தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்: "தினமணி" நாளேடு

தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "தினமணி" நாளேடு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த அந்நாளேட்டின் ஆசிரியர் தலையங்கம்:

கோடியக்கரை பகுதியில் இரண்டு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.

கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் கொல்லப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 250-க்கும் மேல்.

தமிழக மீனவர்கள்மீது சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், கைது செய்து இழுத்துச் செல்வதும், படகுகளையும் மீன்பிடிக்கும் சாதனங்களையும் சேதப்படுத்துவதும் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வேடிக்கை என்னவென்றால், பலமுறை சிறிலங்கா இராணுவத்தினர் நமது எல்லைக்குள் வந்து நமது மீனவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். உலங்குவானூர்தியில் வந்து சுட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவர்களைத் தாக்கவோ, தடுக்கவோ, அவர்களது உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தவோ இந்திய கடல்பாதுகாப்புப் படையினர் ஒரு தடவைகூட முயற்சி எடுக்காதது ஏன் என்பதுதான் புயாத புதிர்.

கச்சதீவை சிறிலங்காவுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது 1974 ஆம் ஆண்டு.

அப்போது இன்றைய முதல்வர் கருணாநிதியின் தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி இருந்தது. திமுகவுக்கும், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கும் சுமூகமான உறவு இருக்கவில்லை என்பது உண்மை.

ஆனால் அசுரப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த திமுக, இப்போது சேது சமுத்திரத் திட்டத்துக்காக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என்று களமிறங்கியதுபோல கச்சதீவு பிரச்சினையில் தமிழக உரிமைக்காக வலிமையாகக் குரல் கொடுத்ததா என்றால் இல்லை.

"இந்திய மீனவர்கள் இன்றுவரை அனுபவித்து வரும் மீன்பிடிக்கும் உரிமை, இருநாட்டுக் கடல் பகுதிகளிலும் படகுகள் செலுத்தும் உரிமை, கச்சதீவுக்குச் சென்று வரும் உரிமை ஆகியவை உறுதிப்படுத்தப்படுகிறது" என்று அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் ஸ்வரண்சிங் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்திருக்கிறார்.

வேடிக்கை என்னவென்றால், கச்சதீவில் இந்திய உரிமையைத் தாரை வார்த்துக்கொடுக்கிறோம் என்று அரசைக் கண்டித்து கேள்வி எழுப்பியவர் பின்னாளில் பிரதமரான அன்றைய ஜனசங்க உறுப்பினர் அடல் பிகாரி வாஜ்பாய். அவரது கேள்விக்குத் தரப்பட்ட பதில்தான் மேலே குறிப்பிட்டது.

1976 ஆம் ஆண்டு இன்னொரு ஒப்பந்தம் இரு நாட்டு வெளியுறவுச் செயலர்களால் கையெழுத்திடப்பட்டது. அதன்படி மேலே குறிப்பிட்ட உரிமையும் பறிக்கப்பட்டது. கச்சதீவு சிறிலங்காவிலிருந்து 10 கடல் மைல்கள் தூரத்திலும், இந்திய எல்லையிலிருந்து 12 கடல் மைல்கள் தூரத்திலும் இருக்கும் சிறிய தீவு. 2 மைல்களின் வித்தியாசத்தைக் காரணம் காட்டி சிறிலங்கா அரசு அதற்கு உரிமை கோரியபோது, நமது ஆட்சியாளர்கள் அதைத் தாரைவார்த்துக் கொடுத்தது மிகப்பெரிய தவறு.

1989 இலும், 1996 இலும், 1999 இலும் மத்திய ஆட்சியில் பங்குபெற்ற திமுக, கச்சதீவு பிரச்சினையையும், தமிழக மீனவர்களின் உரிமையையும் தனது ஆதரவுக்கு விலையாகக் கேட்டிருக்குமேயானால், நிச்சயமாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாவிட்டாலும், இந்திய அரசின் நிர்ப்பந்தங்கள் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்.

என்னென்னவோ துறைகளைக் கேட்டுப் பெற்றவர்கள் வெளியுறவுத்துறையைக் கேட்டுப் பெற்று இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவுகோர ஏன் முனையவில்லை என்பது திமுக மட்டுமல்ல, மத்திய ஆட்சியில் பங்குபெற்ற தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு அளிக்க வேண்டிய தன்னிலை விளக்கம்.

இந்தப் பிரச்சினையில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கச்சதீவை இந்தியா ஏன் நிரந்தரக் குத்தகைக்கு எடுக்கக்கூடாது என்று யோசனை தெவித்திருந்தார். இப்போது முதல்வர் கருணாநிதி, கச்சதீவில் நமது உரிமைகளை மீட்பதற்கான தருணம் வந்துவிட்டதாகக் கருதுவதாகவும், தமிழர் ஒருவரை சிறிலங்கா தூதுவராக்க வேண்டும் என்றும் யோசனை கூறியிருக்கிறார்.

எங்கள் கட்சிக்காரரை வெளிவிவகாரத்துறை அமைச்சராக்குங்கள் என்றோ, கச்சதீவில் நமது உரிமையை மீட்போம் என்றோ சொல்ல அவருக்கு ஏன் துணிவு வரவில்லை என்று புரியவில்லை.

1974-ல் கச்சதீவைத் தாரை வார்க்கும்போதோ, 1976-ல் இந்தியா தனது உரிமைகளை விட்டுக் கொடுத்தபோதோ மத்திய அரசுடன் முதல்வருக்கும் திமுகவுக்கும் சுமுகமான உறவு இருக்கவில்லை உண்மை.

ஆனால், இப்போது இருக்கிறதே! மத்தியில் ஆளும் கூட்டணியில் சர்வ வல்லமை படைத்த தோழமைக் கட்சியாக திமுக இருக்கிறதே! பிறகும் ஏன் அனைத்துலக உடன்பாடு என்று நழுவுகிறார்கள்?

திமுகவோ, அதிமுகவோ, பாமகவோ, மதிமுகவோ, எதுவாக இருந்தாலும், தமிழக மீனவர்கள் இந்தியாவைச் சுற்றியுள்ள கடலில் மீன்பிடிக்கும் உரிமைக்கும் கச்சதீவின் மீது நமக்குள்ள உரிமைக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டும்தான், எந்தவொரு மத்திய அரசுக்கும் ஆதரவளிக்க வேண்டும். இல்லையென்றால், இவர்கள் தமிழ், தமிழன், தமிழர் நலன் என்று பேசுவதெல்லாம் வெறும் வாய்ப்பந்தல்தான் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments