தமிழர் போராட்ட ஆதரவு நிலையை மாசுபடுத்தும் கனடிய, இத்தாலிய அரசுகளின் நடவடிக்கைகள்: ரவி

தமிழர் போராட்ட ஆதரவு நிலையை மாசுபடுத்தும் வகையில் கனடிய, இத்தாலிய அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியரும், வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளருமான சு.ரவி தெரிவித்துள்ளார்.

சுவிசிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (27.06.08) வெளிவந்த மாதம் இருமுறை "நிலவரம்" ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல்:

அனைத்துலக சமூகம் தமிழர்களின் போராட்டத்தன்மையை அறிந்து வைத்திருப்பதாக அடிக்கடி புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் நீங்கள் ஒரு கருத்தினைக் கூறி வருகின்றீர்கள். அப்படியானால் இத்தாலி கைதும் கனடாவின் தடை முயற்சியும் உங்கள் கருத்தில் எந்த வகையில் இவற்றினை நியாயப்படுத்துகின்றது?

இத்தாலி கைதுகளும்- கனடிய அரசின் நடவடிக்கையும் தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய துரதிர்ஸ்ட சம்பவங்களாகும்.

இவை சிங்கள அரசை மகிழ்சிக்குள்ளாக்கியுள்ளன என்பதும் உண்மைதான்.

ஆனாலும் சிங்கள அரசு ஒரு அடக்குமுறை அரசு என்ற உண்மை சமீப காலமாக, உலக சமூகத்தின் மத்தியில் அம்பலமாகி வருகின்றது.

சிங்களப்படைகளின் மனித உரிமை மீறல் செயற்பாடுகளை ஏறக்குறைய எல்லா மனித உரிமை அமைப்புக்களும்- தொண்டு நிறுவனங்களும் கண்டித்து- சிங்கள அரசைக் குற்றம்சாட்டி வருகின்றன.

குற்றம் சாட்டல்- கண்டன அறிக்கை விடல் என்பதற்கும் அப்பால் சிங்கள அரசு மீது அழுத்தம் போடல்- எச்சரிக்கை விடல் என்றவாறாக உலக சமூகத்தின் அரசியல் செயற்பாடு முன்னேற்றமடைகின்றது.

சிறிலங்காவுக்கான உதவி நிதிகளை முடக்கல்- வாக்களிக்கப்பட்ட கடன் உதவிகளை இரத்துச் செய்தல் என்று பொருண்மிய ரீதியிலும் சிங்கள அரசுக்கு எதிரான நகர்வுகளை மேலைத்தேய நாடுகள் எடுத்து வருகின்றன.

சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதிக்கான வரிச்சலுகைகளை நிறுத்தப்போவதாக ஜரோப்பிய யூனியன் விடுத்து வரும் எச்சரிக்கைகள் மற்றும் தனது தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலை தொடர்பான விசாரனைகளை அனைத்துலக நீதிமன்றம் நடாத்த வேண்டும் என்ற பிரான்ஸ் நாட்டின் கருத்தும் சிங்கள அரசின் அரச பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் விடயங்களாக வளர்ந்து வருகின்றன என்பதையும் எவரும் மறக்க முடியாது.

தமிழ் மக்கள் மீது ஒரு இன அழிப்புப்போரை சிங்கள அரசு நீண்டகாலமாக நடாத்தி வருகின்றது.

எனினும் என்றும் இல்லாத அளவுக்கு இப்போது தான் சிங்கள அரசு ஒரு அடக்குமுறை அரசாக உலக சமூகத்தின் முன்னால் அம்பலப்பட்டு வருகின்றது.

இது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குச் சாதகமான ஒரு அரசியற் சூழலை உலக அரங்கில் உருவாக்கும் தன்மை கொண்டது.

தமிழினம் இன ரீதியாக சிங்களப் படைகளால் கொல்லப்படுகின்றனர். துன்புறுத்தப்படுகின்றனர்.

இவ்விதமான பாதகச்செயல்களைப் புரிபவர்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் சிங்கள அரசால் எடுக்கப்படுவதில்லை சிங்கள அரசே இக்கொலைகாரர்களைப் பாதுகாக்கின்றது.

சிங்கள அரசே இப்படுகொலைகளின் சூத்திரதாரிகளாக இருக்கின்றது என்ற உண்மைகளை இப்போது உலக சமூகம் கண்டு வருகின்றது.

இத்தகைய இன ரீதியான படுகொலைகளுக்கு எதிராகப் போராட தமிழினத்திற்கு உரிமை உண்டு என்று உலகம் வெளிப்படையாகச் சொல்லாது விட்டாலும், தமிழரின் போராட்ட நியாயத்தை அவை படிப்படியாக புரிந்து கொண்டு வருகின்றன என்று கூறுவது மிகையல்ல.

இத்தாலி கைதுகளும்- கனடா தடை முயற்சியும் இந்தப் புதிய சூழலை மாசுபடுத்துகின்ற நடவடிக்கைகளாகவே கருத வேண்டியுள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசிய ஊடகங்களை தடை செய்யும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகின்றது. ஊடகவியலாளர் என்கிற வகையில் இது குறித்து உங்கள் கருத்து என்ன?

