மீட்கப்படப் போகும் கிழக்கும் நிரூபிக்கப்படப் போகும் தேசியமும்

கிழக்கை முழுமையாக விடுதலைப் புலிகளின் கரங்களில் இருந்து மீட்டெடுத்து விட்டோம் என சிங்கள அரசு மேற்கொண்டு வந்த மித மிஞ்சிய பிரசாரங்களின் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது.

அண்மைக்காலமாக கிழக்கில் அதிகரித்து வரும் கரந்தடிப் பாணியிலான தாக்குதல்கள் அரச படைகளை மட்டுமன்றி கிழக்கில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, நிதிப்பிச்சை கேட்டு வரும் அரசாங்கத்தையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வருகின்றது.

கிழக்கின் அபிவிருத்தி என்ற போர்வையில் 1840 மில்லியன் டொலர்களை திரட்டி தனது யுத்தச் செலவீனத்தை ஈடுகட்ட முயற்சிகளை அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில் புலிகளின் தாக்குதல்கள் அரசின் நோக்கத்தைக் குழப்புவதாய் அமைந்திருக்கின்றன.

இம்மாதம் 17 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் வழங்கிய நேர்காணலில், புலிகளின் தாக்குதல்கள் தாயகப் பகுதிகளில் தீவிரமடையும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டுமன்றி, மே மாதம் 4 ஆம் திகதி வன்னியில் நடைபெற்ற ஜெயந்தன் படையணியின் 16 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரை நிகழ்த்திய படையணியின் சிறப்புத் தளபதியான கீர்த்தி, ஜெயந்தன் படையணி என்ன செய்யப்போகிறது என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு விரைவில் பதிலளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த இரண்டு தளபதிகளினதும் கூற்றுக்களின் யதார்த்தம் தென் தமிழீழத்தில் தற்போது அனைவராலும் உணரப்படும் விடயமாகியுள்ளது.

இதேவேளை, தமது கைப்பாவை அரசுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் அரசு, அவர்களை மட்டுமன்றி தாக்குதல்களில் இருந்து தம்மையும் சேர்த்துக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றது.

தற்போதைய நிலையில் கிழக்கில் நிலைகொண்டுள்ள புலிகள் எவ்வளவு தொகையில் உள்ளனர், அவர்களின் இலக்க என்ன என்பவற்றை அறிவதில் படைத்தரப்பு மட்டுமன்றி பொதுமக்களும் ஆர்வமாய் உள்ளனர்.

கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை முற்றாக விரட்டிவிட்டதாக அரசாங்கம் மார்தட்டிய வேளையில் கூட, அம்பாறை-கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றப்படவில்லை.

தளபதி கேணல் ராம் தலைமையிலான போராளிகள் அங்கு தொடர்ந்து நிலை கொண்டிருந்ததுடன், தென்னிலங்கையில் ஆழ ஊடுருவி பல அதிர்ச்சித் தாக்குதல்களையும் நடாத்தி வந்தனர்.

இது தவிர, அண்மையில் நடாத்தப்பட்ட மோசடித் தேர்தல் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் அணியொன்று கேணல் கீர்த்தியின் வழிநடத்தலில் திருமலை-பேராறு பகுதியில் தரையிறங்கி மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் ஊடுருவியதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், கிழக்கின் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் படையினரைவிட மேலதிகமாக படையினரைக் குவிக்கவேண்டிய நிலை படைத்தரப்பிற்கு ஏற்பட்டிருக்கிறது.

வேறு விதமாகச் சொல்வதானால், வடக்கில் விடுதலைப் புலிகள் மீதான முற்றுகைக்காக தான் நினைத்தவாறு கிழக்கில் நிலைகொண்டுள்ள படையினரை அனுப்பி வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது எனலாம்.

அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட 'நிச்சயமான வெற்றி" படை நடவடிக்கை வெற்றிபெறாது போனமை மற்றும் விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளை முற்றாக ஒரு கெரில்லா நடவடிக்கையாக மாற்றியமை ஆகியன கிழக்கில் தற்போது உக்கிரமடைந்து வரும் தாக்குதல்களுக்கு காரணம் என சிறிலங்கா படைதுறை தெரிவித்துள்ளது இந்தக் கருத்து புலிகளின் பலத்தை நிரூபிப்பதாகவே உள்ளது.

கிழக்கைப் பொறுத்த வரையில் பாதுகாப்பு தொடர்பான அரசு வெளியிடும் தகவல்கள் மெல்ல மெல்ல வலுவிழந்து வருவதுடன், நடைபெற்று முடிந்த தேர்தலைத் தொடர்ந்து அங்கு மேலும் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதனை ஊகிக்க முடிகிறது.

அத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னைநாள் தென் தமிழீழத் தளப் பிரதேசமான குடும்பிமலை காட்டுப்பகுதியில் அடிக்கடி சண்டைகள் நடைபெற்று வருவதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அதனை படைத்தரப்பு மறுத்தே வருகிறது.

அதேவேளை, முன்னர் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் மட்டக்களப்பு இருந்த வேளை இராணுவத்தினர் நிறுவியிருந்த சோதனைச் சாவடிகளான கிரான், வந்தாறுமூலை, சித்தாண்டி போன்ற இடங்களில் இருந்த சோதனைச் சாவடிகள் மீண்டும் முளைவிட்டுள்ளன.

இங்கே முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடும் பதிவுகளும் 'பாஸ்" நடைமுறைகளும் மீண்டும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

மட்டக்களப்பு-கல்முனை, மட்டக்களப்பு-வாழைச்சேனை வீதிகளில் மேலதிகமான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இராணுவத்தினரும் பொலிசாரும் சோதனைகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

அத்துடன் கிரான்குளம், தேற்றாத்தீவு போன்ற இடங்களில் மேலதிக முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரூபஸ்குளம், கஞ்சிகுடிச்சாறு, தங்க வேலாயுதபுரம், உடும்பன் குளம், சாந்திபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்னமும் அகதிகளாகவே உள்ளனர்.

இவர்களை மீளக் குடியேற அனுமதிக்காத விசேட அதிரடிப்படையினர் அவர்களது வீடுகளை உடைத்து அவற்றைக் கொண்டு முகாம்கள் அமைப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

படைத்தரப்பினால் முற்றுமுழுதாகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் மட்டக்களப்பு நகரப் பகுதிகளில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர், பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பொலிசாரும், பிள்ளையான் தரப்பினரும் பலியாகியுள்ளனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு மறுநாள் மே 11 ஆம் திகதி மட்டக்களப்பு அரசடிச் சந்தியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிசார் ஒருவர் கொல்லப்பட, மற்றவர் காயமுற்றார்.

சம்பவ இடத்திலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நாவற்குடாவில் 16 ஆம்; திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டார். நான்கு தினங்களின் பின்னர், 20 ஆம் திகதி அரசடியில் வைத்து இன்னொரு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதல்கள் புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவர்களாலேயே நடத்தப்பட்டதாகப் படைத்தரப்பு தெரிவிக்கிறது.

அதனைத் தொடர்ந்து காத்தான்குடியில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த முக்கியஸ்தர் சாந்தனும் அவரது சகாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அத்துடன் அம்பாறையிலும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

தேர்தலுக்கு முதல்நாள், மே 9 ஆம் திகதி, அம்பாறை நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு, 30 பேர் காயமுற்றிருந்தனர்.

இதனை வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெறும் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்களின் பதிலடியாக தென்பகுதியில் நடைபெறும் தாக்குதல்களின் ஒருபகுதியாகக் கொள்ளமுடியும்.

மே 20 ஆம் திகதி அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு ரூபஸ்குளத்தில் புலிகள் நடத்திய தாக்குதலில் விசேட அதிரடிப்படைச் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்தார் என படைத்தரப்பு தெரிவித்தது.

ஆனால், இந்தத் தாக்குதலில் ஒரு அதிரடிப்படைச் சிப்பாய் கொல்லப்பட்டு நால்வர் காயமுற்றதாக புலிகள் தெரிவித்தனர்.

தேர்தல் தினத்தன்று அம்பாறை பன்னலகம என்ற இடத்தில் புலிகள் நடத்திய எறிகணைத்தாக்குதல்களால் நான்கு பேர் காயமுற்றதுடன் வாக்களிப்பும் பாதிக்கப்பட்டது. 22 ஆம் திகதி அக்கரைப்பற்று ஊறணியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல்களில் அதிரடிப்படைச் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்தார்.

யூன் மாதம் 2 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி தென் எருவில்பற்று பிரதேச சபையின் உபதலைவர் ஐயாத்துரை புஸ்பநாதனும் அவரது மெய்ப்பாதுகாவலரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

5 ஆம் திகதி கல்லடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் காவலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே தினம் மட்டக்களப்பு ரெலிகொம் சந்திக்கருகில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்தார்.

இதேவேளை, திருமலையில் 7 ஆம் திகதி புல்மோட்டை 9 ஆம் மைல் கல் பிரதேசத்தில் பகல் வேளையில் கிளைமோர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இராணுவத் தளபதி ஒருவரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட இத்தாக்குதலில் அவர் மயிரிழையில் தப்பியதாகச் சொல்லப்பட்டது.

மறுபுறம், வாகரைக் காட்டுப் பிரதேசத்தில் 9 ஆம் திகதி சோதனை நடத்திய பொலிசார் கிளைமோர்கள் 43, மோட்டார் செல் 5, கைக்குண்டுகள் 25 உள்ளிட்ட வெடிபொருட்களை மீட்டதாக தகவல்கள் வெளியாகின.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பாலைக்குடியிருப்பில் 10 ஆம் திகதி காலை 7 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில் படையினருக்கு சேதம் ஏற்படவில்லை எனவும் பதில் தாக்குதலில் 3 புலிகள் கொல்லப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்தது.

15 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 2 பொலிசார் கொல்லப்பட்டனர்.

19 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதான வீதியில் உள்ள தரவைப் பிள்ளையார் கோயில் முன்பாக நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்த பொலிசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

22 ஆம் திகதி மட்டக்களப்பு களுதாவளையில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 2 விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர். இருவர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல் அதிகாலை வேளையில், வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்டிருந்தது.

திருமலை பாலத்தோப்பூரில் கடந்த 19 ஆம் திகதி விடுதலைப் புலிகள் மாறு வேடத்தில் ஊடுருவியுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறி சோதனையில் ஈடுபட்ட படையினர் தப்பிச் செல்ல முற்பட்ட புலிகளின் பிரதேச புலனாய்வுப் பொறுப்பாளர் தங்கன் என்பவரைச் சுட்டுக்கொன்றதாகவும் அவரிடமிருந்து பிஸ்ரல் ஒன்றை மீட்டதாகவும் தெரிவித்திருந்தது.

திருகோணமலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக படைத்தரப்பு கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. இதற்குச் சான்றாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பிந்திய ஒருவாரத்தில் 15 இற்கும் அதிகமானோர் படையினரால் கடத்தப்பட்டுள்ளமை,
மணிராசகுளம், குரங்குபாஞ்சான் பகுதி காடுகள் மீது படையினர் நடத்திய ஷெல் தாக்குதல்கள், திருமலைத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடற்படையின் விநியோகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை, கந்தளாயை அடுத்த சிற்றாறு, மீகஸ்கொடல்ல பகுதிகளில் நடந்த மோதல்கள் போன்றவற்றைக் கூறலாம்.

கிழக்கை முழுமையாகக் கைப்பற்றி விட்டதாகவும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு வி;ட்டதாகவும் அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கும் போது நடைபெற்று வரும் இந்தத் தாக்குதல்கள் அரசின் மீதான நம்பகத்தன்மையை தென்னிலங்கையில் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

கிழக்கில் இருந்து புலிகள் விலகிச் சென்று மீண்டும் அங்கு தாக்குதல் அணிகளை அனுப்பி வருவதானது படைத்தரப்பின்; திட்டங்களைத் தோற்கடிக்கும் நோக்கில் என்றே கொள்ள வேண்டும். 'புலிகளின் ஆட்பலம் குறைந்து வருகிறது. விரைவில் அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டு விடுவர்" என்ற இராணுவத் தளபதியின் கூற்று இந்த வகையில் பொய்யாகியுள்ளது. விடுதலைப் புலிகள் வன்னியில் தீவிர சமர்கள் நடந்து கொண்டிருக்கின்ற போது கிழக்கின் மீது மீண்டும் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருப்பதன் நோக்கம் என்ன என்ற கேள்வி இப்போது எழுகிறது.

புலிகளின் அண்மைய நடவடிக்கைகள் திருமலையிலிருந்து ஆரம்பித்து வாகரை, படுவான்கரை எனத் தொடர்கிறது. அம்பாறை ஏற்கனவே அவர்களின் செல்வாக்கு வளையத்திற்குள்ளேயே உள்ளது.

கிழக்கைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டதாக படைத்தரப்பு மார் தட்டிக்கொண்ட நிலையில் பிள்ளையான் குழுவின் துணை கொண்டு கிழக்கில் ஆட்சியை நடத்த நினைக்கும் அரசாங்கத்தை விடுதலைப் புலிகள் இனிமேல் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் என்றே தெரிகிறது.

அண்மைய தகவல்களின் படி கிழக்கில் உறங்குநிலைப் புலிகள் பெருமளவில் இருப்பதாகவும் அவர்கள் தாக்குதலுக்குத் தயாராகவே உள்ளனர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு கிழக்கில் நடைபெறும் தாக்குதல்கள் சிறந்த உதாரணமாகும்.

2004 ஆம் ஆண்டில் கருணாவின் பிரிவுக்குப்; பின்னர் புலிகள் இயக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கானோர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட பலர் தற்போது கிழக்கில் புலிகளுடன் இணைந்து வருவதாகவும், புலிகளின் செயற்பாடுகளுக்கு உதவி வருவதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அண்மையில் சந்தேகம் வெளியிட்டிருந்தது. அது மட்டுமன்றி தற்போது பிள்ளையான் குழுவில் செயற்பட்டுவரும் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் கூட 'நேரம்" வரும்போது புலிகள் பக்கம் தாவக்கூடும் என்கின்ற சந்தேகமும் படையினர் மத்தியில் உள்ளது.

