உச்சிமாநாட்டால் உச்சத் தொல்லை

ஒரு நாட்டில் ஒரு சர்வதேச ஒன்றுகூடல் அல்லது சர்வதேச மாநாடு நடைபெறுகின்றது என்றால் அந்த நாட்டுக்குக் கொண்டாட்டம்தான். அக்கொண்டாட்டத் தடல்புடலில் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பார்கள்.

சர்வதேச மட்டத்தில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளையோ, உலகக் கிண்ண விளையாட்டுப் போட்டிகளையோ, சர்வதேச ஒன்றுகூடல்கள் மற்றும் மாநாடுகளையோ நடத்துவதற்கு நாடுகள் விழுந்தடித்துப் போட்டிபோடுவதே இதற்குத்தான். இத்தகைய நிகழ்வுகளை நடத்துவது பெரும் செலவும் சிரமமும் மிஞ்சிய விவகாரம் என்றாலும், அப்போட்டிகள், நிகழ்வுகள் மூலம் அவற்றை நடத்தும் நாடுகள் புத்துயிர்ப்புப் பெறுகின்றன. அத்தேச மக்களின் வாழ்வும், வளமும் புதுமெருகு பெறுகின்றன.

இப்போது இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதன் மூலம் சீனா, தன் தேசத்தைப் புத்தெழுச்சி பெற வைக்கப் போகின்றது.

ஆனால், இலங்கையிலோ இத்தகைய சர்வதேச நிகழ்வு ஒன்று தலைகீழான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதுதான் மிகவும் பரிதாபத்துக்குரியது.

தென்னாசியப் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்கின்) பதினைந்தாவது ஒன்றுகூடலை நடத்தப்போகும் இலங்கை, அதற்காகச் செய்யும் கெடுபிடிகளும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் சிரமங்களும் பரிதாபத்துக்குரியவை மாத்திரமல்ல, விசனத்திற்கும் உரியவையாகவுள்ளன.

உண்மையில் இந்த மாநாட்டை நடத்த வேண்டிய பொறுப்பு இப்போது மாலைதீவுக்குரியது. இந்தியாவிடமிருந்து தலைமைப் பொறுப்பை அடுத்து ஏற்கவேண்டிய மாலைதீவு, இத்தகைய ஒரு சர்வதேச நிகழ்ச்சியை பல நாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடும் ஒரு மாநாட்டை நடத்துவதில் தனக்குரிய கஷ்டங்கள், நெருக்கடிகள், நிதிப் பிரச்சினைகள் ஆகியவற்றை உணர்ந்து, கருத்தில் கொண்டு, அதனை நடத்த இயலாது என்று கைவிரித்து விட்டது.

அதனை அறிந்த இலங்கை, தான் போய் இவ்விடயத்தில் தலையை நீட்டி, அந்தப் பொறுப்பைத் தன் தோளில் சுமப்பதற்காகத் தானாகவே வாங்கிக்கட்டிக்கொண்டது.

மோசமான மனித உரிமை மீறல்கள், கொடூர யுத்தம், அதலபாதாளத்திற்கு விழுந்து செல்லும் பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றால் இலங்கையின் மதிப்பு சர்வதேச மட்டத்தில் சீர்கெட்டுச் செல்கின்றது என்பது வெளிப்படையாகத் தோற்றும் நிதர்சனம்.

இந்நிலையில், இவ்வாறான "சார்க்' மாநாடு மூலம் தென்னாசியப் பிராந்தியத்துக்கான தலைமைப் பொறுப்பை ஏற்பதன் வாயிலாக, தற்போது சீரழிந்து செல்லும் இலங்கையின் கௌரவத்தையும், மதிப்பையும் சர்வதேச ரீதியில் தூக்கி நிறுத்தலாம் என்று அரசுத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எண்ணினார் போலும்.

அதனால் வலுவில் போய் இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பைத் தன் தலையில் இழுத்துப் போட்டுக்கொண்ட இலங்கை, இப்போது அதன் பாரத்தைச் சுமக்க முடியாமல் சுமக்கிறது; தடுமாறித் தத்தளிக்கின்றது.

