பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உருவாக்கிய பூநகரிப் படையணிப் போராளிகளுக்கு மதிப்பளிப்பு

மன்னார், மணலாறு களமுனைகளில் சிறப்பாக செயற்பட்டமைக்காக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உருவாக்கிய பூநகரிப் படையணியின் போராளிகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தளபதி கீதன் தலைமை வகித்தார்.

நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை சோதியாப் படையணி சிறப்புத் தளபதி கேணல் துர்க்கா ஏற்றினார்.


தமிழீழத் தேசியக் கொடியினை வடபோர் முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் ஏற்றினார். மாவீரர் பொது திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரினை தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி ஏற்றி மலர்மாலை சூட்டினார்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு துணைவியார் இசைச்செல்வி ஈகைச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார்.

பிரிகேடியர் பால்ராஜின் திருவுருவப்படத்திற்கு படையப் புலனாய்வு சிறப்புத் தளபதி ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டினார்.

பூநகரிப் படையணியில் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் ஈகைச் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

இந்நிகழ்வில் மன்னார் கட்டளைத் தளபதி கேணல் பானு ஆற்றிய மதிப்பளிப்பு உரை:
ஒரு படையணியின் செயற்பாடு என்பது அதன் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது.

தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணி திறம்படச் செயற்பட்டு வருகின்றது.

மன்னார் களமுனையில் பூநகரிப் படையணி சிறப்பாக செயற்பட்டிருக்கின்றது. எதிரியின் முன்னேற்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதில் பூநகரிப் படையணியின் செயற்பாடு பாராட்டுக்குரியது.

எதிரியின் பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எமது போராளிகளால் முறியடிக்கப்பட்டிருக்கின்றது.

பெருமளவில் எதிரிகளை நாம் களமுனையில் இருந்து அகற்றியிருக்கின்றோம். எமது போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர்.


போர்க்களங்களில் இழப்புக்களில் இருந்தே பட்டறிவையும் வெற்றிகளையும் அடைகின்றோம்.

தமிழர்களைப் பொறுத்த வரை போரியல் வெற்றிகள் மூலமே பல மாற்றங்களை உருவாக்க முடியும். அதனை நாம் உறுதிப்படுத்தி வருகின்றோம் என்றார் அவர்.

வடபோர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் மதிப்பளிப்பு உரையாற்றினார்.

மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளில் சிறப்பாக செயற்பட்ட போராளிகளுக்கு பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.

பரிசில்களையும் சான்றிதழ்களையும் கேணல் பானு, கேணல் தீபன், சோதியா படையணிச் சிறப்புத்தளபதி கேணல் துர்க்கா மற்றும் படையப் புலனாய்வுத்துறை சிறப்புத் தளபதி, தமிழீழ அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர், மருத்துவப்பிரிவு பொறுப்பாளர் மாறன், மருத்துவப் பிரிவு துணைப்பொறுப்பாளர் மனோச், போர்ப்பயிற்சி மகனார் பொறுப்பாளர் வீரப்பன், போர்ப் பயிற்சி மகளிர் பொறுப்பாளர் அஜந்தி, தளபதி வீமன், பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் துணைவியார் இசைச்செல்வி ஆகியோர் வழங்கி மதிப்பளித்தனர்.
படையணிப் போராளிகளுக்கு போர்ப்பயிற்சி வழங்கி வலுவூட்டிய போர்ப்பயிற்சி ஆசிரியர்களான வீரப்பன், அஜந்தி ஆகியோருக்கு பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் பரிசில்கள் வழங்கி மதிப்பளித்தார்.

பின்னர் கொள்கை முன்னெடுப்புப் பிரிவினரின் நாடகம், லெப். கேணல் நவம் அறிவுக்கூடப் போராளிகளின் நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றன.



Comments