ஆனால், ஜெயந்தன் படையணி மட்டக்களப்பில் தீவிரமாக இயங்கத் தொடங்கினால் மறைமுகமாகச் செயற்படும் உறங்குநிலைப் புலிகள் அவர்களுடன் இணைந்து கொள்ளலாம் அவ்வாறு இணைந்து கொண்டால் அவர்களது செயற்பாடு படையினருக்கு மிகவும் தலையிடி தருவதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

கிழக்குத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த பின்னர் அங்கிருந்து படையினரை வடக்கே நகர்த்தி புலிகளின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த அரசாங்கம் போட்டிருந்த திட்டம் புலகளின் காய் நகர்த்தல்களால் தவிடு பொடியாகிப் போகும் நிலை உருவாகியுள்ளது.

கிழக்கில் புலிகளின் தாக்குதல்களும் நடமாட்டங்களும் அதிகரித்திருக்கின்ற நிலையில் வடக்கு நோக்கிப் படையினரை நகர்த்துவது தற்கொலைக்க ஒப்பானதே.

விளைவைப் பற்றிக் கவலைப்படாமல், அரசு அத்தகைய விசப் பரீட்சையில் இறங்கி, வடக்கு நோக்கிப் படைகள் நகர்த்துமானால் 1995 இல் நடைபெற்றதே மீளவும் நடக்கும். அதாவது மோதல்கள், உயிரிழப்புகள் எதுவும் இல்லாமலேயே மட்டக்களப்பு புலிகள் வசம் ஆகும்.

எதிர்காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ள புலிகள் தமது தந்திரோபாய பின்வாங்கல் நிகழ்ச்சித் திட்டத்தின் அடுத்த கட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பதையே அண்மைய தாக்குதல்கள் வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

ஓட்டுமொத்தத்தில் அரச படையினருக்கு களைப்பையும், சலிப்பையும் கொடுப்பதுடன், பொருளாதாரத்தையும் சீரழிப்பது தான் விடுதலைப் புலிகளின் முதன்மை உத்திகளில் ஒன்றாக இப்போதுள்ளது.

கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றியமை அரசியல் மற்றும் ஆயுத ரீதியான நெருக்கடியை அரசாங்கத்துக்கு சற்றுத் தணித்திந்ததாகவே கணிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டுமானால் அரசியல் ரீதியாகவும் படையியல் ரீதியாகவும் புலிகளுக்கெதிரான ஒரு பலமான நிலையை அல்லது வியூகத்தை அங்கே வகுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்கையில் புலிகளின் படை நகர்த்தல் இராணுவத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் பெரும் இடியைக் கொடுத்திருக்கிறது.

கிழக்கை அரசியல் ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் தொடர்ந்து தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் அரசாங்கத்திற்கு ஜனநாயக மேலாடை ஒன்றைப் போட்டு மக்களை அதன் பக்கம் திசைதிருப்ப முடியாமல் போகும்.

பாதுகாப்பு ஏற்பாடு என்ற போர்வையில் ஆயுத பலத்தை தொடர்ந்து கிழக்கில் நிலை நிறுத்த படைத்தரப்பை அங்கே தொடர்ந்து தக்க வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. அவ்வாறான நிலையையே புலிகளும் எதிர்பார்க்கின்றனர்.

படைகளை கலைத்து பரப்பி வைத்திருப்பதானது ஸ்திரமான யுத்தத்திற்கு ஏற்றதாக இருக்காது அதற்காகவே புலிகள் கிழக்கில் இப்போது தாக்குதலை ஆரம்பித்து வைத்திருக்கின்றனர் என்றும் கொள்ள முடியும். இந்தத் தாக்குதல்கள் மீண்டும் கிழக்கை மீட்டுக் கொள்ளும் யுத்தத்தின் ஆரம்பமாகவே இருக்கின்றன என்றே கொள்ளமுடியும்.

விடுதலைப் புலிகளின் அதிகரித்துவரும் தாக்குதல்கள் விரைவில் உலகுக்கு வெளிப்படுத்தும் வெற்றிகள் பல ஒழிந்திருக்கின்றன. தாயக மீட்புப் போரில் தந்திரோபாயம், திட்டமிடல், தூரநோக்கு என்பவற்றுடன் செயற்படும் தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகளின் வெளிப்பாடு விரைவில் கிழக்கு மீட்கப்படுவதன் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப் படுத்தப்படும். புலிகளின் பலம் மீளவும் நிரூபிக்கப்படும்.

-இலட்சுமணன்-

Comments