தமிழர் தேசத்தின் பிரச்சினையும் - நண்பர்கள், எதிரிகள்

நமது ஊடகச் சூழலில் சமீப காலமாக இந்தியாவின் தலையீடுகள் குறித்த ஆய்வுகளும் பத்தி எழுத்துக்களும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

அவ்வாறான எழுத்துக்கள் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன.

அதில் ஒருவகை, இனியாவது இந்தியா ஈழத் தமிழர் பிரச்சினையில் காத்திரமான (சாதகமாக) பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்று கூறும் வேண்டுகோள் பாணியிலான எழுத்துக்களாக இருக்க,

மற்றையவை இலங்கை அரசியலில் தலையீடு செய்துவரும் அனைத்து அன்னிய சக்திகளையும் விட இந்தியாவே மிகவும் மோசமான முறையில் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றது என்று வாதிடும் பாணியிலான எழுத்துக்களாகவும் இருக்கின்றன.

அவ்வறான எழுத்துக்களை இந்திய எதிர்நிலை எழுத்துக்கள் எனவும் வகைப்படுத்தலாம். அவ்வாறு எழுதியவர்களில் நானும் ஒருவன். ஆனால் நான் இங்கு விவாதிக்க விரும்புவது வேறு ஒரு விடயம் பற்றியது.

இந்தியா குறித்த ஊடக ஆர்வம் அதிகரித்துச் செல்லத் தொடங்கியபோது கூடவே வேறொரு விடயமும் நமது அரசியல் ஆய்வுச்சூழலில் மேலேழுந்திருக்கிறது.

அது தமிழர் பிரச்சினையில் யாரை நண்பராக பார்ப்பது யாரை எதிரியாக பார்ப்பது என்ற சர்ச்சை பற்றியதாகும்.

இந்த வகையிலான அரசியல் ஆய்வுகளைச் செய்வோர் மறைமுகமா தமிழ்த் தேசியவாதிகளிடம் சரியான அரசியல் பார்வை கிடையாது என்றவாறான குற்றச்சாட்டையே முன்வைக்க விரும்புகின்றனர்.

குறிப்பாக தமிழ்த் தேசியர்கள் இந்தியா, சீனா, அமெரிக்கா எல்லாவற்றையும் ஒரே கண்கொண்டே பார்க்கின்றார்கள், அவர்களுக்கு நண்பர்கள் மற்றும் எதிரிகளை இனங்கானத் தெரியவில்லை என்றவாறான பல விமர்சனங்கள் அவ்வாறானவர்களிடமிருந்து வெளிவருகின்றன.

சந்தேகமில்லாமல் இவ்வாறான ஆய்வுகள் பெரும்பாலும் தமிழர் தேசத்தின் பிரச்சினையை இடதுசாரிக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து வருபவர்களிடமிருந்தே வெளிவருகின்றன.

என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது ஆய்வுகளை எந்த கண்ணோட்டத்தில் நின்று வெளியிடுகின்றனர் என்பது ஒரு பிரச்சினையல்ல, ஆனால் அதில் சமகால புறநிலைமைகள் குறித்த சரியான மதிப்பீடு இருக்கின்றதா என்பதுதான் பிரச்சினை.

இலங்கையில் இடதுசாரி அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் தோல்வியடைந்த பின்னரும் தமது தனிப்பட்ட விருப்பமாக சுருங்கிக் கிடக்கும் நம்பிக்கையொன்றின் மூலம், ஒரு தேசிய இனப்பிரச்சினையை அளவிட முற்படும் போதே இவர்கள் தவறு செய்கின்றனர்.

இந்த தவறான கண்ணோட்டத்தின் தொடர்ச்சி இந்தியாவைப் போன்று சீனா, ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்படவில்லை, ஆனால் சிலர் திட்டமிட்டு இடதுசாரிகளை கொச்சைப்படுத்தும் வகையில் அவ்வாறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதே போன்றுதான் பாகிஸ்தான் குறித்தும் மிகையாக மதிப்பிடப்படுவதாக இவர்கள் கருதுகின்றனர்.

என்னளவில் இவ்வாறனவர்களிடம் ஒரு அரசியல் ஆய்விற்கான முதிர்ச்சி இருப்பதாக தெரியவில்லை.

ஒரு வகையான தொட்டாற்சிணுங்கி மனோபாவம்தான் இவர்களிடம் நிலை கொண்டிருக்கிறது.

சமீப காலமாக இது குறித்து அவதானித்து வந்ததன் விளைவாகவே சில அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

உண்மையில் ஈழத் தமிழர் தேசத்தின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? இது குறித்து நமது நிலைப்பாடு என்ன?

சமீப காலமாக ஆளும் மகிந்த நிர்வாகம் தனது இராணுவ, பொருளாதார நலன்களுக்காக சீனா, பாகிஸ்தான் மற்றும் ஈரானுடன் நெருக்கமான உறவுகளை பேணிவருகின்றது.

