இலங்கை மைதானத்தில் நடக்கும் பகல்-இரவு ஆட்டங்கள்

இந்தியா - சீன மறைமுகப் போரின் மைதானமாக மாறியுள்ள இலங்கை தனது அத்தனை தேசிய சொத்துக்களையும் இரண்டு நாடுகளிடமும் அடகுவைத்துவிட்டு, அதற்கு வட்டி கேட்பதுபோல தான் போட்டு வைத்துள்ள இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆயுதங்களை கேட்டுப்பெற்றுக்கொள்வதில் முனைப்பாக உள்ளது.

இந்த இரு பொருளாதார புலிகளின் சண்டைக்கு சாமரம் வீசுவதன் மூலம் இலங்கையில் புலிகளை நசுக்கி ஒழிப்பதற்குக காய்களை நகர்த்தலாம் என்ற பெரும் நம்பிக்கையுடன் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அப்படி என்னதான் குடுமிப்பிடி சண்டை என்று சற்று ஆழமாக நோக்கினால் அது பல படிநிலைகளில் அனல் பறக்க நடைபெற்று வருவதை காணலாம்.

கடற்படை ஆதிக்கம், அணு ஆயுதப்போட்டி, பிரபஞ்ச படை மேம்பாட்டுப் போட்டி, அயல்நாடுகளை அணைத்துக்கொள்வதில் போட்டி, அதற்கான எல்லை இழுபறி, பொருளாதார வளங்களை கையகப்படுத்துவதில் போட்டி போன்றவை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்; ~தொடர்ச்சியான பகல் - இரவு சண்டை காட்சிகளாக| நடைபெற்று வருகின்றன.

இவற்றில் இலங்கையை மையமாகக்கொண்டு நடைபெறும் பாரிய படைத்துறை பிரச்சினை என்றால் அது கடலாதிக்கம் என்று கூறலாம்.

இலங்கையில் சீனாவின் அண்மைக்கால அதிரடி பிரசன்னங்களாக கடந்த வருடம் கைச்சாத்திடப்பட்ட 36.7 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளவாட ஒப்பந்தம், நுரைச்சோலை அனல் மின்நிலையத்திட்ட உதவி, மன்னார் எண்ணெய்வள ஆராய்ச்சிக்கான அனுமதி, கொழும்பில் கலாச்சார மண்டப நிர்மாண உதவி, குடாநாட்டுக்கு மின் வழங்க காங்கேசன்துறைக்கு வழங்கிய நான்கு மின் பிறப்பாக்கிகள் ஆகியவை காணப்படுகின்ற போதும் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம், சீனா மேற்கொள்ளும் ஏனைய திட்டங்களின் நோக்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ள ஒன்று.

சீனா, தனது தேவைக்கான பெரும்பகுதி எண்ணெய் வளத்தை இந்து சமூத்திரப் பிராந்தியத்தினூடாகவே பெற்றுக்கொள்கிறது. அதற்காக தனது கப்பல்களின் தரிப்பிடங்களாக ஆங்காங்கே சில நாடுகளின் துறைமுகங்களைத்தான் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் தனது உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் பாகி;ஸ்தானுடனான தனது உறவைப்பலப்படுத்தி அந்நாட்டு துறைமுகத்தை பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்களை தவிர்த்துள்ள சீனா, அடுத்து இலங்கையை தனது வலைக்குள் வீழ்த்தியிருக்கிறது. அதற்காக மேற்கொண்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு சீனா, சுமார் ஒரு பில்லியன் டொலர்களை அள்ளி வீசியிருக்கிறது.

தனது பிராந்தியத்தில் எவர் அடிபட்டாலும் பரவாயில்லை. தனக்கு ஆயுதம் தரக்கூடிய எந்த நாட்டுடனும் சோடி சேர்வது என்ற நோக்கத்துடன் உள்ள இலங்கை, இப்படியெல்லாம் கூட்டுச்சேர்வது தனக்கு எவ்வளவு ஆபத்து என்று கொஞ்சமும் சிந்திக்கவில்லையே என்பது இந்தியாவின் காலாவதியான கவலை.

ஆனால், இலங்கை துறைமுகத்தினுள் சீனா ஊடுருவும் இந்த இரகசிய இராஜதந்திரப் போரால் இந்தியா ஏன் சீறுகிறது? அப்படி என்ன சீன - இந்திய கடல் பிரச்சினை என்று பார்த்தால் எல்லாம் இந்த கடற்படை வலுவை முன்வைத்துத்தான்.

உலக வளர்ச்சியில் உயர்ந்த ஸ்தானத்துக்கு போய்விட்ட இந்த இரு நாடுகளினதும் கடற்படைகள், தத்தமது நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் தமது விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகின்றபோதும் சீனா எப்போதுமே அதிரடியாக - சத்தம் சந்தடியின்றி - தனது படைகளை பல பரிமாணங்களில் பட்டை தீட்டிக்கொள்வதில் இந்தியாவை விட பல படிகள் மேல் என்றே கூறலாம். இந்த பல பரிமாண வளர்ச்சி இந்தியாவுக்கு பாரிய சவால் என்பது உண்மை.

இந்த சவாலை உடனடியாக சமாளிக்க முடியாத இந்தியாவின் இயலாமையின் வெளிப்பாடும் -
அப்படிப்பட்ட சீனா அயல்நாடான இலங்கை மற்றும் இதர நாடுகளுக்குள் வந்து நின்றுகொண்டு தம்மிடம் இருக்கும் கொஞ்ச-நெஞ்ச படைவலுக்களையும் மோப்பமிடுகிறது என்ற இந்தியாவின் குடைச்சலும் -

சீனாவுக்கு இடம்கொடுத்த அயல்நாடுகளின் மீதும் சினங்கொள்ள வைத்துள்ளது.

இந்திய படைத்துறையைப் பொறுத்தவரை அதனிடம் நிலத்திலிருந்து ஏவக்கூடிய அணு ஆயுதங்கள் உள்ளன.

~அக்னி|, ~ப்ருதிவி| என கடந்த காலங்களில் இந்தியா இவை தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு அவற்றின் உருவாக்கத்தில் வெற்றிகண்டிருக்கிறது.

அதேபோன்று, வான்படையை பார்க்கப்போனால் ~மிராஜ்| எனப்படும் போர் விமானங்கள் இந்தியாவிடம் வளமான வான்கலங்களாக உள்ளன.

ஆனால், இந்தியாவின் கடற்படை வலு என்பது பேச்சுக்கு கடலில் ஓடித்திரியும் பெரிய, பெரிய கப்பல்களாக காணப்படுகிறதே தவிர, அவை சீனாவின் அதிநவீன கடற்படை வலுவுக்கு முன்னால் கால்தூசு என்பதுதான் ஏற்றுக்கொண்டேயாகவேண்டிய உண்மை.

அதுவும், சீனா தற்போது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவக்கூடிய தளங்கள் கொண்ட மிகப்பெரிய கடற்படை தளம் ஒன்றை தெற்கு சீனக்கடலில் உள்ள ஹெய்னின் என்ற தீவில் நிர்மணித்து வருவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அணு ஆயுத ஏவுகணைகளை ஏவக்கூடிய சுமார் 20 கடற்கலங்கள் தரிக்கக்கூடிய இந்த தளம் 'ஜேம்ஸ் பொண்ட்" படங்களில் வருவது போன்ற தோற்றப்பாடு கொண்டது என்று பிரித்தானிய நாளிதழ் ஒன்று அண்மையில் தெரிவித்திருக்கிறது.

இவ்வாறான அணு ஆயுத ஏவுகiணை வலுகொண்ட கடற்கலங்கள் கடலுக்கடியில் நிறுத்திவைக்கக்கூடியவை மட்டுமல்லாமல் அவை எங்கு நிற்கின்றன என்பதை கண்டுபிடிப்பதும் கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மூன்றாம் உலகப்போர் ஒன்று வெடித்தால், எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே வந்து தாக்கி ஒரு கண்டத்தையே துவம்சம் பண்ணக்கூடிய அணு ஆயுத ஏவுகணை கப்பல்களை சீனா இரகசியமாக தயாரித்து வைத்திருக்கிறது என்கிறார்கள் போரியல் நோக்கர்கள்.

இந்த அணு ஆயுத கப்பல்கள் கடலுக்கடியில் பல்லாயிரக்கணக்கான கிலோமீற்றர்கள் இரகசியமாக பயணம் செய்து எந்த நாட்டின் துறைமுகத்துக்கு அடியில் வந்து நின்றாலும் உடனடியாக அவற்றை கண்டுபிடிப்பது மிகக்கடினம்.

இதனால்தான், சீனா இன்று இலங்கை பக்கம் தலைகாட்டி துறைமுகங்களை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்தவுடன் ~குய்யோ முறையோ| என்று இந்தியா கூக்குரலிட ஆரம்பித்திருக்கிறது.

இலங்கை துறைமுகங்களில் கடலுக்கடியில் வந்து நிற்கக்கூடிய சீனாவின் அணு ஆயுத கப்பல்கள் இந்தியாவின் பாதுகாப்பு நிலவரங்களை அறிந்துகொள்ளும் என்றும் -

அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் இலங்கையிடம் சொல்லி அழும் அளவுக்கு தற்போது இந்தியாவின் கதி அதோகதியாகியிருக்கிறது.

சீனாவுடன் போட்டி போட்டு நீருக்கடியில் அணு ஆயுத போர் நடத்துமளவுக்கு இந்தியாவின் கடற்படை உள்ளதா என்று பார்த்தால், அந்த முயற்சியில் இந்தியா இப்போதுதான் அரிவரி நிலையிலிருக்கிறது.

1970-களில் ஆரம்பிக்கப்பட்ட அணு ஆயுத ஏவுகணை கடற்கலங்கள் தொடர்பான இந்தியாவின் முயற்சிகள் இன்னமும் அந்த நிலையிலிருந்து பெரிதாக நகரவில்லை.

சீனாவின் வளர்ச்சியை கண்டு மிரண்டெழுந்து இப்போதுதான் சுதாரித்துக்கொண்டுள்ள இந்தியா, அடுத்த ஆண்டு இந்த முயற்சியை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

இதன் ஆரம்ப கட்டமாக, தனது போர்க்கப்பல்களிலிருந்து ~கே-15| ஏவுகணையை ஏவி பரிசோதிக்கும் ~சாகரிக்கா| என்ற பெயரிடப்பட்ட முயற்சியை இந்த ஆண்டு மேற்கொள்ளப்போவதாகவும், அதன்பின்னர் படிப்படியாக அணு ஆயுத ஏவுதிறன் குறித்த முயற்சிகளில் இறங்கப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

இதற்காக, 650 மில்லியன் டொலர் செலவில் 12,000 தொன் எடையுள்ள ~அகுலா -2| என்ற அணு ஆயுத ஏவுகணை கப்பலை தனது உற்ற நண்பனான ரஷ்யாவிடமிருந்து வாங்க முன்னர் திட்டமிட்ட இந்தியா, தற்போது அதே ரகத்தில் புதிய வசதிகளுடன் கூடிய இன்னொரு கப்பலையும் வாங்க திட்டமிட்டிருக்கிறது.

தற்போது இந்தியாவிடம் உள்ள பாரிய கடற்கலங்களை கணக்கிலெடுத்தால் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய ~ஐ.என்.எஸ்.ஜலஷ்வா| என்ற விமானம்தாங்கி கப்பல் சுமார் 36 வருடங்கள் பழமை வாய்ந்தது. இதைவிட பெரிய விமானம் தாங்கி கப்பல் ~ஐ.என்.எஸ்.விராத்|. இவை இரண்டும்தான் குறிப்பிடக்கூடியவை

(தனது பழைய கப்பல்களை இந்தியாவின் தலையில் அமெரிக்கா கட்டிவிடுவதும் அதேபோன்று இலங்கையின் தலையில் இந்தியா கட்டிவிடுவதும் காலகாலமாக நடைபெற்று வரும் ஒன்றுதான். தற்போது இலங்கையிடம் உள்ள ~எஸ்.எல்.என்.எஸ்.சயுர|, ~சமுத்ரா|, ~வரகா| போன்றவை ஆளாளுக்கு மாறி மாறி பரிசளித்த பழைய சமான்கள்தான்)

இந்த பழைய தாரை தப்பட்டைகளை வைத்துக்கொண்டு சீனாவின் கடற்படையுடன் போட்டியிட முடியாது என்பதை புரிந்துகொண்ட இந்தியாவின் கடற்படை, தற்போது தன்னிடமுள்ள 23 பாரிய கடற்கலங்கள் கொண்ட படையை விரிவாக்கம் செய்ய பெருமெடுப்பில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அடுத்த 15 வருடங்களில் இந்திய கடற்படையில் 40 புதிய போர்க்கப்பல்களை இணைத்துக்கொள்வதற்காக இந்திய அரசு 12 பில்லியன் டொலர் செலவிலான திட்டத்தை முடுக்கி விட்டிருக்கிறது.

அத்துடன், எதிர்காலத்தில் எவ்வழியிலும் ஏற்படக்கூடிய ஆபத்துக்ககை முறியடிப்பதற்காக, இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நீருக்கடியில் நடைபெறக்கூடிய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, 14 முதல் 16 பி;ல்லியன் டொலர் செலவில் 24 நீரடி கண்காணிப்பு கலங்களை வாங்க முடிவு செய்திருக்கிறது.

அதேவேளை, தற்போதைக்கு தன்னிடமுள்ள சாதாரண ஏவுகணைகளை அவ்வப்போது பரிசோதனை செய்து சீனாவிடமிருந்து ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தலுக்கு பதில் சொல்லும் வகையிலான ஏற்பாடுகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

கப்பலில் இருந்தும் தரையிலிருந்து ஏவக்கூடிய இந்தியாவின் ~பிரம்மோஸ்| ஏவுகணை தொடர்பான மேலதிக முன்னேற்றகர திட்டங்கள் தொடர்பான தனது முயற்சிகளிலும் முனைப்படைந்திருக்கிறது.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், அண்மையில் இந்தியா சோதனை செய்த ~அக்னி-3| என்ற தரையிலிருந்து ஏவும் ஏவுகணை 3,500 கிலோமீற்றர் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தக்கூடியது. ஆனால், சீனாவிடமுள்ள ஏவுகணைகள் 11,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் பறந்துசென்று தாக்குதல் நடத்தக்கூடியது.

சீனாவின் இந்த கன கடூரமான வளர்ச்சி மிக்க கடற்படை, இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தை அதன் கைகளில் கொண்டுவருவதற்கு தாரளமாக போதும். ஆனால், அந்த இலக்கை அடைவதற்காக - ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார் என்பதற்காக - இன்னமும் கனவை மட்டும் கண்டுகொண்டிருக்கும் இந்தியா, காரியங்களில் இறங்குவதில் காட்டியுள்ள தாமதம் அதன் பின்னடைவுக்கே வழிவகுத்திருக்கிறது.

ஆகவே, தனது கடற்படையின் வளர்ச்சிப்போக்கில் ஒரு திருப்பம் ஏற்படும்வரை, சீனாவின் ஆதிக்கப்பிடியை தனது இராஜதந்திர போரின் மூலம் முறியடித்து, தனக்கான இருப்பிடத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கே இந்தியா அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறது.

இந்தவகையில், இலங்கை மீதான இந்தியாவின் கவலை முன்னர் குறிப்பிட்டது போன்று காலாவதியான ஒன்று.

அன்று, அன்னை இந்திராவுடன் முரண்டு பிடித்துக்கொண்டு அமெரிக்காவிடம் சென்று அது மறுக்க, இஸ்ரேல் ஊடகவும் இதர நாடுகள் ஊடகவும் ஆயுதங்களை உருவிக்கொண்ட ஜே.ஆரின் பாணியிலேயே, இன்று மகிந்த அரசு சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் ~தேனிலவு| கொண்டாடுகிறது.

தற்போது இந்தியா சந்தித்திருப்பது சீனாவுடனான கடற்படை வலுவுக்கும் இலங்கையுடனான இராஜதந்திர பலத்துக்குமான சவால். இதில் எதை வென்றாலும் தற்காலிகமோ நிரந்தரமோ ஒருவித நிம்மதி கிடைக்கும் இந்தியாவுக்கு.

சாதிக்குமா பாரதம்?

-பைரவி-

Comments