குழம்பிப்போன இந்திய இராஜதந்திரமும் ஆரம்பிக்கப் போகும் உக்கிர மோதல்களும்

மன்னார் களமுனை குழப்பமான ஊகங்களை பல மட்டங்களிலும் ஏற்படுத்தி உள்ள வேளையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட அடுத்த நகர்வு பிராந்திய வல்லரசாக தன்னை தக்கவைக்க முயலும் இந்தியாவையும், இலங்கை அரசையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை இந்திய அரசும் இலங்கை அரசும் தமக்கு சாதகமான காய்நகர்த்தல்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்தன. ஆனால் விடுதலைப்புலிகளின் தற்காலிக போர் நிறுத்த அறிவித்தல் இரு நாடுகளுக்கும் பெரும் தர்மசங்கடங்களை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய இலங்கை அரசாங்கத்திற்கு விடுதலைப் புலிகளின் இந்த அறிவித்தல் அனைத்துலக மட்டத்தில் பாரிய சங்கடங்களை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்துலக நாடுகள் அனைத்தும் இலங்கையில் நடைபெற்றுவரும் இன மோதல்களுக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என தெரிவித்து வரும் நிலையில் முழுக்க முழுக்க படைத்துறைத் தீர்வை நாடுவதாகவே இலங்கையின் அணுகுமுறைகள் அமைந்துள்ளதையே விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த அறிவித்தல் வெளிவந்த பின்னர் அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இருந்து வெளி வந்த அறிக்கைகள் கோடிட்டு காட்டியுள்ளன.

விடுதலைப்புலிகளின் ஒரு தலைப்பட்ச போர்நிறுத்தத்தை நிராகரித்த இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார படையினர் தமது நடவடிக்கைகளை தொடர்வார்கள் என கடந்த புதன் கிழமை தெரிவித்துள்ளார்.

விடத்தல்தீவு, இலுப்பைக்கடவை என பல பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த உடன்பாட்டை ஒரு பலவீனத்தின் வெளிப்பாடாக கருத்தில் கொண்டுள்ளது.

இந்திய அரசின் நகர்வுகளை பொறுத்தவரையில் இந்து சமுத்திர பூகோள அரசியலில் தனது செல்வாக்கை தக்கவைப்பதற்காக படையி னரை தரையிறக்குவதுடன், இலங்கையின் பொருளாதாரத்தையும் அது தூக்கிநிறுத்த முற்பட்டுள்ளது.

இவை தவிர தென்ஆசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தொடரில் பங்குபற்றும் தலைவர்களுக்கு இலங்கை யில் பாதுகாப்பில்லை என்ற பலமான கோஷத்தை முன்வைப்பதன் மூலம் விடுதலைப்புலிகளை அனைத்துலக சமூகத்திற்கு ஒரு பயங்கரவாத அமைப்பாக சித்திரிக்கவும் அது முற்பட்டுள்ளது.

ஆனால் இந்திய அரசின் இந்த இராஜதந்திர நகர்வுகளை மிஞ்சியதாக விடுதலைப்புலிகளின் இராஜதந்திர நகர்வு அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. தென்னாசிய நாடுகள் எதற்கும் தமது போராட்டம் எதிரானது அல்ல என தெரிவித்து வரும் விடுதலைப்புலிகள் சார்க் மாநாட்டு காலப்பகுதியில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளமை முக்கிய நகர்வாகும்.

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் இந்திய படைகளின் இலங்கை விஜயத்தின் உண்மை நோக்கம் தெளிவாகியுள்ளது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்திற்கு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் உள்ளது, எனவே தான் இந்திய படை களமிறக்கப்படுகிறது என்ற விளக்கங்களும் வலுவிழந்துள்ளன.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான விவாதங்களின் போதும், அதற்கு அனுசரணை வழங்க நோர்வே முன்வந்த போதும் இலங் கையின் இறையாண்மை குறித்து அழுத்தமான கருத்துக்களை வெளியிட்டுவந்த அராங்கம் இந்திய படையினரின் தரையிறக்கத்தினால் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விடுதலைப்புலிகளின் மீது சுமத்த முற்பட்டிருந்தது.