ஒரு நாடு சாதாரணமான சூழலில் தனது நாட்டு மக்களின் அபிவிருத்திக்காக பிற நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கும், உள்நாட்டளவில் விடுதலைப் போர் ஒன்றை சந்தித்துக் கொண்டிருக்கும் போது பிற நாடுகளுடன் உறவுகளை பேணிக் கொள்வதற்கும் மிகுந்த வேறுபாடுண்டு.

இந்த வேறுபாட்டை சரியாக விளங்கிக் கொள்ளும் போதுதான் நாம் தமிழர் நலனில் நின்று இன்றைய உலக அரசியல் போக்கில் யாரெல்லாம் எங்களது நண்பர்கள்? யாரெல்லாம் எங்களது எதிரிகள் என்ற கேள்விக்கு விடைதேட முடியும்.

இன்று சிங்களம் தனது இராணுவ தேவைகளை ஈடு செய்து கொள்ளும் நோக்கிலேயே பிற நாடுகளுடன் குறிப்பாக சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை பேணிவருகின்றது.

பிராதான இராணுவ வழங்குனர்களாக இருந்த இந்தியாவும், அமெரிக்காவும் சமீப காலங்களில் சற்று விலகிநிற்கும் சூழலில்தான் மகிந்த நிர்வாகம் சீனாவையும் பாகிஸ்தானையும் நாடியிருக்கிறது என்ற உண்மையில் நாம் கவனம் கொள்ள வேண்டும்.

இலங்கை பிரச்சினையில் அமெரிக்காவிற்கு இருக்கும் கரிசனையை போன்றதல்ல இந்தியாவின் கரிசனை என்பதை நன்கு விளங்கி வைத்திருக்கும் சிங்கள ஆளும் வர்க்கம், இந்தியாவை தனது நலனுக்கு ஏற்ப உள்ளிளுக்கும் இராஜதந்திரமாகவே தனது சீன மற்றும் பாகிஸ்தான் நெருக்கத்தை பயன்படுத்தி வருகின்றது என்பது வெள்ளிடைமலையாகும்.

இந்த பின்புலத்தில்தான் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் சிறிலங்காவிற்கு தேவையானவற்றை நாம் செய்வோம், சிறிலங்கா தனது தேவைகளுக்காக இந்தியாவின் பிராந்திய நலனுக்கு சவாலான வகையில் வேறு சக்திகளிடம் உதவிகளை பெற முயலக்கூடாது என்ற எச்சரிக்கும் தோரணையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும் சிங்களம் அந்த எச்சரிக்கையையும் மீறி செயற்பட்டதன் பின்புலத்தில்தான் தற்போது இந்தியா பல்வேறு ஒப்பந்தங்களுடன் சிங்களத்தை திருப்திப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறது.

ஆரம்பத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலமான சம்பூர் பகுதியில் அனல் மின்நிலையம் அமைக்கும் திட்டத்தில் தயக்கம் காட்டிய இந்திய நிர்வாகம் பின்னர் அதற்கு உடன்பட்டிருப்பதானது, அவ்வாறான சிங்களத்தை திருப்திப்டுத்தும் செயலில் ஒன்றுதான்.

இதில் இருப்பது முழுவதும் இந்திய நலனே ஒழிய வேறான்றுமில்லை என்பதை விளங்கிக் கொள்ளவதற்கு அரசியல் பாண்டித்தியம் பெறவேண்டிய அவசியமில்லை.

தமிழகத்தில் ஈழத் தமிழர் போராட்ட ஆதரவு நிலையும், கரிசனையும் அதிகரித்து வருகின்ற சூழலில் நேரடி இராணுவ உதவிகைளை வெளிப்படையாக வழங்குவதிலுள்ள சிக்கல்களை கருத்தில் கொள்ளும் இந்திய நிர்வாகம், பொருளாதார ரீதியான தலையீடுகளைச் செய்வதன் மூலம் நீண்டகாலத்தில் இலங்கை அரசியல் மீதான தனது செல்வாக்கை அதிகரிக்க முடியமென நம்புகின்றது.

இன்றைய சூழலில் மகிந்த அரசு மிகவும் மோசமான பொருளாதார மந்தநிலையை நோக்கி சரிந்து கொண்டிருக்கும் நிலைமையை தனக்குரிய வாய்ப்பாக இந்தியா பயன்படுத்திக்கொள்ள விழைகிறது.

இதிலிருந்து ஒருவர், இந்திய நிகழ்சிநிரல் என்பது இந்தியாவின் நலனுக்கானதே ஒழிய ஈழத் தமிழர்களின் நலன்களுக்கானதல்ல என்னும் தெளிவான முடிவுக்கு வரலாம்.

இந்தியாவின் நிலைமை இதுவென்றால், சமீப காலமாக சிங்களம் தனது இராணுவ தேவைகளுக்காக நெருங்கியிருக்கும் சீனாவினை நாம் எவ்வாறு பார்க்கப் போகின்றோம்.

நான் மேலே குறிப்பிட்ட அந்த நம்பிக்கையின் பேரால் ஆய்வு செய்வோர் கூறுவது போன்று சீனா எப்போது ஈழத்தமிழருக்கு எதிராக வந்தது? இந்தியாவைப் போன்று எப்போது தலையீடு செய்தது? இவ்வாறான கேள்விகளில் நியாயம் இல்லாமலில்லை ஆனால் பிரச்சனை அதுவல்ல.

