பொன்சேகா: முக்தியா? முதிர்ச்சியா?

வன்னிப் பெருநிலப்பரப்பின் மீதான படை நடவடிக்கைகள் குறித்த சிங்கள ஆய்வாளர்களின் தொனிகள் மாறத்தொடங்கியிருக்கின்றன. படையினர் வழங்கும் புலிகளின் இழப்புத் தொகைகளைப் பாடுகின்ற முன்னைய தெனாவெட்டு கொஞ்சம் அடங்கி, புலிகள் வலிந்த தாக்குதல் செய்யும் சூழல் பற்றிய ஆய்வுகளில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

படை நகர்வின் தொடக்க வேகம், படையினரின் சராசரி இழப்புக்கள், காலத்திற்குக் காலம் மாறுபடுவதாகத் தெரியும் அவர்களின் கால வரம்புகள் என்பன சிங்களப் படைய மூலோபாயத்தை நியாயப்படுத்தும் தென்னிலங்கை ஆய்வாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

தமிழ்த் தேசியவாதத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் அங்கே இருக்கிறார்கள். ஒரு ஆயிரம் போராளிகள் மட்டில் இன்னமும் இரண்டு தசாப்தங்களுக்கு (அதாவது, இருபது வருடங்களுக்கு) நின்று பிடிக்கலாம்..... என்று வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தினரின் சந்திப்பில் சிறிலங்கா தரைப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா சொல்லியிருப்பதால், இதுவரை அவரின் போர்க்கோசங்களைத் திரும்பத் திரும்ப எழுதி தென்னிலங்கையில் வரவேற்புப்பெற்ற ஆய்வாளர்கள் பலர், இப்போது சிண்டைப் பிய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

வரும் டிசம்பரில் முடிந்துவிடும் தனது பதவிக்காலத்திற்கு முன்னர் இந்தப் பிரச்சினையையே முடித்துவிடுவேன் என்று சொல்லியிருந்த பொன்சேகாவின் இந்தக் குத்துக்கரணத்தால், இனப்பிரச்சினையைப் படைய மூலோபாயத்தின் அடிப்படையில் தீர்க்கமுடியும் என்று கலையாடிய இனவாதச் சக்திகளும், தமிழ் எதிர்ப்பைச் சரக்காக்கி வாக்குச் சந்தையில் வேட்டையாடிய கட்சிகளும் குழம்பி நிற்கின்றன.

யுத்தத்தின் மூலம் தமிழரை ஒடுக்கி நாட்டில் அமைதியைக் கொண்டுவரலாம், பல்லைக் கடித்துக்கொண்டு விலைவாசியைப் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவரும் மகிந்தரின் யுத்த மூலோபாயத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய தரைப்படைத்தளபதியே அரசியல் தீர்வொன்றின் தேவையைக் கோடிகாட்டியிருப்பது தென்பகுதியில் மகிந்தர் விரித்து வைத்திருக்கும் யுத்த மாயையின் சாயத்தை வெளுக்கப் பண்ணிவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும், அவை வெற்றிமுகம் கொள்வதாகத் தோன்றியபோதும் பொன்சேகாவிற்குத் தென்படாத விடயம், தனது பதவியின் இறுதி மாதங்களின்போது தெரியவந்தற்கான உட்கள மற்றும் வெளிக்கள நிகழ்வுகள் ஆய்வுக்குரியன.

பரம்பல்:-

வன்னிப் பெருநிலப்பரப்பின் மீதான நடவடிக்கையை பொன்சேகா ஆரம்பித்தபோது, தனது படைகளுக்குச் சாதகமான நிலைமைகளாக கிழக்கை வசப்படுத்தியது, புதிய டிவிசன்களை ஆரம்பித்துப் பெருமளவில் படைத்திரட்டலைச் செய்தது, படுதோல்வியில் முடிந்த ஜெயசிக்குறு போலல்லாது நான்கு முனைகளில் ஏககாலத்தில் படைநகர்வைச் செய்வது எதிர்ச்சவால் இல்லாத வான்மேலாதிக்கம், வீங்கிப் பருத்த படைக்களஞ்சியம் என்பவற்றை அவர் கருதியிருந்தார்.

தனது வெற்றிக்கான வாய்ப்பாடு என்று அவர் கருதிய தயங்கித் தயங்கி முன்னேறும் உத்தியை அவர் படையினரிடையே வலியுறுத்தினார். இது, லிடல்கார்ட் என்பார் சொல்லியிருக்கும் காட்டாற்றுப் போர்முறையின் முன்பாதி எனச் சில நிபுணர்கள் கருதுகின்றார்கள்.

