ஜே.வி.பி.யின் தொழிற்சங்கப் பலமும் மகிந்தவிடம் எடுபடவில்லை

சிறிலங்காவின் மூன்றாவது அரசியல் சக்தியாகத் தன்னைக் கருதிக்கொண்டும் தன்னிடமுள்ள தொழிற்சங்கப் பலத்தை வைத்துக்கொண்டு ஆட்சியாளர்களை தாம் விரும்பியபடி ஆட்டிப்படைத்து விடலாம் எனவும் நம்பிவந்த ஜே.வி.பி. கடந்த 10 ஆம் திகதி தனது தொழிற்சங்கப் பலத்தைக் காட்டி மகிந்த ஆட்சிக்கு எச்சரிக்கை செய்ய விரும்பியது.

தாங்க முடியாத வாழ்க்கைச் செலவைச் சுமந்துகொண்டும் மகிந்த ஆட்சியின் ஊழல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்ற உழைக்கும் வர்க்கம் ஜே.வி.பி.யின் இந்த முயற்சிக்கு துணையாக இருக்கும் என நம்பிய ஜே.வி.பி. தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகியது.

மகிந்த பலமுறை அழைத்தும் பேச்சுக்குச் செல்லாத ஜே.வி.பி. பல சவால்களை விட்டுக் கொண்டேயிருந்தது. ஆனால் அதன் போராட்டமானது அது நினைத்தது போன்று வெற்றிகரமாக அமைந்து விடாதது அதற்குப் பெரும் ஏமாற்றம் தரும் ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வகையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலேயே ஜே.வி.பி. தனது இரண்டாவது பலத்தையும் பரீட்சித்துப் பார்த்துவிட்டது. அதாவது, ஜே.வி.பி தனது தொழிற்சங்கப் பலத்தை தான் பதவியில் இருத்திய மகிந்த ஆட்சி மீது பிரயோகித்துப் பார்த்துவிட்டது.

ஜே.வி.பி.யானது தான் இரண்டு வகையான பலத்துடன் சிறிலங்காவின் அரசியலில் வளர்ந்து கொண்டு வருவதாக கனவு கண்டு கொண்டிருந்தது. ஒன்று இளைஞர்களை அணி திரட்டி ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக வளர்த்து ஓர் அரசியல் பலத்துடனும் தொழிற்சங்கங்களை உருவாக்கி அதில் தொழிலாளர்களை ஒன்றிணைத்து பெரும் தொழிற்சங்கப் பலத்துடனும் இருப்பதாக அது நம்பியிருந்தது.

2001 ஆம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் வரை அதன் அரசியல் பலம் வளர்ச்சியடைந்து வருவதாகவே தேர்தல் முடிவுகள் காட்டின. அதில் அதற்கு 16 பாராளுமன்ற ஆசனங்கள் கிடைத்தன.

ஆயுத அரசியலில் இருந்து சனநாயக அரசியலிற்கு மாறிவிட்டதாக அது கூறித் தேர்தல்களில் இறங்கியதிலிருந்து படிப்படியான அதிகரிப்பாக 16 பாராளுமன்ற உறுப்பினர்களை அது பெற்றதுவரை ஐ.தே.க.விற்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மாற்றீடான ஒரு சக்தியாக தென்னிலங்கையில் அது வளர்ந்து வருவதாகவே கருதப்பட்டது.

2002 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் ஐ.தே.க. அரசாங்கத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்திற்கு எதிராக படிப்படியாக சிங்கள மக்களை அது அணி திரட்டிய முறையைக் கண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிகூட அஞ்சியது. இதன் காரணமாக அது ஜே.வி.பி.யுடன் கூட்டுவைக்க முனைந்தது.

இக்கூட்டுக் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வேளையில் இதன்மூலம் எந்தக்கட்சி எந்தக்கட்சியால் விழுங்கப்படப் போகிறது? என்பது குறித்தே முக்கியமாகப் பேசப்பட்டு வந்தது.
ஜே.வி.பி-சு.க.கூட்டின் பிரதான பங்காளரான அநுரா பண்டாரநாயக்க சு.க.வை எவரும் அழித்துவிட முடியாது. ஜே.வி.பி.யே சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கரைந்துவிடப் போகிறது என வெளிப்படையாகக் கூறிவந்தார்.

எவ்வாறாயினும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுவைத்துக் கொண்ட ஜே.வி.பி. 2004 பொதுத் தேர்தலில் 39 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டது. இதன் காரணமாக நிறைவேற்று அதிகாரத்தை வைத்திருந்த சந்திரிகா அம்மையாரையே நினைத்தவாறு ஆட்டிப்படைக்க முயன்றது.

சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் இருந்தமையினால் ஜே.வி.பி.யிற்கு இணங்கிப்போவதைத் தவிர அவருக்கு வேறு வழியிருக்கவில்லை. கூடியளவில் அவர் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொண்டாலும் இறுதியில் தொல்லை தாங்க முடியாமல் ஜே.வி.பி.யை வெளியேற்றி விடும் முடிவுக்கு வந்தார். அடுத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவிற்கு கட்சிக்குள் இருந்த எதிர்ப்புக் காரணமாக ஜே.வி.பி.யிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஜே.வி.பி.க்கும் ஐ.தே.க.வை ஆட்சிக்கு வராது தடுக்க வேறு வழியிருக்கவில்லை. இந்நிலையில் மகிந்தவுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஜே.வி.பி. இறங்கியது.

இந்நிலையில் தேர்தலில் மகிந்த பெற்ற வெற்றியை தனது வெற்றியாகவே அது கருதிக்கொண்டது. தன்னை ஆட்சியாளரை உருவாக்கும் ஒரு பிரதான சக்தியாகவும் அது வெளிப்படையாகவே கூறிக்கொண்டது. உண்மையில் மகிந்தவை ஆட்சியில் அமர்த்தியது தாமே என்ற அளவிற்கு அதனது எண்ணம் இருந்தது.

இந்நிலையில் மகிந்த பதவியேற்றதும் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் அது தனித்து நின்று போட்டியிட்டு தனது பலம் என்ன? என்பதனை மகிந்தவுக்குக் காட்ட நினைத்தது. ஆனால் விளைவோ மறுவளமாக இருந்தது. ஏனெனில் அத்தேர்தலில் ஓரிரு உள்ளுராட்சி சபை உறுப்பினர்களைத் தவிர ஏனையவற்றில் ஜே.வி.பி தோல்வியையே தழுவிக்கொண்டது. எனவே அரசியல் ரீதியில் ஜே.வி.பி.யின் பலம் என்ன? என்பது வெளிப்படையாகியது.

இங்கு ஜே.வி.பி கவனியாத விடயம் என்னவெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி பரீட்சார்த்த முறையில் நடத்திய தேர்தல்களில் முறைகேடுகள் செய்தாவது வெற்றிபெறும் நோக்கத்துடன் மகிந்த இருக்கையில் பரீட்சார்த்த முறையில் தானும் தனித்து தேர்தலில் குதித்தது. இரண்டாவது பெரிய கட்சிகளுடன் தனது வளர்ச்சி பற்றிப் பரீட்சிக்க உள்ளுராட்சித் தேர்தலைத் தெரிந்தெடுத்தது ஆகும். ஏனெனில் உள்ளுராட்சி சபைகளுக்கு மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களிப்பது வழமையாகும்.

இதேபோன்றதொரு தவறையே ஜே.வி.பி. தனது தொழிற்சங்கப் போராட்டத்தின்போதும் செய்துள்ளது. அதாவது, மகிந்த அரசாங்கம் யுத்தத்தில் வெற்றிபெறுவது என்ற ஒரே நோக்கத்துடன் செயற்படுகின்ற இந்தவேளையில் விலைவாசி ஏற்றம் குறித்தோ மக்கள் இதனால்படும் துன்பம் குறித்தோ எதுவும் செய்யமுடியாத நிலையிலேயே இருக்கின்றது. அத்தோடு சம்பள உயர்வு கோருகின்ற போராட்டங்களை நிறுத்துவதற்காக அவர்கள் கோருகின்ற சம்பள உயர்வையும் அதனால் வழங்கிவிடவும் முடியாது.

எனவே, ஜே.வி.பி. நடத்த முற்படுகின்ற தொழிற்சங்கப் போராட்டத்தை ஆட்சி அமைக்க உதவியவர்கள் என்பதற்காக நசுக்காது விட்டால் அந்த நசி காரணமாக ஜே.வி.பி போராட்டத்தைத் தொடரும். இதனால் ஆட்சிக்கு உலைவைப்ப தாக முடிந்துவிடும் என்பது மகிந்தவுக்கு நன்கு தெரியும்.

