விடத்தல்தீவு மற்றும் வவுனிக்குளம் ஆகிய பகுதிகளைக் குறிவைக்கும் படையினர்

வன்னியில் படைகள் அகலக்கால் வைத்து மற்றுமொரு ஜயசிக்குறூய் படை நடவடிக்கையை அரசு நடத்துகிறது. வட பகுதியிலே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பெயரிடப்படாத நடவடிக்கை தொடர்கிறது. விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியவாறு அவர்கள் வசமுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதே படைகளது நோக்கம்.

1996 இல் ஆரம்பிக்கப்பட்ட ஜயசிக்குறூய் படைநடவடிக்கையின் நோக்கம் வேறு தற்போது நடைபெற்றுவரும் படைநடவடிக்கையின் நோக்கம் வேறு. ஜயசிக்குறூய் நடவடிக்கை வவுனியாவுக்கும் யாழ்க்குடா நாட்டுக்குமிடையேயான தரைவழிப்பாதையை திறப்பதையே நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் “ஏ9” வீதியைக் கைப்பற்றி வன்னியை இரண்டாகப் பிளவுபடுத்தி, வன்னிக்குள் தொடர்பற்ற இரு பகுதிகளுக்குள் புலிகளைப் பலமிழக்கச் செய்து பின் பிரிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிகளுக்குள்ளும் புகுந்து அவர்களை அழித்து நிலத்தினைக் கைப்பற்றுவதே ஜயசிக்குறூவின் நோக்கமாயிருந்தது.

இதன்மூலம் ஆனையிறவிலிருந்தும், பூநகரியிலிருந்தும் புறப்பட்ட படைகள் பரந்தன் ஊடாக கிளிநொச்சி வரை நகர்ந்திருந்தன. அதேபோல் வவுனியாவிலிருந்து நகர்ந்த படைகள் இருவருடங்களின் பின் மாங்குளம் வரையும்,; நெடுங்கேணியூடாக இரகசியமாக நகர்ந்த படைகள் (தற்போது சிறாட்டிகுளம் வரை இராணுவம் நகர்ந்தது போல்.) வாவெட்டிமலை ஊடாக ஒட்டுசுட்டான், ஒலுமடு, ஏன் அம்பகாமம் வரை நகர்ந்திருந்தன. அதற்குமேல் அவர்களால் ஒரு அடி கூட நகர முடியவில்லை.

அதேபோல்த்தான் மன்னார்க் களமுனையிலும் ரணகோச, ஜயசிக்குறூய், ஆகிய நடவடிக்கைகளினால் பள்ளமடுவுக்கு தெற்காக ஒருமைல் தூரம் வரை நகர்ந்திருந்தனர். அத்துடன் வவுனியாக் களமுனையான மூன்று முறிப்பிலிருந்து நகர்ந்த படைகள் பனங்காமம் வரையும் நகர்ந்திருந்தன. அன்றைய ஜயசிக்குறூய் ஏ9 ஐ மையமாக வைத்து அதனை அண்டிய இருபகுதிகளையும் கைப்பற்றியவாறு நகர்ந்தனர். இது ஜயசிக்குறூவின் களநிலமை

ஆனால் தற்போது இடம்பெறும் நடவடிக்கைகள் ஏ9 வீதியை மையப்படுத்தியதாக இருக்கவில்லை. வன்னியின் இரு கரையோரங்களையும் மையமாகக் கொண்டதுடன் ஏ9 வீதிக்குச் சமாந்தரமாக ஏ32 வீதி மற்றும் முல்லைத்தீவு செல்லும் வீதி ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இது வன்னியை மீளக் கைப்பற்றுவதுடன் விடுதலைப் புலிகளின் கடல்வழி விநியோகங்களை மூடி கடற்புலிகளைப் பலமிழக்கச் செய்யும் நோக்குடன் கடந்த ஒன்றரை வருடங்களாக இடம்பெறுகிறது.

ஏ32 வீதியைக் கைப்பற்றுவதன் மூலம் விடுதலைப்புலிகளின் தமிழகத்துக்கான தொடர்பைத் துண்டித்து விடுவதுடன் யாழ்க்குடாநாட்டில் நிலைகொண்டிருக்கும் படைகளுக்கான தரைவழி வழங்கல்களையும் மேற்கொள்ள முடியும். அதேபோல் தான் முல்லைத்தீவினைக் கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் சர்வதேசத்தின் தொடர்புகளை துண்டிக்கலாம் என்ற எண்ணத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இனி விடத்தல் தீவு பற்றி நோக்குவேமானால் பத்திரிகைகளும் இராணுவ ஆய்வாளர்களும் கூறுவதுபோல் விடத்தல்தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியா? என்று நோக்கினால். உண்மையில் இல்லை என்றே சொல்லலாம்.

விடத்தல் தீவினுடைய அமைவிடத்தை நோக்குவோமானால் மன்னாரிலிருந்து கிட்டத்தட்ட 16 மைல் தொலைவில் விடத்தல்தீவு அமைந்திருக்கின்றது. பள்ளமடுச் சந்தியிலிருந்து 2மைல் தொலைவில் உள்ள விடத்தல்தீவுக் கடற்பரப்பு மிக ஆழம் குறைந்ததாகவே உள்ளது. அவை சேற்றுக்கடலாகவே விளங்குகின்றது. பெரிய படகுகள் விடத்தல்தீவின் இறங்கு துறைக்குள் நுழைய முடியாது. ஏனெனில் அது ஓர் வற்றுப் பெருக்குக் கடல் இறங்கு துறையிலிருந்து கடலைப்பார்க்க முடியாது. காரணம் கடலினுள் கண்டல் மரங்களும் ஏனைய கடல்த்தாவரங்களும் உயர்ந்து வளர்ந்திருப்பதனால் கடலைப்பார்க்க முடியாது.

அதிகாலையில் கடல் நீரில் மிதக்கின்ற படகுகள் மாலையில் அதேயிடத்தி;ல் மணற்றிடலில் சரிந்து கிடப்பதனை காணமுடியும். இக்கடல் வற்றுப் பெருக்குக் கடல் என்பதால்தான் இது நிகழ்கிறது. அத்துடன் மன்னார்க்கடலில் இருந்து விடத்தல்தீவு இறங்கு துறைக்கு வருவதானால் அருனோல்டா கால்வாய் ஊடாகவே வரமுடியும். ஏனைய கடற்பகுதிகளால் வரமுடியாது. (1940களில் அருனோல்டா என்கிற மன்னார் அரசாங்க அதிபரின் அனுசரணையுடன் இங்கு படகுகள் சென்றுவரும் பொருட்டு இக்கால்வாய் வெட்டப்பட்டது.)

ஆகவே மேற்குறிப்பிடப்பட்ட தன்மையுடைய கடற்பகுதியில் கடற்புலிகள் பெரியளவிலான விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது கடினம். விடத்தல்தீவு இறங்கு துறையைக்காட்டிலும் பல சாதகத்தன்மையுடைய இறங்கு துறைகள் மன்னார் - பூநகரி கடற்பகுதியில் நிறையவே உள்ளன. (பாதுகாப்புக் காரணங்களினால் அவ்விடங்களைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கிறேன்) மேலும் விடத்தல் தீவு மூன்று பக்கமும் சதுப்பு நிலமும் மற்றைய பக்கம் வற்றுப்பெருக்குக் கடலையும் உடைய தன்மையைக் கொண்டது.

விடத்தல் தீவுக்கான ஒரே ஒரு விநியோகப் பாதையாக பள்ளமடுச் சந்தியிலிருந்து செல்லும் ஒரு மைல் நீளமான பாதையே உள்ளது. இவ்வீதி சதுப்பு நிலங்களை ஊடறுத்தே செல்கின்றது. அத்துடன் விடத்தல்தீவு அதிமுக்கியமான பகுதியாக இருந்திருந்தால் 1987இல் அரசபடைகள் இல் விடத்தல் தீவிலேயே முகாமை அமைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. பள்ளமடுச் சந்தியிலேயே இராணுவ முகாமை அமைத்தனர்.

