சிறிலங்கா கடற்படையின் படுகொலையைத் தடுக்காத இந்திய அரசைக் கண்டித்து ஜூலை 27-இல் உண்ணாநிலைப் போராட்டம்: வைகோ
தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்கா கடற்படையைத் தடுக்காத இந்திய மத்திய அரசாங்கத்தைக் கண்டித்து எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் நாள், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் நமது கடல் எல்லையிலேயே தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது.
நமது கடல் எல்லையிலேயே வந்து சிங்களக் கடற்படையினர் குருவிகளைச் சுடுவதுபோல் தமிழக மீனவர்களைச் சுடுவதும், மீன்பிடி வலைகளை நாசப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுவதற்கு மத்திய அரசும், அதில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
நமது கடல் எல்லையிலேயே சிங்களக் கடற்படையினர் கண்ணிவெடி அமைத்ததோடு, நமது மீனவர்கள் அப்பகுதிக்கு வந்தால் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டுகிற துணிச்சல் இலங்கைக் கடற்படையினருக்கு ஏற்பட்டதும், இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைக்கின்ற செயல் ஆகும். சிறிலங்கா அரசுடன் இந்திய அரசு செய்துள்ள கூட்டுச் சதியின் விளைவுதான் இந்த நடவடிக்கை ஆகும்.
இலங்கையில் தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதால்தான் சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துணிச்சலாகத் தாக்குதல் நடத்துகின்றனர்.
சிறிலங்கா கடற்படையினருக்கு நீர்மூழ்கிப் பயிற்சியும் இந்தியா தருவது தமிழக மீனவர்களுக்கும், தமிழ் இனத்துககும் இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
மத்திய அரசை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்ட வேண்டும் என்று முன்பே கூறி இருந்தேன்.
அதன் ஒருகட்டமாக, தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்கா கடற்படையைத் தடுக்கும் கடமையைச் செய்யாததுடன், சிங்கள அரசுக்கு துணைபோகும் துரோகத்தை செய்யும் மத்திய அரசைக் கண்டித்து ஜூலை மாதம் 27 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை இராமேஸ்வரத்தில் எனது தலைமையில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும்.
உண்ணாநிலை அறப்போராட்டத்தைப் பொருளாளர் மு.கண்ணப்பன், தொடங்கி வைப்பார் என்று அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.
Comments