அடேல் பாலசிங்கத்தின் "உடையாத விலங்குகள்" நூல் வெளியீடு

கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் எழுதிய "உடையாத விலங்குகள்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இன்று புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தலைமை வகித்தார்.

தேசியத் தலைவரின் துணைவியார் மதிவதனி பிரபாகரன், "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு ஈகச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார்.

பொதுச்சுடரை விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை ஏற்ற, தமிழீழத் தேசியக் கொடியை சோதியா படையணி சிறப்புத்தளபதி கேணல் துர்க்கா ஏற்றினார்.

போராளிப் படைப்பாளர் மலைமகள் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.

செஞ்சோலைப் பொறுப்பாளரும் மூத்த போராளியுமான சுடர்மகள் நூலை வெளியிட, சுதாசங்கர் பெற்றுக்கொண்டார்.

மனித உரிமைகள் செயலகத்தைச் சேர்ந்த மாலதி ஆய்வுரை நிகழ்த்தினார்.

விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் மதிப்பீட்டுரை நிகழ்த்தினார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சிறப்புரையாற்றினார்.

தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன், மூத்த போராளிகளான தீபா, ரதி, திலீபன் மருத்துவ சேவைப் பொறுப்பாளர் எழுமதி கரிகாலன், சமர் ஆய்வு பிரிவுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி, தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் இளங்கோ, நீதி- நிர்வாகப்பிரிவுப் பொறுப்பாளர் பரா, போராளி இசைச்செல்வி தமிழ்ச்செல்வன், கேணல் சங்கரின் துணைவியார் குகா, கேணல் றமணனின் துணைவியார் வேதாரணி, மருத்துவுப்பிரிவின் தேவா, போராளி தமிழ்க்கவி, விடுதலைப் புலிகள் வெளியீட்டுப் பிரிவுப்பொறுப்பாளர் சு.ரவி, புலிகளின்குரல் நிறுவனப்பொறுப்பாளர் நா.தமிழன்பன் ஆகியோர் சிறப்புப்படிகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆற்றிய சிறப்புரை:

அடேல் ஆனின் பணியானது விடுதலைப் போராட்டம் முன்னோக்கிச் செல்வதற்கு உந்துசக்தியாக அமையும். ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தில் முழுமக்களும் ஏற்ற தாழ்வின்றி, சமூக முரண்பாடுகள் இல்லாமல், ஒட்டுமொத்தமான முழுமைகளும் போராட்டத்தில் பங்களிக்கும் போதுதான் தேசிய விடுதலை வெற்றி பெறும்.

மக்களை அணிதிரட்டுவதில் "உடையாத விலங்குகள்" நூலிற்கு முக்கிய பங்குள்ளது. எமது சமூகத்தில் பல்வேறுபட்ட சமூக முரண்பாடுகள் தொடக்க காலத்தில் இருந்து வந்துள்ளன.



உலகத்தில் முதல் தோன்றிய மாந்தர் இனம் தமிழர் என்றாலும் எமது சமூகத்தில் களையப்பட வேண்டியவைகள் இருக்கின்றன. இவற்றை களைவதன் ஊடாகத்தான் தேசிய விடுதலைப் போரை விரைவாக முன்னெடுக்க முடியும்.

எமது விடுதலை அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு அமைய தேசிய விடுதலையுடன் கூடிய சமூக விடுதலையை எவ்வாறு வெற்றியாக முன்னெடுத்துச் செல்லலாம், மக்களை அணிதிரட்டலாம் என்பவற்றிற்கு அடேல் பாலசிங்கத்தின் இந்த நூல் பலமான தூணாக அமைகின்றது.

தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமகாலத்திலேயே சமூகத்தில் காணப்படும் தளைகள் களையப்படுமானால் மக்கள் எல்லோரும் அணிதிரள்வார்கள்.

தேச விடுதலையுடன் சமூக விடுதலையும் சமகாலத்தில் எடுத்துச்செல்வதற்கு இந்நூல் வலுச்சேர்க்கின்றது.


அடேல் அவுஸ்திரேலியாவில் பிறந்து, இங்கிலாந்தில் கல்வி கற்று, அன்ரன் பாலசிங்கத்தை திருமணம் செய்து, இருவரும் இணைந்து எமது விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியுள்ளனர்.

எமது தாயகத்தில் இந்தியப்படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எம்முடன் வாழ்ந்தவர். இந்தியப் படையுடன் நாம் மோதியபோது பல தளபதிகள் காயமடைந்தபோது தனது மருத்துவ தாதி அறிவை வைத்துக்கொண்டு எமது தளபதிகள் பலரை காப்பாற்றியவர்.


பெண் விடுதலை தொடர்பான ஆழமான அறிவின் காரணமாக "உடையாத விலங்குகள்" என்கின்ற நூலை, எமது சமூகத்தை நன்கு புரிந்து கொண்டு உருவாக்கியுள்ளார்.

பெண் விடுதலைக்கும் சமூக விடுதலைக்கும் அடேல் ஆன் பெரும் பங்காற்றியுள்ளார் என்றார் அவர்.


Comments