சிங்கள அரசு செய்யும் தமிழினப் படுகொலை விடயங்களை இந்தத் தமிழ்த் தேசிய ஊடகங்களே உலக நாடுகள் மத்தியில் பரப்புரை செய்கின்றன. ஒளிப்படங்கள்- செய்திகள் மூலமாக இந்த ஊடகங்கள் சிங்கள அரசுக்கு எதிரான நிரூபணங்களை சமர்ப்பித்து உலகிற்கு உண்மையை உரைத்து வருகின்றன.

இந்தத் தமிழ்த் தேசிய ஊடகங்களிடமிருந்து இத்தகைய ஆவணங்களைப் பெற்று உலக ஊடகங்களும் செய்தி வெளியிடுவதால் சிங்கள அரசின் இன அழிப்புச் செயல் உலக நாடுகளில் அம்பலமாகி வருகின்றது.

இதனால் சிங்களப் பேரினவாதிகளின் சீற்றம் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்கள் மீது திரும்பியுள்ளது.

தனக்குச்சார்பான ஒன்று- இரண்டு நாடுகளில் தமிழ்த் தேசிய ஊடகங்களைத் தடைசெய்து இந்த நடவடிக்கையைத் தொடக்கி வைக்க சிங்கள இராஜதந்திரிகள் பெருமுயற்சி எடுக்கின்றனர்.

இதை முளையிலேயே கிள்ளி எறியும் விழிப்புணர்வுடன் புலம்பெயர் ஊடகவியலாளர்கள் இருக்கவேண்டும். சட்டங்களையும்- ஊடக உலகின் ஆதரவையும் பயன்படுத்தி சிங்கள அரசின் முயற்சியை முறியடிக்க புலத்தில் உள்ள தமிழ்த் தேசிய ஊடகங்கள் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

பொங்கு தமிழின் ஊடாக தமிழின களமுனை போர்க்கோலம் பூண்டிருப்பதாக கூறப்படுகின்றது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

புலம்பெயர் தமிழர்களின் எழுச்சிப் போராட்டங்கள் தாயக மக்களை உற்சாகப்படுத்தியுள்ளன. தாயகமானாலும் சரி புலமானாலும் சரி எமது மக்களின் எழுச்சியும்- உற்சாகமும் எமது வீரர்களுக்கு உத்வேகமூட்டக்கூடியன. புலம்பெயர் மக்களின் பொங்கு தமிழ் எழுச்சியும் எமது வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

உலகம் பூராகவும் நடைபெறும் பொங்கு தமிழ் குறித்தும் அந்நிகழ்வின் ஊடாக தாயகம் எதனை எதிர்பார்க்கின்றது எனக்கூற முடியுமா?

புலம்பெயர் தமிழர்களின் விடுதலை உணர்வை பொங்கு தமிழ் நிகழ்வுகள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது. அந்தந்த நாட்டு மக்களும் எமது விடுதலைப் போராட்டத்தைப்பற்றியும்- புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமை உணர்வு பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களிடம் வலுப்பெற்று வரும் தமிழ்த் தேசிய உணர்வு கண்டு தமிழீழ தேசபக்தர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

புலம்பெயர் மக்களின் ஒற்றுமை உணர்வும் ஒருமித்த உழைப்பும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் என்பது திண்ணம். பொங்கு தமிழ் வாயிலாக இந்தத்தேசிய உணர்வுகள் வளர்த்து எடுக்கப்படுவது மகிழ்ச்சியும்- நம்பிக்கையும் அளிக்கின்றன.

தாயகத்தில் நடைபெற்ற பொங்கு தமிழை பார்த்தவர் நீங்கள். அந்நோக்கத்தினை அடையாளப்படுத்தி புலம்பெயர் தமிழர்களின் பொங்கு தமிழ் முன்னெடுக்கப்படுகின்றது எனக்கருதுகின்றீர்களா?

சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பிற்குள் இருந்த எமது தாயக மக்களின் தன்னெழுச்சிப் போராட்ட வடிவமாக பொங்கு தமிழ் பிறப்பெடுத்திருந்தது.

பலஸ்தீனத்தின் Inti Fada வுக்கு நிகரான வகையில் பொங்கு தமிழின் போது மக்கள் உணர்வெழுச்சி காட்டியிருந்தனர். பொங்கு தமிழ் நிகழ்வுகள் மக்களை எழுச்சி கொள்ளவைத்ததுடன் சிங்களப் படையினரையும் அச்சத்திற்குள்ளாக்கியும் இருந்தன.

தாயகத்தில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வு என்பது மக்களின் தேசிய எழுச்சியின் ஒரு வடிவமாகவே இருந்தது.

இதை அடியொற்றி புலம்பெயர் தமிழர்களும் தாம் வதியும் நாடுகளில் பொங்கு தமிழ் நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.

புலம்பெயர் வாழ்விலும் எமது மக்கள் காட்டிவரும் தேசிய எழுச்சி எமது விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் பலத்தை சேர்த்துள்ளது. புலம்பெயர்ந்தாலும் மக்களின் தேசப்பற்று இடம்பெயரவில்லை என்பது கண்டு தமிழீழத் தேச பக்தர்கள் புளகாங்கிதமடைகின்றனர்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பொங்கு தமிழ் காலகட்டம், தமிழர்களுக்கான விடுதலைக்கான காலகட்டம் என்றே எண்ணுகின்றனர். உண்மையில் அந்நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தாயக மண்ணிலிருந்து எமது புலம்பெயர் மக்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளனவா?

ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு கால வரையறைகள் கூறுவது பொருத்தப்பாடாக இருக்காது. "அடுத்த வருடத்தின் பாஸ்ரா (யூத மதப்) பண்டிகையை ஜெரூசலத்தில் கொண்டாடுவோம்" என்ற யூத மக்களின் உறுதிப்பிரமாணம் ஒருவருடத்தில் அல்லது ஒருசில வருடங்களில் நிறைவேறவில்லை.

இந்த உறுதிப்பிரமாணத்தை யூதர்கள் பல தசாப்தங்களாகக் கூறிவந்தனர். ஒருநாள் அது நிறைவேறியது. இங்கே நம்பிக்கைதான் யூதர்களின் விடுதலை உணர்வின் அத்திவாரமாக இருந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது தமிழீழத் தனியரசை அமைத்து வெற்றியில் முடியும் என்பது திண்ணம். வெற்றிக்கான சமிக்கைகள் ஏராளம் உள்ளன.

இலட்சிய உறுதி கொண்ட ஆற்றல்மிக்க தலைவர்- இந்த தலைவரின் வழிநடத்தலில் பெருகிவரும் ஓர்மம் கொண்ட ஒருபடை- தேசப்பற்றுமிக்க மக்கள் இவை எல்லாம் ஒன்றிணைந்து வெற்றியை விரைவாக்கும் என்பது நிச்சயம்.

நிலவரம் பத்திரிகையின் ஊடாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு நீங்கள் கூறவிரும்பும் செய்தி என்ன?

இன ஒடுக்குமுறையின் விளைவாகத் தாயகத்தை விட்டு தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து உலகம் எங்கும் சிதறுவது சிங்களப் பேரினவாதத்தின் அரசியற் குறிக்கோளுக்கு உதவக்கூடியது என்றே சிங்கள ஆளும் வர்க்கம் நம்பியது.

ஆனால் பேரினவாதிகளின் எதிர்பார்ப்பைத் தோற்கடிக்கும் வகையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு தலைமையின் கீழ் ஒன்று திரண்டார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பின்பலமாக இருந்து வலுவூட்டி வருகின்றார்கள்.

எரித்திரிய விடுதலைப் போராட்டத்திற்கு இருந்ததைப் போன்று புலம்பெயர் மக்களின் பெரும்பங்களிப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் கிடைத்து வருகின்றது.

அனைத்துலக நாடுகள் மத்தியில் குறிப்பாக மேற்குலக நாடுகள் மத்தியில் சிங்கள அரசு தற்போது கீர்த்தி இழந்து வருகின்றது. இதை எமது விடுதலைப் போராட்டத்திற்கான அரசியற் பலத்தை உலக நாடுகள் மத்தியில் பெருக்கிக்கொள்ளும் வாய்ப்பாக நாம் பயன்படுத்த வேண்டும்.

இந்த வரலாற்றுப் பணியைச் செய்ய வேண்டிய தேசியக்கடமை புலம்பெயர் மக்களிடமே உள்ளது. என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இங்கே தொடர்பு மொழி என்பது மிகமிக முக்கியமாகின்றது. அந்த அந்த நாட்டு மக்களின் மொழிகள் ஊடாக எதிரியின் இன அழிப்புக் கொள்கையும்- எமது போராட்டத்தின் நியாயப்பாடுகளும் உணர்த்தப்பட வேண்டியது அவசியம்.

புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் கல்விமான்கள் இதற்காகத் திட்டமிட்டு உழைக்க வேண்டும். புலத்தில் பிறந்த எமது இளைய சந்ததிகள் இதற்கேற்ற சிறந்த தொடர்பாளர்களாகச் செயற்படும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களது போராட்டப்பங்களிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.

இவை சாத்தியமானால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் நியாயப்பாடுகளுக்கு அருகே கணிசமான நாடுகளை கொண்டுவர முடியும்.

இதேசமயம், தற்போதைய பங்களிப்புகள் போதும் என்ற திருப்தி மனநிலையைப்பெற்று நிம்மதி அடையக்கூடாது. எமது பணிகளை- பங்களிப்புக்களை எவ்வாறு பெருக்கலாம் மற்றவர்களையும் எவ்வாறு பங்காளர்களாக மாற்றலாம் என்ற சிந்தனையை விடுதலையை விரைவாக்கும் இது புலம்பெயர் மக்களுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் பொருந்தும்.


Comments