எனவே அதனை முளையிலேயே கிள்ளி விட மகிந்த தனது வழமையான தந்திரோபாயங்கள் அனைத்தையும் பாவித்தார். இதனால் ஜே.வி.பி நினைத்தவாறு இதில் எதுவும் செய்து விட முடியவில்லை. அரசியல் ரீதியாகவும் சரி தொழிற்சங்க ரீதியாகவும் சரி ஜே.வி.பி.க்கு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பாதகநிலை உள்ளது. அது சிறிலங்கா சனாதிபதிக்கு உரிய நிறைவேற்று அதிகாரம். இந்த அதிகாரத்தைக் கொண்ட ஒருவருக்கு அல்லது அவருடைய ஆட்சிக்கு எதிரான போராட்டம் நடத்துவதும் அதில் வெற்றிபெறுவது என்பதும் சுலபமாக இருக்காது. அவ்வாறான போராட்டங்கள் மூலம் அவரை நீக்குவதானால் அவரது ஆட்சியின் இறுதிப் பகுதிக்கு வரும்வரை காத்திருக்க வேண்டும். எனவே மகிந்தவை ஆட்சிப்பீடம் ஏற்றிவைத்த ஜே.வி.பிதான் நினைத்தவுடன் ஆட்சியிலிருந்து நீக்கிவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

அடுத்ததாக ஜே.வி.பி தனது வளர்ச்சிக்குத் தானே இட்டமுட்டுக்கட்டையாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் அது இணைந்து கொண்டதாகும். ஏனெனில் தென்னிலங்கை மக்கள் அதனை பிரதான இரண்டு கட்சிகளுக்கும் மாற்றீடான ஒரு கட்சியாகக் கருதி வாக்களிக் கையில் இவர்கள் பிரதான கட்சியுடன் இணைந்து கொண்டால் ஜே.வி.பி.க்கு வாக்களிக்க வேண்டிய தேவை ஏன் எழுகின்றது? எனவே அரசியல் ரீதியாக அதன் வளர்ச்சி தடைப்பட்டுப் போயிருக்கின்றது.

அத்துடன் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்துடன் இணையாவிட்டாலும் அது ஆதரவாகச் செயற்பட்டது. மேலும் யுத்தத்திற்கு எதிரானவர்கள் தேசத்துரோகிகள் என்ற ரீதியிலான ஜே.வி.பி.யின் பிரச்சாரத்தின் விளைவுக்கு அது உள்ளாகியுள்ளது. ஏனெனில் அது நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தையும் தேசத்துரோகமாகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெளிப்படுத்தியது.

எனவே தொடர்ந்தும் ஜே.வி.பி போராட்டம் நடத்துமானால் இக் குற்றச்சாட்டுக்கு ஜே.வி.பி உள்ளாவதைத் தடுக்கமுடியாது.

எனவே ஜே.வி.பி. சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுவைத்துக் கொண்டதோ அத்துடன் அதன் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் போராட்ட குணத்திற்கும் முட்டுக்கட்டை வீழ்ந்துவிட்டது என்றே கூறவேண்டும். எவ்வாறாயினும் ஜே.வி.பி. போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தப் போகின்றது. ஆனால் பலன் எதுவும் மக்களுக்கு கிடைக்குமென எதிர்பார்ப்பதில் பயனில்லை.

ஏனெனில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இதனை முறியடிக்கும். அதற்கு அது பல்வேறு வழிகளையும் கையாளும். அல்லது காணாதது போல விட்டுவிடும். தற்போது சார்க் மாநாடு நடைபெறவுள்ள வேளையாக இருப்பதால் அது வேலை நிறுத்தக்காரரை ஒருவிதமாகக் கையாண்டு அதனை மழுங்கடித்தது. ஆனால் தொடர்ந்தும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கும் எனக் கூறிவிட முடியாது. அப்போது தான் ஜே.வி.பி தான் செய்த தவறினை முற்றாக உணர்ந்து கொள்ளும்.

-வேலவன்-

வெள்ளிநாதம் (18.07.08)


Comments