இதேவேளை, தென்ஆசிய பிராந்தியத்தில் இந்திய அரசு மேற் கொண்டு வரும் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஆதரவாக அண்மைக்காலமாக ஈரானும் கூட்டுச்சேர்ந்துள்ளது. தெற்காசிய பிராந்திய கூட்டமைப்புடன் தனது கரத்தையும் கோர்ப்பதன் மூலம் மேற்குலகத்தின் நகர்வுகளுக்கு ஒரு முட்டுக்கட்டை போட அது முயன்று வருகின்றது.

அதன் வெளிப்பாடாகவே இந்தியாவுடன் எரிவாயு விநியோக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதுடன், இலங்கைக்கும் இந்த வருடத்தில் மிக அதிகளவிலான நிதி உதவிகளை அது வழங்கியுள்ளது.

இந்த வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதி யில் ஈரான் 450 மில்லியன் டொலர்களை கடனாகவும், உதவித்தொகைகளாகவும் வழங்கியுள்ளது. இலங்கை யில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டின் பார்வையாளராக தனது வெளி விவகார அமைச்சர் மனோவே மொடொ கியை அனுப்பவும் அது தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் தென் ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு எதிராக போட்டி போடும் ஜப்பானும் தனது வெளி விவகார அமைச்சர் மசகி கொய்முராவை பார்வையாளராக அனுப்பத் தீர்மானித்துள்ளது.

தென்ஆசியாவின் ஆளுமை தொடர் பாக நடைபெறும் இந்த இழுபறிகளுக்கு மத்தியில் விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்ச மான போர் நிறுத்த அறிவித்தலை இலங்கை அரசாங்கம் பலவீனத்தின் வெளிப்பாடாக சித்திரிக்க முற்பட்டுள்ளதுடன், அதனை தென்னி லங்கையில் பெரும் பிரசாரங்களாகவும் முன்னெடுத்து வருகின்றன.

கடந்த வாரம் மன்னாரின் வடக்குபுறமாக 20 கி.மீ தொலைவில் உள்ள விடத்தல்தீவை கைப் பற்றிய 58 ஆவது படையணியினர் அதற்கு 7 கி.மீ தொலைவில் வடக்குபுறமாக உள்ள இலுப்பைக்கடவையை விரைவாக கைப்பற்றியது அரசாங்கத்திற்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

விடத்தல்தீவு மற்றும் இலுப்பைக்கடவை பகுதிகளில் ஏறத்தாழ 3 கொம்பனிகளை சேர்ந்த விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணிகள் நிலைகொண்டிருந்த போதும் அவர்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேறியது தவறான அனுமானங்களை பல மட்டங்களிலும் தோற்றுவித்துள்ளது.

தற்போதைய படை நடவடிக்கையை பொறுத்தவரையில் அதிக சுடுவலு, அதிக படைபலம் இவற்றை நம்பியே படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல்குழல் உந்துகணை செலுத்திகள், அதிக வான் தாக்குதல், அதிக சுடுவலு இவற்றுடன் படையில் சேர்த்துக் கொள்ளப்படும் அதிக இளைஞர்கள் இவைதான் தற்போதைய படை நடவடிக்கையின் நம்பிக்கைகள்.

இராணுவத்தளபதியின் அண்மைக்கால பேட்டிகளிலும் இந்தக்கருத்து எதிரொலித்துள்ளது. அதாவது 2002 ஆம் ஆண்டு 118,000 இராணுவத்தினரை கொண்டிருந்த இலங்கை இராணுவம் தற்போது 162,000 பேரை கொண் டுள்ளதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 40 புதிய பற்றலியன்கள் இராணுவத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது இராணுவத்தின் 37 சதவீத அதிகரிப்பாகும். எனி னும் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக உக்கிரமடைந்துள்ள மோதல்களில் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்ட படையினர் மற்றும் தப்பி ஓடிய படையினர் தொடர் பான விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட வில்லை.

இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் ஒவ்வொரு ஈழப்போரிலும் அரசாங்கங்கள் தமது இராணுவ இயந்திரத்தை மறு சீரமைத்துக் கொள்வது வழமை.