நீரைப் பரவவிடும்போது, அது தடைகளற்ற வழிகளில் இலகுவாகப் பரவி, மேடுகளைத் தவிர்த்துத் தயங்கிநின்று பள்ளமான வழிகளைக் கண்டு உடைப்பெடுத்துப் பாய்ந்து செல்லும். இதில் உடைப்பெடுத்துப் பாய்ந்து செல்லும் கட்டத்தில் சரத் பொன்சேகாவிற்கு இன்னமும் நம்பிக்கை வந்ததாகத் தெரியவில்லை.

விடுதலைப் புலிகளின் நெடும் போர் வரலாற்றில், சிறிலங்காப் படையினர் செய்த தர்க்கத்திற்குப் புறம்பான ஒவ்வொரு படை வெளிநீட்டமும் கடும் தண்டனையைப் பெற்றிருப்பதை பொன்சேகா மறக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இவ்வகையில், மணலாற்றின் காடுகளையும் வவுனியா மற்றும் மன்னாரின் காடுகள் மற்றும் வயல் நிலங்களையும் உள்ளடக்கிய பிரதேசங்களில் தனது படைகளை விரித்து வைத்திருக்கிறார் பொன்சேகா.

அனைத்துப் பகுதிகளிலும் காடுகளை முதலில் வசப்படுத்துவது என்ற அறிவிக்கப்படாத உத்தியின் அடிப்படையில் மன்னார், வவுனியாவின் காடுகளுக்குள் அடுத்தகட்டச் சண்டைகளை நகர்த்துவதற்கான ஏற்பாடுகளையும் பொன்சேகா செய்துவருகிறார். மணலாற்றிலும் அவரின் திட்டம் அதுவாகவே தெரிகிறது.

தளம்பல்:-

இந்தக் கட்டத்தில்தான், ஒட்டுமொத்தப் போர் மூலோபாயம் குறித்த சந்தேகங்கள் தென்னிலங்கையில் வலுப்பெறுவதான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.

தொடக்கத்தில் தென்னிலங்கைச் சிங்களவரிடையே சலிப்பையும் விரக்தியையும் ஏற்படுத்திய விடயமாக அம்பாறை-அம்பாந்தோட்;டைச் சம்பவங்களே அமைந்திருந்தன. கிழக்கை விடுவித்து விட்டதாக மகிந்தர் கூட்டம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த தருணத்தில் அந்தப்பகுதியில் நடந்த சம்பவங்கள் சிங்களத்தின் ஆழங்களை நோக்கிப் போர்க்களங்களை நகர்த்துவதாக அமைந்திருந்தன.

கொஞ்ச நஞ்ச சந்தேகங்களையும் தீர்த்து வைப்பதுபோல, மகிந்தரின் பயண ஏற்பாட்டில் அம்பாறைக்கு வந்திருந்த உலங்குவானூர்தி புலிகளால் தாக்கப்பட்ட சம்பவம் அமைந்தது.

சிங்களப் படைத்தரப்பு அச்சம்பவத்தை அடக்கி வாசித்தாலும், கடந்த வருட நடுப்பகுதியின் பின்னர் அங்கே நிகழத்தொடங்கிய சம்பவங்களின் காரணமாக நடவடிக்கைத் தலைமையகம் ஒன்றையே நிறுவி ஆயிரக்கணக்கான படைகளை நிறுத்தி சிறப்பு அதிரடிப்படையினரும் கொமாண்டோக்களும் முன்னின்று மாதக்கணக்கில் செய்த நடவடிக்கைகளால் எந்தப் புண்ணியமும் கிடைக்கவில்லை என்ற உண்மையை எவராலும் ஒளிக்க இயலவில்லை.

அங்கே உலங்குவானூர்திகளைத் தாக்கும் வல்லமையுடைய கனரக ஆயுதம் பூண்ட புலிகளின் அணிகள் நிலைகொண்டுள்ளன என்ற உண்மையை அரசதரப்பு அசடுவழிய ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

மறுவளத்தில், வன்னியின் படைநகர்வு வேகம், இன்னும் போகவேண்டிய தூரம், அதற்குத் தேவையான காலம் என்பன பற்றிய படைத்தரப்பின் தெளிவற்ற போக்கு பாமரச் சிங்களவர்களையும் சிங்களப் போரியல் விண்ணர்களையும் ஒருசேரக் குழப்பியடித்திருக்கிறது.

