தேர்தல் ஜூரத்தில் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் மீனவர் பிரச்சினை

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது பற்றிய விவகாரம் தமிழகத்திலும் சூடுபிடிக் கத் தொடங்கியுள்ளது

தமிழகத்தில் சகல அரசியல் கட்சிகளுமேஆளும் தரப்பு, எதிர்தரப்பு என்ற வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளுமே இவ்விவகாரத்தில் ஒரே சமயத்தில் ஒரே சீற்றத்துடன் எதிர்ப்புக் கிளப்பியிருப்பதை சில தினங்களுக்கு முன்னர் இப்பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல தமிழகத்தின் ஆளும் தி.மு.க. தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கின்றது.

தமிழக மீனவர் பாதுகாப்பு விவகாரத்தை ஒட்டி இப்போது தமிழகம் எங்கும் ஒருமக்கள் கிளர்ச்சியே உருவாகி யிருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் தமிழக மீனவர் பாதுகாப்புப் பிரச்சினை முன்னெப்போதும்இல்லாத அளவுக்கு இப் போது தமிழகத்தில் பெரும் உணர்ச்சிபூர்வ விவகாரமாக்கப் பட்டிருக்கின்றது.

இப்படித் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், அவர்களது வலைகள், படகுகள், பிடிக்கப்பட்ட மீன்கள் என்பன இலங் கைக் கடற்படையினரால் சூறையாடப்படுவதும், புதிய விடயங்கள் விவகாரங்கள் அல்ல. கடந்த பல ஆண்டு களாக இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப் பட்டுவரும் தொடர் அட்டூழியம்தான் இந்த அனர்த்தங்கள்.

இன்னும் விவரமாகச் சொல்வதானால் இப்போது இடம்பெற்றிருக்கும் தமிழகமீனவர்களுக்கு எதிரான அராஜகங்கள், அத்துமீறல்களை விட, மிக மோசமான அட்டூழியங்கள், கொடூரங்கள் முன்னர் நடந்திருக்கின்றன.

ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத கிளர்ச்சியையும், எழுச்சியையும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒருங்கு சேர்ந்து இப்போது தூண்டி நிற்கின்றன. இது ஏன்?

"சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பார்கள். அதுபோல, தமிழக மீனவர்கள் பாதுகாப்புக் குறித்துத் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் இப்போது ஒரேயடி யாகத் திடீர் கரிசனையும், கவனமும், ஈடுபாடும், அதீத உணர்வும் ஏற்பட்டமைக்குக் காரணம் உண்டு.

இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் எந்நேரமும் நடக்கலாம்என்ற "தேர்தல் ஜூரம்தான்' இப்படித் தமிழக மீனவர் குறித்த கரிசனைப் பிதற்றலுக்குப் பிரதான காரணமாகும்.

தமிழக மீனவர்கள், அருகில் உள்ள ஒரு சிறிய தேசத்தின் கடற்படையால்அந்நிய சக்தியால்வரன்முறையின்றித் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், அராஜகங்களுக்கு உட்படுத்தப்படுவதும், அவர்களது உடைமைகள் கொள்ளையிடப்பட்டு சூறையாடப்படுவதும், தமிழகத்தில் உணர்ச்சியைத் தட்டிவிடக்கூடிய அரசியல் விடயங்களாகும்.

அந்த உணர்வுபூர்வ விவகாரத்தை மாற்றுக் கட்சிகள் கிளறி அரசியல் லாபம் தேட விடக்கூடாது, தாமே அதனை வசமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கம் கருதியே தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இவ்விடயத்தில் அதிகம் தலையை நுழைத்துத் துள்ளிக் குதிக் கின்றன.

மத்தியில் புதுடில்லியில் அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற விஷப் பரீட்சையை நாளை சந்திக்கவிருக்கின்றது. அதில் தப்பிப் பிழைக்குமா என்பது தெரியவில்லை.

அரசு தோற்றால் உடனடிப் பொதுத்தேர்தல் தவிர்க்கமுடியாததாக இருக்கும். தப்பிப் பிழைத்தால் கூட அதன் பின்னரும் அந்த அரசின் ஆயுள் "கரணம் தப்பினால் மரணம்' என்ற மாதிரித்தான்.

உதிரிக் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டிய அந்த அரசு, எந்நேரமும் கவிழ்ந்து விடும் ஆபத்து உண்டு. அந்த ஆபத்தை சமாளித்துச் சரிக்கட்டினாலும் இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஏப்ரலுடன் முடிவுக்கு வந்துவிடும்.

எப்படிப் பார்த்தாலும் இன்னும் ஓராண்டுக்குள் எந்நேரத் திலும் எந்தச் சமயத்திலும் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்தேயாகும். அதைத் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது.

இப்படித் தவிர்க்கமுடியாத பொதுத்தேர்தல் ஒன்று வருவது, ஏற்கனவே தனித்து அறுதிப் பெரும்பான்மையின்றியே தமிழகத்தில் ஆட்சியைத் தொடரும் தி.மு.க. கட்சியின் மாநில அரசுக்கும் பலத்த நெருக்கடிகளைத் தரக்கூடும்.

இந்தத் தேர்தல் எதிர்பார்ப்பு அதைஒட்டி எழுக்கூடிய சிக்கல் கள் போன்றவற்றின் பின்புலத்திலேயே தமிழக மீனவர் களின் பாதுகாப்புக் குறித்து தமிழக அரசியல் கட்சிகளுக்கு அதீத ஈடுபாடு உருவாகியிருக்கின்றது.
இதுவரை காலமும் பல ஆண்டுகள் தமிழக மாநிலத் தில் தமது ஆட்சியை நடத்திக்கொண்டு, மத்திய அரசிலும் அதிக செல்வாக்கைச் செலுத்தி வந்த தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்குக் கூட தமிழக மீனவரின் நலனுக்காகக் கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என்ற கரிசனையும் கவனமும் இப்போது உதித்து விட்டது!

""கச்சதீவு விவகாரத்தில் தமிழக மீனவர்களின் உரிமையை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரமும் வேளையும் வந்துவிட்டது!'' என்று தமிழக முதல்வர் இப்போது தான் கூறுகின்றார்.

இதுவரை தூங்கிக்கொண்டிருந்த தமிழக முதல்வர், இப்போதுதான் நித்திரை விட்டெழுந்தவர் போல, கச்சதீவு விடயத்தில் தமிழக மீனவரின் உரிமைகளை மீட்கும் தருணம் இப்போதுதான் வந்திருக்கின்றது என்று இச் சமயத்தில் கூறுகின்றார்.

கச்சதீவு விவகாரத்திலும் தமிழக மீனவர்களின் பாது காப்பு விடயத்திலும் இதுவரை உறங்கிய தமிழக முதல் வரை பொதுத்தேர்தல் ஜூரம் நித்திரையை விட்டு எழுப்பி விட்டது போலும்.

இனித் தேர்தல் திருவிழாக் களைகட்டி நடந்து முடியும் வரை தமிழக மீனவர்களின் பாதுகாப்புப் பற்றிய விவகாரம் தமிழக அரசியல் கட்சிகளினால் பட்டி, தொட்டிகள், மேடைகள், அரங்குகள் எங்கும் முழங்கும் என எதிர்பார்க்கலாம்.

தேர்தல் முடிந்ததும் அவையும் அடங்கிவிடும். தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் இலங்கைக் கடற்படையினரிடம் வாங்கிக்கட்டிச்சாகும் அவலமும் அதன் பின்னரும் "வழமை போல' தொடரவேண்டியதுதான்.


Comments