் நின்ற கொண்டு 40 நாட்களுக்கு மேலாய் இந்த நாற்பதினாயிரம் படைவீரர்களை மட்டுமல்ல, கடற் படையை, விமானப் படையை, பீரங்கிப் படையை, தரைப் படையை, எல்லாப் படைகளையும் எதிர் கொண்டு நிற்கின்றார்கள்.
இதற்கெல்லாம் மேலாக விநியோகம்; என்பது இவர்களுக்கு அறவே கிடையாது. போனவர்கள் ஒன்றில் வெல்ல வேண்டும.; வெல்ல முடியவில்லை என்றால் அந்த 400 பேரும் இறக்க வேண்டும். அவர்களில்; ஒருவருக்காவது காயம் பட்டதென்றால் மருத்துவ உதவி வராது. அவர்களை முற்றுகையிடப் பட்டார்கள் என்றால் அவர்களை மீட்பதற்கு அங்கிருந்து மீட்கும் படையணிகள் வரமுடியாது.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே பணி பளைப் பகுதியில் பளைக்கும் ஆனையிறவிற்கும் இடையில் ஏ-9 நெடுஞ்சாலையை இடைமறித்து சிங்களப் படைகளுக்கான ஆனையிறவிற்கான விநியோகப் போக்குவரத்தை இடைமறிக்க வேண்டும் என்பது தான். அப்படியானதொரு எந்த வீரனாலும் செய்ய முடியாத பணியை ஒரு வீரப்பணியை பால்ராஜ் செய்து கொண்டிருக்கிறார்.
அப்போது அனுரத்த ரத்வத்த பலாலி விமானத் தளத்திலே வந்து இறங்குகிறார். 'ஏன் நீங்கள் நாற்பதினாயிரம் படைவீரர்கள் இருந்தும் இந்த 400 பேரை அதுவும் ஒரு பொட்டல் வெளியிலே எதிர்கொண்டு அவர்களை அழிக்க முடியவில்லை?" என்று கேட்ட பொழுது ஹெட்டியாராச்சி 'செய்வோம். ஆனையிறவிலிருந்து நாமாக பின் வாங்குவோம். பின்வாங்கி பளைப் பகுதியில் நின்று கொண்டு இவர்களைச் சுற்றி வளைப்போம்" என்று சொன்னார்.
அது சரியான ஒரு இராணுவ முடிவு. ஆனால், இராணுவ அமைச்சரான ரத்வத்தயினுடைய ~ஈகோ அரசியல் ரீதியாக அது தென்னிலங்கையில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனையிறவிலிருந்து பின்வாங்குகின்றோம் என்று ஒரு செய்தி வந்தால் அது அரசிற்கு அவப்பெயர் தருமென்பதால் அந்த முடிவை நிராகரித்தார். 'நீங்கள் எல்லாம் ஒரு இராணுவத் தளபதிகளா? நீங்கள் எல்லாம் ஒரு வீரர்களா? நாற்பதினாயிரம் பேரை வைத்துக் கொண்டு விமானப்படை கடற்படை வலுவையும் வைத்துக் கொண்டு ஒரு 400 பேர் கொண்ட சிறு அணியை அதுவும் பொட்டல் காட்டில் அதுவும் பெட்டிச் சண்டை நடக்குமிடத்தில் எதிர் கொள்ள முடியவில்லையே?" என்று கேட்டார்.
அப்பொழுது ஹெட்டியராச்சி பின்வருமாறு சொன்னதாகப் பதிவு செய்யப்பட்டிருகிறது. வெளிப்படையான பதிவு இல்லை. ஆனால் அவர்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஹெட்டியாராச்சி அனுரத்த ரத்வத்தையைப் பார்த்து, 'சேர், தலைவர் பிரபாகரன் அவர்கள் வந்து நின்றாலும் கூட நாங்கள் அதைப் பிடித்து விடுவோம். ஆனால், பால்ராஜ் வந்து உட்கார்ந்து விட்டான். அவனை எழுப்ப முடியாது" என்று சிங்களத்திலே சொல்லுகின்றார்.
