படைப் புலனாய்வுத்துறையினரின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா படை புலனாய்வுத் துறையினரின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் முழுமையாக சிறிலங்கா படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலையில் சிறிலங்கா படைத்துறையின் புலனாய்வு தரப்பினர் வெள்ளை வேனில் சென்று குடும்பஸ்த்தர்களை கடத்தி செல்லும் நடவடிக்கைகள் சில தினங்களாக அதிகரித்துள்ளது.

சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களின் உதவியுடன் இளம் குடும்பஸ்த்தர்களை கடத்துகின்றனர். மட்டக்கள்பபு மாவட்டத்தில் விடுதலை புலிகள் ஊடுருவியுள்ளனர் என தெரிவித்து கடத்தல்கள் இடம்பெற்றுவருகின்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பல்பொடிக் கம்பனி படை முகாமில் உள்ள புலனாய்வுத் தரப்பினர் இதனை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலக்கத் தகடு இல்லாத வெள்ளை வேனில் வரும் இவர்கள் ஆட்களை இழுத்து வேனினுள் போட்டு கைகள், கண்களை கட்டி வெகுதூரத்திற்கு செல்வது போன்று வேனில் செல்கின்றனர். அதன் பின்னர் முகாமிற்குள் கொண்டுவந்து கடுமையாக தாக்குவதுடன் பொலித்தீன் பைனுள் நீர் நிரப்பி முகத்தை மூடுகின்றனர். அதன் பின்னர் வளைத்து நின்று தாக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தி செல்பவர்களிடம் அரைகுறையாக தமிழில் பேசும் இவர்கள் ஈவிரக்கமற்ற நிலையில் தாக்குவதுடன் பல சித்திரவதைகளை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் ஒருவர் மூன்று தினங்களுக்கு பின்னர் விடுதலை செய்துள்ளனர். முன்பு விடுதலை புலிகளின் பிஸ்ரல் குழுவினர் இவர்களில் சிலரைக் போட்டுத்தள்ளியதுடன் பல்போடி கொம்பனி முகாம் கதை அடங்கியிருந்தது.

எனினும் தற்போது அவர்களின் வேலைகளை காட்டத்தொடங்கிவிட்டனர். இதில் பலியாவது அப்பாவி பொதுமக்கள். அத்துடன் கடத்தப்பட்டவர்களில் ஒருவர் மாத்திரம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏனையவர்களின் நிலை என்னவென்று இதுவரையில் தெரியவில்லை. 2004ம் ஆண்டு விடுதலை புலிகளின் இயங்கத்திலிருந்து வினாயமூhத்தி முரளிதரன் விலக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில போராளிகள் தமது இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டு குடும்பஸ்த்தர்களாகியுள்ளனர்.

இவர்களை இலக்கு வைத்து படைத்துறையின் புலனாய்வுத் தரப்பினர் கடத்தல்களை மேற்கொண்டுவருகின்றனர். மாவட்டத்தல் ஊடுருவியுள்ள விடுதலை புலிகளுக்கு இவர்கள் தகவல்கள் வழங்கிவருவதாக தெரிவித்து கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. உண்மையில் விடுதலை புலிகளின் அமைப்பிலிருந்து விலகியவர்கள் தமது குடும்பம் பிள்ளைகளுடன் தமது இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டுவரும் வேளையில் இவ்வாறான கடத்தல்களை மேற்கொள்வது தமிழர்களை கொன்றொழிப்பதில் சிங்கள தேசம் காட்டும் கரிசனை எவ்வாறு உள்ளது என்பதனை விளங்கிக் கொள்ள முடியும்.

தமிழ் இனம் கொடிய சிங்களவர்களினால் கொன்றொழிப்பதற்கு சில தேச துரோகிகள் ஒன்றிணைந்து செயல்பட்டுவருகின்றமை தமிழர் மத்தில் மனவேதனையை ஏற்படுத்துகின்றது. இந்த மாதம் இன்றுவரைக்கும் 5க்கு மேற்பட்ட குடும்பஸ்த்தர்கள் வெள்ளை வேனில் வந்த படைத்துறை புலனாய்வுத் துறையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக அவர்களின் குடும்பத்தினர் மட்டக்களப்பு காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொதுமக்களை பாதுகாக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களான மனித உரிமை ஆணைக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டுவந்த போதிலும் கடத்தப்பட்டவர்கள் எவரும் விடுதலை செய்யப்படவுமில்லை. மாறாக கடத்தலில் ஈடுபட்டவர்கள் எவரும் கைது செய்யப்படவுமில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் நகர் புறத்தில் மாத்திரமல்ல படுவான்கரை பகுதியில் பிள்ளையான் குழுவினர் முன்னர் விடுதலை புலிகளின் அமைப்பிலிருந்து விலகியவர்களை கடத்துவதும் விசாரணைக்குட்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது சிலரை தமது அமைப்பில் இணைந்து கொள்ளுமாறும் மிரட்டிவருகின்றனர்.

இந்நிலை பழுகாமம், கொக்கட்டிச்சோலை, கரடியனாறு போன்ற பகுதிகளில் இடம்பெற்றுவருகின்றது. சிறிலங்கா படை புலனாய்வுதுறையினர் மட்டு நகர் பகுதிகளில் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட படுவான்கரையில் ஒட்டுக் குழுவினர் பொதுமக்களை கடத்துவதிலும் கப்பம் பெறுவதிலும் ஈடுபட்டுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் மிது அக்கரையுள்ளதாக செயல்படும் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காவல் நிலைய அதிகாரி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்போடிக் கொம்பனி புலனாய்வுத்துறை அலுவலகத்தை சோதனை செய்தால் கடத்தப்பட்டவர்களின் விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும். அது மாத்திரமல்ல நகர் பகுதியில் முழத்திற்கு ஒரு காவலரண்களை அமைத்துள்ள நிலையில் வீதியில் செல்லும் வெள்ளை வேனை ஏன் சோதனை செய்து குறிப்பிட்டவர்களை கைது செய்யவில்லை. என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

அதுமாத்திரமல்ல மட்டக்களப்பின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமான அரசரெட்ணம் சசிகுமார் வீட்டின் மீது பிள்ளையான் குழுவினர் கைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டர். இது தொடர்பாக சசிதரன் பிள்ளையான் குழுவின் உறுப்பினரான கலிங்கன் என்பவர் மீது சந்தேகப்படுவதாக இணையத்தளம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்துள்ளார். ஆனால் இதுவரையில் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்படவில்லை.

இவ்வாறான செயல்களை நோக்குமிடத்து மட்டக்களப்பு மாவட்டம் காவல்துறையின் அதிகாரத்தின் கீழ் இல்லை. மாறாக படை புலனாய்வுத்துறையினரும் பிள்ளையான் குழுவினரும் தான் மட்டக்களப்பை கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளமை தெரியவந்துள்ளது. இது எவ்வளவு காலத்திற்கு தொடரும்……..?. இதனை விடுத்து பொதுமக்கள் - காவல்துறை நல்லூறவை பேணிப் பாதுகாக்கும் சிவில் பாதுகாப்பு குழுவினரை அமைதுள்ளார்.

இது உண்மையில் விடுதலை புலிகள் தொடர்பாக அல்லது புலிகளுடன் சார்பானவர்கள் தொடர்பாக தகவல்கள் வழங்குவதற்கு இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குழுவினருக்கு ஒன்று தெரிய வேண்டும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை சிங்கள தேசம் எவ்வாறான வழிகளில் எல்லாம் பலவீனப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு தனது செயற்பாட்டை மேற்கொண்டுவருகின்றது.

மக்களின் வரிப் பணத்தில் வேதம் பெறுவது குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்கு மாறாக பொதுமக்களையும் தமது பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துவதற்கு அல்ல. கொழும்பு, குருணாகல், கண்டி போன்ற மாவட்டங்களில் சிவில் பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவம் காவல்துறையினருடன் சேர்ந்து இந்த சிவில் பாதுகாப்பு குழுவினரும் வாகனச் சோதனை, மற்றும் வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இவ்வாறே மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு குழுவினரை ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு நகரில் 500 மீற்றர் தூரத்திற்கு ஒரு இராணுவ மற்றம் காவல்துறையின் காவலரண்கள் அமைந்துள்ள போதிலும் வெள்ளை வேனில் வருபவர்களை கைது செய்ய முடியாத நிலையில் சிறிலங்கா காவல்துறை செயலிழந்துள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்திவருகின்றனர்.

இராணுவ கட்டுப்பாட்டில் 32 கிலோமீற்றர் தூரம் செல்வதாயின் குறைந்தது 8க்கு மேற்பட்ட சோதனைச் சாவடிகiளில் பெண்கள், சிறார்கள், மூதியோர்கள் என வயது, பால் வேறுபாடுயின்றி இறங்கி ஏற வேண்டும். இந்நடவடிக்கையினால் படைத்தரப்புக்கு எவ்வித நன்மையும் இதுவரையில் கிடைக்கவில்லை.

-மட்டக்களப்பிலிருந்து மகான்-

Comments