வன்னியில் இராணுவம் தீட்டும் இரகசியத் திட்டம் என்ன?

வடக்கை முழுமையாகக் கைப்பற்றும் படையினரின் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. 22.02.2007 இல் வன்னியைக் கைப்பற்றும் நடவடிக்கையைப் படையினர் ஆரம்பித்தனர். இது 16 மாதங்களையும் தாண்டி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை யாழ்க்குடாநாடு, மணலாறு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. வன்னிப் பெருநிலப் போர் அரங்குகளில் படைத்தரப்பு அகலக்கால் விரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் விரும்பியோ விரும்பாமலோ மீண்டும் ஒரு ஜயசிக்குறூவை அவர்களே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தில் தற்போது 11,21,22,23, மற்றும் 51வது டிவிசன் முதல் 59வது வரையான டிவிசன் மற்றும் 61 என 14 டிவிசன்கள் இருந்தாலும் 2000 ஆம் ஆண்டில் ஆனையிறவில் இருந்த 54ஆவது டிவிசன் முழுமையாகச் சேதமடைந்ததால் அதை மீள படைத்தரப்பு உருவாக்கவில்லை. ஆகவே தற்போது 13 டிவிசன்களே இயங்கக்கூடிய நிலையில் உள்ளன. இதில் தாக்குதல் படையணிகளாக 53,55,57,58,59 மற்றும் 61-2 ஆகியவைகளே செயற்படுகின்றன.

இதில் 53வது படையணி கிளாலி முதல் முகமாலை வரையிலும், 55வது படையணி முகமாலை முதல் நாகர்கோயில் வரையிலுமாக 11கி.மீ வரையான முன்னரங்க நிலைகளிலும் உள்ளன. ஆனால் வன்னிப் போரரங்கில் 56ஆவது படையணி ஓமந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ளன. கடந்த வருடம் உருவாக்கப்பட்ட படையணிகளான 57,58, ஆகியவற்றில் 57வது டிவிசன் கல்மடுவைத் தலமையகமாகக் கொண்டு தற்போது மடு, பாலம்பிட்டி, விளாத்திகுளம், பாலமோட்டை உட்பட்ட பெரும் பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 58வது டிவிசன் மன்னார் கட்டுக்கரைக் குளத்தின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து கேதீஸ்வரம் ஈறான பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

