புலிகளின் அறிவிப்பு அரசுக்கு அல்ல தெற்காசிய நாடுகள் சமூகத்துக்கே !

உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே நாம் விரும்புகின்றோம். இதற்கான புற நிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதய சுத்தியோடு இருக்கிறோம். தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகிறோம்.

இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறும் ஜூலை 26 முதல் ஓகஸட் 04 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகளற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம்.

இவ்வாறு அறிவித்திருக்கின்றனர் புலிகள்.

நேற்று அதிகாலை கிளிநொச்சியிலிருந்து புலிகள் வெளியிட்ட அறிக்கையிலேயே "சார்க்' மாநாட்டை ஒட்டிய யுத்த நிறுத்தப் பிரகடன அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதே அறிக்கையிலேயே

தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை முன்வைக்க மறுத்து நிற்கும் சிங்கள அதிகாரபீடம், இராணுவத் தீர்வில் நம்பிக்கை கொண்டு, பெரும் ஆக்கிரமிப்புப் போரைத் தமிழர் தேசம் மீது ஏவிவிட்டிருக்கின்றது என்றும், சிங்கள தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது என்றும் புலிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

ஒருதலைப்பட்சமாகத் தம்பாட்டில் யுத்த நிறுத்தத்தைப் பிரகடனம் செய்யும் அறிக்கையிலேயே சிங்கள ஆட்சிப் பீடத்தின் அரசியல் போராகப் பேய் வடிவம் எடுத்திருக்கின்றது என்பதைச் சுடடிக்காட்டுவதன் மூலம், இந்த யுத்த நிறுத்த அறிவிப்புக்கு சாதகமான பிரதிபலிப்பை தென்னிலங்கை ஆட்சிப்பீடம் காட்டப்போவதில்லை என்பதையும் நேரத்துடனேயே கோடிட்டுக்காட்டி விட்டார்கள் புலிகள்.

அவர்களின் ஏனைய பலரின் எதிர்பார்ப்பின்படி இந்த ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பை உதாசீனப்படுத்தும் வகையில் எள்ளிநகையாடும் விதத்தில் இலங்கைத் தரப்பில் கருத்துகள் உடனடியாகவே வெளியாகிவிட்டன.

இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு புலிகளின் கபடச் சதித்திட்டம். யுத்தமுனையில் தாங்கள் பலவீனமடையும் சமயங்களில் எல்லாம் பேச்சுகளை மேற்கொள்ளுகின்ற பெயரில் தங்களை இராணுவ ரீதியில் பலப்படுத்த அவர்கள் வழமையாக மேற்கொள்ளும் எத்தனம் இது.

அரசைப் பொறுத்தவரை யுத்த நிறுத்தம் ஒன்றில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் அதற்கு இல்லை. நாங்கள் புலிகளை நம்புவதாயின் முதலில் அவர்கள் ஆயுதங்களைக் களைந்து எங்களிடம் சரணடையவேண்டும். என்று அறிவித்திருக்கின்றார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ.

இலங்கையின் பாதுகாப்புத் துறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்து அதிகம் செல்வாக்கும் அதிகாரமும் உடையவர் என்று கருதப்படுபவரும், ஜனாதிபதியின் சொந்தச் சகோதரருமான இவர், புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பு வெளியான கையோடு சில மணி நேரத்துக்குள் இப்படிப் பிரதிபலிப்பை வெளிப்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

இப்படிப் புலிகளின் அறிவிப்பைக் கிண்டல் செய்து, புறக்கணிக்கும் கருத்துகளை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, வெளிவிவகாரச் செயலாளர் பாலித ஹொகன, அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளரும், இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சின் செயலாளருமான கலாநிதி ரஜீவ விஜேசிங்க ஆகியோரும் விடுத்திருக்கின்றனர்.

இவை எதிர்பார்க்கப்பட்டவைதான். புலிகள் கூட, தங்களுடைய ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்புக் குறித்து இன்றைய கட்டத்தில் அரசு இப்படித்தான் பிரதிபலிப்புக் காட்டும் என்பதை இலகுவாகவே சுலபமாகவே முன்கூட்டியே ஊகித்திருப்பர்.

அதுவும் மன்னார் களமுனையில் புதிய,புதிய பிரதேசங்களை அரசுப் படைகள் கைப்பற்றியிருக்கின்றன என்று பிரகடனப்படுத்தி,வெற்றிக்களிப்பில் மிதந்தபடி, அரசுத் தரப்பு இறுமாப்பு அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் இச்சமயத்தில்
புலிகள் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்த அறிவிப்பை விடுத்தால் நிச்சயமாக, அதனைப் பலவீன நிலையிலிருந்து எப்படியும் தப்பிப் பிழைப்பதற்கான புலிகளின் தந்திரோபாயமாகவே சிங்களம் அர்த்தம் பண்ணும் வியாக்கியானம் செய்யும் என்பது முற்கூட்டியே புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

அவ்வாறு இருக்கையில் தென்னிலங்கை ஆட்சிப்பீடம் ஏளனம் செய்யக்கூடிய வகையில் தாம் பலவீனமுற்றவர்களாகக் கருதப்படும் இச்சமயத்தில் புலிகள் இப்படி ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தம் அறிவித்தமை ஏன் என்று ஒரு கேள்வி எழுவது இயற்கையே.

இந்த யுத்த நிறுத்தத்தைப் புலிகள் இலங்கை அரசுக்காக அல்லது இலங்கை அரசுக்கு அறிவிக்கவேயில்லை என்பதுதான் உண்மை, நிதர்சனம், மெய்மை நிலை.

சர்வதேச சமூகத்துக்கு குறிப்பாகத் தென்னாசிய மாநாட்டில் (சார்க்கில்) பங்குபற்றும் தெற்காசிய நாடுகளுக்கு நட்புறவுடனும் நல்லெண்ணத்துடனும் ஈழத் தமிழர் சார்பில் புலிகள் காட்டிய ஆக்கபூர்வமான சமிக்ஞையே இது.

அச் சமூகத்துக்குக் காட்டப்பட்ட இந்த நட்புறவுக் குறியீட்டை இலங்கை அரசு எப்படிப் புரிந்து கொள்கிறது உள்வாங்குகிறது கணிப்பிடுகின்றது என்பது புலிகளின் கவனத்துக்கு அவசியமானதல்ல. புலிகளின் அறிக்கையிலேயே அது மேலோட்டமாகப் புலப்படுவது அவதானிக்கத்தக்கது.


Comments