ஆனால் ஒரு தேசிய இனம் தன் மீதான வரலாற்று ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் போது, அந்த போராட்டத்தின் நியாயத்தை புரிந்து கொள்பவர்கள் யார்? என்ற கேள்வியிலிருந்துதான் தனது நண்பர்கள், எதிரிகளை வரையறுக்கும்.

இதில் இரண்டாவது பேச்சுக்கு இடமில்லை. இதில் வலதுசாரி இடதுசாரி என்ற சவடால்களுக்கெல்லாம் இடம் இல்லை.

இன்று மகிந்த நிர்வாகம் மூர்கமானதொரு போரை விடுதலைப் புலிகள் மீது திணித்துள்ளது. சமீபத்தில் விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவர் தாம் தற்போது நான்கு ஜெயசிகுறு படை நடவடிக்கைளை எதிர்கொண்டு வருவதாக கூறியிருப்பதிலிருந்து சிங்களம் மேற்கொண்டு வரும் போரின் உக்கிரத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வறானதொரு பெரும் எடுப்பிலான போரை எவ்வாறு மகிந்த நிர்வாகத்தினால் மேற்கொள்ள முடிகின்றது? இந்திய மற்றும் மேற்கு அரசுகளின் பெருமளவிலான இராணுவ, பொருளாதார உதவிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கு��
�் நிலையில் சிங்களம் எவ்வாறு தனது இராணுவத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறது.

இதில் எந்த இரகசியங்களும் கிடையாது.

சிங்களம் முற்றிலும் தனது இராணுவ தேவைகளுக்காக சீனா மற்றும் பாகிஸ்தானையே சார்ந்திருக்கிறது.

மேற்படி நாடுகளுடன் சிங்களம் மேற்கொண்டு வரும் பொருளாதார உடன்பாடுகள் மற்றும் கூட்டு அபிவிருத்தி திட்டங்கள் என்பனவும் ஒரு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட நிலையில் பார்த்தால் அதுவும் ஒருவகையான படைத்துறை உதவிகள்தான்.

இதனை சுருங்கச் சொல்வதானால், இன்று மகிந்த நிர்வாகம் என்னும் வண்டிலை நகர்த்திவரும் சக்கரங்;களே மேற்படி நாடுகள்தான்.

இந்த பின்புலத்தில் நின்று நோக்கினால் இன்றைய சூழலில் ஈழத் தமிழர் தேசத்தின் நண்பர்கள் என்போர், ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இராணுவ உதவிகளைச் செய்யாதவர்கள், ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போரை சர்வதேச உதவி கொண்டு அழித்தொழிப்பதில் மூர்க்கமாக தொழிற்பட்டு வரும் சிங்கள நிர்வாகத்திற்கு இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் முண்டு கொடுக்காதவர்கள் யாரோ, அவர்களே ஈழத் தமிழர் தேசத்தின் நண்பர்கள் ஆவர்.

இந்த வரிசையில் இடம்பெற யாருக்கெல்லாம் தகுதியிருக்கின்றது? சிங்களம் தனது இராணுவ தேவைகளுக்காக சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றை சார்ந்திருப்பதை மேலே பார்த்தோம்.

எனவே மேற்படி இரண்டு நாடுகளையும் தமிழர் தேசம் தனது நட்பு சக்திகளாக கருத முடியாது என்பதை சின்னப் பையனும் புரிந்து கொள்வான்.

அவ்வாறாயின் யார்தான் நண்பர்கள் என்று ஒருவர் கேட்காலம்.

அவ்வாறானவர்களுக்கான பதில் இன்றைய சூழலில் ஈழத் தமிழர் தேசத்திற்கு எவருமே நண்பரில்லை.

விடுதலைப் போராட்டத்திற்கும் அதன் ஆதரவுத் தளங்களுக்கும் வெளியில் இருக்கும் அனைத்து சக்திகளுமே ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள்தான்.

இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் என்பவைகளை தனித்தனியாக பார்க்க வேண்டியதில்லை.

ஒரு விடுதலைப் போராட்ட நிலையில் அப்படி பார்க்கவும் முடியாது. எல்லாமே ஒன்றுதான்.

ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதற்கு ஆயுதங்களும், ஆலோசனைகளும், அழித்தொழிக்கும் கருவிப் படைகளுக்கு பயிற்சிகளும் கொடுத்து வரும் முன்னணி சக்திகள் என்ற வகைiயில், ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் மேற்படி அனைத்து நாடுகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

எனவே இவ்வாறான அரசியல் ஆய்வுகளில் ஈடுபடுவோர் தமது முதிர்ச்சியற்ற ஆய்வுகளை தவிர்த்து ஆக்கபூர்வமாக சிந்திப்பதே நன்மையானது.

அதுதான் அவர்கள் சார்ந்த ஊடகங்களுக்கும் மக்களும் அவர்கள் செய்யக்கூடிய நல்ல காரியமாகும்.

-தாரகா-

தினக்குரல்

Comments