இந்த வருடத் தொடக்கத்தில் உருவான 59வது டிவிசன் மணலாற்றில் கொக்குத் தொடுவாய் முதல் எத்தாவெட்டுனுவௌ வரையான 12 கி.மீ. நீளமான பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மேஜர் ஜெனரல் லலித்தவுலகல தலமையில் (மாங்குளம் மற்றும் ஆனையிறவில் படுதோல்வியைச் சந்தித்தவர்) தற்போது உருவாக்கப்பட்டுள்ள 61வது டிவிசன் இரண்டு படையணியாக்கப்பட்டு அதில் முதலாவது (61-1) மடு, பாலம்பிட்டி, பாலமோட்டை, ஆகிய பகுதியில் தாக்குதல் மற்றும் தற்காப்பில் ஈடுபட்டிருக்கும் 57வது படையணியை தற்காப்பு நடவடிக்கையிலிருந்து விடுவித்து அவர்களை முற்றுமுழுதாக தாக்குதலில் ஈடுபட வைப்பதும். இரண்டாவது படையணி (61-2) 57வது படையணியுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபடுவது என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நான்காம் கட்ட ஈழப்போரில் யாழ்குடாப்பிரதேசத்தில் படைகள் பல தடவைகள் முன்னேற்ற நவடிக்கைகள் பல மேற்கொண்ட போதும் இழப்புகளைத் தவிர அவர்கள் எதையும் அங்கு சாதித்து விடவில்லை. அதுபோல்தான் மணலாற்றுப்பகுதியிலும் பெரிய வெற்றியை இராணுவம் பெற்றிருக்கின்றது எனக் கூறமுடியாது. இராணுவத்தின் 59-1 பிரிகேட் ஜனகபுரவுக்கு மேற்காகவுள்ள முன்னகம் என்ற புலிகளின் முகாமைக் கைப்பற்றி காடுகளினூடாக வேலன்குளம்வரை நகர்ந்துள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால் 59-2 வது பிரிகேட் நித்தியகுளம் நோக்கி நகர்ந்து நித்திய குளத்திற்குத் தெற்காக உள்ள வண்போ (1-4) முகாம் வரை அதாவது இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் செயற்பட்டு தற்போது கைவிடப்பட்ட புலிகளின் 1-4 முகாமை அண்மித்துள்ளனர். சில ஊடகங்கள் இந்த வண்போ முகாமை இராணுவம் கைப்பற்றி விட்டது என்றும் செய்தி வெளியிட்டிருந்தன. அத்துடன் 1-4 முகாம் என்பது ஒரு குறிப்பிட்ட பெரும் பகுதியை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 59-3 பிரிகேட் தற்போது பழம்பெரும் தமிழ்க்; கிராமமான ஆண்டான்குளம் (மணலாறு) பகுதி நோக்கி காட்டினூடாக முன்னேறியுள்ளனர். படையினர் இப்பிரதேசங்களைக் கைப்பற்றி நித்திய குளத்திலிருந்து 9 கி.மீ.. தொலைவில் உள்ள குமுழ முனையை அடைந்து அங்கிருந்து நாயாறு, செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு வரை செல்வதே அவர்களது திட்டம் ஆனால் புலிகள் படையினரின் திட்டத்திற்கமைய நிச்சமமாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அது அவர்களது இதயப்பகுதி. இதனால் இங்கு மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் சொர்ணம் அவர்கள் தலமையில் முறியடிப்புத்தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன இம்ரான் பாண்டியன் படையணியும் இங்கு நிலைகொண்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார்ப் பகுதியில் குறிப்பாக மடு, அடம்பன் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி சில வெற்றிகளைப் பெற்றாலும். அடுத்த வரும் ஏ-32 வீதிக் களமுனைகளான பள்ளமடு, பாப்பாமோட்டை, ஆட்காட்டிவெளி, சாளம்பன், பெரிய விளான்குளம், ஆகிய பிரதேசங்கள் வெட்ட வெளிகளைக் கொண்டிருப்பதால் அது பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடியது. அதாவது இராணுவத்தின் முக்கிய இலக்கான பள்ளமடு, விடத்தல் தீவுக்கான நுழைவாயிலாக இருப்பதனால் பள்ளமடுவைக் கைப்பற்றினால் விடத்தல் தீவு இழப்புக்களின்றி இராணுவத்திடம் வீழ்ந்து விடும் ஆனால் பள்ளமடுவைக் கைப்பற்றுவதென்பது இலகுவான காரியம் அல்ல.

ஏனெனில் பாப்பாமோட்டையிலிருந்து பள்ளமடு நோக்கி நகர்ந்தாலும், அல்லது ஆண்டாங்குளத்திலிருந்து பள்ளமடு நோக்கி நகர்ந்தாலும், அல்லது ஆட்காட்டி வெளியிலிருந்து பள்ளமடு நோக்கி நகர்ந்தாலும் அடுத்து வருகின்ற நிலப்பிரதேசம் வெட்டவெளிகளும், சதுப்புநிலங்களுமாக இருப்பதனால் கவசப்படையானாலும் சரி தரைப்படையானாலும் சரி உச்சக்கட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தினாலும் பாரிய இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். எனவே இராணுவம் இதுவரை மேற்கொண்டுவந்த சிறு சிறு தாக்குதல்களைக் கைவிட்டு வெட்ட வெளி யுத்தத்திற்கு தயாராக தமது தாக்குதல் உத்தியை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இதற்காக யாழ்க்குடாநாட்டில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு கவசப்படையணியை மன்னாருக்கு நகர்த்தி தாக்குதலி;ல் ஈடுபடவும் அவர்களுக்கு உதவியாக விமானப்படையை களமிறக்கவும் படையினர் திட்டமிட்டிருந்த வேளை புலிகள் சிறுத்தீவு, மற்றும் நாகர் கோவில் பகுதிகளில் திடீரென தரையிறங்கித் தாக்குதல் நடத்தியதும், புலிகள் யாழ்க்குடாநாடு மீதான தரையிறக்கத் தாக்குதல்களை ஆரம்பிக்க இருக்கின்றனர். பேன்ற செய்திகளாலும். யாழ்க்குடா நாட்டிலிருந்து கவசப்படையணிகளின் ஒரு பகுதியை மன்னாருக்கு நகர்த்துவது இடை நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் மன்னாரில் படையினர் விமானத்தாக்குதல்கள். ஆட்லரி மற்றும் மோட்டார்த் தாக்குதல்கள் மூலம் ஏ-32 பாதையை நோக்கி முன்னகர்வை மேற்கொள்கின்றனர்.

ஆகவே இதன் மூலம் இவர்கள் விடத்தல் தீவை அடைவது தற்போது சாத்தியமாகாத விடயம். அத்துடன் விடத்தல் தீவை இராணுவம் கைப்பற்றினாலும் புலிகளின் தமிழகத்திற்கான தொடர்பு துண்டிக்கப்படமாட்டாது. ஏனெனில் விடத்தல் தீவிலும் விட சிறந்த படகுத் துறைகள் பூநகரி – மன்னார் கடற்பரப்பில் நிறையவே இருக்கின்றது. ஆகவே படைத்தரப்பு உடனடியாக இதைத்தடுத்தாக வேண்டும் என கருதுகின்றது. இதைத் தடுப்பதாக இருந்தால் வெள்ளாங்குளத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றும் அவர்களில் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே மன்னார் வெட்ட வெளிகளினூடாக நகர்ந்து விடத்தல் தீவை அடைந்து அங்கிருந்து வெள்ளாங்குளத்தை அடைவது உடனடியாகச் சாத்தியப்படாது. ஆகவே தான் வன்னிக் படைகளின் (57வது டிவிசன்) கட்டளைத்தளபதி மேஜர்.ஜெனரல் ஜெகத் டயஸ் அவர்கள் தாக்குதல் திட்டம் ஒன்றைத் தயாரித்து இராணுவத் தளபதி லெப்.ஜெனரல். சரத்பொன்சேகாவிடம் கையளித்து அவரது அனுமதியையும் பெற்றிருக்கின்றார். இந்த அடிப்படையிலேயே தற்போது படைகளும் வன்னிப் போர்முனையி;ல் பல முனைகளில் முன்னேற முயற்ச்சிக்கின்றது.

அதாவது வன்னித் தளபதி ஜெகத் டயஸ் அவர்கள் போட்ட திட்டம் இதுதான். ஏ-9 (வவுனியா), மற்றும் ஏ-32 (மன்னார்), வீதிகளுக்குச் சமாந்தாமாக மூன்று வீதிகள் செல்கின்றன. அதாவது முதலாவது வீதி பாலமோட்டை – நவ்வி - குஞ்சுக்குளம் - பாலைப்பாணி -வன்னிவிளாங்குளம் ஊடாக மாங்குளம் வரை செல்கின்றது. இரண்டாவது வீதி குஞ்சுக்குளம் - மூன்று முறிப்பு – இளமருதங்குளம் - பனங்காமம் - பாண்டியன்குளம் - கரும்புள்ளியான் - ஆகியவற்றினால் சென்று ஒட்டங்குளம் ஊடாக துணுக்காய் சென்று வெள்ளாங்குளத்தை (ஏ32) அடைகின்றது. இன்னொன்று பனங்காமம் - பாண்டியன்குளம் - வவுனிக்குளம் ஊடாக மல்லாவி - துணுக்காய், வரையும், மற்றொன்று வவுனிக்குளம் ஊடாக மாங்குளம் வரையும் செல்கின்றது.

மூன்றாவது வீதி பாலம்பிட்டி – நட்டாங்கண்டல் வரையான 12 கி.மீ.நீளமான தனிக்காட்டுப் பாதையாகச் செல்கின்றது. அங்கிருந்து பாண்டியன்குளம் சென்று துணுக்காய் - வெள்ளாங்குளம்., அல்லது வவுனிக்குளம் - மாங்குளம் ஆகிய பகுதிகளை அடையலாம். நான்காவது வீதி நட்டாங்கண்டலிலிருந்து சிறாட்டிகுளம் வழியாக கூராய் சென்று விடத்தல் தீவிலிருந்து 5 மைல் தொலைவில் உள்ள கள்ளியடியைச் சென்றடைகிறது. (12கி.மீ.) இராணுவம் இப்பாதையினூடாகச் சென்று கள்ளியடி, ஆத்திமோட்டை, இலுப்பைக்கடவை, விடத்த்ல் தீவு ஆகியவற்றைக் கைப்பற்றினால் கிட்டத்தட்ட 250 கி.மீ. பகுதி தம்வசம் வீழும் என இராணுவம் நம்புகின்றது. (இராணுவம் சிறாட்டிகுளத்தைக் கைப்பற்றிவிட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்தபோதும் படையினர் தற்போது சிராட்டிகுளம் நோக்கிய நகர்வை ஆரம்பித்துள்ளனர் என்பதே உண்மை.) ஆகவே இராணுவம் வன்னிக் களமுனையில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் களமுனையும் இதுவே.