இதை தேசியத் தலைவர் ரேடியோவில கேட்டு; பதிவு செய்து வைத்திருந்ததாக செய்தி ஒன்றும் உள்ளது. தேசியத் தலைவர் அவர்கள் இதை பதிவு செய்து வைத்து பால்ராஜ் அவர்களுக்கு போட்டுக் காட்டி, 'உன்னுடைய எதிரியே உன்னைப் பற்றி இப்படிப் பாராட்டி விட்டான். நான் வந்திருந்தால் கூட என்னை எழுப்பி விடுவார்களாம். ஆனால், பால்ராஜ் இருந்து விட்டான். அவனை எழுப்புவது கடினம் என்று சொல்கிற அளவிற்கு நீ பெருமை பெற்றுவிட்டாய் என்று வாழ்த்தினாராம்.
அது இன்னோர் நாளில் வரலாற்றுக் கதையாகவே வரும். அப்படிப்பட்ட திறன் கொண்ட நுட்பமான ஆற்றல் கொண்ட ஒரு தளபதி அவர். அந்தத் தளபதியினுடைய இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றைக்கு, அதுவும் கடும் நெருக்கடிகளை பல திசைகளிலிருந்தும் எதிர் கொள்கின்ற இந்த காலத்திலே மிகப்பெரிய இழப்பு.
நான் வெரித்தாஸ் வானொலியில் கடமையாற்றிய பொழுது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய காலத்தில் பலரை நேர் கண்டு உரையாடினேன். அவர்களினுடைய கருத்துகளை பதிவு செய்கின்ற அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த பயணத்தில் நேர் கண்ட மனிதர்களில் மகத்தான ஒரு மனிதராக தளபதி பால்ராஜ்யையும் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
ஏனென்றால் அந்த வீரன் அற்புதமான மனிதனாக இருந்தான். களங்கள் கண்ட பெருமிதமோ வாகை சூடிய வல்லமை வெளிப்பாடுகளோ இல்லாத அடர்த்தியான ஒரு எளிமை சுமந்த அந்த ஆளுமையினுடைய தரிசனம் என் மனத்திரையில் இன்னும் ஆளமாகப் பதிந்திருக்கிறது. நான் சந்தித்த பொழுது உடல் நலம் குறைந்தவராய். அவரும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அந்த ஓய்வுக் காலத்தில் கூட ஒரு மரக் கட்டிலில் படுத்து கொண்டிருந்த அந்த எளிமை. உடல் நலம் அற்றிருந்த போதும் கூட நான் வெரித்தாஸ் வானொலியிலிருந்து நேர் முகம் காண செல்கிறேன.
கேள்வியோடு சென்றவன் நான். ஆனால் என்னுடைய நிகழ்சிகளையெல்லாம் கேட்டு விட்டு. இந்த பாதரிடம் நான் கற்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று 42 கேள்விகளை எழுதி வைத்திருந்தார். இன்னும் அந்த பழைய நோட்புக் தாளில் அவர் எழுதி வைத்து, ஒரு சிறு குழந்தையைப் போல, கற்றுக் கொள்ள வேண்டுமென்ற அந்த தாகத்தோடு, ஆர்வத்தோடு, தனக்கு அறிவு வர வேண்டுமென்று அல்ல. எண்ணம் சதா பொழுதும் தமிழீழம் என்று வரும் என்று வரும் என்கின்ற அந்த வேட்கையோடு, கனவோடு யார் வந்தாலும் அவர்களிடமிருந்து தமிழீழ விடுதலைப் போருக்காக ஏதேனும் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். புதிதாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற அந்த வேட்கையைப் பார்த்த பொழுது, நான் என்ற ஆணவம் இல்லாத, நான் என்கின்ற அகந்தையில்லாத, வெற்றி பெற்றோம் என்ற அந்த மதர்ப்பும், பெருமிதமும் இல்லாத உண்மையான தியாகத்தின் எளிமையின் அடையாளமாய் இருக்கின்றார்.
இவரைப் போன்ற ஒரு தளபதியை நாம் கண்டு வணங்கி வாழ்த்தி. இவரைப் போல இருக்க வேண்டுமென்று. முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு ஆளுமை என்று அன்று நான் அவரைப் போற்றினேனோ. இன்று அதே உணர்வை இந்த நேரத்தில் அவருடைய நினைவாக பதிவு செய்ய நான் விரும்புகின்றேன்.
பால்ராஜ் அவர்களைப் பற்றி சொல்லுகின்ற பொழுது இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலே கொரில்லா இராணுவமாக இருந்த விடுதலைப் புலிகள் மரபு ரீதியான இராணுவமாக மாறியது முதலில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவினுடைய உருவாக்கத்தில் தான். அந்த படைப்பிரிவை உருவாக்கியதில் பால்ராஜ் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
அந்த படைப்பிரிவை வழி காட்டியதிலும் பல வெற்றிகளை குவித்ததிலும் அவருக்கு பங்கு உண்டு. அவருடைய சாதனைகளிகன் பட்டியலை முழுதுமாக இங்கே எடுத்து வைக்கின்ற ஒரு தருணம் அல்ல இது. அதை பலரும் செய்திருப்பார்கள். ஆனால் அவரின் இழப்பு ஏன் பேரிழப்பு என்றால் அவர் களத்தில் நிற்கிறார் என்றால் 100 போராளிகள் ஒரு இலட்சம் போராளிகளுக்கு சமமானவர்களாக மாறுகின்றார்கள். அந்தளவிற்கு ஒரு இலட்சிய வேட்கையையும் உணர்வு எழுச்சியையும் கொடுக்கின்ற ஆற்றல் அவருக்கு இருந்தது.
ஏனென்றால், அவர் அறையில் இருந்து கொண்டு அணிகளை வழி நடத்துகின்ற தளபதி அல்ல. களத்தில் நின்று கொண்டு மரணத்தை ஒவ்வொரு கணமும் எதிர் கொண்டு அதை எப்பொழுது வேண்டுமானாலும் அரவணைத்துக் கொள்ளத் தயாராக நின்று அந்த போராளிகளோடு வாழ்ந்தவர். வழிநடத்தியவர். வாழ்க்கையிலும் அந்த போராளிகளோடே இருந்தவர். தனக்கென்ற வசதிகள், தனக்கென்று தனித்துவமான மரியாதைகள் என எந்த இடங்களையும் தேடாமல் ஒரு சாதாரண போராளியாகவே வாழ்ந்தவர்.
அதனால் தான் அவருக்கு சிறப்பு எனவே தான் சொன்னேன் அவர் களத்திலே நிற்கிறார் என்றால் 100 போராளிகள் ஒரு இலட்சம் போராளிகளாக மாறுகின்றார்கள். அந்தளவிற்கு ஆற்றல் மிகுந்த ஒரு ஆன்ம வல்லமை கொண்ட அந்த ஆன்ம வல்லமையினுடைய உணர்வுகளையும் ஏனைய எல்லாப் போராளிகளுக்கும் ஊட்டும் திறன் கொண்ட ஒரு மகத்தான ஒரு அற்புதமான ஒரு ஆளுமை பால்ராஜினுடைய ஆளுமை.
பெரும் பின்னடைவாக இருந்தாலும் ஒரு நீண்ட விடுதலைப் பயணத்தில் இவையெல்லாம் நாம் எதிர்கொண்டே தீர வேண்டிய தவிர்க்க முடியாத வேதனைகள் வலிகள்.
ஆயினும் இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு நான் சொல்ல விரும்புகின்றேன்.
இந்த கால கட்டம் நெருக்கடியான கால கட்டம் தான். ஆனால் அவநம்பிக்கையின் கால கட்டமல்ல. இதைவிட நெருக்கடியான கால கட்டங்களையெல்லாம் தமிழீழ விடுதலைப் போராட்டம் கண்டிருக்கின்றது, கடந்திருக்கின்றது.
அழிவின் விழிம்பின் முனை வரைக்கும் சென்று நிற்கின்றதோ என்ற ஐயங்கள் ஏற்படுகிற அளவிற்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் சில தருணங்களில் நின்றிருக்கிறது. அவற்றையெல்லாம் கடந்தது என்றால், அவற்றையெல்லாம் வென்றது என்றால், இந்த கணத்தையும் இந்த தருணத்தையும் இந்த காலகட்டத்தையும் அது கடக்கும் அது வெல்லும்.
உண்மையில் ஈழத்திற்கான இறுதிப் போராட்டம் என்பது என்னைப் பொறுத்த வரையில் தமிழீழ பகுதிகளில் நடக்காது உலகளவில் புலம்பெயர்வாழ் மக்கள் வாழுகின்ற களங்களில் தான் நடக்கும்.
இதை நீங்கள் என்னுடைய தீர்க்க தரிசனமென்றே எடுத்துக் கொள்ளுங்கள். அதை இந்த நாளிலே ஏன் சொல்கின்றேன் என்றால் இந்த மகத்தான மனிதருக்கு, பால்ராஜ் என்கின்ற தழிமீழ தாயின் புதல்வனுக்கு, நீங்களும் நானும் செலுத்துகின்ற மரியாதை.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் உலக நாடுகளில் எங்கெல்லாம் இருக்கின்றோமோ அங்கெல்லாம் அந்த போராட்டத்தை இன்னும் உன்மத்தம் கொண்டதாக்கி உண்மையில் ஈழத்திற்கான இறுதிப் போரை இந்த நாடுகளில் ஈழத்திற்கு அப்பால் இருக்கின்ற இந்த மண்களில் ப+மிகளில் தொடங்குவது தான்.
எப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான ஒரு அடையாளம் நம்மையெல்லாம் சிலிர்க்க வைக்கின்ற ஒர் அடையாளம் அண்மையில்; நடந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவிலே அரங்கிலே இலங்கை தோற்கடிக்கப்பட்டு அவமானகரமாக வெளியேற்றப்பட்டது.
உலக நாடுகளினுடைய மனித உரிமைகள் சார் வலுவான குரல்களும், வலுவான அமைப்புகளும் இதற்கு முன்னணியில் நின்று குரல் கொடுத்தன என்றாலும் கூட புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் ஓரு சிறு தொகுதியினர் விழிப்புணர்வு பெற்ற, உள்ள ஒளி பெற்ற, உள்ள உறதிகொண்ட ஒரு சிறு பிரிவினர் அறிவு ஆற்றல் கொண்ட அந்த பிரிவினர் நடத்திய இடைவிடாத முயற்சிகள் தான்.
சிறு சிறு முயற்சிகள் தான் மனித உரிமைகள் அரங்கிலே இந்த சிறிலங்கா அரசு அவமானப்படுத்தப்பட காரணமாக இருந்தது. அந்தப் போர் தொடங்கி விட்டது. ஈழத்திற்கான இறுதிப் போர் உலக அரங்கிலே தமிழர்களால் சிறு தொகுதியினரால் இன்று தொடங்கப்பட்டு விட்டது. இந்த போர் வலுவடைய வேண்டும். இந்த போர் உன்மத்தம் பெற வேண்டும். இந்த போரில் யாரும் நம்மைத் தோற்கடிக்க முடியாது.
மனித உரிமை அரங்கிலிருந்து இவர்களை வெளியேற்றுவது மட்டுமல்ல ஒரு மனித இன அழிவை நடத்தியதிற்காக இவர்களிடமிருந்து அதற்கான விலையை நாம் பெற்றே ஆக வேண்டும். அதற்கான நீதியை நாம் பெற்றே ஆக வேண்டும்.
அது புலம்பெயர் மக்களால் முடியும், இயலும். அங்கேயே பிறந்து வளர்ந்து அந்தந்த நாடுகளினுடைய கலாசார வழக்கங்களை தெரிந்த. அந்தந்த நாட்டு மக்கள் பேசுகின்ற மொழிகளிலே பேசத் தகுதி கொண்ட அந்தந்த நாடுகளினுடைய மக்கள் எப்படி அரசியலையும் சமூக வாழ்வையும் நடத்துகின்றார்களோ அப்படியே நடத்தி அவர்கள் எளிதாக ஏற்றுக் கொள்கின்ற விதத்தில் வாதங்களை முன்வைக்கின்ற திறன் கொண்ட ஒரு புதிய தலைமுறை இன்று எழுந்து வருகின்றது.
அவர்களுக்கெல்லாம் இந்த நீதி உணர்வை, இலட்சிய உணர்வை அவர்கள் ஈழ விடுதலை என்று தாகம் கொண்டிருக்கின்றார்களோ இல்லையோ குறைந்த பட்சம் எமது கண்பட எமது காலத்தில் ஒரு மனித அழிவு ஒரு மனித இனப்படுகொலை நடத்திருக்கின்றது. இதற்கான பதிலை நாகரீகமான நாம் கற்றறிந்தவர்கள். அதைச் சொல்லுகின்ற ஜனநாயக உரிமைகள் கொண்ட நாட்டிலே வாழ்கின்றவர்கள். பெற்றுத்தரவில்லை என்றால் அதைப் போல ஒரு அவமானம் நமக்கு இருக்க முடியாது.
ஈழத்திற்கான இறுதிப்போர் உண்மையில் உலக அரங்கில் தான் நடக்கும். அந்தப் போரை தொடர்ந்து போரிடுகின்ற பலரது பெயரைக்கூட குறிப்பிட முடியும். ஒருநாளில் நான் அதை பதிவு செய்வேன். அவர்களை நாம் போற்றியே ஆக வேண்டும் இந்த போரிடுகின்ற பிள்ளைகள் மனிதர்கள் தான் இப்படிப்பட்ட பால்ராஜ் போன்ற களத்தில் நின்று தியாகம் செய்தவர்களுக்கு மிகப்பெரிய வணக்கம் செய்கிறவர்களாக இருக்கின்றார்கள்.
அதேபோல பல ஆற்றல்கள் இருக்கின்றது. இன்னொன்றையும் சொல்ல விரும்புகின்றேன். இந்த தளபதி இன்னும் 20 ஆண்டுகள் வாழ்ந்திருப்பார் என்றால் எவ்வளவு பங்களிப்பை அவர் செய்திருக்க முடியும். 42 வயதில் நாம் அவரை இழந்திருக்கின்றோம் என்றால் அவர் களத்திலே நின்றோ, அல்லது எதிரியினுடைய எறிகணை வீச்சுக்கோ, விமானக்குண்டு வீச்சுக்கோ, சதிக்கோ பலியாகவில்லை.
இன்று இதய நோயென்பது தீர்க்கப்பட முடிகிற, சிகிச்சை அளிக்கப்படக் கூடிய, நலம் பெறக் கூடிய ஒரு நோய். அதற்கான திறன் ஆற்றல் எத்தனையோ உலகளவில் தமிழர்களுக்கு இருக்கிறது. எத்தனையோ மிகவும் விற்பன்னத் தன்மை கொண்ட மருத்துவர்கள் இருக்கின்றார்கள்.
ஆனால், அந்த ஆற்றல்களை அங்கே நாம் அவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் இங்கே இராணுவ ஆயுதம் வாங்குவதற்கு நாம் உதவி செய்வது சட்ட விரோதமாக இருக்கலாம்.
ஆனால் மனிதாபிமானப் பணிகளான மருத்துவ வசதிகள், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்வது ஒன்றும் சட்டவிரோதமான செயல் அல்ல.
அது மானிடப் பணி தான். அந்தப் பணியையேனும் இன்னும் நாம் விரிவுபடுத்தி செய்திருந்தால், செய்திருக்க முடியும் யாரும் தலையிட்டிருக்க முடியாது. நம்மிடம் எல்லா வளமும் ஆற்றலும் இருக்கின்றது. அப்படி செய்திருந்தால் இப்படி அற்புதமான தளபதியை இன்று நாம் இழந்திருக்க மாட்டோம்.
அந்த கடமைகளேனும் மனிதாபிமான கடமைகள் சட்டநெறிமுறைக்கு உட்பட்ட கடமைகள், நாம் செய்யமுடிக்ககூடிய கடமைகள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் தவறாது செய்வது தான் உண்மையிலே இனி வரும் நாட்களில் நல்ல பலரை காப்பாற்றுவதற்கான நடைவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் தான் இந்த தளபதிக்கு இன்று நாம் உண்மையான வணக்கத்தை செய்ய முடியும்.
அன்பிற்குரிய தமிழ் மக்களே!
எல்லா இரவுகளும் முடியும். எல்லாக் கொடுமைகளும் முடியும். நிச்சயமாக இருள் விலகித்தான் தீரும். இருளின் ஆட்சி நீண்டு நிலைக்க முடியாது. இந்தக் கால கட்டம் சவால்களின் கால கட்டமாக இருந்தாலும் கூட ஒரு வகையில் நம்பிக்கையினுடைய கால கட்டமாக இருக்கின்றது.
ஏனென்றால், களத்திலே போராளிகளுடைய எண்ணிக்கை அதிகரித்து வரவில்லை என்றாலும் உலக அரங்கிலே தமிழ் மக்களின் நீதிக்கான போராளிகள் அனுதினமும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
அந்த எண்ணிக்கை மேலும் பெருக வேண்டும் வளர வேண்டும.; இன்னும் கூர்மையான குரல் கொண்டவர்களாக மாற வேண்டும். இந்த சிறிலங்கா அரசை மனித குல அழிவென்கிற குற்றத்திற்காக உலக அரங்கிலே நிறுத்தி நமக்கான நீதியினையும் தேடிக்கொள்கின்ற அந்த நாளினில் தான் உண்மையில் பால்ராஜ் போன்றவர்களின் ஆன்மாவும் மகிமை பெறும்.
அந்த நாள் வரை அவருடைய நினைவைச் சுமந்து இந்த விடுதலையின் நியாயத்தை தமிழீழ மக்களின் நீதிக்கான போராட்டத்தை தொடர்ந்து நாமெல்லாம் நடத்துவோம்.

Comments