தென்னாசியாவின் அரசியல் மாற்றங்களும் விடுதலைப் புலிகளின் முதல் நகர்வும்

தனியார் இணையத் தளமொன்றில் ஊடகவியலாளர் அனிதாப் பிரதாப்பின் நேர்காணல் பிரசுரமானதுடன் வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பிரபாகரனிற்கு கிடைத்தது போன்றதொரு பிரமிப்பு பலரிடம் காணப்பட்டது.

அவருடன் நீண்ட காலமாக இணைந்திருப்பவர்களே அவரின் நுண்ணரசியலையும் போரியல் ஆளுமையையும் புரிய முடியாமல் இருப்பதாக எடுத்துக் கூறும்போது ஒரு தடவை பேட்டி கண்ட நபருக்கு பிரபாகரன் குறித்த பூரண புரிதல் ஏற்பட்டிருப்பது அதிசயம்தான்.

ஆனாலும் இந்திய, அமெரிக்க தேர்தல்களை கணித்து அடுத்த வருடமே பாரிய நகர்வொன்றை பிரபாகரன் மேற்கொள்வாரென கட்டியம் வேறு கூறுகிறார் அனிதாப் பிரதாப்.

அவரின் அரசியல் ஞானக் கண்ணிற்கு புலப்படாத விடயமே இந்த சார்க் மாநாட்டை ஒட்டிய விடுதலைப் புலிகளின் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்த பிரகடனம்.

அவர் கனவில் மட்டுமல்ல, எவர் கனவிலும் வந்திராத சிங்களத்தின் இராஜதந்திர உத்திகளுக்கு விழுந்த பலத்த அடியே புலிகளின் இத்தகைய அரசியல் நகர்வு.

இந்த யுத்த நிறுத்தம் சார்க் அமைப்புகளின் பார்வைக்கும் கருத்திற்கும் முன்வைக்கப்பட்ட விடயம் மட்டுமே. பதற்றமில்லாமல் தமக்கிடையே இராஜதந்திர முறுகல்களுக்கு வழி வகுக்காமல் நிம்மதியாக இம்மாநாட்டை நடத்தும்படி வழி மொழிந்ததுடன் தமிழீழ மக்கள் சார்பாக வாழ்த்துச் செய்தி வேறு புலிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 26 தொடக்கம் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை தென்னிலங்கையில் எதுவித தாக்குதல்களும் நடைபெறாதென இப்பிரகடனம் மூலம் விடுதலைப் புலிகள் உறுதியளித்துள்ளார்கள் என்று கருதலாம்.

இவ்வறிவித்தலை புலிகளின் பலவீனமென்று பரப்புரை செய்யாவிட்டால் சிங்களத்திற்கு அரசியல் ஞானம் இல்லையென்று அர்த்தப்படும்.

இதனை அரச தரப்பு மந்திரிகளும் பேச்சாளர்களுக்கு மிகச் சிறப்பாகவே செய்துள்ளனர்.

வவுனிக்குளத்தை சூழ 15 சதுர கி. மீட்டர் இடத்தை பிடித்து விட்டதாகக் கூறுவதன் ஊடாக ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தத்தை தாம் ஏற்கவில்லையென்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போதைய விரைவு நகர்வு போன்றுதான், ஜெயசிக்குறுஐ காலத்தில் புளியங்குளம், மாங்குளம், ஒட்டுசுட்டான் போன்ற இடங்களை கைப்பற்றி முன்னேறியது இராணுவம்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்படப் போகிறார்களென அன்றைய அரசும் பேரினவாத படைத்துறை ஆய்வாளர்களும் ஆரூடம் கூறினர். ஒருவித பேரினவாத மயக்க நிலையை பேணுவதற்கு இக் குறுகிய கால வெற்றிச் செய்திகள் கைகொடுத்து உதவின.

ஆட்சியாளர்கள் கட்டிய பேரினவாத எழுச்சிக் கற்பனைக் கோட்டை உதிர்ந்து போன வரலாறு ஆறு நாட்களில் எழுதப்பட்டதால் எம்மவரும் சிங்களமும் மிக இலகுவாகவே அதனை மறந்து விடுகின்றனர்.

ஏனெனில் போரியல் உத்திகளின் தந்திரோபாய அடிப்படையில் மன்னார் பிரதேசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இராணுவத் தரப்பு கருதுகிறது.

ஆகவே விடுதலைப் புலிகள் எவ்வகையான முறியடிப்புத் தாக்குதல்களை அல்லது வலிந்த நில மீட்பு இறுதிப் போரை எப்போது எங்கே ஆரம்பிப்பார்களென்பதை அனிதாப் பிரதாப்பிடமே விட்டு விடுவோம்.

ஆனாலும் புலிகள் பலமிழந்து விட்டார்கள், இவர்கள் விடுதலைப் புலிகளா அல்லது விடுதலை வீரர்களாவென்று சிங்களத்தின் சகல தரப்பினரும் புலிகளை உசுப்பேற்றும் பின்னணியில் ஏதோவொரு அவசரம் தென்படுகிறது.

அதாவது இன்றைய நிலையில் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்தால் அயல் நாடுகளின் உதவி தமக்கு அதிகமாகக் கிடைக்கும் வாய்ப்புண்டென இவர்கள் கருது கின்றனர் போலும். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து புதிய பிராந்தியச் சம நிலையை உருவாக்குவதற்கு முன்பாக விடுதலைப் புலிகளை அழித்துவிட வேண்டுமென்கிற அவசரம் அரசிற்கு உண்டு.

