புலிகளை தனிமைப்படுத்தி வன்னியைக் கைப்பற்ற கனவு காணும் சிறிலங்கா அரசு: நா.உ. கஜேந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி வன்னியை கைப்பற்றலாம் என சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் கனவு காண்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று புதன்கிழமை (18.06.08) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிங்கள அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வன்னிப் பிரதேசத்தில் 400,000-க்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் சிங்கள அரசானது தனது இராணுவ நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக அங்கு வாழும் மக்களை பலியாக்கி வருகின்றது.

வன்னி மீது முழு அளவிலான பொருளாதாரத் தடை, மருந்துத் தடை, எரிபொருள் தடை என்பவற்றினை விதித்து மக்களை படுகொலை செய்வதற்கு முயற்சிக்கின்ற அதேவேளை, எரிபொருள் தடை மூலம் வன்னியில் மக்களின் பொதுப் போக்குவரத்துச் சேவைகள், விவசாய நடவடிக்கைகள் என்பவற்றினை முடக்குவதற்கும் மருத்துவமனை உள்ளிட்ட மிக முக்கிய நிறுவனங்களின் செயற்பாடுகளையும் முடக்குவதற்கும் முயற்சிக்கின்றது.

மறுபுறத்தில் புலிகளை அழிப்பதற்கான போர் என்ற போர்வையில் கடந்த 2 வருடங்களாக மன்னார், வவுனியா, மணலாறு, கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்களின் வாழ்விடங்களை நோக்கி தொடர்ச்சியான பல்குழல் மற்றும் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இதனால் மாந்தை கிழக்கு மற்றும் மடுப் பிரதேசங்களில் இருந்தும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், பாலைப்பாணி ஆகிய பிரதேசங்களில் இருந்தும் மேலும் பல கிராமங்களில் இருந்தும் வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணிப் பிரதேசத்தில் இருந்தும் அதனை அண்டிய பல கிராமங்களில் இருந்தும் மக்கள் இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக குடிசைகள் கூட இல்லாது மரங்களின் கீழும் வீதி ஓரங்களிலும் வாழும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உணவு மற்றும் உணவு அல்லாத நிவாரணங்களை வழங்குவதற்குக்கூட சிங்கள அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிவாரண உதவிகளையும் நிறுத்துவதற்கு அரசு மறைமுகமாக முயற்சிக்கின்றது.
அதேவேளை, வான் தாக்குதல்கள்- கிளைமோர்த் தாக்குதல்கள் என்பவற்றின் மூலம் பொதுமக்களை படுகொலை செய்து வரும் படைகள் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தினையும் தடைசெய்து வருகின்றது.

இவ்வாறு வன்னியில் வாழும் பொதுமக்கள் மீது தொடர்ச்சியான நெருக்குவாரங்களை கொடுத்து மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதன் மூலம் புலிகளை தனிமைப்படுத்தி வன்னியை இலகுவாக கைப்பற்றிவிட முடியும் என சிங்களப் படைகளும் அரசும் முயற்சிக்கின்றன.

தொடர்ந்தும் பொதுமக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர வைக்கப்படுவார்களாயின் அதன் எதிர்விளைவுகள் என்பது மிகவும் பாராதூரமானதாக கூட அமையலாம்.

வன்னியில் நிலமை இப்படி என்றால் வன்னிக்கு வெளியே சிங்கள படைகளின் ஆக்கிரமிப்பிற்குள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை போன்ற மாவட்டங்களிலும் தென்னிலங்கையிலும் வாழும் தமிழ் மக்கள் வெளியே சொல்ல முடியாத கொடூரங்களை நாளாந்தம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

நாளாந்தம் கடத்தல்கள், கொலைகள் சிங்கள இராணுவத்தினராலும் ஈபிடிபி என்னும் துணை இராணுவக் குழுவினராலும் பிள்ளையான் குழுவினராலும் மேற்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளன.

யாழ். குடாநாட்டில் மீன்பிடித் தடை காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளன.
திறந்த வெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள யாழ். குடாநாட்டில் 500,000-க்கும் அதிகமான மக்கள் கைதிகள் போன்றே நடாத்தப்படுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் குடாநாட்டில் இடம்பெறும்

கடத்தல்கள்
கொலைகள்
கொள்ளைகள்
பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள்
மீன்பிடித் தடை
விவசாயம் செய்யத்தடை
விளைபொருட்களை சந்தைப்படுத்த தடை

என்பவற்றுக்கு ஆதரவு வழங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி உறுப்பினர்களின் அட்டூழியத்தினை கட்டுப்படுத்த எவரும் இல்லை.

யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறை மாணவர்கள் தமது பாடவிதானத்துடன் தொடர்பான வகையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கைலாசபதி கலையரங்கில் அரங்கேற்றிய அரங்க நிகழ்வில் குடாநாட்டில் உள்ள படையினரது கெடுபிடிகளை அம்பலப்படுத்தும் சில குறியீடுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறி பல்கலைக்கழக நிர்வாகத்தினரை அழைத்து கடும் தொனியில் எச்சரித்ததுடன் இவ்வாறு செயற்படுபவர்களுக்கு NO MERCY என கொலை மிரட்டல் விடுத்ததன் மூலம் சாதாரான பொதுமக்களின் நிலை என்ன என்பதனை அனைவரும் உணர முடியும்.

வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இருந்து பல்வேறு பட்ட தேவைகளுக்காகவும் தென்னிலங்கைக்கு வரும் அல்லது தென்னிலங்கையில் உள்ள அரச, அரசசார்பற்ற நிறுவனங்களில் தொழில் புரிந்து வரும் தமிழர்கள் எந்தவித வேறுபாடுகளும் இன்றி கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

நாளாந்தம் பல நூற்றுக்கணக்கானவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற போர்வையில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். பலர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்படுகின்றனர்.

அண்மையில் மொறட்டுவப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலைத் தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பல தமிழ் மாணவ, மாணவிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டும் அவமானப்படுத்தப்பட்ட நிலையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிலர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

சிங்களப் படைகளாலும் துணைக் குழுக்களாலும்

கடந்த மாசி மாதம் 28 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் 29 பேர் கடத்தப்பட்டும் உள்ளதுடன் 253 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 19 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் 42 பேர் கடத்தப்பட்டும் உள்ளதுடன் 88 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 33 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் 21 பேர் கடத்தப்பட்டும் உள்ளனர்.

கடந்த மே மாதத்தில் மட்டும் 53 அப்பாவித் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டும் 54 பேர் கடத்தப்பட்டும் உள்ளனர்.

கடந்த வாரம் தம்புள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த தமிழ் பெண் மருத்துவர் ஒருவர், தமிழர் என்பதற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் தென்னிலங்கையில் உள்ள ஆசிரிய பயிற்சி கலாசாலைகளில் கல்வி பயிலும் பல மாணவர்களும் இவ்வாறு தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத்தினை ஒழித்தல் நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையானது கொழும்பில் இருந்தும் ஏனைய பகுதிகளில் இருந்தும் தமிழ் மக்களை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் சட்ட ரீதியான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையாகும்.

இவ்வாறான கைதுகள் இடம்பெறும்போது கைதானவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோருகின்றனர்.

ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களை அரசு கருத்தில் எடுப்பதாக இல்லை.

மாறாக தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காகவும் கைதுகள் சித்திரவதைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுபப்பினர்களான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், மாமனிதர் சிவநேசன், மாமனிதர் ரவிராஜ் போன்றோர் சிங்கள அரசினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தங்கியிருப்பதே பாதுகாப்பானது. அத்துடன் தென்னிலங்கைக்கு தமிழ் மக்கள் வருவதனை தவிர்த்துக் கொள்வதும் பொருத்தமானதாகும்.

இக்கொடுமைகள் தொடர தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து அனுமதிக்கக்கூடாது இராணுவத்தின் பிடியில் இருந்து விரைவாக தம்மை மீட்டெடுக்க வேண்டும் என்பதே இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் வாழும் மக்களின் விருப்பமாக உள்ளது.

ஜேர்மனியில் ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற போது சித்திரவதை முகாம்களுக்கும் நச்சுவாயுக் கூடங்களுக்கும் மக்கள் அனுப்பப்பட்டது போன்றதை ஒத்த நடவடிக்கையே இன்று இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அன்று ஜேர்மனியில் நடைபெற்ற அந்த கொடூரம் தமது நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக அதற்கு எதிராக கிளர்ந்து எழுந்த உலகம் அதே சம்பவங்கள் இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாத நாசிஸ்ட்டுக்களால் மேற்கொள்ளப்படும் போது அதனை உள்விவகாரம் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் கூறி பாராமுகமாக இருப்பது கொடுமையிலும் கொடுமையானது.

இவ்வாறான கொடூரங்களால் தமிழ் மக்கள் மரண பயத்தில் மௌனிகளாக உறைந்து போயுள்ள நிலையில் தமிழ் மக்களின் ஆழ்மன உணர்வுகளை புரிந்து கொள்ளாது,

95 வீதமான தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதனையே விரும்புகின்றனர் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

இக்கூற்று தமிழ் மக்களை பெரிதும் ஏமாற்றமும் கவலையும் அடையச் செய்துள்ளது.
இக்கருத்தின் ஊடாக தமிழ் மக்கள் உரிமைகள் ஏதுமற்றவர்களாக அனைத்திற்கும் சிங்களவர்களிடம் கையேந்தி வாழவேண்டும் என்று அமெரிக்கத் தூதுவர் விரும்புகின்றாரா என்ற சந்தேகத்தினையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக சிறு அளவில் பாகுபாடுகள் மட்டுமே காணப்படுகின்றது என்றும் மாறாக பாரதூரமான இனப் பிரச்சினை எதுவும் கிடையாது எனவும் வெளி உலகிற்கு காட்ட முயற்சிக்கும் சிங்களத் தரப்பிற்கு துணை நிற்கின்றாரா என்ற வினாவையும் எழுப்பியுள்ளது.