அதாவது எப்பாடு பட்டாவது பனங்காமம் அல்லது பாண்டியன்குளம் என்னும் பிரதேசங்களை அடைந்து விட்டால் தங்கள் வசதிக்கேற்ப மாங்குளமா அல்லது வெள்ளாங்குளமா அல்லது கள்ளியடியா (விடத்தல்தீவு) என தீர்மானிக்க முடியும். அத்துடன் பனங்காமம் ஊடாக வெள்ளாங்குளம் வரை சென்றால் ஏ-32 வீதியில் கிட்டத்தட்ட 1000 கி.மீ. இற்கும் மேற்பட்ட பரப்பளவுடைய பிரதேசத்தை இழப்புக்களின்றி கைப்பற்ற முடியும். இராணுவம் வெள்ளாங்குளத்தை முற்றுகையிட்டால் புலிகள் விடத்தல் தீவு, ஆத்திமோட்டை, கள்ளியடி, இலுப்பைக்கடவை, ஆகிய பகுதிகளிலிருந்து தாமாகவே பின்வாங்கி விடுவர் அல்லது அவர்களை முற்றுகையிடலாம்.

ஒரு வேளை இது சாத்தியப்படா விட்டால். மாங்குளம் சென்று கிளிநொச்சிக்கான தமது பயணத்தை மேற்கொள்ளலாம் என்ற திட்டத்துடன் பனங்காமம் மீதான தாக்குதல்களை படைகள் ஆரம்பித்துள்ளன. இதுவரை பத்து தடவைகளுக்கு மேல் இராணுவம் முன்னேற முயற்ச்சித்துள்ளது. இந்நகர்வுகளை முறியடிக்க வன்னிப் போர்முனை ஒருங்கிணைப்புக் கட்டளைத் தளபதி கேணல் ஜெயம். அவர்கள் திட்டங்களை மேற்கொண்டிருப்பதாகவும், குஞ்சுக்குளம் மற்றும் பாலமோட்டைப்பகுதியில் சாள்ஸ் அன்ரனிப்படைத் துணைத்தளபதி அமுதாப் அவர்களின் தலமையில் சிறப்பு சாள்ஸ் அன்ரனிப்படையும் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்காப்படைகளின் எறிகணைகள் காரணமாக முல்லைத்தீவு மாந்தை கிழக்குப் பிரதேசத்திற்குட்பட்ட மூன்றுமுறிப்பு, பனங்காமம், பாண்டியன்குளம், சிறாட்டிகுளம், செல்வபுரம், நட்டாங்கண்டல், கரும்புள்ளியான் உள்ளிட்ட இடங்களிலிருந்து கிட்டத்தட்ட 10,000 ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து தென்னியங்குளம், புத்துவெட்டுவான், கோட்டைகட்டி, அம்பலப்பெருமாள், தேறாங்கண்டல், ஐயன்குளம், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் தங்கியுள்ளனர். தற்போது வவுனிக்குளம் வரை எறிகணைகள் வீழ்வதாகவும். இதனால் மக்கள் தமது ஜீவனோபாயத் தொழிலான விவசாயம் மற்றும் தோட்டத்தொழில்களை விட்டு இடம்பெயர்ந்து அல்லல் படுகின்றனர்.

இத்திட்டத்தை வன்னி இராணுவத் தளபதி தீட்டியதற்கும் ஒரு காரணம் உண்டு. ஜயசிக்குறூய், ரணகோச ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையணிகள் இதன்வழியாக நகர்ந்து பனங்காமம் காட்டுப்பகுதி வரை நகர்ந்திருந்தனர். காரணம் ஜயசிக்குறூய் ஆரம்பமான காலப்பகுதியிலே விடுதலைப் புலிகள் முக்கிய வீதிகளை மறித்தே முன்னரங்குகளை அமைத்தனர். ஆனால் தற்போது வங்கக்கடல் முதல் மன்னார்க்கடல் வரையான 120 மைல் நீளமான் பாதுகாப்பு வேலி அமைத்திருக்கின்றார்கள். எனவே இத்திட்டம் எவ்வளவு சாத்தியம் என்பது கேள்விக்குறியே.
ஒருவேளை இந்த முன்னரண்களை உடைத்து இராணுவம் உட்புகுந்தால் அதற்கு சற்றுப்பின் புதிய இராணுவ வேலியைப் புலிகள் அமைத்து விடுவார்கள் அத்துடன் பனங்காமம் பகுதி இயற்கையான காப்பரணாகவும் இருப்பது இராணுவத்திற்கு பாதகமானது.

அத்துடன் ரணகோச நடவடிக்கையில் ஈடுபட்ட படையணிகளும் பள்ளமடுவுக்கு வராமல் பனங்காமம் வரை முன்னேறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பனங்காமம் பகுதியை கைப்பற்றினாலும் நீண்ட நாட்களுக்கு அங்கு நிலைகொள்வது என்பது சாத்தியமாகுமா என்பது சந்தேகம். காரணம் புலிகள் எப்போது தற்காப்பு நிலையிலிருந்து தாக்குதல் நிலைக்கு மாறுகின்றார்களோ அன்று இராணுவத்தின் எல்லைகளிலும் முன்னரண்களிலும் ஒரு சடுதியான தலைகீழான மாற்றத்தினை ஏற்படுத்தும் அவ்வாறு ஏற்படுத்தும் போது இப்பிரதேசங்கள் இராணுவத்திடமிருந்து மீட்கப்படும்.

1ஆம், 2ஆம், கட்ட ஈழப்போரிலும் 3ஆம் கட்ட ஈழப்போரின் நடுப்பகுதி வரையும் காட்டுச்சண்டைகளில் புலிகள்தான் ராஜா ஆனால் 3ஆம் ஈழப்போரின் நடுப்பகுதியில் ஒரு மந்தநிலை ஏற்பட்டது என்பது உண்மை.. இதற்கு அமெரிக்க இராணுவத்தின் சிறு சிறு அணிகள் மூலம் சென்று தாக்கும் உத்தியை சிங்களப்படைகள் கையாண்டதே காரணம் இதன்மூலம் காட்டுச்சண்டையில் ஒரு சமநிலை ஏற்பட்டு இராணுவத்தின் கை சற்று ஓங்கியதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். காட்டுச்சண்டையில் யார் காட்டில் முதல் உட்புகுகின்றார்களோ அவர்களே வெற்றிபெறுகின்றார்கள். தற்போது இராணுவம் காட்டிற்குள் உட்புகுந்துள்ளது எனினும் புலிகளின் நிலைகளை ஊடறுத்துக் கொண்டு இராணுவம் வெள்ளாங்குளம் அல்லது மாங்குளம் வரை நகர்வது என்பது இயலாத காரியம்.

இராணுவம் நினைப்பது போன்றும் இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போன்றும் மன்னார் - பூநகரி வீதியைக் கைப்பற்றுவது என்பது என்றுமே முயற்கொம்பு. அதேபோல்தான் பூநகரித் தரையிறக்கமும் சாத்தியமாக முடியாத ஒன்று. அவ்வாறு தரையிறக்கினாலும் தற்போதைய இராணுவச் சமநிலையில் ஆளணி, மற்றும் படைக்கல சேதங்களை உண்டாக்கி தரையிறக்கும் படையினரையும் இராணுவம் இழக்கவேண்டிய நிலையே ஏற்படும். புலிகளும் இராணுவத்தின் தரையிறக்கத்தை எதிர்பார்த்திருப்பதாகவும். இங்கு இத்தரையிறக்கத்தை தடுக்க கடற்புலிகளின் பூநகரி பிராந்தியத் தளபதி பகலவன் அவர்களும். சிறப்புக் கொமாண்டோக்களின் தளபதியாக விக்கீஸ் அவர்களும் செயற்படுகின்றனர். அதேவேளை இராணுவம் கிளாலி முகமாலை ஊடாகவும் நகர்வுகளை ஆரம்பிக்க ஆயத்தமாகி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் இராணுவத்தின் முன்னோற்றம் என்பது பல சவால்களை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் ஏற்படுத்தப் போகின்றது என்பதே உண்மை. அது புலிகள் அடுத்து எடுக்கப் போகும் விஸ்பரூபங்களிலேயே தங்கியிருக்கின்றன.

அ.வன்னியன். லண்டன்

Comments