சனங்களின் நாயகன்;- பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய நினைவோட்டம்



எங்கள் வீரத் தளபதி எனக் கூறிப் பெருமையுறும் எம் மக்கள் எங்கடை பிள்ளையெனவும் கூறி பாசமுறும் பாங்கிற்கு உரித்துடையவர் தான் பிரிகேடியர் பால்ராஜ். எந்தளவிற்கு அவரது படைத்துறை மாட்சி மாண்புற்றதோ அந்தளவிற்கு அவரது மக்கள் மீதான பரிவும் சிறப்புற்றது.

இராணுவச் சிந்தனை மேலோங்கியிருக்கும் வேளைகளிலும் மக்கள் நலன் மீதான கரிசனையும் கூடவேயிருந்த பரந்த மனம் அவரது. அவருடன் கூடவேயிருந்தவரும் பின்னர் மக்கள் நலன் சார்ந்த பணியில் ஈடுபட்டிருக்கும் மூத்த போராளி இவ்வாறு கூறினார். 'ஒரு இராணுவ நடவடிக்கையில் எந்தளவிற்குக் கூடிய அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டாரோ அதைவிட அதிகமான அக்கறையை மக்கள் நலனில் காட்டி அத்துறையிலும் ஆலோசனைகள் வழங்கும் அன்புடன் கூடிய தளபதிதான் அவர்" இதுதான் பால்ராஜ்.

சமகாலத்திலே ஆற்றல் மிக்க படைத்துறை சார்விறலோனாகவும் பரிதவிக்கும் மக்கள் பால் பரிவும் கொண்ட பணியாளனாகவும் அவரிருந்தார். இந்த இரட்டைப் பண்புகளே அவரது தனித்தன்மை சிறப்பியல்பு.

தனது தாய்மண்ணை விட்டுப் பிரிவுற நேர்ந்தபொழுது எத்தகைய வலிதரும் மனநிலையில் அவரிருந்தாரோ அத்தகைய மனநிலை அவரை என்றும் விட்டகன்றதில்லை. அவர் ஒரு போராளியாகி படிப்படியாக உயர்வுற்ற பொழுதும் அவரது மண் மீதான பற்றும் ஏக்கமும் கூடவே வளர்ந்தது.

இறுதிக் காலகட்டத்தில் இயங்கமுடியாத உடல் நிலையிருந்தபொழுதும் அவரை இயக்கிய அவருக்கேயுரித்தான அந்த 'மூச்சு", இம்மண் பிரிதலிலிருந்துதான் தோன்றுகின்றது. எந்தவொரு படைத்துறைக் கற்கை நெறிக்கும் படைத்துறை மேலாளருக்கும் இதை உள்ளடக்கவோ, அறியவோ முடியாது.

அதனாலே பால்ராஜ் எப்போதுமே களங்களில் எதிரிக்கு விளங்க முடியாத ஒரு படையத் திறன் மிகுந்த உயர்நிலை தளபதியாக விருந்தார்.

இம்மண்பற்றும் மண்ணிழந்த மக்கள் மீதான பற்றின் விளைபொருளே தொடக்கத்தில் சிறிய வட்டமாகிப் பின் தமிழீழம் முழுமைக்குமான ஒரு பரந்த வட்டமாக அவரது இவ்வுணர்வு படி மலர்ச்சி பெற்றது. அதனாலேயே பால்ராஜ் எமது விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலக்குகளிலொன்றான மண் மீட்பின், மண்ணைவிட்டுப் பிரிய நேரப்பட்ட மக்களின், அதை மீட்கும் வீரத்தின் குறியீடாக உருவகப்படுத்தப்படுகின்றார். அவரது தோற்றம், நடையுடை, பேச்சு, இயல்பு எல்லாமே படைய மரபின் வீச்சுக்களை தெறித்தாலும் அதற்குள்ளே எளிமையான அடக்கமான ஆனால் உறுதிப்பாடான வேளாண் மக்களின் இயல்பும் அடங்கியிருக்கும். அவரது இத்தகைய தனித்த ஆளுமை ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியெனலாம்.

ஆக்கிரமிப்பாளருக்கெதிரான அடங்காப்பற்றின் போர் மரபினதும் கோசிமின், கியாப் சே, பிடல் போன்றோரின் மக்கள் மீதான மாசற்ற அன்பின் வரலாற்று மரபினதும் ஒரு கலவையின் தொடர்ச்சியிது. கியாப், மாவோ, கோசிமின் போன்றோரின் தோற்றத்தில் அவரவர் தாய்மண் வாசனை பரவியிருப்பதை நாம் காணலாம்.

விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலகட்டத்திலே எத்தகைய பண்புகளைக் கொண்ட போராளிகளைத் தேசியத் தலைவர் தேடினாரோ அவ்வாறானோர் அவருக்குக் கிட்டினர். அதிலே பால்ராஜ் ஒருவர். பால்ராஜ் எவ்வாறு அக்காலகட்டத்திலே செயற்பட்டார்? இன்றைக்கு போராளிகளின் கூட்டுச் செயற்பாடுகள் எவ்வாறு மரபுப் போரிலே முதன்மை பெறுகின்றதோ அவ்வாறே அன்று தனித்த போராளிகளின் முன்னோடிச் செயற்பாடுகள் முதன்மை பெற்றன.

அக்காலகட்டங்களில் இரட்டைத்திறன் வாய்ந்த போராளிகளே செயற்பட முடியும். அரசியற் பணிகளை முன்னெடுப்போர் இராணுவ நெருக்கடிகள், சுற்றிவளைப்புக்கள், தாக்குதல்களின் பொழுது அரசியல் வடிவைக் களைந்து இராணுவ வடிவிற்கு உடனடியாகத் தன்னை மாற்றல் வேண்டும்.

அத்தகைய நிலையிலேயே மக்கள் மனங்களைக் கவரக்கூடிய அன்பைப் பெறக்கூடிய பண்புடையோரே தேவை. அப்பொழுது தான் இரகசியம் காத்து வேவு எடுத்து காப்பு வழங்கி தமது குடும்பச் சுமைகள் பாராது இன்னொரு போராளியாக மாற மக்களைத் தூண்ட முடியும். இதனையே பால்ராஜ் அப்போது செய்தார். மிகப் பொருத்தமான கால கட்டத்தில் மிகப் பொருத்தமான பணியாக அதுவமைந்தது.

தேசியத் தலைவரின் மிகப் பெரும் மனவிருப்பிற்கமைய அவரின் நேரடி வழிகாட்டலில் நல்ல போராளிகளைத் திரட்டி வளர்த்தெடுத்து அவர்களைக் களமுனைகளில் இறக்கிய பணியையும் பால்ராஜ் திறம்படச் செய்தார். அவருக்கும் போராளிகளுக்குமான உறவு மிகப் புகழ்பெற்றது.

தொடக்கத்தில் இணைந்த பல போராளிகள், தான் மிகுந்த நெருக்கடியான கால கட்டத்திலிருந்த பொழுது உதவிய ஆதரவாளர்களின் பிள்ளைகள் என்பதை பால்ராஜ் கண்டு கொண்டார். தலைவரின் பெரு விருப்பிற்கேற்ப போராளிகளை அவர் வனைந்தார்; பதினைந்து பேரென்றால் என்ன நூற்றைம்பது பேரென்றாலென்ன தலைமை தாங்கக்கூடிய மனத்திறனை களமுனைகளில் அசாத்திய துணிச்சலை எல்லாவற்றையும் விட மன ஓர்மத்தினை அவர் ஊட்டினார். இன்று அவரது வளர்ப்புக்கள், அவரது பாசறையில் வளர்ந்தோர் பலர் இன்றளவும் களங்களில் எதிரியைக் கலங்கடித்து அவர் பெயரைப் புதுப்பித்த வண்ணமேயுள்ளனர்.

களங்களில் மாவீரரானோர் பலர்; பல்லாயிரம் பேரை வழிநடத்தும் தளபதிகளென பலர்வழி அவர் நினைவுறுத்தப்படுகிறார். தனது ஆளுமையை படை நடத்தும் திறனை இவர்களிடை விதைத்தார். இதன்வழி இழந்துவிட்ட தமிழரின் வீரமரபைப் புதுப்பித்தார். எல்லாத் தொழில்நுட்பத்தையும் விட எல்லா ஆயுதங்களையும் விட அதனைக்கையாளும் மனித ஆற்றலே முதன்மையென்பதை அவர் சான்றளித்தார்.

'எமது அமைப்பிலிருந்து பல்வேறு தருணங்களில் பல்வேறு காரணங்களிற்காகத் தொடர்ந்தும் போராளியாக இருக்கமுடியா தோருடனும் அவருக்கு உறவிருந்தது. நெருக்கடி மிகுந்த வேளைகளில் விலகிய போராளிகளை மீண்டும் இணைக்கப் பெரிதும் பால்ராஜ் உதவினார். அவர் சொல் கேட்டவுடன் மறுபேச்சின்றி எல்லாவற்றையும் விட்டெறிந்து இவர்கள் வந்த காட்சி இப்பொழுதும் நினைவில் நிழலாடுகின்றது".

எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும் அடிப்படை மக்கள் படை போர்க்கட்டுமானங்களே. ஒவ்வொரு விடுதலைப் போராட்டத்திலும் இவ்வடிப்படை அவ்வச் சூழல், காலம், மக்கள் மனநிலைக்கேற்ப வேறுபடும். எனினும் அடிப்படை ஒன்றே. இங்கேயும் பால்ராஜ் பெரும் பங்காற்றினார். இந்தியப் படை வெளியேற்றத்தின் பின் தாயகத்தினை காத்திட மக்கள் படையின் ஒரு வடிவாக தேசியத் துணைப்படைக் கட்டமைப்பொன்றினை உருவாக்கிவிட தலைவர் விருப்புற்றார்.

1990 களின் நடுப்பகுதியில் மணலாற்றின் பல கிராமங்களை உள்ளடக்கிய இப்படைக் கட்டமைப்பின் உருவாக்கத்தில் பால்ராஜ்சின் வழிகாட்டல் அறிவுரைகள் படைய அறிவியல் கருத்துக்கள் நிறைவேறியிருந்தன.

தளபதிகளான அன்பு, வெள்ளை என்போருக்கு துணையாயிருந்தார். அவருக்கு மிக நன்கு தெரிந்த பல துணைப்படை வீரர்களைப் பயிற்சி, வேவு, பாதுகாப்பு தாக்குதலென பல நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடுத்தினார். இதனால் பலம் பொருந்திய துணைப்படைக் கட்டமைப்பு உருவாகியது.

பூநகரி மீதான தவளைப் பாய்ச்சல் முன்னர் மணலாற்றில் நடைபெற்ற மின்னல் கஜபார எதிர்ச்சமர்கள் எம்மால் பெயர் சூட்டி நடத்தப்பெற்ற இதய பூமி-01 போன்றவற்றில் இத்துணைப்படை வீரர் உறுதியாக நின்று களமாடினர்; விழுப்புண் அடைந்தனர். வீரச்சாவடைந்தனர்.

ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு கட்டத்திலிருந்ததாக மூத்த போராளியொருவர் நினைவு மீட்டார். தாமே வேவு பார்த்து, தாக்குதல் நடத்தி, ஆயுதங்களைக் கைப்பற்றி, தென் தமிழீழத்திற்குப் போராளிகளை வழிகாட்டி அழைத்துச்சென்று தமது உயிர் பிரியும் வரை நாட்டிற்குழைத்த உத்தமர்களான பொன்னண்ணர், மயில்குஞ்சன், சின்னவன் போன்றோர் பால்ராஜ்சோடு நினைவில் என்றும் கொள்ளப்படுவர்.

அதேவேளை 1995 காலப்பகுதியில் அப்போதைய சூழலைக் கருத்திக்கொண்டு இக்கட்டமைப்பினை தற்காலிக இடைநிறுத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டபொழுது போதிய விளக்கங்கள் கொடுத்து, மனக்கசப்புகளேற்படாது அவர்கள் மனம் புண்படாது பார்த்துக்கொண்ட பணியிலும் தளபதி வெள்ளையோடு பால்ராஜ் ஈடுபட்டிருந்தார். இதன் பயனாக மீண்டும் இத்தகைய மக்கள் படைக் கட்டுமானங்கள் கட்டப்பட்டபோது மீண்டும் பலரும் இணைந்து செயலாற்றி வருகின்றமை இன்றைய வரலாறு.

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் பொழுது மக்கள் படைக்கட்டுமானங்கள் உருவாக்கப்பட்ட பொழுது அங்கே பால்ராஜின் பங்களிப்பிருந்தது. போர்க்கள பின்தளப் பணிக்கும் காவலரண் அமைத்து எல்லைக்காப்புப் படையாகச் செயற்படவும் ஏற்றவகையில் பால்ராஜ் இவர்களுக்கு ஊக்கமூட்டினார்.

இப்படைக்கட்டுமானங்களில் ஈடுபட்டோருக்கு அறிவுரை வழங்கினார். இவர்களின் சொந்த நலன்களில் குடும்ப நலன்களில் கூடிய கவனமெடுக்க வற்புறுத்தினார்.

இத்தகைய கால கட்டங்களில் பால்ராஜ் பேசுகின்றாரென்றால் அது ஊக்கமிகு, எழுச்சிமிகு உளச்சத்தூட்டமாக அனைவருக்கும் அமையும். ஒருமுறை பயிற்சி முடித்து களப்பணிக்குச் செல்லமுன் இவர்களை பரவிப்பாஞ்சானில் ஒன்றாக்கி பால்ராஜ் பேசியபோது இவர்களைப் பார்த்து 'போர்வீரர்களே" என வீரத்தோடும் உணர்வோடும் விளித்தபோது அவர்கள் மெய்மறந்தனர்; குடும்பத் துயர் பிரிவினை மறந்தனர்; கடமையையே நினைத்தனர் என நேரில் பார்த்த போராளியொருவர் கூறினார்.

தனது இறுதிக்கணம் வரை மக்கள் நலன்பற்றிய கவனமே அவரிடமிருந்தது. கிடைக்கின்ற சிறு ஓய்வுப் பொழுதினையும் எமது ஆதரவாளர் மாவீரர் குடும்பத்தின் ஏனையவர்கள் எல்லாரையும் தொடர்ந்து சந்தித்து உரையாடியவண்ணமேயிருந்தார். அவர்களனுப்பும் வேண்டுகைக் கடிதங்களை இடைவிடாமல் வாசித்தவண்ணமேயிருந்தார்.

சம்பந்தப்பட்டோரோடு தொடர்புகொண்டு இயலுமானதைச் செய்தும் வந்தார். தனது இறுதிக்கணத்தை மணலாற்று மண்ணில் தனது மக்களோடு அவர் பங்கிட்டுக் கொண்டார். எனவே அம்மக்கள் கூறுவதாக வ.ஐ.ச.ஜெயபாலன் கூறுகின்றார்.

'அவனை ஆழப் புதைக்காதீர்
ஆலயங்கள் கட்டாதீர்
நாளை மணலாற்றினை மீட்டு
வாழத் திரும்புகையில் நம்சனங்கள்
மசிரை விட்டுதுகள் தம்
மனம் நிறைந்த நாயகனை"

தகவல் உதவி:-போராளி இசையமுதன்.

-க.வே.பாலகுமாரன்-

நன்றி: வெள்ளிநாதம் (04.07.08)

Comments