1983 ஆம் ஆண்டு ஜுலை 23 ஆம் நாள் இரவு 9.45 மணியளவில் மாதகல் இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட “சார்லி’ என்ற சங் கேத பெயர் கொண்ட சுற்றுக்காவல் அணி திரு நெல்வேலியில் தாக்குதலில் சிக்கும் வரையிலும் இராணுவம் ஏறத்தாழ 12,000 பேரையே கொண்டிருந்தது.

அதன் பின்னரே படையினர் மத்தியில் பல மறுசீரமைப்புக்கள் மேற்கொள் ளப்பட்டதுடன் இராணுவத்தை ஒரு போரை எதிர்கொள்ளும் நிலைக்கும் அரசு மாற்றியிருந்தது.

1980 களின் முற்பகுதியில் படையணிகள் (Division) தரநிலைக்கு இராணுவம் தரமுயர்த் தப்பட்டதுடன், அதன் ஆட்தொகையும் சடுதி யான அதிகரிப்புக்களைக் கண்டிருந்தது.

உதாரணமாக 1982 இல் 11,000 படையினரை கொண்ட இராணுவம் 1985 களில் 16,000 வீரர்களைக் கொண்டதாக தோற்றம் பெற்றது. 1984 காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில் இருந்த படையினர் அடிக்கடி புலிகளின் தாக்கு தல்களுக்கு முகம்கொடுக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தலைப்பகுதியை சிதைத்துவிட்டால் போராட்டம் ஒடுங்கிப்போய்விடும் என அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்துமுதலி திட்டம் ஒன்றை வகுத்திருந்தார். அதுவே 1987 ஆம் ஆண்டு போடப்பட்ட யாழ். குடா நாட்டை கைப்பற்றும் திட்டம்.

இதில் பெரும் படைபலம் கொண்டு விடுத லைப் புலிகளுடன் மோதுவது என்ற உத்தி பின்பற்றப்பட்டது. அதற்கேற்ப 1985 இல் 16,000 வீரர்களைக் கொண்டிருந்த இராணுவம் 1986களில் 30,000 வீரர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது. அதாவது ஏறத்தாழ 90 சத வீத அதிகரிப்பு. ஒப்பரேசன் லிபரேசன் என்ற படை நடவடிக்கைக்காக 5,000 படைவீரர்கள் வடமராட்சியில் களமிறக்கப்பட்டனர்.

எனினும் அரசின் இந்த சடுதியான படை அதிகரிப்பை ஈடுகட்டும் முகமாக கரும்புலிகள் என்ற போராயுதம் விடுதலைப் புலிகளால் அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் இந்திய அமைதிப்படை என்ற போர்வை யில் துருப்புக்களை கொண்டு விடுதலைப் புலிகளுடன் மோதலில் இறங்கியது. முற்று முழு தாக கெரில்லாப் போர் முறைக்கு மாற்றம் பெற்ற விடுதலைப் புலிகள் இந்தியப் படைகளுக்கு பெரும் சவாலாகினர்.

வடக்கு மற்றும் கிழக்கில் மட்டும் செறிவாக் கப்பட்ட இந்தியப் படையினரால் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன் இந்தியப்படைகளும் வெளியேறத் தொடங்கின.

இரண்டாவது ஈழப்போர் ஆரம்பமாகியது. தமது படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பை முன்வைத்து தான் விடுதலைப் புலிக ளுடனான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவோம் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர்கள், தளபதிகள், ஜனாதிபதி போன்றோர் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடுவது வழக்கம்.

இரண்டாவது ஈழப்போரிலும் படையினர் பெருமளவு ஆளணி அதிகரிப்பை மேற் கொண்டிருந்தனர். 1990 ஆம் ஆண்டு இராணு வத்தினரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தொட்டது. 1991 ஆம் ஆண்டு இரண்டாவது ஈழப்போர் ஆரம்பித்ததும் அது 70 ஆயிரமாக பெருகியது. இராணுவத்தினரின் இந்த அதிக ரிப்புடன் விடுதலைப் புலிகளின் பின்தளப் பகுதியான மணலாறை கைப்பற்ற கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனையிறவை மீட்க 1991 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஆகாய கடல்வெளி சமரில் ஏறத்தாழ 900 விடுதலைப் புலிகள் உயிரிழந்ததை தொடர்ந்து விடுதலைப் புலிகளின் இதயபூமியான மணலாறை நோக்கி பெரும் படை நடவடிக்கை ஒன்றை பிரமேதாச அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.

