(2ம் இணைப்பு)வரலாறு படைத்துள்ள கனடிய பொங்கு தமிழ் நிகழ்வு: ஒரு லட்சம் பேர் எழுச்சியுடன் பங்கேற்பு

சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்று வராலாறு படைத்திருக்கும் கனடா பொங்கு தமிழ் நிகழ்வு இன்று சனிக்கிழமை மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று முடிந்துள்ளது.

"பொங்கி எழுந்து வாடா தமிழா", "தளத்தில் இருந்து புலங்கள் வரை செய்தி சொல்லடா தமிழா" என்ற தமிழர் உணர்வைத் தாங்கியவர்களாக கனடா வாழ் தமிழர்கள் ரொறன்ரோவின் டவுன்வியூ பூங்கா திடலில் உறுதிப்பூக்களின் ஜூலை 5 ஆம் நாளில் அணிதிரண்டனர்.

தமிழர் தேசிய நிறமான மஞ்சள், சிவப்பு நிறங்களில் கொடிகளைத் தாங்கியவாறு பெருந்தொகையான மக்கள் கடல் அலை எனத் திரண்டனர்.

இதுவரை இப்படியொரு எண்ணிக்கையில் கூடினோமா என அனைவரும் கேட்கும் வகையில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடி பொங்கு தமிழ் எழுச்சியை வெளிப்படுத்தினர்.

சிறுவர் முதல் முதியோர் வரை, "நாம் தமிழ்" என்ற உணர்வைத் தாங்கியவர்களாக, பிற்பகலில் இருந்தே பொங்கு தமிழ் பெருந்திடலில் கூடினர்.


பெரும் எண்ணிக்கையில் வருவோர், திடலை சென்றடையும் வகையில் "முன்கூட்டியே வாருங்கள்" என்ற அழைப்பை ஏற்று, "முழுநாளையுமே பொங்கு தமிழுக்கு ஒதுக்குவோம்" என சபதம் எடுத்தவர்களாக மக்கள் வந்தனர்.

தேசியத்தின் எழுச்சியை வெளிப்படுத்த எவ்வாறெல்லாம் மஞ்சள், சிவப்பாக மாற முடியுமோ அவ்வாறெல்லாம் மக்கள் மாறி வந்திருந்தனர்.

மக்களின் எழுச்சியினாலும், வருகையினாலும் ரொறன்ரோவின் வீதிகள் எல்லாம் விழி பிதுங்கின என்றால் மிகையாகாது.

மக்கள் எழுச்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில், அனைத்து தமிழர் நிறுவனங்களும், தமது செயற்பாடுகளை முடக்கத்திற்கு கொண்டு வந்து தாம் இன்று மூடியிருப்போம் என மக்களுக்கு முன்கூட்டியோ அறிவித்தது மட்டுமன்றி, மக்களுக்கு வசதியாக போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தனர்.

தமிழர் ஒலி, ஒளிபரப்பு ஊடகங்களும், மக்களின் உணர்வுகளைத் தாங்கியவர்களாக பொங்கு தமிழ் சிறப்பு ஒலி, ஒளிபரப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொண்டன.

தமிழ் மக்கள் மீது கனடிய அரசு சமீபத்தில் மேற்கொண்ட தவறான முடிவுகளினால் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களின் மத்தியிலும் தாம் தவறான நடவடிக்கைகளுக்கு அடிபணிந்து போய்விட மாட்டோம், மக்கள் உரிமைக்காப்பில் முதன்மையானவர்களாக எப்போதும் அமைவோம் என்பதை கனடியத் தமிழர்கள் இன்றைய பொங்கு தமிழ் நிகழ்வு மூலம் ஆணித்தரமாக வெளிப்படுத்தினர் எனலாம்.

பிற்பகல் 3:00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றியதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் தொடங்கிய நிகழ்வில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் தாயார் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க, மக்கள் அகவணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து, எழுச்சி இசைகளை கலைஞர்களால் இசைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த கலாநிதி பிறையன் செனிவிரட்ன உரையாற்றினார்.

அவர் தனது உரையில், "தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் நியாத்தையும், அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தையும் வெளிப்படுத்தியதோடு தமிழர்கள் வெல்வார்கள்" என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார்.

கனடிய பிரமுகர்கள், தமிழ்ப் பிரமுகர்களின் பேச்சுக்கள், எழுச்சி நடனங்கள் எனத் தொடர்ந்த நிகழ்வின் இறுதியில் மக்கள் அனைவரும் பொங்குதமிழ் எழுச்சிப்பிரகடனத்தை எடுத்தனர்.

பொங்கு தமிழ்ப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கனடா வாழ் ஈழத் தமிழர்களாகிய நாங்கள், இன்றறிந்த பொங்கு தமிழ் நிகழ்வின் மூலம்,

உலக மக்கள் மன்றின் முன்னிலையில், நீதியான, நியாயபூர்வமான தமிழீழத் தாயக விடுதலைக்கு அங்கீகாரம் தந்து ஆதரிக்குமாறு எமது சக அனைத்துலக மக்களையும், மனித நேயத்தை, அறத்தை மதிக்கும் உலக நாடுகளையும், குறிப்பாக எமது கனடிய அரசையும் வேண்டுகின்றோம்.

கனடியத் தமிழர் அமைப்பான உலகத் தமிழர் அமைப்பு மீதான தடையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதனை கனடியத் தமிழர் மீதான உரிமைப்பறிப்பாக நாம் கருதுகின்றோம். அத்தடையை உடன் நீக்குமாறு கனடிய அரசை நாம் வேண்டுகின்றோம்.

ஈழத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இனப்பிரச்சனை தீர்வின் சமத்துவமான பங்காளிகளாக ஏற்று, அவர்கள் மீதான தடைகளை உடன் நீக்குமாறு அனைத்துலக சமூகத்தையும், குறிப்பாக எமது கனடிய அரசையும் வேண்டுகின்றோம்.

மோசமான மனித உரிமை மீறல்களையும், மனிதாபிமானப் பிரச்சனைகளையும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்கா அரசு மீது இராணுவ, பொருளாதார, இராஐதந்திர தடைகளை உடன் விதிக்குமாறு வேண்டுகின்றோம்.

விடுதலையே வாழ்வு என்றாகிவிட்ட நிலையில், எமது உறவுகளின் விடுதலைக்காக முழுமையாக உழைப்போம். தமிழீழ தேசியத் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட மக்களாக தமிழீழம் காண்போம் என உறுதி கூறுகின்றோம்.




Comments