குடாரப்பு - நோமாண்டி பிரிகேடியர் பால்ராச்

நவீன போர் வரலாற்றில், வெற்றிகரமான தரையிறக்கத்திற்குப் பெயர் பெற்றது நோர்மண்டித் தரையிறக்கம்.

1944 இரண்டாம் உலகப்போரின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த சண்டையாக அது விளங்குகின்றது.

கிட்லரின் நாசிப்படைகளின் பிடியிலிருந்த பிரான்ஸ் நாட்டை மீட்டெடுக்க நடந்த தரையிறக்கம் அது. அமெரிக்கா - இங்கிலாந்து - கனடா - அவுஸ்ரேலியா - என்று நேசநாட்டுக் கூட்டுப்படைகள் செய்த தரையிறக்கம் அது.

ஒரு இலட்சத்து முப்பத்தையாயிரம் படையினர் அதில் பங்குகொண்டனர். 4,300 கப்பல்கள் தரையிறக்கத்திற்கும் - தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப்பட்டன. டாங்கிகள் - ஜீப்கள் - ஆட்லறிகள் - துருப்புக்காவிகள் என்று 20,000 வாகனங்கள் தரையிறக்கப்பட்டன. 11,000 விமானங்கள் தரையிறக்கத்தில் பங்குகொண்டன.

தரையிறங்கும் கரையைக் கிட்லர் எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்திலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து அதிக தொலைவில் நோர்மண்டிக் கடற்கரை இருந்தது. இதைவிடக் குறைவான தூரத்தில் இருந்த கரைப் பகுதியிலேயே தரையிறக்கம் நடக்கும் என்று கிட்லர் நம்பியிருந்தார். இந்த வகையில் எதிரிப்படை எதிர்பாராத தரையிறக்கம் அது.

தரையிறக்கம் நடந்த முதல் நாள் சண்டையில் 10,000 நேசநாட்டுப் படைகள் பலியாகின. இந்தத் தரையிறக்கத்திற்காக ஒருவருட காலம் நடந்த வேவு நடவடிக்கையின் போது மட்டும் 1,000 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். 100 கிலோமீற்றர் நீளக் கடற்கரையில் தரையிறக்கம் நடந்தது.

குடாரப்பு தரையிறக்கம் நடந்தபின் இதை நோர்மண்டித் தரையிறக்கத்துடன் ஒப்பிட்டு உலகச் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதிஉச்ச திகைப்பூட்டல் - அபார திட்டமிடல் - அற்புதமான துணிச்சல் - முழுமையான வெற்றி என்ற இராணுவ அம்சங்களில் நோர்மண்டித் தரையிறக்கமும் - குடாரப்புத் தரையிறக்கமும் ஒத்திருந்தது.

குடாரப்புத் தரையிறக்கத்தில் 1,200 புலிகள் பங்குபற்றினர். புலிகளின் கட்டுப்பாட்டுக் கடற்கரையான வெற்றிலைக்கேணியைச் சுமார் 10 கடல்மைல் தூரம் பெருங்கடல் ஊடாக, படகுகள் மூலம் பயணித்து - சிங்களப் படையின் கட்டுப்பாட்டின் கரைப் பகுதிகளை மேவிக்கடந்து எதிரியின் நிலைகளுக்கு நடுவே தரையிறக்கம் நடந்தது.

தரையிறக்கும் பகுதியாக ஒரு கிலோமீற்றர் நீளக் குடாரப்பு கடற்கரை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. தரையிறக்கப் படையின் தளபதியாக பிரிகேடியர் பால்ராச் நியமிக்கப்பட்டிருந்தார்.

தரையிறக்கத்தில் ஈடுபட்ட முதற்தொகுதிப் படகுகளில் சென்ற வீரர்களில் பிரிகேடியர் பால்ராச்சும் ஒருவராகச் சென்றார்.

குடாரப்பு கரையில் தரையிறங்கி அங்கிருந்து சதுப்பு நிலத்தைப் பூகோள அமைவிடமாகக் கொண்ட நீரேரி வழியாக சுமார் 10 கிலோமீற்றர் நீளத்தை இரவின் துணையுடன் நடந்து கடந்து இத்தாவில் பகுதியில் நிலையெடுத்தது அணி.

அங்கே ஏழு கிலோமீற்றர் நீளமும் ஒரு கிலோமீற்றர் அகலமும் கொண்ட பெட்டி வடிவில் புலிகள் அணி நிலைகொண்டது.

அந்தப் பெட்டி வடிவப் புலிகள், கோட்டையை அழிக்க குடாநாட்டின் 30,000 படையும் முறை போட்டு முயன்றன மதில்களோ - கொத்தளங்களோ இல்லாத அந்த வெட்டவெளிக் கோட்டையை 34 நாட்கள் புலிவீரர்கள் காத்தனர். அந்த 34 நாள் சண்டையில் எதிரிப்படை ஏவிய எறிகணைகளின் தொகை ஏறக்குறைய 40,000. மதில்களாயும் - கொத்தளங்களாயும் பிரிகேடியர் பால்ராச்சே நின்றார்.

புகழ்பெற்ற பால்ராச்சின் தனி வீரம் அங்கிருந்த 1,200 புலி வீரர்களையும் பற்றிக்கொண்டது. 1,200 பால்ராச்சுக்கள் நின்றது போல பெட்டிக்கோட்டையில் வீரவெள்ளம் நிரம்பியிருந்தது.

-சு.ரவி-

நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (04.07.08)

Comments