கடந்த வாரம் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஐபக்ச அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் மாத்திரமே பேச்சுவார்த்தை என்று கூறியுள்ளார்.

அரச தலைவரின் இக்கூற்றானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு முற்றிலும் எதிரானதாகவே உள்ளது.

இலங்கைத்தீவில் ஒன்றையாட்சி அரசியல் அமைப்பின் கீழ் ஐக்கிய இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்ற நிலையிலேயே 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழீழத் தனியரசை அமைத்துக் கொள்வதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.

இத்தீர்மானம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரும் அதன் பின்னரும் இடம்பெற்றறுள்ள வரலாற்று சம்பங்களின் அடிப்படையில் நோக்கும்போது
உள்ளுர் ஒப்பந்தங்கள்

1957 பண்டா - செல்வா உடன்படிக்கை, 1965 டட்லி - செல்வா உடன்படிக்கை இவை இரண்டும் உள்ளுரில் தமிழ் - சிங்களத் தலைவர்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட சில நாட்களில் சிங்கள அரசினாலேயே கிழிக்கப்பட்டது.
அனைத்துலக ஒப்பந்தம்

1987 ஆம் ஆண்டில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யாது விட்டாலும் தமிழ் மக்கள் மீது ஓர் தீர்வை திணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஓர் அனைத்துலக உடன்படிக்கையாகும்.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தினை 19 ஆண்டுகளின் பின்னர் சிங்கள அரசினால் ஒரு தலைபட்சமாக பிரிக்கப்பட்டது.

அனைத்துலக மத்தியஸ்தத்துடனான ஒப்பந்தம்
2002 ஆம் ஆண்டில் சிங்கள அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை குறிப்பாக அதில் ஒப்புக்கொள்ளப்பட்ட "சிரான்" கட்டமைப்பு இந்த உடன்படிக்கையும் ஒரு தலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டது.

2005 ஆம் ஆண்டு P-TOMS கட்டமைப்பானது அனைத்துலக நாடுகளின் அழுத்தத்துடனும் ஆலோசனையுடனும் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் உருவாக்கப்பட்டது.

இதுவும் சிங்கள அரசினால் ஒரு தலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்டது.
மேற்படி மூன்று வகையான ஒப்பந்தங்களும் ஒரு தலைப்பட்சமாக சிங்கள அரசாங்கங்களினால் கிழிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுபவங்களின் ஊடாக தமிழ் மக்கள் தமக்கு என ஓர் பாதுகாப்பு கட்டமைப்பு தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்வதற்காக தேவை என்றே கருதுகின்றனர்.

அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளிடம் உள்ள

கடற்படை
தரைப்படை
வான்படை

என்பன அங்கீகரிக்கப்பட்டு தமிழ் மக்களின் பாதுகாப்புக் கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் அரச தலைவரின் கருத்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றிலும் மறுப்பதாகவே உள்ளது.

அரச தலைவர் தனது நிலைப்பாட்டினை மாற்றி போரினை நிறுத்தி தமிழர் தாயகப் பிரதேசத்தில் இருந்து படைகளை வெளியேற்றி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை வழங்குவதன் மூலம் நிரந்தர சமாதானத்திற்கான புறச்சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இதுவே இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரே ஒரு வழியாகும்.

மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தலாம் அல்லது அழிக்கலாம்- அதன் மூலம் அமைதியை ஏற்படுத்தலாம் என யாராவது நினைத்தால் அது அவர்களின் தப்புக்கணக்காகவே அமையும்.

தமது பிராந்திய நலன்களுக்காக இலங்கைத் தீவில் அமைதி ஏற்பட வேண்டும் என விரும்பும் நாடுகள்

அதற்காக புலிகளை அழிப்பதற்கு தொடர்ந்தும் இராணுவத் தளபாடங்களையோ,

தொழில்நுட்ப உதவிகளையோ நிதி உதவிகளையோ அரசுக்கு வழங்குவதனை நிறுத்தி

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அங்கீகரிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை வழங்க சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

உலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வலியுறுத்தி பொங்கு தமிழ் நிகழ்வுகளை நாடாத்திக் கொண்டிருக்கும் நிலையில் அந்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை புரிந்து கொள்ளாது கனடா அரசானது உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பை தடை செய்தமை மிகுந்த ஏமாற்றத்தினையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கனேடிய அரசின் இம் முடிவானது மிகவும் தவறானதாகும். நீண்ட காலமாக கனடா அரசு தமிழர்களுக்கு விரோதமான போக்கினை கொண்டிருப்பது கவலையளிக்கின்றது.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் ஒரு போதும் இலங்கைத்தீவில் அiதியை ஏற்படுத்த முடியாது என்பதனை கனடா அரசு புரிந்து கொண்டு தனது அணுகு முறையை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.

இந்திய அரசு தொடர்ந்தும் மௌனமாக இருக்காது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவும் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தினை அங்கீகரிக்கவும் முன்வர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments