பிராந்திய ஆதிக்கப் போட்டியும் பயங்கரவாதக் கோட்பாடும்

கடந்த திங்களன்று, இலங்கை இராணுவத் தலைமையகத்தில், வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களைச் சந்தித்து இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா மீண்டுமொரு தடவை காலக்கெடுவை நீடித்துள்ளார்.

மன்னாரில் தற்போது நடைபெறும் உக்கிரச் சமர்களை அடிப்படையாகக் கொண்டு, தளபதியின் ஊகங்களும், கால நிர்ணயங்களும் வெளிவந்துள்ளன.

விடுதலைப் புலிகள், தமது மரபுசார் படைவலுக் கட்டமைப்புத் தன்மையை இழந்து விட்டார்களென்பதே அவரின் போரியல் வியாக்கியானமாக அமைகிறது.

இக்கூற்றிற்கு வலுச் சேர்க்கும் வகையில், தொடர் தாக்குதல்களினால் பலமிழந்த புலிகள், எதிர்த்துத் தாக்கும் திறனை களத்தில் இழந்து விட்டார்களென்று கூறுகிறார்.
மன்னார் பிரதேசத்தில் பல நூறு சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கைப்பற்றியுள்ள இராணுவம், விடத்தல் தீவிலிருந்து 4கி.மீற்றர் தூரத்தில் நிற்பதாக நீளக் கணக்கொன்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், 300 பேர் மட்டுமே இருப்பதாகக் கூறிய சரத் பொன்சேகா, தற்போது 5000 பேரளவில் மட்டும் விடுதலைப் புலிகள் இருப்பதாக எண்ணிக்கை அறிக்கையில் ஏற்றம் காண்கிறார்.

அதேபோன்று, இந்த வருட இறுதிக்குள் கதை முடிக்கப்படுமென கூறிய சவால்களின் கால நிர்ணயங்கள், அடுத்த வருட நடுப்பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளன.இதேவேளை, மன்னாரில் ஏற்பட்டிருக்கும் ஆளணி இழப்பினை சமன் செய்ய, இன்னமும் 80 ஆயிரம் படையினரை சேர்ப்பதற்குமான முழு முயற்சியில் இராணுவம் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பளித்துக் களைத்துப்போன அரசாங்கம், பொறுத்தது போதுமெனப் பிடித்து இழுத்து வருமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இன்னமும் முழுமையான போரில் ஈடுபடாமல், தற்காப்புச் சமரில் விடுதலைப் புலிகள் ஈடுபடுவதைக்கொண்டு, மரபுவழி படைவலுவினை புலிகள் இழந்து விட்டார்களென்று கருதினால், செக். குடியரசிலிருந்து 40 துளை கொண்ட பல்குழல் ஏவுகணைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை.

மன்னார் சமர் தொடங்கிய காலத்திலிருந்து இற்றை வரை தமது தரப்பில் 1700 இராணுவத்தினரும், புலிகள் தரப்பில் 9,000 பேர் வரை இறந்துள்ளதாக புள்ளிவிபரம் கூறும் சரத் பொன்சேகா அவரது முன்னாள் சகாவான ஜானக பெரேராவின் கூற்றிற்கு பதில் கூறுவதாகவே கருத வேண்டும்.

விடுதலைப் புலிகளின் இழப்பு மிகைப்படுத்திக் கூறப்படுவதாக ஜானக பெரேரா கூறுகிறார்.
இராணுவத் தரப்பிற்கு பாரிய ஆளணி இழப்புக்கள் ஏற்பட்டாலும், இராணுவ வெற்றிச் செய்தியில் அதிகாரத்தை தக்க வைத்திருக்கும் அரசாங்கம் படைத் தரப்பை பயன்படுத்தி மலிவான பரப்புரையை முன்னெடுக்க முயற்சிக்கிறது.

இனி அரசியல்வாதிகளின் கூற்றுக்களைவிட, இராணுவத் தரப்பினரின் செய்திகளையே சிங்கள மக்கள் நம்புவார்களென்ற முடிவிற்கு, அரசாங்கம் வந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

மன்னார் திறந்த வெளியில் நடைபெறவிருக்கும் சமரை கருத்திற்கொண்டு, இப்பொழுதே ஆட்சேர்க்கும் படலத்தை இராணுவம் ஆரம்பித்துள்ளதாகவும் கருதலாம்.

ஜெயசிக்குறு 1 காலத்திலும், இவ்வகையான உளவியல் சமரினை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டதனை தற்போது நினைவிற் கொள்ளல் வேண்டும்.புளியங்குளம் வீழ்ந்தது, மாங்குளம் உடைந்தது, ஒட்டுசுட்டான் கவிழ்ந்தது என்கிற ரீதியில் சன்னதம் உச்ச நிலை அடைகையில், அரசாங்கத்தின் இருவருட ஆமை வேக ஓட்டம் ஆறு நாட்களில் முறியடிக்கப்பட்டது.

இத்தகைய நிலமீட்பு வரலாற்றை, மிகச் சுருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். புலிகளின் மன்னார் கட்டளைத் தளபதி கேணல், லக்ஸ்மன். அதாவது புலிகளின் தேசியத் தலைவரின் திட்டத்தினை உரிய நேரத்தில் ஸ்ரீலங்கா படையினர் கற்று அறிந்து கொள்வார்களென்றும், கடந்த காலங்களில் அரச படையினர் எவ்வாறு எமது மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, பிரதேசங்கள் மீட்கப்பட்டன என்பதை புரிந்து கொண்டால், அடுத்த கட்ட நகர்வில் என்ன நடைபெறும் என்பதையும் புரிந்து கொள்ளலாமென லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, கிளிநொச்சியில் அண்மையில் நடந்த வீர வணக்க நிகழ்வொன்றில், புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி அமுதாப் ஓயாத அலைகள் 2 மூலம் கிளிநொச்சி நகரம் புலிகளால் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு குறித்துப் பேசியுள்ளார்.

நிஜமான போரியல் வரலாறுகளை விடுதலைப் புலிகள் எடுத்துரைக்கும் பொழுது, கற்பனாவாத போரியல் கருத்து நிலைகளை உளவியல் சமராக்கும் உத்தியில், அரசாங்கத் தரப்பு தீவிரமாக ஈடுபடுவதை தற்போது காணக்கூடியதாகவுள்ளது.

அதேவேளை விடுதலைப் போராட்ட மக்கள் உரிமை சார்ந்த நியாயப்பாடுகளை, பொங்கு தமிழ் எழுச்சி ஊடாக, புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், வெளியுலகிற்கு எடுத்துரைப்பதையும் காணலாம்.

படைவலு ஆதிக்கம், பேச்சுவார்த்தை, ஆயுத ஒப்படைப்பு என்கிற முப்பரிமாண படி நிலைகளில் அரசாங்கம் பயணிப்பதையும் தெளிவாக அவதானிக்கலாம்.

களமுனையில், தமது படைவலு ஆதிக்கம் நிலைநாட்டப்படுவதால், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டுமென்கிற அழுத்தத்தினை வெளிநாடுகள் தம்மீது பிரயோகிக்க கூடாதென ஜனாதிபதி எதிர்பார்க்கிறார்.

அதனைச் செவிமடுக்காது, அழுத்தம் சுமத்தும் சக்தியினை நிராகரிக்கவும் அவர் தயங்கவில்லை. இந்திய மும்மூர்த்திகளுக்கும் இச்செய்தியை ஜனாதிபதி கூறியதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

600 இராணுவத்திற்கு படைப்பயிற்சி அளிப்பதோடு, இந்தியாவின் பங்களிப்பு நிறுத்தப்பட வேண்டுமென்பதே சிங்களத்தின் திடமான முடிவு.

ஈராக் போரின் போது “நீங்கள் இந்தப் பக்கமா?’ அல்லது “அந்தப் பக்கமா?’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், உலகைப்பார்த்து எச்சரித்தது போன்று, “பயங்கரவாதத்திற்கெதிரான தனது போரில் தமது சார்பான நிலை எடுக்கும்படி சர்வதேசத்தை அரசாங்கம் வெருட்டுகிறது.

தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் இதுவெனப் புரிந்தும் “பயங்கரவாதமென்கிற சிறு வட்டத்துள் ஏற்கனவே இதனை உள்ளடக்கிய நாடுகள், இலங்கை அரசாங்கத்தின் “பயங்கரவாத’ கூச்சலுக்குப் பதில் கூற முடியாததொரு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன.

இது ஒரு தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்டம் என்பதை அங்கீகரித்தால், சார்பு நிலை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தாம் தள்ளப்படும் நிகழ்வு நடைபெறலாமென்பதால், பெரும்பாலான பிராந்திய நலன் பேணும் வல்லரசுகள் யாவும், இப்போராட்டத்தை பயங்கரவாத கருத்து நிலைக்குள் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை 1987 வரை நீதியான போராட்டமாகக் கணிக்கப்பட்ட தமிழர் போராட்டம், 87இற்குப் பின்னர் பயங்கரவாதமாக மாறிவிட்டது.

இதைவிட வேடிக்கையான நிகழ்வு எதுவென்றால், தம்மால் பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இலங்கை அரசினை வற்புறுத்தியதோடு, தமது சார்பாக நோர்வே நாட்டினை அனுசரணையாளராக நியமித்த மேற்குலகின் இரட்டை நிலைப்பாடாகும்.

அதாவது, தமிழர் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் சிங்கள தேசத்தின் தாளத்திற்கு இசைவாக ஆடாவிட்டால் சீனாவின் அணிக்குள் இலங்கை சங்கமமாகி விடுமென்கிற அச்சமே, இந்த இரட்டை வேடை நாடகத்தின் சூத்திரமாக இருக்கிறது.
மேற்குலகு கூறத் தயங்கிய விடயத்தை, இந்திய அதிகாரி எம்.கே. நாராயணன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

சீனா பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவி பெறுவது தமக்குப் பிடிக்கவில்லையென்று அவர் பல தடவை கூறியுள்ளார்.

சீனாவின் உள் நுழைவினைத் தடுப்பதற்காக ஆயுத உதவிகளை செய்யும் இந்தியா பயங்கரவாதத்தை முறியடித்து நில ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காப்பதற்காக ராடர்கள் வழங்குவதாக பாசாங்கு செய்கிறது.

தமிழ் மக்களின் நலன் மீது அக்கறை இருப்பதாகக் காதில் பூச்செருகும் காரியத்திலும் ஈடுபடுகிறது.

தூங்குபவர் போல் நடிப்பவரை எழுப்பமுடியாது. எழுப்பவும் கூடாது.

சி.இதயச்சந்திரன்

Comments