இராணுவ வலுச் சமநிலையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்

ஈழத்தமிழ் விடுதலைப் போராட்ட வரலாற்றை உற்று நோக்கினால் அது ஒரு படிமுறை சார்ந்த வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருப்பதை காணலாம்.

ஆரம்பத்தில் கோரிக்கை அரசியலாகவும் (Appeal politics) வேண்டுகோள் (Request politics) அரசியலாகவும் இருந்த நமது அரசியலானது, பின்னர் ஒரு ஆயுத வழி விடுதலைப் போராட்ட அரசியலாகத் தோற்றம் பெற்றது.

நமது அரசியல் வெறும் கோரிக்கைகளாகவும், வேண்டுகோள்களாவும் இருந்த காலத்தில் தமிழர் தேசம் என்ற கருத்துநிலை பெருமளவிற்கு வலுவடைந்திருக்கவில்லை.

இதனை இன்னும் சற்று விளக்கமாகப் பார்த்தால், தமிழ் மக்கள் இலங்கைத் தேசியம் என்ற பொதுநிலைக்குள் ஒரு உப தேசியமாக வாழ முடியுமென்ற நம்பிக்கையில் நிலைகொண்டிருந்த காலகட்டமாக இதனைச் சொல்ல முடியும்.

இரண்டாவது காலகட்டம் மேற்படி நம்பிக்கையில் ஏற்பட்ட தோல்வியிலிருந்தும், சந்தர்ப்பவாத தமிழ்த் தலைமைகளின் தடுமாற்றங்களிலிருந்தும் உருவாகியது.

இந்த இரண்டாவது கட்டம்தான் தமிழர்கள் ஒரு தனியான தேசிய இனம், அவர்களுக்கான பாரம்பரிய தாயக நிலம் உண்டு என்ற கருத்துநிலையை நோக்கி தமிழர் அரசியலை நகர்த்தியது.

அதனை அடைவதற்கான வழிமுறையாகவே, எதிரியை எதிரியின் வழியில் சந்தித்தல் என்னும் ஆயுத வழி புரட்சிகர அரசியல் உருப்பெற்றது.

இந்தக் காலத்தில் தோன்றிய பல்வேறு ஆயுதவழி இயக்கங்களுக்கும் இதில் பெருமளவிற்கு உடன்பாடிருந்ததனால் தமிழர் தேசியம், தமிழர் தேசம் என்ற கருத்துநிலைகள் மக்கள் மயப்படுவதற்கு ஏற்றவகையான சூழலும் உருவாகியது.

ஆனால், இந்தியத் தலையீட்டைத் தொடர்ந்து இந்த கருத்து நிலையிலும் பிரிவுகள் ஏற்பட்டன. இது நமது விடுதலை அரசியல் வரலாற்றில் நான்காவது காலகட்டமாகும்.

உண்மையில் இந்தக் காலகட்டத்தில்தான் அரசியல் அர்த்தத்திலும் போராட்ட அர்த்தத்திலும் தமிழர் தேசம் என்ற கருத்து நிலை முதிர்ச்சிப் பருவத்தை எய்தியது எனலாம்.

இந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகள், ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அதன் சரியான அர்த்தத்தில் சுமக்கும் ஒரேயொரு தமிழ்த் தேசிய தலைமையாகப் பரிணமித்தனர்.

ஆரம்பத்திலிருந்தே எதிரியை இராணுவ ரீதியாக முடக்குவதிலும், புலனாய்வு நடவடிக்கைகளில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வதிலும் மிகுந்த ஈடுபாட்டைக் காட்டிவந்த விடுதலைப் புலிகள், எதிரிக்கு இணையான மரபு வழி இராணுவக் கட்மைப்பொன்றில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

அதாவது, எதிரியை அச்சுறுத்தக்கூடிய பலமான படைக் கட்டமைப்புக்களை உருவாக்கினர்.

ஏலவே புலிகள் மிகவும் இறுக்கமானதும், கடுமையான கட்டுக்கோப்பையும் கொண்ட இயக்கமாக வளர்ச்சியடைந்திருந்ததும்; அவர்கள் ஒரு மரபுவழி இராணுவ கட்டமைப்பை நோக்கி செல்வதை இலகுபடுத்தியது எனலாம்.

விடுதலைப் புலிகள் ஒரு பலமான மரபுவழி விடுதலை இராணுவமாக பரிணமித்ததைத் தொடர்ந்துதான் சிங்களம் முதல்முதலாக ஆட்டம் காணத் தொடங்கியது என்பதை இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீ எந்த வழிகளிலெல்லாம் வருகிறாயோ அந்த வழிகளிலெல்லாம் நாங்களும் வருவோம் என்பதுதான் சிங்களத்தை எதிர்கொள்வதில் புலிகள் பின்பற்றும் இராணுவக் கோட்பாடாக இருக்கிறது. வரலாற்று அடிப்படையில் இது நியாயமானதே.

இன்று விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பானது ஒரு தேசத்திற்கான முழுமையான படைக்கட்டமைப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது.

காலாட் படைகள், தாக்குதல் படையணிகள், கடற்படை, விமானப்படை என எதிரியின் சகலவிதமான தாக்குதிறனையும் எதிர்கொள்ளக் கூடிய படையணிகளை தமிழர் தேசம் கொண்டுள்ளது. இதற்கும் மேலாக உலக தரத்திற்கான புலனாய்வு கட்டமைப்பொன்றையும் புலிகள் வைத்திருக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலிருந்து பிறக்கும் கருத்து நிலைதான் இராணுவ வலுச் சமநிலைக் கோட்பாடாகும்.

அதாவது, ஒருவரை ஒருவர் வீழ்த்த முடியாத இராணுவ வலிமையைக் கொண்டிருக்கின்றனர் என்பதே இந்தக் கருத்துநிலையின் சாரம்.

ஆனையிறவு வெற்றியைத் தொடர்ந்து இந்த கருத்துநிலை இராணுவ ஆய்வாளார்கள் மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியில் ஒரு மௌனமான அங்கிகாரத்தைப் பெற்றது. ஆனால், அது முதல்முதலாக ஒரு சர்வதேச கவனத்தைப் பெற்றது நோர்வேயின் தலைமையில் இடம்;;பெற்ற பேச்சுவார்த்தையின் போதாகும்.

பேச்சுவார்தையின் போது இரு தரப்பினரையும் சமமாகக் கருதுதல் என்ற நடைமுறை பேச்சுவார்தையின் முக்கிய உள்ளடக்கமாக இருந்தது. அதன் வெளிப்பாடு அரசியல் அர்த்தத்திலும் மற்றும் இராணுவ வலிமையின் அர்த்தத்திலும் புலிகள் அரசிற்கு இணையானவர்கள் என்பதை நோர்வேயும், நோர்வேயின் பின்னால் இருந்த மேற்கு அரசுகளும் ஏற்றுக்கொண்டிருந்தன என்பதாகும்.

இந்த சமதரப்பு அந்தஸ்து அமெரிக்காவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டின்போது நிராகரிக்கப்படதைத் தொடர்ந்தே புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்து தற்காலிகமாக விலகினர்.

ஆனால், மகிந்த அரசு ஆட்சிப்பீடமேறிய காலத்திலிருந்து அவர்களது யுத்த நிகழ்சி நிரலில் மேற்படி இராணுவ வலுச் சமநிலைக் கோட்பாடே முக்கிய இடத்தைப் பிடித்தது. சிங்கள பௌத்த ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் தாம் புலிகளிடம் - அதாவது தமிழர்களிடம் - தோல்வியடைந்து விட்டோம் என்பதை எந்தவகையிலும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், புலிகளின் இராணுவச் சமவலுவைச் சிதைக்க வேண்டுமென்பதில் கருத்து பேதமற்ற ஒற்றுமை அவர்கள் மத்தியில், நிலவியது. அவ்வறானவர்கள் அனைவரும் மகிந்தவின் யுத்த அரசியலின் பின்னால் அணிதிரண்டனர்.

இன்று சிங்களம் தமது எதிர்பார்ப்பில் சில தற்காலிக வெற்றிகளைக் பெற்றிருக்கிறது. குறிப்பாக கிழக்கில் ஏற்பட்ட கருணா விடயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிங்களம் புலிகளுக்கு எதிரான சில இராணுவ முன்னெடுப்புக்களில் வெற்றியீட்டியிருக்கிறது.

கிழக்கில் கிடைத்த வாய்புக்களைப் பயன்படுத்தி பெற்ற வெற்றிகளைப் போன்று, வன்னிக் களமுனைகளிலும் வெற்றிகளை பெற்றுவிடலாம் என்ற பேராவிவிலேயே தனது படையிணியின் முக்கால்வாசி பலத்தை வன்னி நோக்கி திருப்பி இருக்கின்றது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இன்றைய சூழலில் இராணுவ ரீதியில் அவர்களுக்கு இரண்டு இலக்குகள் இருக்கின்றன.

முதலாவது, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற இராணுவ வலுச் சமநிலையை மீளவும் உறுதிப்படுத்துவது. அடுத்தது, முன்னரைக் காட்டிலும் சிங்களத்தை இராணுவ ரீதியாக வலுவிழக்கச் செய்வது. இந்த இரண்டு இலக்கினையும் வெற்றி கொள்வதுதான் இனி வரப்போகும் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்றது.

இன்று சிங்களத்தின் இறுமாப்பான வார்தைகளின் பின்னால் இருப்பது பேச்சுவார்த்தையின் அடித்தளமாக இருந்த இராணுவ வலுச்சமநிலையை தாங்கள் சிதைத்து விட்டோம் என்ற மகிழச்;சிதான். இதனால்தான் தற்போது சிங்களம் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கிழே வைத்தால் பேசலாம் என்று ஏளனமாக கூறிவருகிறது.

எனவே, நாம் எங்கு சுற்றி வந்தாலும், எந்த சர்வதேச அரசுகளிடம் கோரிக்கை வைத்தாலும் இறுதியில் எல்லாவற்றையும் தீர்மானிக்கப் போவதென்னவோ நமது பலம்தான் என்பதை நாங்கள் மறக்காமல் இருந்தால் சரி.

1973 ஆம் ஆண்டு, சிலியின் அரசுத்; தலைவர் சல்வடோர் அலண்டே சதிகாரர்களால் கொலை செய்யப்பட்ட போது, அது பற்றி கருத்துத் தெரிவித்த பிடல் காஸ்ரோவின் வார்த்தைகள் இந்த இடத்தில் நினைவு கொள்ளத்தக்கது. 'அலண்டேயை அவர்களால் இலகுவாக விழ்த்த முடிந்ததற்கு காரணம் அலண்டேயிடம் ஆயுதங்கள் இல்லாமலிருந்ததுதான். புரட்சிக்கு அயுதங்கள் தேவை. ஆயுதங்கள் மட்டும் போதாது கூடவே மக்களும் தேவை".

இந்த இரண்டு அம்சங்களும் விடுதலைப் புலிகளின் வசம் இருக்கும் வரை அவர்களை முறியடிப்பது இலகுவான விடயமல்ல. எனவே, விடுதலைப் புலிகளின் இராணுவப் பலத்தைப் பேணுவது தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகின்றது.

-தாரகா-

Comments