பௌத்த நெறி பிரவகித்த தேசத்தில் இரத்த வெறி பீறிட்ட கேவலம்

இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்னர் தென் னிலங்கை பௌத்த சிங்களப் பேரினவாதம் இந்தத் தேசத்தில் கிணறு வெட்டப்போய் அங்கு பூதம் கிளம் பிய கதை குறித்து இப்போதும் பேசப்படுகின்றது.

"கறுப்பு ஜூலை' என்ற கொடூரக் கிணறைத் தமிழர் களுக்கு எதிராக அச்சமயம் வெட்டிய தென்னிலங்கைச் சமூகம், அப்போது கிளம்பிய பூதத்தின் நாசச் செயல் களை இன்றும் இன்னும் எதிர்கொண்டு அனுபவித்து அல்லாடிக்கொண்டு நிற்கிறது.

அன்று கிளம்பிய கறுப்பு ஜூலைப் பூதத்தின் இருபத் தியைந்தாவது ஆண்டில் நாம் இப்போது நிற்கிறோம்.

ஈழத் தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றில், அவர்க ளின் தேசிய ஆன்மாவில் ஆறாத வடுவை மாறாத புண்ணை ஆழமாக ஏற்படுத்திய பெரும் துன்பியல் நிகழ்வே இந்தக் கறுப்பு ஜூலைக் கலவரமாகும்.

அஹிம்சையையும் அன்பையும் போதித்த காருண்ய சீலரான மகான் கௌதம புத்தரின் உயர்ந்த நெறி பிர வகித்த இலங்கைத் தீவில், அந்த மதத்தின் பெயரால் தூண்டப்பட்ட குரோதம் காரணமாக மனிதத்துவமற்ற மிருகத் தனமும், நாகரிகமற்ற கொடூரமும், முரட்டுப் போக்குடன் கூடிய மிலேச்சத்தனமும் நிறைந்து, இரத்த வெறி பீறிட்டது.

இது எங்ஙனம் சாத்தியம் என்று உலகம் இன்றும் பேதலித்து நோக்குகின்ற அளவுக்கு எல்லை மீறிய குரூரம் அச்சமயம் இங்கு அரங்கேறியது.

1956,1958,1974,1979,1981 என இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக பௌத்த சிங்களப் பேரினவாதத் தினால் திட்டமிட்டு அவ்வப்போது கட்டவிழ்த்து விடப் பட்ட கொடூர வன்முறைக் கலவரங்களின் தொடராகவே 1983 இன் கறுப்பு ஜூலைக் கொடூரமும் அமைந்தது.

ஆனால் 1983 இல் மிகக் குரூரமாகவும் கோரமாகவும் கொடூரமாகவும் இடம்பெற்ற இந்த வன்முறைப் புயல், இலங்கைத் தீவில் தமிழ்த் தேசியமும், சிங்களத் தேசி யமும் இனி ஐக்கியமாக ஒரு தேசக் கட்டமைப்புக்குள் வாழ முடியவே முடியாது, அது சாத்தியமற்றது என்ற உண்மையைத் தமிழர்களுக்கு முரசறைந்து உணர்த்தி யது என்பதே நிஜம்.

தமிழ்த் தேசியமும், சிங்களத் தேசியமும் சுட்ட மண். அவை இனி ஒட்டா என்ற யதார்த்தத்தைத் தமிழர்க ளுக்கு நன்கு புரிய வைத்ததே இந்தக் கறுப்பு ஜூலைக் கலவரமே என்றால் அது மிகையாகாது.

இலங்கைத் தீவில் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இன மாக விளங்குவதற்கு அடிப்படை ஆதாரங்களாகத் திகழ்ந்த கட்டமைப்புகளை அடியோடு தகர்க்கும் இலக்கோடு, அவற் றைக் குறிவைத்தே இந்த இனக் கலவரங்கள் அவ்வப் போது கட்டவிழ்த்து விடப்பட்டன என்பதும் வெளிப்படை.

ஆனால் இந்தத் தொடர் கலவரங்களும், அவற்றின் உச்சமாக 1983 ஜூலையில் இடம்பெற்ற மிக மோசமான கொடூரமும் ஈழத் தமிழர்களின் வாழ்வியல் போக்கில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தின என்பதே கவ னிக்கத்தக்க விடயமாகும்.

கௌரவமான வாழ்வுரிமை குறித்து தங்களின் விடுதலை குறித்த இலக்குத் தொடர்பாக தங்களின் போராட் டப் பாதை பற்றி ஈழத் தமிழர்கள் தீர்க்கமானதும், உறுதி யானதும், தெளிவானதுமான ஒரே முடிவைத் தீர்மானிக் கும் வாய்ப்பை இந்தக் கலவரக் கொடூரங்களே ஏற்படுத் திக் கொடுத்தன.

இனக்கலவரம் என்ற பெயரில் பௌத்த சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த பல்பரி மாண ஒடுக்குமுறையின் பாதிப்பு ஈழத் தமிழர்களின் ஆன்மாவில் ஆழமான வடுவை ஏற்படுத்தி புதிய விளை வுகளுக்கு வழிகாட்டிற்று.

இலங்கைத் தீவின் இரு பெரும் தேசியங்களான தமிழர் தேசம், சிங்களவர் தேசம் ஆகியவற்றுக்கு இடை யில் நல்லிணக்கம், சமரசம், சகவாழ்வு ஆகியவற்றுடன் கூடிய ஐக்கியமோ, ஒரே கட்டமைப்பு ஆட்சி முறையின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்து கூட்டாக வாழ்வதோ அசாத் தியமானவை என்ற பட்டறிவைத் தமிழர்களுக்கு இந்தக் கலவரக் கொடூரங்கள் ஆழமாக உணர்த்தி நின்றன.

அது தமிழர்களின் விடுதலை நோக்கிய தீவிரப் போக் கையும், போராட்ட உணர்வையும் தீவிரப்படுத்தியது.

அத்தோடு, தமிழர்களின் சுதந்திர உரிமையை இறுதி யானதும் உறுதியானதுமான இலக்காகக் கொண்டு போராடும் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் ஒன்று முழு அளவில் தோற்றம் பெற்று அது விஸ்வரூபம் எடுப்பதற் கான வித்தை ஊன்றி, அதற்கு உரமிடும் பங்களிப்பை யும் இந்தக் கலவரக் கொடூரமே நிறைவேற்றியது.

தமிழர்களின் தேசியக் கட்டமைப்பைச் சிதைத்தழிக் கும் நோக்குடன் பேரினவாதம் ஏவிவிட்ட இந்தக் கலவரம் அதற்கு மாறாக, தமிழ்த் தேசியம் பற்றிய சிந்தனையில் மறுமலர்ச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்தி, அந்தப் போராட்டம் வீறுகொண்டெழ வழிவகுத்தது.

இதன் மூலம் தென்னிலங்கையின் நோக்கம் "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக'முடிந்தது; "கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய' கதையாயிற்று.

ஈழத் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் செல்நெறியை சரியான பாதையில் தடத்தில் தூக்கி நிறுத்தி, அது தொடர்பான இலக்கைச் செப்பனிட வைத்தது இந்தக் கறுப்பு ஜூலைக் கொடூரம்தான் என்பது, அதனை ஏவிவிட்ட சிங்களத்துக்குக் கிடைத்த பெரும் தோல்வியும் பின்னடைவுமாகும்.


Comments