ஏனெனில் பள்ளமடுச்சந்தியில் முகாம் அமைத்தால் விடத்தல் தீவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதனை கருத்தில் கொண்டே அங்கு முகாம் அமைத்தனர். ரணகோச நடவடிக்கை மூலம் நகர்ந்த படைகள் பள்ளமடுச்சந்திக்குத் தெற்கே இரண்டு மைல் தொலைவில் நிலைகொண்டதுடன் அதற்குமேல் முன்னேற முடியாமல் தவித்தன. தற்போதும் கூட ரணகோச நடவடிக்கைப் படைகள் நின்ற இடத்திலேயே படைகள் நிற்கின்றன.

இனி மன்னாரில் இராணுவ நகர்வென்பதும் பள்ளமடு யுத்தம் என்பதும் பாலைவனத்திற்கு ஒப்பானது. திருக்கேதீஸ்வரத்திலிருந்து பள்ளமடு நோக்கி நகர்ந்தாலும் பெரிய மடுவிலிருந்து பள்ளமடு நோக்கி நகர்ந்தாலும் வரும் களமுனை வெட்டவெளிகளைக் கொண்டது. ஒரு வெட்டவெளி யுத்தத்தை படைத்தரப்பும் அரசும் விரும்பப் போவதில்லை. அப்படி விரும்பினாலும் வெற்றியடையப் போவதில்லை.

அதனால்தான் பாலம்பிட்டியிலிருந்து காடுகளினூடாக சிறாட்டிகுளம் சென்ற படைகள் மேற்கு நோக்கி திரும்பி கூராய் கள்ளியடி வீதியில் கூராய்வரை சென்றிருக்கின்றன. கூராயிலிருந்து மேற்கு நோக்கி நகர்வதன் மூலம் படைகள் கூராய், கள்ளியடி என்பவற்றைக் கைப்பற்றி விடத்தல் தீவை முற்றுகையிட முற்படுகிறது. இதேபோல்தான் ரணகோசப் படைகளும் ஆத்திமோட்டை ஊடாகக் கள்ளியடி நோக்கி நகர முற்பட்டபோது மிகப்பெரிய இழப்பைச் சந்தித்திருந்தன.

அப்போது ஆத்திமோட்டை கூராய் சதுப்பு நிலப்பகுதியில் நடந்த சண்டைதான் ரணகோசப் படை நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரும் நிலைக்குத் தள்ளியது. இனிவரும் வாரங்களில் இராணுவம் விடத்தல்தீவை கைப்பற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அவ்வாறு மேற்கொள்ளும் போதுதான் அதன் பலாபலன்களை அரசபடைகள் உணரமுடியும். அடுத்த இருவாரங்களில் இதை எதிர் பார்க்கலாம்.

அவ்வாறு தான் சிறாட்டிகுளம் மற்றும் நட்டாங்கண்டல் வரை நகர்ந்த படையினர் பாண்டியன் குளம் ஊடாக வவுனிக்குளம் வரை நகர முற்படுகின்றனர். ஏனெனில் வன்னியில் மையப்பகுதியில் அவ்விடம் ஓர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். பனங்காமத்திலிருந்து ஆறு மைல் தொலைவில் உள்ள வவுனிக்குளம் பகுதியைக் கைப்பற்றி விட்டால் மாங்குளம் நோக்கி நகர்வது இலகு அத்துடன் வவுனிக்குளம் படைகளின் வசம் வந்துவிட்டால் மல்லாவி, மற்றும் துணுக்காய் ஆகியன இலகுவாகவே படைகள் வசமாகும்.

எப்பாடுபட்டாவது வவுனிக்குளம் வரை நகர்ந்துவிட்டால் வவுனிக்குளத்தின் நீரேந்துப் பகுதியூடாக பாலைப்பாணி வரை சென்று விடுதலைப் புலிகளின் மூன்று முறிப்பு – வன்னிவிளாங்குளம் பாதையை பாலைப்பாணியில் ஊடறுப்பதன் மூலம் புலிகளின் மூன்று முறிப்புக்கான வழங்கல்களைக் கட்டுப்படுத்தி அவர்களைப் பின்னகர்த்தினால். மூன்றுமுறிப்பினூடாக பனங்காமம் நடட்டாங்கண்டல், சிறாட்;டிகுளம், வவுனிக்குளம் என்பவற்றுக்கான இராணுவ வழங்கல்களை செப்பனிட முடியும். எனவே வவுனிக்குளம் வரை படைகள் நகர எத்தணிக்கின்றன.