வடக்கு கிழக்கு இணைப்புடன் கூடிய மாகாண சபையினையோ அல்லது அதிகபட்ச தீர்வான கூட்டாட்சியினையோ தம் மீது இவ்விருவரும் திணித்து விடுவார்களென்ற அச்சம் அரசாங்கத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

மிகப் பெரும்பான்மையான சிங்கள மக்களின் பேராதரவு மஹிந்தவின் போர் நிகழ்ச்சி நிரலிற்கு கிடைத்துள்ளது.

ஜே.வி.பி. யையும் புலிகளின் ஏஜெண்டுகளென்று நம்பும் அளவிற்கு அரசின் பிரசாரம் பலமாகவுள்ளது.

இவ்வகையான போர் முழக்கங்கள் தென்னிலங்கையில் அதிர்வுகளை ஏற்படுத்த கிழக்கு மாகாணத்தை நோக்கி மேற்குலக இராஜதந்திரிகள் அடிக்கடி பயணம் மேற்கொள்கின்றனர்.

எவ்வகையிலாவது மேற்கிடமிருந்து நிதியையும் சீனாவிடமிருந்து ஆயுதங்களையும் பெற்று தமது இறையாண்மையை காப்பாற்றிக் கொள்ள சிங்களம் உறுதியாகவுள்ளது.

தற்போது சீன உறவிலும் புதிய சிக்கல் நிலையொன்று தோன்ற ஆரம்பித்துள்ளது.
இந்தியாவுடன் ஏற்படுத்தவுள்ள முழுமையான பொரு ளாதார இரு தரப்பு உடன்பாடு (Compre hensive Economic Partnership Agree ment) சீனாவிற்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளது.

இந்திய மும்மூர்த்திகளின் வருகைக்குப் பின்னர் அதிகளவு இந்திய ஒட்டுறவு தனது பிராந்திய நலனிற்கு ஆபத்தாக அமையுமென்று சீனா கருதும் அதேவேளை இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு கிடைத்த நாடாளுமன்ற பச்சைக் கொடி காட்டலும் தமக்கு ஆபத்தாக அமையுமெனக் கருதுகிறது.

சீன அரசினதும் அதன் மக்கள் விடுதலைப் படையினதும் ஆதர்ச புருஷராக விளங்கும் ஐ.ஐ.எஸ்.எஸ். (IISS) என்கிற கருத்துருவாக்கக் களமானது அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதாவது சீனாவிலுள்ள சர்வதேச கேந்திர கற்கை நெறிக்கானதொரு நிறுவனம் இது மேற்குலகின் ஐ.சீ.ஜீ. (ICG) இந்தியாவின் சவுத் புளொக் (South Block) போன்றதொரு சிந்தனைக் குதம் (Think Tank).

இரு துருவமாக விளங்கும் சீனாவையும் அமெரிக்காவையும் மிகச் சாதுரியமாக கையாளும் பாகிஸ்தானின் திறமை குறித்து இவ்வறிக்கையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதனை நாம், இந்தியாவையும் சீனாவையும் தற்போது கையாளும் இலங்கையுடனும் ஒப்பிடலாம்.

அதேவேளை அமெரிக்க இந்திய புதிய உறவால் சீனாவிற்கு எதிராக மாற்றமடையும் தென்னாசிய அரசியல் இராஜதந்திர பரிமாணங்கள் குறித்தும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஊடாக குடிசார் சக்தி தேவைகளை வளர்க்கும் அதேவேளை நீண்ட காலமாகத் தொடரும் ரஷ்ய உறவின் மூலம் அணு ஆயுத தொழில் நுட்பத்தை இந்தியா விரிவுபடுத்துமென்பதே இந்திய சீன சிந்தனைவாதிகளின் கணிப்பு.

அமெரிக்க இந்திய புதிய உறவானது பாகிஸ்தானை விட சகல துறைகளிலும் பலம் மிக்கதொரு இந்தியாவை உருவாக்கி அந்நாட்டுடன் பாகிஸ்தான் மோதும் நிலை ஏற்படலாமென்று கூறப்படுகிறது.

அத்தகைய யுத்த நிலையில் பாகிஸ்தானிற்கு ஆதரவாக இணையும் சீனப் படை இறுதியில் இந்தியாவுடன் மோதலில் ஏற்படும் வாய்ப்பு உண்டென அவ்வறிக்கை எதிர்வு கூறுகிறது.

இத்தகைய இந்திய பாகிஸ்தான், இந்திய சீன யுத்தங்கள், இந்திய நில ஒருமைப்பாட்டை சிதைத்து, பல துண்டுகளாக பிளவுபடுத்தும் நிலையை உருவாக்குமெனவும் அதனை அமெரிக்கா விரும்புவதாகவும் இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

பல்தேசிய இனக் குழுக்களும், மதங்களும் வாழும் இந்தியாவில் இவ்வுடைவு சாத்தியமென்பதே சீன அறிவாளிகளின் வாதம்.

ஆக மொத்தம், ஒரு விடயம் மட்டும் தெளிவாகப் புரிகிறது. மூன்று குழுக்களுடன் வெட்டி ஓடிய இலங்கை அரசாங்கம், இனி இரண்டு குழுக்களுடன் மிக அவதானமாக விளையாடப் போகிறது.

- சி.இதயச்சந்திரன்-


Comments