இன்னொரு பசுமைப் புரட்சி அவசியம்

உலக மக்கள் தொகையில் சரிபாதி (சுமார் 300 கோடி) பேர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமே அதிகபட்சமாக நிலவிவந்த உணவுப் பஞ்சம், ஆசிய நாடுகளிலும் பாதிப்புகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

அண்மைக்காலமாக மியான்மார், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் உணவுப் பற்றாக்குறையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த உணவுப் பற்றாக்குறைக்கு யார் காரணம் என வழக்கம்போல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே கருத்து மோதல்கள் எழத் தொடங்கிவிட்டன. இந்தியர்கள் மற்றும் சீனர்களே உணவுப் பற்றாக்குறைக்கு காரணம் என அமெரிக்க அதிபர் புஷ் கூறியதிலிருந்து இந்த விவாதம் சூடுபிடித்துள்ளது.

"உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றின் கொள்கைகளே உணவுப் பொருட்களின் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம்' என இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது.

வளர்ந்த நாடுகளுக்கு ஒரு விதிமுறை, வளரும் நாடுகளுக்கு ஒரு விதிமுறை என்ற உலக வங்கியின் போக்கையே இந்தியா இவ்வாறு கூறியுள்ளது.

மொத்தத்தில் அனைத்து நாடுகளும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்காததே உணவுப் பொருள் பற்றாக்குறைக்குக் காரணம் என்று கூறினாலும், இதில் அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளின் பங்கு மிக அதிகம்.

மாற்று எரிபொருளை ஊக்குவித்து வரும் அமெரிக்கா, கோதுமை உள்ளிட்ட தானியப் பயிர்களை எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்துகிறது. இதற்காக விவசாயிகளுக்கு ஏராளமான மானியத்தை அள்ளி வழங்குகிறது. இதனால், கோதுமை மற்றும் கோதுமை சார்ந்த உணவுப் பொருட்களுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் விளைநிலங்கள் குறைந்துபோனது, இயற்கைச் சீற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரிசி உற்பத்தி குறைந்து அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறை ஒருபக்கம் என்றால், விலைவாசி உயர்வு மறுபக்கம். இதற்கு முக்கிய காரணம் பெற்றோலியப் பொருட்களின் விலை உயர்வு, இந்த விலை உயர்வுக்கு சூத்திரதாரியே அமெரிக்காதான்.

உலகளவில் பெற்றோலிய உற்பத்தியில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் ஈராக்கில் போர் தொடுத்து, அங்கு நிலையில்லாத நிலையை நிரந்தரமாக உருவாக்கிவிட்டது. இதனால் பெற்றோலியப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

இதேவேகத்தில் சென்றால், எண்ணெய் வளம் இல்லாத ஏழை நாடுகளுக்கு பெற்றோலியப் பொருட்கள் எட்டாக்கனியாகிவிடும் நிலை உருவாகியுள்ளது.

சர்வதேச மாற்றங்கள் அனைத்து நாடுகளிலும் பிரதிபலிக்கும் என்றாலும், நூறு கோடிக்குமேல் மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியா இதில் கூடுதலாக முன்னேற்றப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இந்தியாவில் விளைநிலங்கள் குடியிருப்புக்களுக்காகவும், தொழிலகங்களுக்காகவும் கபளீகரம் செய்யப்படுகின்றன. இது அனைவருக்கும் கண்கூடாகத் தெரிந்த கொடுமை. விளைநிலங்கள் குறைந்து வேளாண் உற்பத்தி குறையும்போது, உணவுப் பற்றாக்குறை தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

தொழில்துறையை வளர்க்கிறோம் என்ற பெயரில் விளைநிலங்கள், நீர் நிலைகளைக் கண்டபடி அழிப்பதற்கு முதலில் தடை விதிக்க வேண்டும் அல்லது இருக்கும் கட்டுப்பாடுகளையாவது தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அடுத்த 25 ஆண்டுகளில் தொழில்துறையில் சீனா முதலிடத்தில் இருக்கும் என்றும், இரண்டாது இடத்திற்கு அமெரிக்காவும் இந்தியாவும் போட்டியிடும் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் அமைப்பு கணித்துள்ளது. இது ஒருவகையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு புறம் கவலையை அளிக்கிறது.

தொழில்துறை வளர வளர வேளாண் துறை அழிய வேண்டும் என்பது எழுதப்படாத விதியோ என்னவோ... இப்போதே அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் விவசாயத்தின் நிலை என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
தகவல் தொழில்நுட்ப உலகின் இலட்சக்கணக்கான ஊதிய மோகத்தில் மூழ்கிவிட்ட இளைஞர்கள் வேளாண் படிப்பு பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டேன் என்கிறார்கள். அதில் வேலைவாய்ப்பு இல்லாததே இதற்குக் காரணம்.

தேர்தல் நேரத்தில் மட்டும் விவசாயம் குறித்தும், விவசாயிகள் குறித்தும் அக்கறை கொள்ளும் அரசியல் கட்சிகள், விவசாயம்தான் இந்தியாவுக்கு உயிர்நாடி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அனைத்துத் துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சி ஏற்படுவதே நாட்டின் உண்மையான வளர்ச்சியாகக் கருதப்படும். அதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவை தவிர, நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருக்கும் பதுக்கல்காரர்கள் மீதான கடும் நடவடிக்கையும் முக்கியம்.

விவசாயத்தில் நவீனத்தைப் புகுத்திய பசுமைப் புரட்சி 1965களில் தொடங்கி 1980 வரை நீடித்தது. இருக்கும் விவசாயத்தைப் பாதுகாக்கவாவது இன்னொரு பசுமைப் புரட்சி நிகழ்த்தப்பட வேண்டும். அந்தக் கட்டாயத்திற்கு இந்தியா வந்துவிட்டது.

-எஸ்.ராஜாராம்-
தினமணி

Comments