அதாவது ஆனையிறவு தாக்குதலுடன் விடு தலைப்புலிகளின் பலம் கணிசமான அளவில் குறைந்திருக்கும் என்பது தான் மணலாறில் நடைபெற்ற மின்னல் நடவடிக்கைக்கான காரணம். ஆனால் அரசாங்கத்தின் கணிப்பு தவறாகிப்போனது.

அதன் பின்னர் 1993 ஆம் ஆண்டு லெப். ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ தலைமை யில் மீண்டும் யாழ். குடாநாட்டை கைப்பற்றும் முயற்சிகள் திட்டமிடப்பட்டன. அதற்கு ஏதுவாக மீண்டும் படை அதிகரிப்பு கடுகதியில் மேற்கொள்ளப்பட்டது.

1993 ஆம் ஆண்டு படையினரின் எண் ணிக்கை 90 ஆயிரமாக உயர்ந்தது. அதாவது 3 வருட காலப்பகுதியில் படையினரின் எண் ணிக்கை 40 ஆயிரத்தால் உயர்ந்தது. எனினும் 3 டிவிசன் கட்டளைப் பீடங்களுக்குள் தான் அவை உள்ளடக்கப்பட்டிருந்தன. அதாவது இராணுவம் 3 டிவிசன் தலைமையகங்களுடன் பல பிரிகேட்டுகள், றெஜிமென்ட்டுகளை சுயா தீனமாக கொண்டிருந்தது.

அப்போது படையினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் கட்டமைப்பிலோ அல்லது செயற்றிறனிலோ முன்னேற்றம் ஏற்படவில்லை. கொப்பேகடுவவின் மரணத்துடன் யாழ். மீதான படை நடவடிக்கை பிற்போடப்பட்டது.

பூநகரி படைத் தளம் மீதான விடுதலைப்புலிகளின் படை நடவடிக்கையை அடுத்து தமது தளங்களை பாதுகாக்க மேலதிக இராணுவத்தினர் தேவை என்ற யதார்த்தத்தை படைத்தரப்பு உணர்ந்தது.

மேலதிக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருந்தன. 1994 இல் 1 இலட்சத்து 5 ஆயிரம் படையினரைக் கொண்டதாக இராணுவம் மாற்றம் பெற்றது. எனினும் பேரழிவுகளுடன் போர் தற்காலிகமாக 1994 இல் முடிவுக்கு வந்ததே தவிர எந்த நோக்கத்திற்காக படையினரின் எண்ணிக்கை அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதோ அவை எதிர் மறையாகிப் போனது தான் வரலாறு.

சந்திரிகா அரசாங்கமும் இராணுவத்தீர்வு மீது நம்பிக்கை கொண்டது. படையினரை போருக்கு ஏற்றவாறான முழுமையான கட்டளைப் பீடங்களாக ஒழுங்குபடுத்துவதன் மூலமும், நவீன ஆயுதங்களை கொள்வனவு செய் வதன் மூலமும் போரை வென்றுவிடலாம் என அன்றைய பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தையினால் திட்டங்கள் வரையப்பட்டன.

அதாவது படையினரை ஒரு சீரான தாக்குதல் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து முழுமையாக ஒழுங்குபடுத்துதல் (Organizational changes) தான் அங்கு பிரதானமாக கருதப்பட்டது. அதனுடன் தரமான பயிற்சிகளுடன் இராணுவத்தை வலிமைப்படுத்தும் உத்திகளும் பின்பற்றப்பட்டன.

1994 ஆம் ஆண்டு வரையிலும் 3 படை யணிகளை கொண்டிருந்த இராணுவத்தின் சுயாதீனமான பிரிகேட்டுகளை ஒன்றிணைத்து மேலும் 3 படையணிகள் 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. இந்த படையணிகளில் முன்னர் சுயாதீன பிரிகேட்டாக இருந்த சிறப்புப் படையினரின் பிரிகேட்டுகள் ஒரு முழுமையான சிறப்புப் படையணியாக மாற்றம் பெற்றது.

