இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்

பழம்பாசியில் ஒரு சண்டை.

தளபதி பால்ராச் அவர்கள் வன்னிப் பிராந்தியத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் - 20 வருடங்களுக்கு முன்பு, 1988 இல் நடந்த ஒரு சண்டை அது. அப்போது அவரது பாதுகாப்பு அணிக்குப் பொறுப்பாக இருந்து, பின்னர் - 1993 இல் - பூநகரி படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் கேணல் நவநீதன் பற்றிய நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்ட போது, இந்தச் சண்டையை நினைவுகூர்ந்தார் பால்ராச் அண்ணன்.



தளபதி பால்ராச் அவர்களும், அப்போது வன்னிப் பிராந்திய அரசியல் பொறுப்பாளராக இருந்து, பின்னர் 1990 இல், கொக்காவில் படைமுகாம் மீதான தாக்குதலில் காயமடைந்து, சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது கடலில் வீரச்சாவடைந்த - லெப்ரினன்ட் கேணல் சந்திரன் அவர்களும் ஒரு அவசியப் பயணம் போகவேண்டியிருந்தது.

அது இந்தியப் படைக் காலம்;. இடறுப்படும் இடங்களிலெல்லாம் அவர்கள் நிலைகொண்டிருந்த அல்லது நகர்ந்து கொண்டிருந்த ஒரு சூழ்நிலை. மிக நெருக்கடியான ஒரு நேரத்தில், மிக நெருக்கடியான ஓர் இடத்தினூடு அவர்கள் போக வேண்டியிருந்தது. மைய இலக்கு வைத்து இந்தியர்கள் படை நடாத்திக்கொண்டிருந்த மணலாற்றுக் காட்டின் எல்லை.

நகர்ந்து கொண்டிருந்தது புலிகளின் அணி. குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களே அணியில் இருந்தார்கள். எப்போதும் போல, முதலாவது ஆளாக நவநீதன். கவனமாகப் பார்த்து, தண்ணிமுறிப்பு வீதியைக் கடந்து, அணி பழம்பாசிக் காட்டுக்குள் இறங்கியபோது எல்லாமே இயல்பாகவே இருந்தன. ஆனால், காட்டிற்குள் சற்றுத்தூரம் போன பின்பு, திடீரென நடை தயங்கி, தயார் நிலையில் தோளில்; தொங்கிய 'எம்-16" எறிகுண்டு செலுத்தியைச் சத்தமில்லாமல் கையிலெடுத்து, தலையைப் பின்னே திருப்பி, மூக்கைச் சுழித்துத் தோழர்களுக்குச் சைகை காட்டினான் நவநீதன்.



அநேகமான தடவைகளில் இந்தியர்களின் அரவம் காட்டி, எம்மை அரட்டிவிடுகிற அந்த 'மணம்" அந்த இடத்தில் சற்றுக்கூடுதலாகவே காற்றில் கலந்திருந்தது. இந்தியப் படையின் குறிப்பிட்ட ஒரு சிறப்பு அதிரடி அணியின் நடமாட்டத்திற்கான நிச்சயமான வேறு சில தடயங்களும் இருந்தன.

காட்டுப்பாதை, இடைக்கிடை புலிகள் பயன்படுத்துகின்ற தடம். இவற்றை அவதானித்திருக்கக்கூடிய எதிரி இரை தேடி வந்திருக்கலாம் என அப்போது கருதப்பட்டது. ஆனால், தளபதி பால்ராச் பற்றிய தகவலறிந்து, அவரை இலக்கு வைத்தே எதிரி வந்திருந்தான் என்பது பின்னர் தெரியவந்தது.

ஒரு பதுங்கித்தாக்குதல் வலயத்திற்குள் அந்த அணி சிக்கியிருக்கின்றது என்பதும், தாக்குதலுக்கு உள்ளாவது தவிர்க்கமுடியாதது என்பதும்; தெளிவாகத் தெரிந்தது. நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு படை அணிக்கு இது ஒரு சிக்கலான நிலைமை. ஏற்கெனவே எதிரியின் தாக்குதல் வியூகத்திற்குள் அந்த அணி வந்துவிட்டிருக்கலாம்.

எனவே, பின்னே திரும்பிச் சென்றாலும் தாக்குதலுக்கு உள்ளாகலாம். அல்லது, இனித்தான் எதிரியின் வியூகத்திற்குள் அந்த அணி செல்லவிருக்கலாம். அதனால், முன்னே சென்றாலும் தாக்குதலுக்கு உள்ளாகலாம். ஆனால், அநேகமாக, இந்த இரண்டாவது நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம் இருந்தன, ஆனாலும், முன்னே செல்லவே முடிவெடுத்தார் தளபதி பால்ராச்.


இத்தகைய ஒரு நிலையில் - தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய பாதகச் சூழலில் சிக்கிவிட்ட ஒரு அணிக்கு இருக்கக்கூடிய சிறந்த தெரிவு எதிரியின் தாக்குதலை எப்படியாவது சமாளித்து, அவனது வியூகத்திற்குள்ளிருந்து தப்பித்து வெளியேறுவது தான். ஆனால், தளபதி பால்ராச் வேறு விதமாகச் சிந்தித்தார். பதுங்கித் தாக்க வந்திருப்பவனைத் தாக்கி முறியடித்து விட்டு, எமது பயணத்தை நாம் தொடர வேண்டும் என்பது அவர் முடிவு. ~நவநீதன் என்னோடு இருந்ததால் அந்த முடிவை நான் துணிந்து எடுத்தேன் என்று அவர் சொன்னார்.

எங்கோ இருக்கின்றான் என்பது தெரிந்து, ஆனால் எங்கே இருக்கின்றான் என்பது தெரியாத எதிரி. காட்டு மறைவுக்குள் கரந்துறைந்து, இப்போதும், அந்த அணியின் செயற்பாடுகளை அவன் கவனித்துக்கொண்டு இருக்கலாம். துப்பாக்கி முனைகள் நீட்டி தக்க தருணம் பார்த்து அவன் காத்திருக்கலாம். கையிலிருந்த கணப் பொழுதுகளைப் பெறுமதிமிக்கவை ஆக்கினார் தளபதி பால்ராச்.

குறுகிய நேரத்திற்குள் அணியை மீளமைத்தார். வாயாலே சொன்னது கொஞ்சம், சைகையிலே காட்டியது சொற்பம், நவநீதனும், தோழர்களும் உணர்ந்து கொண்டது மிச்சமாக - அணி இரண்டாக்கப்பட்டது. ஒரு குழு முன்னே நகர, பின்னால், குறிப்பிட்ட தொலைவில், அடுத்த குழு நகரும். தளபதி பால்ராச் நவநீதனோடு முதற் குழுவில் இணைந்து கொள்ள, சந்திரன் அண்ணை தாசனோடு துணைக் குழுவில் இணைக்கப்பட்டார்.

ஒரு வழிமறிப்புப் பதுங்கித்தாக்குதலானது பல வகைப்பட்டதாக அமையும். வலதுபுறமிருந்து வரலாம்;, இடது புறமிருந்து, வரலாம். நேரெதிலிருந்தும் வரலாம். சில சமயம், வலது அல்லது இடது புறத்தோடு எதிர்ப்பக்கத்திலிருந்தும் 'டு' வடிவத்தில் வரலாம். இவற்றில் எது நடந்தாலும் எதிர்கொள்ளக்கூடியவாறு திட்டமிட்டார் தளபதி பால்ராச். இரண்டு குழுக்களில் எது தாக்குதலுக்கு உள்ளானாலும், மற்றைய குழு காட்டுக்குள் இறங்கி, வளைத்து, தாக்குகின்ற எதிரியைப் பக்கவாட்டிலும்; பின்பக்கத்தாலும் தாக்க வேண்டும். முற்றிலும் எதிர்பாராத ~பரிச்சயமற்ற ஒரு இரு-முனை முறியடிப்புத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் எதிரி, திகைத்துத் தடுமாறித் தோற்பான் என்பது தளபதி பால்ராச் அவர்களது நம்பிக்கை.

