![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmNkjhyphenhyphenlmm3ZzaEpadz9hy5HsnpwB4FrLjhyz8elVNlO3-7dFvw8M9wIxWUgiVK1G82a-XmVkGSNzTNcgFtMqVcMuaSwAH_iuCtTTW4tjzSy-pvVYRTTy-9xkobx24qQYP89XSJT7Z9aoV/s400/tro_20080722001.jpg)
மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளினால் பாதிக்கபடுகின்ற அப்பாவி பொதுமக்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்யும் பணியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஈடுபட்டு வருகின்றது.
சிறிலங்கா அரச படைகளால் மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற படை நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்விடங்களை இழந்த நிலையில், உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு பாதிக்கப்பட்டு வருகின்ற மக்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தனது அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு ஊடாக - ஏனைய வேலைத்திட்ட பிரிவுகளையும் ஒருங்கிணைத்து - பாதுகாப்பான இடங்களுக்கு ஏற்றி இறக்குகின்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq-Peh7wDQUBfi17OXCAqetyOnx8Ek1E634FlcEHIAaJIOBb6kqnXEXYmSGXFnGMBpn22i0R9YQF102h7PngFSeyTCXpE9zpFnSSs3-e3g9RMw-vqUmrQE0obDkUoXt_SWBr6RLTJKi9aA/s400/tro_20080722007.jpg)
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் - வாகனங்கள் சகிதம் - கடந்த சில நாட்களாக தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறாக ஏற்றி இறக்கப்படுகின்ற மக்களில் பெரும்பாலானவர்கள் பண்டிவிரிச்சான், சின்னப்பண்டிவிரிச்சான், மடு, தட்சனார்மருதமடு, பாலம்பிட்டி, பெரியமடு, அடம்பன், பள்ளமடு, விடத்தல்தீவு போன்ற இடங்களில் சிறிலங்கா அரச படைகள் முன்னர் மேற்கொண்ட படை நடவடிக்கைகளால் ஏற்கனவே பல தடவைகள் இடம்பெயர்நதவர்கள் ஆவர்.
இவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து, பாதுகாப்புத்தேடி அலைந்து, தற்காலிக குடியிருப்புக்களில் வாழ்ந்து வந்தனர்.
தற்போது இலுப்பைக்கடவை, விடத்தல்தீவு, கூராய் போன்ற இடங்களை ஆக்கிரம்பித்துக்கொண்டிருக்கும் படையினரின் நகர்வு முயற்சிகளாலும் எறிகணை வீச்சுத் தாக்குதல்கள், வான்குண்டுவீச்சுத் தாக்குதல்கள் மற்றும் ஆழ ஊடுருவும் படையினரால் நடத்தப்பட்ட வருகின்ற தாக்குதல்கள் ஆகியவற்றால் மீண்டும் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6J9STl95emcTfYCaSRHjjQrcnQK7JEcN8n4DJF0seZrBCrOYxJmTwlavDxAcqL93IuUU3oS72GwI9uiNm0vW4RYu7rb8P3Wp7gWVlNC505MnhW30nOdvnOdjbA4ZC0BvV9Lma8HfrBdB5/s400/tro_20080722002.jpg)
மர நிழல்களிலும் காடு மேடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் கிளிநொச்சி, அக்கராயன், ஜெயபுரம், ஆனைவிழுந்தான் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு ஏற்றிச்செல்லப்பட்டு அங்கு தற்போது தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்த பகுதிகளில் மழையும் இடையிடையே பெய்துகொண்டிருப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். அத்துடன், அவர்களுக்கான அடுத்தகட்ட மீள்வாழ்வுப் பணிகளிலும் பெரும் பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளன.
மக்களுக்கான தற்காலிகக் குடிமனைகள், மலசலகூட வசதிகள், குடிநீர்ப் பிரச்சினைகள், மருத்துவ வசதிகள், சுகாதார தேவைகள் ஆகியவற்றை சரிவர நிறைவேற்றிக்கொடுக்க முடியாதளவிற்கு அரசு சார்பற்ற நிறுவனங்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, மக்களுக்கான தங்குமிட வசதிகள், உணவு மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள் ஆகியோர்களுக்கான உணவு மற்றும் ஏனைய தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் உட்பட அனைத்து வழிமுறைகளும், தொடரும் சிறிலங்கா அரசின் பொருளாதாரத்தடைகள் மற்றும் நிதி முடக்கங்கள் போன்ற கெடுபிடிகளால் உடனடிச் சாத்தியமற்றவையாக காணப்படுகின்றன.
ஆயினும், மாற்று வழிமுறைகளைக் கையாண்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் ஏனைய உள்ளுர் நிறுவனங்களும் முடிந்தவரையிலான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கிடைக்கப்பெறுகின்ற பொருட்களின் விலைகளும் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றன. அவற்றைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் மட்டுமல்ல, அவர்களுக்குப் பணியாற்ற வேண்டிய உள்ளுர் நிறுவனங்களும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.07.08) பிற்பகல் 3:30 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முழங்காவில் அன்புபுரம் கரையோரக் கிராமத்தின்மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் மற்றும் சிறிலங்கா கடற்படைப் பீரங்கிப் படகுகள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டுவீச்சுத்தாக்குதல்களில் ஒன்பது பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர்.
அந்தப் பகுதியில் கடல்தொழிலையே வாழ்வாதாரமாகக்கொண்டு வாழ்ந்துவந்த மக்களின் 15-க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள், வலைகள் ஆகியவை சேதமடைந்துள்ளன.
மக்கள் செறிவாக வாழும் குடியிருப்புக்களை இலக்குவைத்தே இந்த தாக்குதல்கள் நடததப்பட்டுள்ளன.
சிறிலங்கா கடற்படையின் பீரங்கிகள் பொருத்தப்பட்ட 16 படகுகள் இந்த குடியிருப்புக்கள் மீது பீரங்கித்தாக்குதலை நடத்தியுள்ளன. படையினரின் இந்த தாக்குதல் நேற்று முன்நாள் மாலை 5:00 மணிவரை நீடித்தன.
இந்த தாக்குதல்கள் காரணமாக முழங்காவில் பிரதேச பாடசாலைகளின் பரீட்சை செயற்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். தரம் 5 புலமைப் பரீட்சை முன்னோடிக் கருத்தமர்வு வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.
படையினரின் தாக்குதல்களால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர் என்று முழங்காவில் பாடசாலை அதிபர் சு.கணபதிப்பிள்ளை தெரிவித்தார்.
இவ்வாறான தாக்குதல் மாணவர்களின் கல்வியை மட்டுமல்லாமல் அவர்களின் மனநிலைகளையும் வெகுவாகப் பாதித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Comments