அதுவே 53 ஆவது படையணியாகும். அதா வது மூன்றாவது ஈழப்போரில் படையினரின் எண்ணிக்கையில் பெருமளவில் மாற்றங்கள் இடம்பெறவில்லை. அதன் கட்டமைப்பிலும், கனரக ஆயுதங்களின் வலுவிலும்தான் அதிக மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

அதன் பின்னர் அரசச்கம் மேற்கொண்ட படைச்சேர்ப்புக் கள் எல்லாம் தப்பி ஓடுவோர், போரில் மரண மடைவோர் மற்றும் காயமடைவோர் போன்றவர்களினால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கே போதுமாக இருந்தது.

இருந்த போதும் தன்வசம் உள்ள படையி னரை மேலும் பிரித்து மேலதிக படையணிக ளும், கட்டளைப் பீடங்களும் உருவாக்கப்பட் டன. 1996 ஆம் ஆண்டு இரு படையணிகளும் (54 ஆவது, 55 ஆவது படையணிகள்), 1997 ஆம் ஆண்டு மேலும் ஒரு படையணியும் (56 ஆவது படையணி) உருவாக்கப்பட்டது.

1999 களில் படையினர் 9 படையணிகளை கொண்டிருந்த போதும் இராணுவத்தினரின் எண்ணிக்கை 90 ஆயிரமாகவே இருந்தது. புதிய படையணிகள் உருவாக்கப்பட்டு, புதிய புதிய கட்டளைப் பீடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, தரமான பயிற்சிகள், முன்னணி மேற்குலக நாடுகளின் இராணுவ ஆலோசனைகள் என்பன வழங்கப்பட்ட போதும் மூன்றாம் ஈழப்போரில் இராணுவம் வெற்றிபெற முடியவில்லை.

முல்லைத்தீவு, ஆனையிறவு என்பன இழக்கப்பட்டன. வரலாற்றில் மிகவும் நீண்டதும் பெரியதுமான படை நடவடிக்கை என கரு தப்பட்ட ‘ஜெயசிக்குறு” படை நடவடிக்கை தோல்விகண்டது.

இலங்கைப் படையினரின் 53 ஆவது, 55 ஆவது என இரு முன்னணி படையணிகள் மேற்கொண்ட தீச்சுவாலை நடவடிக்கை தோல் வியடைந்ததுடன் 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தம் உருவாகியது.

இந்தப் போர் நிறுத்த காலப்பகுதியில் இரா ணுவம் தன்னை மீண்டும் ஒழுங்குபடுத்த முற்பட்டிருந்தது. படையில் இருந்து தப்பி ஓடிய வர்களுக்கு பொது மன்னிப்புக்கள் பல தடவைகள் வழங்கப்பட்டன. புதிதாக படையினரும் சேர்க்கப்பட்டனர்.

போர்நிறுத்த காலம் என்ப தினாலும், அரசி னால் அறிவிக்கப்பட்ட அதிகளவான ஊதியங் கள், சலுகைகளினாலும் கவரப்பட்டு தப்பி ஓடிய படையினரில் ஒரு தொகுதியினர் மீண்டும் இணைந்ததுடன், புதியவர்களும் அதிகம் இணைந்து கொண்டனர். இதன் மூலம் 2002 ஆம் ஆண்டு படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

மோதல்கள் தீவிரம் அடைந்து நான்காம் கட்ட ஈழப்போரும் உருவாகியது. இந்த நிலையில் தான் இராணுவம் தனது 9 படையணிகளில் உள்ள படையினரையும், புதிதாக சேர்த் துக் கொள்ளப்பட்ட படையினரையும் பிரித்து 13 படையணிகளை ஒழுங்குபடுத்தியுள்ளது. இதில் உருவாக்கப்பட்ட 57, 58, 59 ஆவது படையணிகளை தாக்குதல் படையணிகளாக உருவாக்கியுள்ளது.

