தமிழகத்தோடு இரத்த சம்பந்தமுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் இந்தியா தலையிடக்கூடாது என்று புதுடில்லியிலேயே நின்று உத்தரவிடும் பாணியில் சிறிலங்கா அரசாங்க அமைச்சர் ரோகித போகல்லாகம கருத்து தெரிவித்துள்ளமையை தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் "தமிழோசை" நாளேடு சாடியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணியை பதிப்பாளராகக் கொண்டு வெளியாகும் "தமிழோசை" நாளேட்டின் இன்றைய பதிப்பின் (19.06.08) தலையங்கம்:
வாழ்வுரிமை மற்றும் சமத்துவக்குடியுரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைக் கோரிவரும் இலங்கைத் தமிழரை மிரட்டி அச்சுறுத்தி ஒடுக்கும் நோக்கத்துடன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈழத்தில் மனம் போன போக்கில் குண்டுகளை வீசி, கொடூரமான போரை ராஜபக்ச அரசின் படைகள் நடத்தி வருகின்றன.
ஏராளமான அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருவதோடு, வீடு வாசல்களை இழந்து, சொந்த மண்ணில் அநாதைகள் போலத் தவித்து நிற்கிறார்கள். தாய்த் தமிழகத்துத் தமிழினம் தனது அங்கமான ஈழத்தமிழர்கள் நசுக்கப்படுவது கண்டு சொல்லொனாத வேதனையில் துடிப்பதையொட்டி, இப்பிரச்சனையில் திட்டவட்டமான தீர்மானம் ஒன்றைத் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி டில்லிக்கு அனுப்பி வைத்தது.
முதல்வரே முன்னின்று கொண்டுவந்த இத்தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவை அளித்து, தங்களுடைய உள்ளக்குமுறலை வெளிப்படுத்தின.
"இலங்கையில் போரை உடனடியாக நிறுத்தவும், அடுத்து அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்யவும் ஈழப்பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்" என்று இத்தீர்மானம் டில்லிக்கு முறையீடு செய்தது. இதையடுத்து, அண்மையில் திருச்சிக்கு வந்திருந்த இலங்கைத் தமிழ் அமைச்சரும்- மலையக முன்னணித் தலைவருமான சந்திரசேகரன், "ஈழப்பிரச்சினையை ஒரு பார்வையாளரைப்போல இந்தியா அணுகாமல், இதில் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு வகை செய்ய நேரடியாகத் தலையிட வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதற்கான முழுத் தகுதியும் - உரிமையும் இந்தியாவுக்கே உண்டு" என்று கரிசனத்துடன் முறையீடு செய்திருக்கிறார்.
அதையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான பாலகுமாரனும் இதே பாணியில் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
"இலங்கை இனச்சிக்கலைத் தீர்க்க இந்தியா தலையிடுவது அத்தியாவசியம். தமிழ் ஈழம் அமைந்தால் அது இந்தியாவுக்கு எதிரானதாக இருக்காது" என்றும் நயந்த பாணியில் கூறியிருந்தார்.
இவ்வளவுக்கும் பிறகு, அண்மையில் டில்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கையும், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லகாம - இலங்கை இனப்பிரச்சினையில் தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருக்கிறார்.
இப்பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் -
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்க்காணலில் - இராஜதந்திர நெறிமுறைகளைப் பற்றி கவலைப்படாமலும், மேட்டிமையான பாணியிலும்
இப்பிரச்சினை குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து எவரையும் துணுக்குறச் செய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது.
"இலங்கை இனச்சிக்கலில் இந்தியா தலையிடக்கூடாது. அவ்வாறு தலையிடுவதை இலங்கை அரசு அனுமதிக்காது" என்றும் கூறியிருக்கிறார்! அந்த அளவில் நின்றுகொள்ளாமல்,
"இனச்சிக்கல் என்பது எங்களின் உள்நாட்டு விவகாரமாகும். இதில் இந்தியா தலையிடுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம். எங்களுடைய இந்த நிலையை இந்தியாவும் உணர்ந்துள்ளது. அதனால்தான், இந்தியாவிடமிருந்து இப்பிரச்சனையில் இதுவரை எந்தவிதமான வற்புறுத்தலும் எங்களுக்கு வரவில்லை" என்று இறுமாந்த நிலையில் கூறியிருக்கிறார்.
அரசியல் ரீதியாக ஈழத்தமிழர் இலங்கையின் குடிமக்களே.
அதுமட்டுமல்ல - அவர்கள் அத்தீவின் ஆதி குடிமக்களும் கூட.
அதே சமயத்தில், தாய்த் தமிழினத்துடன் இரத்த சம்பந்தமுடையவர்கள்.
அவர்கள் நசுக்கப்படுவது கண்டு தாய்த்தமிழகம் கொதித்திருக்கிறது.
தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இப்பிரச்சினையில் ஈழத்தமிழர்கள் சார்பாக தலையிட வேண்டிய பொறுப்பிலிருந்து இந்திய அரசு தப்பிக்க முடியாது.
உண்மைநிலை இப்படியிருக்க - "ஈழத் தமிழர் எங்கள் நாட்டுக் குடிமக்கள். அவர்களை எங்கள் அரசு எதுவும் செய்யும். அதைக்கேட்க இந்தியா யார்?" என்பதே இலங்கை அமைச்சரின் தொனியாகத் தோற்றமளிக்கிறது!
அப்படியென்றால்,
ஈழப்பிரச்சனையில் கடந்த ஒன்பது ஆண்டுக்கும் மேலாக இந்திய அரசு கடைப்பிடித்து வரும் -
அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசியக்கொள்கை என்னவாயிற்று?
அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசியக்கொள்கை என்னவாயிற்று?
"சமத்துவக் குடியுரிமை - வாழ்வுரிமை - மொழி மற்றும் கலாசாரப் பாதுகாப்புரிமை போன்றவற்றோடு சுயமரியாதையுடன் ஈழத்தமிழர் வாழ்வதற்கு வகைசெய்யும் விதத்தில், கூட்டாட்சி அடிப்படையில் ஈழத்தமிழர் பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படவேண்டும்" என்பதே அந்த தேசியக் கொள்கையாகும்.
இக்கொள்கையை இலங்கை அரசிடம் வற்புறுத்திக் கூற வேண்டிய தார்மீகக் கடைமையை இந்தியா எப்படித் தட்டிக்கழிக்க முடியும்?
அதிலும் குறிப்பாக, பிரதமரைச் சந்தித்துப் பேசியபிறகு டில்லியிலேயே, "இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிடக்கூடாது" என்று உத்தரவிடும் பாணியில் பேசக்கூடிய தைரியம் இலங்கை அமைச்சருக்கு வந்திருப்பதைக் கண்டு தமிழகம் குமுறுகிறது.
இலங்கைத் தமிழருக்கு நீதி கிடைக்குமாறு செய்வதில் இந்திய அரசுக்கு நிச்சயம் பங்குண்டு.
ஏனெனில், இதில் தாய்த் தமிழகம் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கின்றது. இந்தக் கவலையை டில்லி உணர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், தமிழகத்தையும்- தமிழர்களையும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இந்திய அரசு கருதவில்லைப் போலும் என்ற விரக்தி தமிழ் மக்களிடையே எழுவது தவிர்க்கமுடியாதது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments