அரசியல் பொருளாதார படைத்துறை நெருக்குவாரங்களில் சிக்கித்திணறும் மகிந்த அரசு

அண்மைக்காலங்களாக தென்னிலங்கையிலே வாழுகின்ற மக்கள், அன்றாட வாழ்க்கைச் செலவு பாரியளவு அதிகரித்திருப்பது தொடர்பாக மகிந்த அரசின் மீது கடுமையான சீற்றமும் வெறுப்பும் அடைந்திருப்பதுடன் பல்வேறு தொழிற்சங்கங்களும் இவ்விலைவாசி உயர்வினை எதிர்த்தும், வாழ்க்கைச்செலவிற்கு ஏற்ப சம்பள உயர்வு கோரியும் பல்வேறு போராட்டங்களை நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் நிலவும் லஞ்ச ஊழல் மோசடிகள், பெருமளவிலான பணமானது பாதுகாப்பு நிதிக்கென ஒதுக்கப்படுவது, தவறான நிதிக் கையாளுகைகள், வெளிநாட்டு நன்கொடையாளர்கள் சிறிலங்காவிற்கு நிதி வழங்குவதற்கு பின்னடிப்பது மற்றும் உலக சந்தையில் மசகெண்ணெய்யின் விலையானது என்றுமில்லாதவாறு அதிகரித்துச்;செல்வது போன்ற அனைத்துக் காரணிகளும் சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்களை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளதுடன் பிராந்தியத்திலே மிகவும் அதிகளவு பணவீக்கம் உடைய நாடாக சிறிலங்கா மாறுவதற்கும் வழிவகுத்துள்ளது.

இது இவ்வாறு இருக்க, வோசிங்டனில் தலைமையகத்தினைக் கொண்டுள்ள ~அமைதிக் கான சிந்தனையாளர் குழுவின்| தோல்வியுறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவானது சூடான், ஈராக், சோமாலியா, சிம்பாவே, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் இணைந்து தற்போது 20 ஆவது இடத்திற்கு வந்துவிட்டது.

கடந்த ஆண்டு 25 ஆவது இடத்தில் இருந்து தற்போது 20 ஆவது இடத்திற்கு சிறிலங்கா வந்ததில் இருந்தே மகிந்த அரசு எவ்வாறு சிறிலங்காவினை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்பதனை நாம் இலகுவாக புரிந்துகொள்ளலாம்.

மகிந்தவின் போர் முழக்கம்:-

கடந்த வெள்ளிக்கிழமை சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட மீன்பிடித்துறை முகத்தினை திறந்துவைத்து விட்டு பெருவெலவில் இடம்பெற்ற பொதுமக்கள் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது, தமது படைகள் விரைவில் விடுதலைப் புலிகளை அழித்துவிடுவார்கள்| என்று தெரிவித்தார்.

இவ்வாறு மகிந்த கூறி ஒரு வார காலத்திற்குள்ளேயே, அம்பாறை அறுகம்குடா பாலத்தினைத் திறந்து வைத்துவிட்டு உலங்குவானூர்தியில் சென்று திரும்பும் போது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் மயிரிழையில் சனாதிபதி மகிந்த உயிர்தப்பியுள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகள் பொத்துவில் செங்காமம் சிறப்பு அதிரடிப் படையினரின் முகாம் மீதும் இதேநாள் பலத்த எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல்களானது சிறிலங்கா அரசாங்கத்தின் ~கிழக்கினை பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துவிட்டோம்| என்ற பொய்ப்பிரச்சாரத்தினை முறியடித்ததுடன் சிறிலங்கா அரசின் தலைவரையே பாதுகாக்க முடியாத நிலையில்தான் சிறிலங்காப் படையினர் இருக்கின்றார்கள் என்பதனையும் தெளிவாக வெளிக்காட்டியுள்ளது.

அண்மையில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட செய்தியாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ~விடுதலைப் புலிகளின் மரபுவழிப் போர் வல்லமையை அழித்துவிட்டோம் என்றும் ஆனால் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை முற்றாகக் கைப்பற்றுவதற்கு இன்னமும் ஒரு ஆண்டுவரை தேவைப்படும்| என்றும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு சிறிலங்கா அரச தரப்பினரும் அவர்களது படைத்துறைத் தளபதிகளும் ஆளுக்காள் முரண்பாடான தகவல்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டுக்கொண்டிருக்கின்��
� சூழ்நிலையில், விடுதலைப் புலிகளோ அமைதி காத்தவாறு தமது நீண்டகாலப் போரியல் தொடர்பான பட்டறிவுகளினது அடிப்படையில், களநிலைமைகளுக்கு ஏற்ப பல்வேறு தந்திரோபாயங்களை பயன்படுத்தி எதிரிகளுக்கு தொடர்ச்சியான இழப்புக்களை ஏற்படுத்தி வருவதுடன், எதிரிகளை அகலக்கால் பதித்து பரவப்பண்ணுவதன் மூலம் எதிரியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

போர் நடவடிக்கைகள் தொடர்பாகச் சீன விடுதலைப் போரின் தந்தையாக விளங்கிய மாவோ சேதுங் தமது போரியல் தந்திரோபாயங்கள் தொடர்பாகத் தெரிவிக்கும்போது பின்வருமாறு கூறுகின்றார்,

~போரில் ஈடுபடும் ஒரு தளபதியின் சரியான படை அணிவகுத்தல் அவருடைய சரியான தீர்மானங்களில் இருந்து வருகின்றது. அவருடைய சரியான தீர்மானங்கள் அவருடைய சரியான அனுமானங்களில் இருந்து பிறக்கின்றன, அவருடைய சரியான அனுமானங்கள் ஒரு பூரணமான, தேவையான ஒற்றறிதலிலிருந்தும், ஒற்றறிதல் மூலம் சேகரித்த பல்வேறுவகையான தரவுகளையும் துருவி ஆராய்ந்து செப்பனிடுவதிலிருந்தும் தோன்றுகின்றன.

அவர் சாத்தியமான, அவசியமான ஒற்றறியும் எல்லா முறைகளையும் பிரயோகித்து, எதிரியின் நிலைமை தொடர்பாகச் சேகரித்த தகவலிற் சக்கையை நீக்கி முக்கியமான விடயங்களை எடுத்து, பொய்மையை விலக்கி மெய்மையைக் கொண்டு, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கும், புறத்தில் இருந்து அகத்திற்கும் சென்று துருவித் துருவி ஆராய்கின்றார்.

இதன்பின் தனது பக்கத்திலுள்ள நிலைமைகளைக் கணக்கில் எடுத்து, இரு தரப்பின் பலம், பலவீனம் என்பனவற்றினை ஆராய்ந்து படை நடவடிக்கைகள் தொடர்பான இறுதி முடிவிற்கு வருவார்.|

~அதாவது பட்டறிவுமிக்க படைத்தளபதி ஒருவர் தன்னை தன் சொந்தப் படைகளின் தன்மையுடன் (தளபதிகள், வீரர்கள், ஆயுத தளவாடங்கள், உபகரணங்கள் போன்றன) நன்கு பரிச்சியப்படுத்திக் கொள்வார்.

அவ்வாறே எதிரிப் படைகளின் தன்மைகளையும் புரிந்து கொள்வதற்கு பலத்த முயற்சிகளை மேற்கொள்வார். அத்துடன் அரசியல், பொருளாதாரம், புவியியல், காலநிலை ஆகியன போன்ற போர் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய விடயங் களோடும் தன்னை பரிச்சியப்படுத்திக் கொள்வதில் வல்லவராக இருப்பார்.

இத்தகைய ஒரு தளபதி சமரினை வழிநடத்துவதிலும் மற்றும் ஒட்டுமொத்த போரை வெல்வதற்கான தலைமையை வழங்குவதிலும் சிறந்து விளங்குவார். ஏனெனில் ஒரு நீண்டகாலப் போரியல் பட்டறிவின் அடிப்படையில், ஒரு முழுப்போரின் விதிகளைப் புரிந்துகொள்வதும் கிரகித்துக் கொள்வதும் இத்தகைய தளபதிக்கு இலகுவாக இருக்கும்.

சுருங்கக்கூறின், உலகிலே இடம்பெறுகின்ற எல்லா விடயங்களின் விதிகளைப் போலவே போரியல் விதிகளும் எமது மனங்களில் புறநிலையான யதார்த்தங்களின் பிரதிபலிப்புக்களே, மனதுக்கு வெளியே உள்ள யாவும் புறநிலை யதார்த்தம்.

எனவே, கற்கவும் அறியவும் படவேண்டியதில் எதிரித் தரப்பிலும் எம் தரப்பிலும் உள்ள நிலைமைகள் அடங்குகின்றன. இவையிரண்டும் சரியான ஆராய்விற்கு உட்படவேண்டும். அதேபோன்று சிந்திக்கும் ஆற்றலே எம்மைச் சரியான முடிவுகளுக்கு இட்டுச்செல்கின்றன.

இதனைத்தான் சீனாவின் போரியல் மேதையாக விளங்கிய சன் சூ, ~பகைவனை அறிந்து தன்னையும் அறிந்து கொண்டால் தோல்வியே இல்லாமல் நூறு சமர்களை நடத்தமுடியும்.| என்று தெரிவித்துள்ளார்.