25 ஆயிரம் படையினரை முன்நிறுத்தி கிழக்கை கைப்பற்றிய அதேசமயம் வடக்கி லும் 40,000 படையினரை நகர்த்தும் திட்டங்களை அது நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதற்காகவே படையினரின் எண்ணிக்கைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

ஆனால் வடபோர்முனையில் தினமும் நடை பெறும் கெரில்லாத் தாக்குதல்கள், பீரங்கி மற் றும் மோட்டார்த் தாக்குதல்களினால் களத்தில் உள்ள படையினரும் களைப்படைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவற்றையும் தாண்டி படையினர் எட்டியுள்ள படைப்பல அதிகரிப்புக்கு ஏற்ப விடுதலைப்புலிகளும் புதிய போர் உத்திகள், புதிய ஆயுதங்கள், புதிய களமுனைகள் என தமது களங்களை விரிவாக்கியே வருகின்றனர்.

எனவே களமுனை என்பது காகிதத்தில் வரைவது போல இலகுவாக இருக்கப்போவ தில்லை. 37 சதவீத அதிகரிப்புடன் விடுதலைப் புலிகளை வலிந்த சமருக்கு இழுக்க முற்பட்ட இராணுவ தந்திரோபாயத்தை விடுதலைப்புலிகள் நேர்த்தியாக கையாண்டு வருவதையே வன்னி மற்றும் மன்னார் களமுனைகள் எடுத்து காட்டுகின்றன.

அதாவது ஊதிப்பெருத்துள்ள படையினர் பரந்து விரிவதற்கு சில களமுகைளை தாரை வார்ப்பது போரியல் உத்திகளில் முதன்மையா னது. சோவியத் யூனியனில் ஸ்ரேலின்கிராட் ஆக்கிரமிக்கப்பட்ட போது ஜேர்மனிய படையினரை எதிர்க்கும் அளவிற்கு படைப் பலத்தை சோவியத் கொண்டிருந்த போதும் அது சேதமின்றி தனது படைவீரர்களை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தொடர்ச்சியாக பின்னே நகர்த்தியே வந்திருந்தது. பின்னர் வலிந்த தாக்குதலை சோவியத் படைகள் ஆரம்பித்த போது, ஜேர்மனிய படைகளால் தம்மை தற்காத்து கொள்ளக் கூட முடியவில்லை.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் அண்மையில் மேலும் ஒரு தொகுதி நவீன ஆயுதங்களை தருவித்துள்ளதாக படையினரின் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளதுடன், வன்னியில் புதிய படையணிகளும் பயிற் சிகளை நிறைவு செய்து வெளியேறி வருவதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

புதிய அணிகள், சேமிக்கப்படும் ஆயுதங்கள், தாக்குதல் பயிற்சிகள் என வன்னி பகுதி மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் இராணுவத்தின் படையணிகள் பல மன்னார் களமுனைகளில் தொடர்ச்சியாக உள்வாங்கப்ப டும் இரகசியம் தொடர்பாக குழப்பங்களும் எழாமல் இல்லை.

இலங்கை மற்றும் இந்திய அரசுகள் மேற் கொண்ட இராஜதந்திர நகர்வுகளுக்கு பதிலடி யாக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட இரஜ தந்திர நகர்வே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தமாகும். அதனை விடுதலைப்புலிகளின் பலவீனமாக அரசாங்கம் கருதி படையி னரை ஆழமாக நகர்த்துமாக இருந்தால் அது தவறான தீர்மானமாக அமையலாம்.

2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைதி பேச்சுக்களுக்கு அனுசரணை வழங்கும் முக மாக விடுதலைப்புலிகள் தற்காலிக போர் ஓய்வை அறிவித்திருந்தனர். ஆனால் அதனை விடுதலைப்புலிகளின் பலவீனமாக கருதிய சந்திரிகா அரசாங்கம் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், போர் நிறுத்தம் முடிவடைந்த இரு மணி நேரத்தில் தீச்சுவாலை என்னும் பாரிய படை நகர்வை மேற்கொண்டி ருந்தது. ஆனால் அன்று என்ன நடந்தது என் பது உங்களுக்கு நன்கு தெரிந்ததே.

- வேல்ஸிலிருந்து அரூஷ் -


Comments