மரபுவழி இராணுவ தகைமையை புலிகள் இழந்துவிட்டனரா?

விடுதலைப்புலிகளின் மரபுவழி இராணுவமாக போரிடும் திறனை தாம் முற்றாக அழித்துவிட்டதாகவும் அவர்களால் இனிமேல் படையினர் மீது மரபுவழி தாக்குதல்களை மேற்கொள்ளமுடியாது என்றும் கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் மார் தட்டியிருக்கிறார் இராணுவ தளபதி லெப்ரினென்ட் ஜெனரல் சரத் பொன்சேகா.

மறுதரப்பினால் பதிலடி எதுவும் கொடுக்கப்படாதநிலையில்,இவ்வளவு பெரிய சாதனையை நிலைநாட்டியிருப்பதாக சமரிடும் ஒரு தரப்பு கூறுவது எவ்வளவுதூரம் வேடிக்கையானது என்பது ஒருபுறமிருக்க -

எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் பதிலடிகளினால் ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் கூறும்போது தற்போதைய அறிக்கைகளுக்கும் பதில் தேடவேண்டிய கட்டயாத்துக்கு இராணுவத்தலைமை தள்ளப்படும் என்பது அடுத்தவிடயம்.

அதேவேளை,இராணுவ தளபதி கூறுவதை போல புலிகள் மரபு வழி இராணுவ திறனை இழந்துவிட்டார்களா என்பதையும் அவரது தற்போதைய அறிக்கையின் முக்கியத்துவம் என்ன என்பதையும் ஆராயவேண்டியது இங்கு முக்கியமாகிறது.

இந்திய இராணுவம் தமிழர் தாயக பிரதேசங்களிலிருந்து வெளியேறிய பின்னர் - 90 களில் - மரபு வழி இராணுவ கட்டமைப்பின் தேவை குறித்து ஆராய்ந்த விடுதலைப்புலிகள்,1991 ஆம் ஆண்டு ஆனையிறவு படைத்தளம் மீது மேற்கொண்ட 'ஆகாய கடல் வெளி சமர்" என்ற நடவடிக்கையுடன் சர்வதேச போர் ஆய்வாளர்கள் மத்தியில் மரபு வழி இராணுவம் என்ற தகுதியை பெற்றுக்கொண்டனர்.

இலங்கையில் அரசுக்கு எதிராக ஒரு கெரில்லா குழு ஆங்காங்கே தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது என்ற சர்வதேச விமர்சனம் அருகி, அங்கு இரண்டு இராணுவங்கள் உள்ளன என்பதையும் சிங்கள அரசினால் அடக்கப்பட்ட தமிழினம் தனிநாடு கோரி போரிடுகிறது என்ற யதார்த்தத்தையும் அப்போதுதான் சர்வதேசம் ஆழமாக பார்க்க தொடங்கியது.

ஆனையிறவு மீது தொடுக்கப்பட்ட புலிகளின் இந்த தாக்குதல், பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் மட்டுமல்லாமல் இந்த தாக்குதலை முறியடிப்பதற்கு சிறீலங்கா இராணுவம் பல நூற்றுக்கணக்கில் தனது படையினரை கடலவழியாக கொண்டுவந்து தரையிறக்கவேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டது.

அதுவரை ஆங்காங்கே சில மணி நேர தாக்குதல்களில் ஈடுபட்டும் மறைந்திருந்து தாக்குதல்களை நடத்தியும் இராணுவத்துக்கு இழப்புக்களை ஏற்படுத்திவந்த புலிகள், 'ஆகாய கடல் வெளி" சமரில் வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு பகுதிகளில் தரையிறங்கிய இராணுவத்தை ஆனையிறவு இராணுவத்துக்கு உதவவிடாமல் சுமார் ஒரு மாத காலம் கடும் சமரிட்டனர்.

