பிரித்தானியாவில் 60 ஆண்டுகால இன ஒடுக்குமுறையை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சி

"இலங்கையில் தமிழர்கள் மீதான 60 ஆண்டுகால ஒடுக்குமுறை" என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சி பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (16.07.08) நடத்தப்பட்டது.
இந்த புகைப்பட கண்காட்சிக்கு இலங்கைத் தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆதரவு வழங்கியிருந்தது. 88 பிரித்தானிய தமிழ் அமைப்புக்களை உள்ளடக்கிய பிரித்தானிய தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது.

இக்கண்காட்சியை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் அம்மையார் திறந்து வைத்தார்.

"இலங்கைத் தமிழர்களின் துயரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துலக சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந்த பாரிய மனித அவலமானது அரசியல் தீர்வை நாடி நிற்பது குறித்து அனைத்துலகம் அவதானமாக இருக்க வேண்டும்" என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

"இலங்கைத் தமிழர்களின் போராட்டத்துக்கு நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் முழுமையாக ஆதரவு வழங்குவேன்" என்று பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரான வீரேந்திர சர்மா தெரிவித்தார்.

"பல்லாயிரம் உயிர்கள் பலிகொள்ளப்பட்ட நிலையிலும் அனைத்துலக சமூகமானது இந்தப் பிரச்சினையில் மிக நீண்டதூரம் விலகி நிற்கிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகிற மனித உரிமை மீறல்கள் குறித்த பிரித்தானியா மற்றும் அனைத்துலகத்தின் கவலைகளை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்று மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான அன்ரி லவ் தெரிவித்தார்.

பிரித்தானிய உள்துறை இணை அமைச்சர் வேர்ணன் கோக்கர் கண்காட்சியைப் பார்வையிட்டார்.

மேலும் தொழிற்கட்சி, கொன்செர்ட்டிவ், லிபரல் டெமோக்ரட்டிவ் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கபினட் அமைச்சர்கள், மேயர்கள், நகரசபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்வேறு பிரித்தானிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

அக்கண்காட்சியில் இலங்கை இன வன்முறைகளுக்குக் காரணமான சிறிலங்காவின் கடந்த கால மற்றும் நிகழ்காலத் தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு சிறிலங்கா அரச தலைவர்களின் காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட பேரினவாத ஊக்குவிப்பு செயற்பாடுகளும் அதனால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளும் படங்களுடன் விவரிக்கப்பட்டிருந்தன.

இக்கண்காட்சியைப் பார்வையிட்ட மற்றொரு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான நீல் ஜெரார்ட், இந்தக் கண்காட்சியானது, தமிழரின் சுயநிர்ணய உரிமையின் அவசியத்தை விவரிப்பதாக உள்ளது" என்றார்.

பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள பெர்ரி கார்டினர் தனது கருத்தாக அங்கு பதிவு செய்கையில், "நாங்கள் ஒரு தேசத்தை கட்டமைக்கின்றோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.


Comments