கத்திக்கொண்டு பறந்த ஒரு காட்டுக் குருவியைத் தவிர நிசப்தம் தன் முழு ஆதிக்கத்தையும் செலுத்தியிருந்தது. ~மயான அமைதியை விடப்பயங்கரமானது ~வனஅமைதி. போதிய தூர இடைவெளியில் இரு அணிகளும் நகரத்துவங்கின. வழமைபோல் நவநீதன் முன்னுக்கு. அது அவனுக்கே உரிய துணிவு. தனக்குப் பின்னால் நான்காவது அல்லது ஐந்தாவது ஆளாக பால்ராச் அண்ணனை அவன் வர வைத்தான். எதிர்பார்க்கும் சண்டை. எதிர்ப்படப்போகும் நேரத்தைச் சந்திக்கத் துணிந்த மனது. அதிகரிக்கும் இதயத் துடிப்போடு, அவதானமான நகர்வு. சுடத் தயாரான துப்பாக்கிகளின் குழல் வாய்கள் நிமிர்த்தி, சருகு நெரிபடும் சத்தத்தோடு மட்டும், அடிமேல் அடிவைத்து புலிகள் நகர்ந்து கொண்டிருந்தபோது

திடீரென ஓரிடத்தில், இயல்பு மாறிப் போயிருந்தது காடு. இயற்கை குலைந்து போயிருந்தது வனம். சூரியனை நோக்கி வளரவேண்டிய மரக்கிளைகள் சில, வளைந்து, பூமியை நோக்கியிருந்தன. இருக்கக்கூடாத இடங்களில் சருகுகள் கூடுதலாய்.

பற்றைகளின் மறைப்பினூடு மின்னுகிற ~எல்.எம்.ஜி குழல். இலை குலைகளின் உருமறைப்பிற்குள் வெட்டி முழிக்கும் கண்கள். மெல்ல அசையும் கிளைகள் செருகப்பட்ட தலைக்கவசங்கள்.

கண்டுகொண்ட நவநீதன் நிதானிக்க, பார்த்துவிட்ட தளபதி சைகை செய்ய, புரிந்து கொண்ட தாசன் தன் குழுவோடு காட்டுக்குள் இறங்க, எதிரி தாக்க ஆரம்பிப்பதற்கு முன்னாலிருந்த நொடிப் பொழுதுகளை, தாசன் தாக்கத் தயாராகுவதற்குச் சரியாகக் கொடுத்த பின் - எதிரியினது ~எல் எம் ஜி-காரனின் இரண்டு கண்களுக்கும் நடுவில் குறிவைத்து - மூர்க்கத்தனமான சண்டையைத்தானே தொடக்கி வைத்தான் நவநீதன்.


~எம்.16 சுடுகுழல் சிவக்க, இந்தியக் கொமாண்டோக்களின் முன்வரிசை அணியை, பதுங்கிய இடத்திலேயே அவன் படுக்க வைக்க, பின் வரிசை அணியை வளைத்துத் தாக்கி வீழ்த்தியது தாசனின் குழு. பிரமிப்பூட்டுகிற வேகம். எட்டித் தொடும் தூரத்திற்குள் இயந்திரத் துப்பாக்கிகளின் குமுறல். மிகச் சில நிமிடங்களே ஆனது.

இறந்த எதிரிகள் வீழ, எழுந்த ஏனையோர் தப்பி ஓட, எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து கச்சிதமாக நடாத்தி முடித்தார் தளபதி பால்ராச். கைப்பற்றிய ஆயுதங்களையும், வீரச்சாவடைந்த தினேசையும் தூக்கிக்கொண்டு, விட்ட இடத்திலிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்தது புலிகளின் அணி.

~வழிமறிப்புப் பதுங்கித் தாக்குதல் முறியடிப்புப் பதிலடி - ஊழரவெநச யுஅடிரளா. எமது போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக தளபதி பால்ராஜ் அவர்கள் நடாத்தி முடித்த முக்கியமான ஒரு போரியல் நிகழ்வு அது.

1984 இல், அப்போது முல்லைத்தீவு மாவட்ட தளபதியாக இருந்த லெப். காண்டீபன் அவர்களும், ஒன்பது போராளிகளும் வீரச்சாவடைந்த சிறீலங்கா இராணுவத்தின் பதுங்கித்தாக்குதலில் சிக்கி காயமடைந்த போது, பால்ராச் அவர்கள் ஒரு பகுதி நேரப் போராளி மட்டுமே. ஆனால், அப்போதிருந்தே, பதுங்கித்தாக்குதல் முறியடிப்புப் பதிலடிகளை 'ஊழரவெநச யுஅடிரளா' நாம் நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் தனக்குள் நீறுப+த்த நெருப்பாக இருந்து வந்தது என்று பால்ராச் அண்ணன் என்னிடம் சொன்னார்.

எதிரியின் வழிமறிப்புப் பதுங்கித்தாக்குதலின் வியூகத்திற்குள் அகப்பட்டுவிட்ட ஒரு அணிக்கு, தன்னைப் பாதுகாத்துக்கொள்வதே ஒரு பெரும் நெருக்கடியாக அமைந்துவிடக்கூடிய நிலைமையில், அந்த வியூகத்திற்குள் இருந்தபடியே திட்டமிட்டு, அந்தப்பதுங்கித் தாக்குதலுக்கான முறியடிப்புப் பதிலடியை நிகழ்த்துவது என்பது உண்மையிலேயே ஒரு போரியல் அதிசயம். அவர் அதைச் செய்தார். இந்த ஒரு தடவை மட்டுமல்ல:

மேலும் இரு தடவைகள் அவர் இவ்வகையான தாக்குதல்களை நிகழ்த்தி, எதிரிகளை வீழ்த்தி, ஆயுதங்களையும் கைப்பற்றினார். அத்தகைய ஒரு சண்டையின் போது தளபதி சூசை அவர்களும் அவருடன் இருந்தார். ~பதுங்கித் தாக்குதலை முறியடித்தல் என்பது தளபதி பால்ராஜ் அவர்கள் செயலில் கையாண்டு காட்டிய ஒரு சிறந்த போரியற் கோட்பாடு. படைத்துறை உலகிற்கே அது ஒரு புதுமையான படிப்பினைச் சிந்தனையாக அமைந்துவிட்டது.

புலிகள் இயக்கம் ஒரு கெரில்லா அமைப்பாக இருந்த காலத்தில் - மிகச் சிறிய அணிகளை வைத்து தளபதி பால்ராச் அன்று நிகழ்த்திய இத்தகைய அற்புதமான சண்டைகள், பின்பொரு நாளில் பெரும் மரபுவழிப் படையணிகளோடு அவர் நிகழ்த்திய வரலாற்றுப் புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கத்தின் பெருமைக்கு ஈடானவை என்று சொல்லலாம். முதற் சூழ்நிலையில், அந்த நிகழ்வுகளின் இயங்கு மையமாக இருந்தது அந்தத் தனி மனிதனின் அசட்டுத் துணிவு. அடுத்த சூழ்நிலையில்; - அந்த தனி மனிதனில் தலைவர் வைத்த அசைவற்ற நம்பிக்கை.

மேஜர் பசீலன் அவர்கள் வீரச்சாவடைந்த பின்னர் - முல்லைத்தீவு மாவட்டத் தளபதியாக்கி, பின்னர் வன்னிப் பிராந்திய தளபதியாக வளர்த்து, பின்னர் ~சாள்ஸ் அன்ரனி படையணியின் உருவாக்கத் தளபதியாக உயர்த்தி, பின்னர் ஒரு கட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒட்டுமொத்தத் தரைப்படைகளினதும் தளபதியாக, தனக்கு அடுத்த நிலையில் - பிரிகேடியர் பால்ராச் அவர்களை நியமித்தார் தலைவர் பிரபாகரன்.

இருபது வருடங்களுக்கு முன்பு - ஒர் இள வயதுத் தளபதியாக - பால்ராஜ் அண்ணன் நிகழ்த்திய அந்த 'பதுங்கித் தாக்குதல் மீதான முறியடிப்புப் பதிலடி" தான், பிற்காலத்தில் அவரை எம் இயக்கத்தின் ஒரு பெரும் தளபதியாக ஆக்குவதற்கான இனம்காட்டும் ஆரம்பப் பொறியாக தலைவர் அவர்களது மனதில் உதித்திருக்கலாம்.

- பால்ராஜ் அண்ணனின் நினைவுகளுடன்
ஒரு பழைய தோழன்.

நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (04.07.08)


Comments