புலிகளின் மரபு வழி இராணுவ தகைமையை களத்தில் வெளிக்காட்டிய இந்த தாக்குதலை அன்றைய காலகட்டங்களில் பி.பி.சி செய்திசேவை,இரண்டு மரபு வழி இராணுவங்களுக்கு இடையிலான சண்டையாகவே சித்தரித்தது.

புலிகளால் திட்டமிட்டபடி ஆனையிறவை கைப்பற்றமுடியாமல் போனாலும் இராணுவம் திட்டமிட்டபடி தாம் தரையிறக்கிய இராணுவத்தை ஆனையிறவுக்கு கொண்டுபோய் சேர்த்தாலும் தாம் மரபு வழி இராணுவமாக மேலும் விரிவடையவேண்டும் என்ற சிந்தனையை புலிகளுக்கு இந்த சமர் ஏற்படுத்தியிருந்தது.

மரபு வழி இராணுவம் எனும்போது உலகின் ஏனைய இராணுவங்களை போன்று செக்ஷன்,பற்றாலியன்,கொம்பனி,ரெஜிமென்ட் போன்ற பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு தமது ஆளணிக்கேற்பவும் அந்த பிரிவுகள் சமரிடப்போகும் இடங்கள்,அவற்றின் களமுக்கியத்துவங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பவும் ஒவ்வொரு பிரிவுக்கும் ஆட்கள் ஓதுக்கப்பட்டு அவற்றுக்கு இவ்வளவு மோட்டார்கள்,இத்தனை டாங்கிகள் என ஆயுத தளவாடங்கள் வழங்கப்பட்டு களத்தில் அவை இறக்கப்படும்.

இதேபோன்று, புலிகளும் தமது இராணுவ கட்டமைப்பை ஒழுங்கமைத்து அவற்றின் மூலம் அரச படைகளை சங்காரம் செய்ய ஆயுத்தமாயின.

ஆகாய கடல் வெளி சமருக்கு அடுத்ததாக புலிகள் எதிர்கொண்ட சமர் மிகக்கடுமையானதும் சமர் இடம்பெற்ற களமுனை புலிகளுக்கு சாதகமற்றதும் ஆகும்.அதுதான் 'யாழ்தேவி" முறியடிப்பு சமர்.

இந்த சமருக்கு இடையில்,வளாய் படைமுகாம்கள் அழிப்பு,மணலாறில் பல படை முகாம்கள் உட்பட மண்கிண்டிமலை வெறறிகொள்ளப்பட்ட 'இதய பூமி -1" நடவடிக்கை போன்ற பலவேறு சம்பவங்கள் இடம்பெற்றபோதும் 'யாழ்தேவி" முறியடிப்பு சமர் புலிகளை பொறுத்தவரை எதிர்பாரத ஒன்று.

ஏனெனில்,1993 ஆம் ஆண்டு பூநகரி கூட்டுப்படை தளம் மீது பாரிய மரபு வழி சமர் ஒன்றை நடத்துவதற்காக புலிகள் கடும்பயிற்சியில் ஈடுபட்டுவந்தனர்.மரபு வழி சமரின் ஆரம்ப பள்ளியில் இருந்ததால்,தமது சண்டைக்கான விநியோகம் அதற்கான கடல்வழி ஒத்துழைப்பு போன்ற பல விடயங்களில் புலிகளின் பல்வேறு மட்ட தளபதிகளும் இணைந்து கடும் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.

இந்த வேளையில்,ஆனையிறவு இயக்கச்சியிலிருந்து குடாநாடு நோக்கிய 'யாழ்தேவி" என்று பெயரிடப்பட்ட முக்கிய நகர்வொன்றை இராணுவம் தொடங்கியது.இந்த நடவடிக்கையின் கட்டளை அதிகாரி வேறு யாருமல்ல.தற்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாதான்.அப்போது 'கேணல்" தர அதிகாரியாக அந்த நடவடிக்கையை நெறிப்படுத்தினார்.

குடாநாட்டை நோக்கிய இந்த நடவடிக்கையை ஏ-9 வீதி வழியாக அன்றி, வெளிகள் நிறைந்த புலோப்பளையின் ஊடாக கடற்கரை பக்கமாக இராணுவத்தின் இந்த நடவடிக்கை அமைந்திருந்தது.

கெரில்லா தாக்குதல்களிலிருந்து சற்றுவெளிவந்து மரபு வழி இராணுவ முறையின் ஆரம்பநிலையிலிருந்த புலிகளுக்கு படையினரின் இந்த நடவடிக்கை மிகப்பெரிய சவாலாக இருந்தது.

பூநகரி படைத்தளம் மீதான தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருந்த புலிகளின் அணிகள் உடனடியாக புலோப்பளைக்கு கொண்டுவரப்பட்டன.தாக்குதல் வியூகங்கள் வகுக்கப்பட்டன.புலோப்பளை வெளியினுள் தம்மை நன்றாக உருமறைத்துவிட்டு படையினரின் வரவை காத்திருந்தனர்.

நடவடிக்கையை தொடங்கிய படையினர் அன்று காலை புலோப்பளை வெளியினூடக கனரக ஆயுதங்கள் சகிதம் நகர்ந்து வந்தனர்.அந்த வெளியினுள் உருமறைந்து தாமிருந்த இடத்திலிருந்து சுமார் 25 மீற்றர் வரை படையினரை வரவிட்ட புலிகள் அவர்கள் அருகில் வந்துவுடன் திடீரென எழுந்து தாக்குதல்களை ஆரம்பித்தனர்.கைகலப்பு நடைபெறுமளவுக்கு குறுகிய தூரத்தினுள் தம்மை உள் இழுத்து புலிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலினால் படையினர் திகைத்துப்போயினர்.

நடவடிக்கையை கொண்டுநடத்திய சரத் பொன்சேகா உடனடியாக தனது படைகளை மீள ஒழுங்கமைத்து தொடர்தாக்குதலை நெறிப்படுத்தினார்.புலோப்பளை வெளியில் கடும் சமர் நடந்தது.புலிகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அன்றைய தினமே தமது திட்டத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் இயக்கச்சிக்கே திரும்பியது இராணுவம்.அந்த நடவடிக்கையில் சரத் பொன்சேகா படுகாயமடைந்தார்.

புலிகளின் இந்த தாக்தல் சரத் பொன்சேகாவுக்கு மறக்க முடியாத ஒன்று.

அதன் பின்னர் திட்டமிட்டபடி பூநகரி கூட்டுப்படைத்தளம் மீது பாரிய தாககுதலை மேற்கொண்டதும் அதனை தொடர்ந்து ஓயாத அலைகள் ஒன்று,இரண்டு,மூன்று என புலிகளின் மரபுவழி இராணுவ வெற்றிகள் விரிந்து சென்றமையும் தமிழர் போராட்ட வரலாறுகள்

இராணுவ தளபதி சரத் பொன்சேகா தற்போது புலிகளின் மரபு வழி இராணுவ தகைமையை முற்றாக ஒழித்துவிட்டோம் என்று கூறுவதற்கும் அவரது புலோப்பளை அனுபவத்துக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.

ஏனெனில்,மன்னாரில் தற்போது பெரியமடுவரை முன்னேறியுள்ள இராணுவம் அடுத்து கால்வைக்கப்போகும் பகுதி வெட்டை வெளிகள் நிறைந்த பகுதி.இவ்வளவு காலமும் காடுகளுக்குள்ளால் சிறு சிறு அணிகளாக - கெரில்லா பாணியில் - முன்னேறிய இராணுவம் இனி வெட்டை வெளிகளுக்குள்ளும் இவ்வாறு சிறு அணியாக நகர்வது சாத்தியமற்றது.

ஆகவே,படையினர் கூறுவதை போல விடத்தல்தீவை கைப்பற்றுவதோ அல்லது அதற்கு அப்பால் முன்னேறிவருவதோ எல்லாமே இந்த வெளிகளுக்குள் நடைபெறப்போகும் சண்டையை பொறுத்தே அமையப்போகிறது.

அன்று புலோப்பளை மற்றும் ஏனைய களமுனைகளில் மரபு வழி இராணுவமாக சமராடிய புலிகளின் திறன் இன்று அவர்களிடம் இல்லை.ஆகவே இனி நடைபெற போகின்ற வெட்டை வெளி சண்டைகள் கூட படையினருக்கு சாதகமாகவே அமையும் என்ற தோரணையில் படையினரின் மனோ வலிமையை அதிகரிக்க செய்யும் நோக்குடன் இராணுவ தளபதி இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது,மன்னார் மணலாறு கள முனைகளில் வலிந்த தாக்குதல்கள் எதையும் மேற்கொள்ளாது தற்காப்பு நிலையில் உள்ள புலிகளின் மௌன நிலையை,அவர்களின் மரபு வழி இராணுவ திறனை அழித்துவிட்டதாக தாம் கருதக்கூடிய காலப்பகுதியாக கூறி இராணுவ தலைமைய ஆறுதலடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

இராணுவத்தின் இந்த இறுமாப்பான அறிக்கை தொடர்பில் அவர்கள் வெளியிட்ட முன்னைய அறிக்கைகளை ஆதாரமாக கொண்ட சில கேள்விகளுக்கு இந்த இடத்தில் இராணுவ தலைமையால் பதிலளிக்க முடியுமா?

1)விடுதலைப்புலிகளின் மரபு வழி இராணுவப்படையணிகளில் 30 ஆட்லறிகள் உள்ளன என கடந்த காலத்தில் கருத்து வெளியிட்டிருந்த இராணுவம் அவற்றில் எத்தனையை தற்போதைய நடவடிக்கையில் அழித்துள்ளனர்?


2) மணலாறில் வந்து தாக்கின கொழும்பில் வந்து தாக்கின பலாலியில் வந்து தாக்கின என புலிகளின் விமானப்படை குறித்து உலகெங்கும் முறையிட்டு,அப்படியான தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்தகொள்வதற்கு கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் ராடர்களையும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் பொருத்திவைத்திருக்கும் படையினர்,புலிகளின் எத்தனை விமானங்களை இவ்வளவு காலத்தில் சுட்டு விழுத்தியுள்ளனர்?

3) இரணைமடுவில் புலிகள் விமான ஓடுபாதை அமைத்திருப்பதாக சகல நாடுகளிடமும் முறையிட்டு,கடந்த ஆண்டு முழுவதும் மாவிலாறில் தண்ணி வேண்டுமென்பதற்காக கிளிநொச்சியில் வந்து குண்டு வீசிய படையினர்,கடைசியில் அந்த விமான ஓடு பாதையையாவது அழித்தார்களா?

4) தற்போது தாம் நிலத்தை பிடிக்கும் யுத்தத்தை நடத்தவில்லை புலிகளை கொல்லும் யுத்தத்தையே நடத்துவதாக அறிவித்துள்ள இராணுவம்,சமாதான காலங்களில் எத்தனையோ கப்பல்களில் புலிகள் ஆயுதங்களை வன்னிக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் என்று கூறிய அந்த ஆயுதங்களை புலிகளிடமிருந்து முற்றாக மீட்டுவிட்டதா? புலிகளைகொன்றுவிட்டால் படையினர் வசம் தற்போது பெருந்தொகையான ஆயுதங்கள் கிடைத்திருக்கவேண்டுமே.

5) மரபு வழி இராணுவ தகைமையை முற்றாக இழந்துவிட்ட ஒரு கெரில்லா குழுவை அழிப்பதற்கு வெளிநாடுகளிடமிருந்து இன்னமும் இராணுவத்துக்கு பல்குழல் பீரங்கிகள் உட்பட கனரக ஆயுதங்கள் தேவைப்படுவது ஏன்?

இவை போன்ற கேள்விகளுக்கு இன்றை இராணுவ தலைமை பதிலளிக்குமானால் புலிகளின் மரபு வழி இராணுவ தகைமை அழித்தொழிக்கப்பட்டுவிட்டது என நம்பலாம்.

எண்பதுகளில் ஆரம்பித்த தமிழர் விடுதலைப்போராட்டம் தொண்ணூறுகள் வரை கெரில்லாமுறை போராட்டமாகவே இருந்து வந்தது.அந்த பத்து வருட காலப்பகுதியில் இரண்டு நாட்டு இராணுவங்கள் இணைந்து சண்டையிட்டுகூட விடுதலைப்புலிகளை கெரில்லா போர்முறையை வெற்றிகொள்ளமுடியவில்லை.

அதன்பின்னர்,இன்று பதினெட்டு ஆண்டுகளாக - தொண்ணூறில் இருந்து இன்றுவரை - மரபு வழிப்போரிலும் கூட புலிகளை வெல்ல முடியாது என்ற நிலை சகல தரப்புக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

இந்தநிலையில்,புலிகளை மரபு வழி இராணுவமாக இல்லாதொழித்துவிட்டு எஞ்சியிருக்கும் அவர்களது கெரில்லா போர்முறையை இன்னும் ஒரு வருடத்தில் ஒழித்துக்கட்டுவதாக தற்போதைய இராணுவ தளபதி வீம்பு பேசுவது,எண்பதுகளிலிருந்து தொண்ணூறுவரை புலிகளுடன் போரிட்டு தற்போது ஓய்வுபெற்றுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு நல்ல நகைச்சுவையாகவே இருக்கும்.

மரபு வழிப்போரில் ஆயுதங்கள்,இராணுவ நடவடிக்கைள் என்ற யுத்த படிமுறைகளுக்கு அப்பால் மக்கள் சக்தி என்பது இன்றியமையாத காரணி.மரபு வழி போரில் ஈடுபடும் இராணுவம் மக்களின் நம்பிக்கையை வெல்வது தனது வெற்றியை உறுதி செய்யத்தேவையான மிக முக்கியவிடயம்.

அன்று இஸரேல் - லெபனான் போரிலும் ரஷ்யா - ஆப்கான் போரிலும் அமெரிக்கா - வியட்னாம் போரிலும் படுதோல்வியடைந்தமைக்கும் இன்று ஈராக்கிலும் ஆப்கானிலும் அமெரிக்கா மூக்குடைபட்டுக்கொண்டிருப்பதற்கும் பிரதான காரணமே இந்த மக்கள் சக்திதான்.கொடிய யுத்தத்தை நடத்தி மக்களையும் எதிரியாக பார்க்கும் இராணுவம் தனது வெற்றியை தொலைத்துவிட்டது என்றே கூறலாம்.

இன்று வடக்கு யுத்தத்தில் இடம்பெயர்ந்து அப்பிரதேசங்களில் வாழும் மக்களாக இருக்கட்டும் அவ்வாறு இடம்பெயர்ந்து தலைநகர் கொழும்பில் வசிக்கும் மக்களாக இருக்கட்டும் எத்தனை பேர் இராணுவத்தின் கொடூரத்துக்கு அகப்படாமல் இருக்கிறார்கள்.வெள்ளை வான் கடத்தல்,சித்திரவதை என தென்னிலங்கையில் நடைபெறும் கொடூரங்கள் ஆகியவை மரபு வழிப்போரில் தன்னை தானே தோற்கடித்துக்கொள்வதற்கு மேற்கொள்ளும் காரியங்களே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால்,அந்த சக்தியை புலிகள் வென்றிருக்கிறார்கள்.களத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் அந்த வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான மக்கள் சக்தியை அடித்தளமாக கொண்டியங்கும் மரபுவழி போரை,இராணுவ தளபதி கூறுவதை போல மன்னாரில் கொஞ்சக் காட்டு பகுதியை கைப்பற்றியவுடன் அழிந்துவிடாது.மரபு வழிப்போரை உறுதி செய்துகொள்ளும் காரணிகள் களத்திற்கு அப்பாலும உள்ளன என்பதே யதார்த்தம்.

நிலவரம்

Comments