சீனச் செஞ்சேனை பயன்படுத்திய போரியல் தந்திரோபாயங்கள் தொடர்பாக மாவோ சேதுங் கூறும்போது, ~எமது போரியல் நடவடிக்கைகளின் ஊடாக நாம் பெற்ற தந்திரோபாயங்கள் பண்டைய அல்லது தற்கால தந்திரோபாயங்களிலிருந்தும் சீனாவின் இதர தந்திரோபாயங்களிலிருந்தும் வெளிநாட்டுத் தந்திரோபாயங்களிலிருந்தும் உண்மையில் வேறுபட்டன. எமது தந்திரோபாயங்களால் நாளுக்கு நாள் பொதுமக்களும் போராட்டத்தில் இணைந்து கொள்வதற்கு தூண்டப்பட்டார்கள். அத்துடன் எவ்வளவு வலிமையுடைய எந்த எதிரியும் எம்முடன் போராட முடியாது. நமது போரியல் தந்திரோபாயங்களிலே கெரில்லாத் தந்திரோபாயங்களையும் உள்ளடக்கியுள்ளன.

அதாவது மக்களை புரட்சிகர மக்களாக தட்டியெழுப்புவதற்காக நமது படைகளை மக்கள் மத்தியில் பிரித்து வேலைத்திட்டங்களில் ஈடுபடுவது, எதிரியை எதிர்கொள்வதற்காக எமது படைகளை ஒன்று குவிப்பது, எதிரி முன்னேறும்போது நாம் பின்வாங்குவது, எதிரி ஓய்வெடுக்கும்போது நாம் தொல்லை கொடுப்பது, எதிரிகளைப் படையும்போது நாம் தாக்குவது, எதிரி பின்வாங்கும்போது நாம் முன்னேறுவது, எமது தளப்பிரதேசங்களை விரிவாக்குவதற்காக அலை அலையாக முன்னேறும் கொள்கையை பிரயோகிப்பது, பலம் வாய்ந்த எதிரியால் துரத்தப்படும்போது வட்டமிட்டுச் செல்லும் கொள்கையைப் பிரயோகிப்பது, சரியான தருணத்தில் சரியான இடத்தில் வைத்து எதிரிக்கு பலத்த இழப்பினை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொண்டு போரின் போக்கிலே தீர்க்ககரமான மாற்றங்களை ஏற்படுத்தி இறுதியில் ஒட்டுமொத்த போரிலே வெல்லுதல் என்பதே சீன விடுதலைப் போரின் போது மாவோ சேதுங்கினால் பயன்படுத்தப்பட்ட சிறந்த தந்திரோபாயங்களாக காணப்படுகின்றன.

இதேபோன்று தனது சொந்த பெயருக்காகவும் புகழுக்காகவும் ஒரு இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் படைத்தளபதி தொடர்ச்சியாக சமர்களில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்.

ஏனெனில் இவ்வாறான தளபதியின் திட்டங்கள் கற்பனையானவை, யதார்த்தத்துடன் இணங்குவதில்லை. தனியாக தனது வரட்டு கௌரவத்திற்காகவும் பெருமைக்காகவும் கண்மூடித்தனமாக சமர்களிலே ஈடுபடும் ஒரு இராணுவத் தளபதி எதிரியால் இலகுவாக ஏமாற்றப்படுவார் அல்லது எதிரியின் நிலைமையின் மேலெழுந்தவாரியான அல்லது பகுதியான அம்சம் ஒன்றினால் பிழையான பாதையில் ஈர்க்கப்பட்டு அல்லது தனக்குக் கீழுள்ளவர்களிடம் இருந்து வருகின்ற உண்மைக்கு அப்பாற்பட்ட பொறுப்பற்ற ஆலோசனைகளால் திசை திருப்பப்பட்டு, தன் தலையை கற்சுவரில் முட்டிக்கொண்டே தீருவார்.

ஏனெனில் இவ்வாறான தளபதிகள் எதிரியின் நிலைமை, ஒற்றறிதல், தன்நிலைமை போன்ற விடயங்களை அறியாதவராக அல்லது அறிய விரும்பாதவராக இருப்பதுடன் தமது சொந்த பெருமைகளுக்கும் பதவிகளுக்காகவுமே படைநடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள்.

தமிழீழப் போரரங்கிலே எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கும் தீர்க்ககரமான சமர்கள் நிச்சயமாக தமிழீழ தேசத்தினை வென்றெடுப்பதற்கான போரிலே முக்கிய திருப்புமுனையாக விளங்கப்போகின்றன என்பதில் ஐயமில்லை.

நன்றி: வெள்ளிநாதம் (04.07.08)
-எரிமலை-

Comments