தெற்கின் சிந்தனைப் போக்கு

இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவ வழியில் யுத்தம் மூலம் தீர்வு காணலாம் என்ற ஒரே சிந்தனையில் போர் வெறிகொண்டு, சந்நதம் பூண்டு நிற்கிறது கொழும்பு அரசு.

இலங்கை அரசின் ஆட்சியாளர்கள் மட்டுமல்லாமல் புத்திஜீவிகள் மட்டத்தை உள்ளடக்கிய முழு தென்னிலங்கையையுமே இந்தப் போர் வெறிச் சிந்தனை ஆகர்ஷித்து விட்டது என்பதே உண்மை.

கொழும்பு பேராயர் அதி வண. ஒஸ்வோல்ட்கோமிஸ், கொழும்பில் இருந்து வத்திக்கான் வானொலிக்காகத் தெரிவித்த கருத்துகள் என்ற அடிப்படையில் இப்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் இதனை விளக்கும் நல்ல சான்றுகள் ஆகும்.

பேராயர் அதி வண.ஒஸ்வோல்ட் கோமிஸ், வெறும் மதத் தலைவர் மட்டுமல்ல. தென்னிலங்கையில் மதிக்கப்படும் ஒரு புத்திஜீவியும் கூட.

சமாதானத்தை நிலைநிறுத்துவதன் அவசியத்தை ஒட்டி அவ்வப்போது அவர் வெளியிட்டு வந்த கருத்துகள் சமூகத்தின் கருத்து நிலைப்பாடாக முன்னர் அடையாளப்படுத்தப்பட்டு வந்தமை கவனிக்கத்தக்கது.

அத்தகைய ஒருவரே இன்றைய நிலைமை குறித்தும் முக்கிய கருத்துகளை வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாகத் தென்னிலங்கையின் இன்றைய மனநிலை எண்ணக் கருத்து என்னவென்பதைப் புரிந்து கொள்வதற்கு அதி வண. கோமிஸ் அவர்கள் பிரதிபலித்த கருத்துகளை நோக்குவது பொருத்தமானதாக இருக்கும்.

அதுவும் அதி வண. கோமிஸ் அவர்களின் மத வாழ்வில் இன்று ஒரு முக்கிய தினம். இன்றைய தினம் அவரது எழுபத்தியைந்தாவது பிறந்தநாள். அவரது குருத்துவ சேவையின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு தினம்.

அத்தோடு ஆயர் பணியின் நாற்பதாவது ஆண்டு பூர்த்தி நாளும் கூட. இந்த மூன்று நிகழ்வுகளையும் ஒருங்குசேர அவர் கொண்டாடும் இன்றைய நாளில் தென்னிலங்கைச் சிந்தனையை அவரின் கருத்துகள் ஊடாக நோக்குவது பொருத்தமானதே.

அரசும், விடுதலைப் புலிகளும் பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு இனி சந்தர்ப்பமே தருவதில்லை என்ற கட்டத்தை இலங்கையின் உள்நாட்டு யுத்தம் எட்டியிருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்.

அது யதார்த்த நிலைபற்றிய அவரது கூற்றாகும். இலங்கை யுத்தத்தை நோக்கும் அவதானிகள் பெரும்பாலும் இந்த அவதானிப்பையே இப்போது வெளியிடுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாமல் இருக்கலாம்.

ஆனால்

""பிணக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழி யுத்தம்தான் என்பது நிரூபிக்கப்படும் என்ற சாத்தியம் உள்ளது'' என்ற சாரப்படி அவர் மேலும் குறிப்பிடுவதுதான் மனதை நெருட வைக்கும் அம்சமாக உள்ளது.

வத்திக்கான் வானொலிக்குத் தகவல் வெளியிட்ட பேராயர் கோமிஸ், யுத்தத்தில் கிளர்ச்சியாளர்கள் பின்வாங்குவதை உறுதிப்படுத்தினார் என்றும் அந்த வானொலி குறிப்பிட்டிருக்கின்றது.

அதேசமயம்

""யுத்தம் புரியும் கிளர்ச்சியாளர்களும், முழுத் தமிழ்க் குடிமக்களும் வெவ்வேறானவர்கள் என்று குறிப்பிட்ட அவர், இந்த முக்கிய வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்'' என அந்த வானொலி குறிப்பிட்டிருக்கின்றது.

""யுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் ஒரு குறிப்பிட்ட பயங்கரவாதக்குழுவினரேயன்றி முழுத் தமிழர்களும் அல்லர் என்று அநேக மக்கள் கூறுகின்றார்கள். சில சமயங்களில் இவர்களால் தமிழ் மக்கள் கூடப் பணயம் வைக்கப்படுகின்றார்கள்.

எனவே, சமாதானத் தீர்வை விரும்பினால் முதலில் அவர்களை நசுக்க வேண்டும் என்றே அநேக மக்கள் நினைக்கின்றனர். அதுவே பொதுவான அபிப்பிராயம்'' என்றும் பேராயர் குறிப்பிட்டார் என அந்த வானொலி தெரிவித்துள்ளது.

உண்மையான சமாதானத் தீர்வுக்கான சாத்தியம் இப்போது இல்லையென்ற அபிப்பிராயத்தையே பேராயர் கொண்டுள்ளார் என்றும்
எவரொருவராலும் இப்போது செய்யக்கூடியது யாதெனில் அமர்ந்திருந்து, அவதானித்துக் காத்திருப்பதே என்ற நிலைப்பாட்டையே பேராயர் கொண்டிருக்கின்றார் என்றும்
வத்திக்கான் வானொலியின் தகவலில் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பேராயர் கூறுவது போல ஆயுதம் ஏந்திப் போராடும் விடுதலைப் புலிகளும், தமிழ்க் குடிமக்களும் வெவ்வேறானவர்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கூட
இலங்கைத் தீவில், கௌரவத்துடன் கூடிய வரலாற்று ரீதியான உரிமைகளை உறுதிப்படுத்தும் நியாயமான தீர்வு ஒன்று தமக்கு வேண்டும் என்ற வேணவாவிலும் அபிலாஷையிலும் ஈழத் தமிழர்களும் விடுதலைப் புலிகளும் வெவ்வேறு நிலைப்பாட்டிலும் இலட்சியத்திலும் இல்லை என்பதுதான் யதார்த்தம்; உண்மை.

தென்னிலங்கையில் தங்களைச் சமூகத் தலைவர்களாக நிலைநிறுத்த விழைவோர், சமூகத்துக்கு நீதியை எடுத்துரைப்பதை விட சமூகத்தின் இயல்பான சிந்தனையோட்டத்துக்குத் தம்மை இசைவுபடுத்தி, அந்தப் போக்கில் தம்மை வழிப்படுத்திக் கொள்வதே தமது தலைமைத்துவங்களைத் தக்கவைக்க சாலச்சிறந்தது என்ற கருத்திலேயே உள்ளனர்.

இது தென்னிலங்கையில் அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் என அனைவருக்குமே பொருந்தும்.

தென்னிலங்கைப் பேரினவாதத்தின் கருத்தாதிக்கச் சிந்தனைத் தளையிலிருந்து விடுபட்டு, நீதி,நியாயத்தை எடுத்துரைக்க முடியாத வக்கற்றவர்களாக சமூகத் தலைவர்கள் விளங்கும்போது அத்தகைய தரப்புடன் ஒரு கருத்துச் சமராடலை இங்கு திறப்பது அர்த்தமற்றது.

ஆனால் இதுதான் தென்னிலங்கை உயர்மட்டத்தின் இன்றைய சிந்தனைப்போக்கு என்பதை மட்டும் இத்தகைய கருத்துத் தெறிப்புகள் மூலம் நாம் அடையாளம் கண்டு கொள்வது இன்றைய நிலையில் பொருத்தமானதாகும்.


Comments