கொழும்பில் நடத்தப்படப் போகும் இந்த மாநாடு, நாட்டு மக்களுக்கு புத்தூக்கத்தையோ, எழுச்சியையோ, மகிழ்ச்சியையோ தரவில்லை. மாறாக நெருக்கடிகளையும், வேதனைகளையும், சோதனைகளையும்தான் தந்து நிற்கின்றது.

தன்னுடைய தேசத்தில் ஒரு கொடூர யுத்தத்தை முடுக்கி விட்டு, போர் வெறித் தீவிரத்துடன் கர்ச்சித்து நிற்கும் அரசு, அதன் விளைவாக வன்முறைச் சம்பவங்களும், கொடூரங்களும் தலைநகரிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கும்

இச்சமயத்தில் "முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டமை போல' இத்தகைய ஒரு சர்வதேச நிகழ்வை நடத்த முயற்சித்திருக்கக்கூடாது.

ஆனால் முயற்சித்து விட்டது. அதனால் அதன் பேரழுத்தத்தை அது எதிர்கொண்டேயாகவேண்டும். அது தவிர்க்க முடியாத நியதி.

"சார்க்' மாநாட்டுக் காலத்தில் தலைநகர் கொழும்பின் பிரதான இடங்கள் எல்லாம் யுத்தப் பிரதேசங்கள்போல உச்சப் பாதுகாப்புக்குக் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. அப்பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாது.

பல பகுதிகளில் மக்கள் நடமாட்டம் தடைசெய்யப்படுகின்றது. பல வீதிகள் மூடப்படுகின்றன. பல பகுதிகளில் மக்களின் தலைக் கறுப்புக்கூட தென்படாத வகையில் பாதுகாப்பு இறுக்கமும், கெடுபிடியும் உச்சத் தீவிரமாகுகின்றன.

உயர் பாதுகாப்புக்கான பகுதிகள் என அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட யுத்த பகுதிகள் போலக் காணப்படும் எனத் தெரிகின்றது.
ஏற்கனவே, இந்த நிகழ்வுக்கான ஏற்பாடு என்ற பெயரில் அப்பாவி மக்களின் நூற்றுக் கணக்கான வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விட்டன.

அப்படி இடிப்பதற்கு எதிராக உயர் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்திருக்கையிலேயே அது நடந்தேறியுள்ளது.

கொழும்பிலும், சுற்றுப் புறங்களிலும் வகை, தொகையின்றி மக்கள் கைது செய்யப்படுகின்றனர். குறிப்பாகத் தமிழர்கள் இம்சைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
சோதனைகள், தேடுதல்கள், கைதுகள் என்று மக்களை வேதனைக்கு உள்ளாக்கும் நிகழ்வுகள் தாராளமாக இடம்பெறுகின்றன.

போதாக்குறைக்கு, மாநாட்டுக்கு வரும் தத்தமது நாட்டுத் தலைவர்களின் பாதுகாப்புக்கு என்ற பெயரில் பல தேசங்களின் இராணுவ ஹெலிகள், குண்டு துளைக்காத கார்கள், கப்பல்கள், நவீன ஆயுதங்களுடன் துருப்புகள் என்று வந்து குவியும் பல்வேறு நாடுகளின் உயர் பாதுகாப்புத் தரப்பினால் தலைநகர் கொழும்பில் ஓர் அந்நிய இராணுவங்களின் ஆக்கிரமிப்பும் நீடிக்கப் போகின்றது.

மக்களை மகிழ்ச்சிக்கு உட்படுத்தாத விதத்தில் மக்களை இம்சித்து, தொல்லைப்படுத்தும் விதத்தில் இத்தகைய மாநாடு ஒன்றை நடத்துவது அவசியம்தானா?

இத்தகைய கெடுபிடிகள், நெருக்கடிகள், பாதுகாப்பு அட்டகாசங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்துவது, அந்த மாநாட்டின் நோக்கங்களுக்கே ஒன்றுபட்டு வராத பொருந்தி வராத விவகாரமாகும்.

இது இந்த மாநாட்டை நடத்துவதற்காக முழுத் தென்னிலங்கையையுமே சிக்கலிலும், நெருக்கடியிலும் ஆழ்த்தும் முட்டாள் தனமேயன்றி, வேறில்லை.


Comments