ஜயசிக்குறூய் படைகள் வவுனிக்குளத்தின் வால்கட்டுப் பகுதியான அதாவது மேலதிக நீர் வெளியேற்றப்படும் பகுதியான கிடாய்ப்பிடித்த குளம் வரை நகர்ந்து மேற்கொண்ட நகரமுடியாது தவித்தன. இதற்கு வவுனிக்குளத்தின் புவியியல் அமைப்பே காரணம். இன்னும் மூன்று மாதங்கள் கடந்து விட்டால் மழைகாலம் வந்துவிடும். மழைகாலம் வந்தால் பனங்காமம் - வவுனிக்குளம் ஆகிய பகுதிகளை ஊடறுத்து ஓடும் பறங்கிஆறு, பாலியாறு, மற்றும் உப்பன்ஆறு, ஆகிய பெரிய ஆறுகள் நீர் நிரம்பி ஓடும்.

பெரும்பாலும் இவ்வாறுகளில் நீர் நிரம்பி ஓடும்போது அதன் இருமருங்கிலுமுள்ள சில பிரதேசங்களை தன்னுள் அடக்கியே ஓடும். அதன்போது பிரதேசங்களுக்கிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்படும் உதாரணமாக பாலியாறு பாய்ந்தோடுகின்ற போது பாண்டியன் குளத்திற்கும், வவுனிக்குளத்திற்குமான தொடர்பு சில வாரங்களுக்கு துண்டிக்கப்பட்டிருக்கும். படைகள் இப்பிரதேசங்களில் நகர்ந்திருக்கும் போது அவ்வாறு துண்டிக்கப்பட்டால் அது விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பாகிவிடும். இயற்கையே படையினருக்கு குழிவெட்டிவிட்டது போல் ஆகிவிடுமல்லவா.

வவுனிக்குளப் பிரதேசம் யார் கையில் உள்ளதோ அவர்களின் கையே இப்பகுதியில் என்றும் ஓங்கும். அத்துடன் வவுனிக்குளம் நோக்கிய இராணுவ நகர்வென்பது இலகுவில் சாத்தியப்படாத ஒன்று. இதுபற்றி பிறிதோர் சந்தரப்;பத்தில் விரிவாக ஆராய்வோம். இருந்த போதும் இப்பிரதேசங்களை நோக்கி படைகள் அடுத்தடுத்த வாரத்தில் நகர்வுகளை மேற்கொள்ளலாம். இவையனைத்தும் விடுதலைப்புலிகள் வழிமறிப்புத் தாக்குதலிலிருந்து தாக்குநிலைக்கு மாறும்வரை படைகள் தமது நகர்வுகளை வேகப்படுத்தவே முயலும்

வன்னியில் படைகள் அகலக்கால் விரித்ததன் பலாபலன்களை வெகுவிரைவில் உணர்வார்கள் என நம்புகின்றேன். இதுவரை அரசபடைகளின் நட்சத்திர நாயகனாகத் திகழ்ந்துவரும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா தனது பதவிக்காலம் முடிந்து வீடு செல்லும் போது இலங்கை வரலாற்றிலேயே மிகவும் தோல்வியைத் தழுவிய இராணுவத் தளபதி என்கின்ற நிலையில் கூட ஓய்வுபெற்றுச் செல்லலாம்.

இவையனைத்தும் அடுத்து விடுதலைப்புலிகள் மேற்கொள்ளவிருக்கும் நகர்வுகளிலேயே தங்கியுள்ளது. எனவே புலம்பெயர்ந்திருக்கும் நாம் விரைவில் வெற்றிச் செய்தி ஒன்று நம் செவிகளில் விழும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

- அ.வன்னியன். லண்டன்-

Comments