ஐயாயிரம் புலிகளே உள்ளனர் என்று அறிவித்த பிற்பாடு, ஒன்பதினாயிரம் புலிகளைக் கொன்றுள்ளதாகப் படைத்தரப்புத் தெரிவித்ததை,

அப்படியென்றால் புலிகளின் மேஜர்களும் கப்டன்களும் குட்டிபோட்டுப் பெருகுகின்றார்களா?

என்று கேள்விகேட்டுக் கேலிபேசியிருக்கிறார் சிங்கள அரசியல் தலைவர் ஒருவர்.

இதேவேளை, மேற்குலகும் இந்தியாவும் சேர்ந்து பரிந்துரைக்கும் அரசியல் தீர்வு பற்றிய சந்தேகங்களும் படை தலைமை மட்டத்தில் ஒருவித சலிப்பு நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

இனப்பிரச்சினை முற்றிலும் படை வலிமையால் தீர்க்கப்படவேண்டும் என்ற எண்ணக்கரு ஒவ்வொரு படையினன் மனத்திலும் ஊன்றி விதைக்கப்பட்டிருக்கிறது, தமிழருடன் சிறிய அளவிலாவது அதிகாரத்தைப் பகிர்வது பற்றிய பேச்சுக்கூட படைச்சிப்பாய்களின் கொள்கை ஊட்டம் சார் உளவுரண் மீது பெருந்தாக்கத்தைக் கொண்டுவரலாம், அவ்வாறான தீர்வொன்று இந்தியாவால் திணிக்கப்படுகிறது என்ற தோற்றம் இந்நிலையை மேலும் தீவிரப்படுத்தி, தப்பி வாழ்தல் மனநிலைக்குப் படையினரை இட்டுச்செல்லலாம் என்றும் சிங்கள ஆய்வாளர் சிலர் கருதுகின்றனர்.

மறுவளமாக, புலிகள் ஒரு வலிந்த தாக்குதலைச் செய்தால் என்ற தலைப்பும் சிங்களப் படைய விண்ணர்கள் மத்தியில் சூடும் சுவையுமாக அலசப்படுகிறது.

தெளிதல்:-

இந்தப் பின்னணியில்தான் புலிகளின் போராட்டம் இன்னமும் இருபது வருடங்களுக்கு நீடிக்கலாம் என்ற மாபெரும் தத்துவத்தை எடுத்து விளாசியிருக்கிறார் பொன்சேகா.

புலிகளுடன் மோதத் தொடங்கும்போது சிறுபிள்ளைத்தனமாகக் கதைப்பவர்கள், முடிவில் ஒருவித பரிநிர்வாண நிலைக்கு வருவது ஒன்றும் புதிய விடயமல்ல.

இந்தியத் தளபதிகள் தங்கள் நினைவுக் குறிப்புக்களில் சொல்லாத புதிய விடயம் எதையும் பொன்சேகா சொல்லிவிடவில்லை.

அந்தவிதமாக முக்திபெற்றோர் வரிசையில் கடைசியாக அரசியலுக்குள் ஆழ இறங்கிக்கொண்டிருப்பவரும் ஒருகாலத்தில் பொன்சேகாவிற்குக் கட்டளையதிகாரியாக இருந்தவருமான ஜானக பெரேராவும் இருக்கின்றார் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

கிளிநொச்சிக்குச் சிங்களப் படைகள் செல்வதானால் இன்னமும் பன்னிரண்டு வருடங்கள் தேவை என்ற பொன்மொழியும் முன்னர் புலிகளுக்கு எதிராகக் களமாடிய சிங்களப் படையதிகாரியின் வாயில் இருந்தே வெளிப்பட்டது.

வரலாற்றை வாசித்தறியாது பட்டறிய விளைந்த அனைவரையும் போலவே வன்னியில் இருக்கும் போரியல் மேதையிடம் பாலபாடம் கேட்பவராகத் தென்படத் தொடங்குகிறார் பொன்சேகா. இன்னும் அவர் பார்க்கவிருக்கும் களநிகழ்வுகள் அவரை முதிர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லுமா, முக்தியடைய வைக்குமா என்பதைக் காலம் கணித்துரைக்கும்.

-சேனாதி-

வெள்ளிநாதம் (11.07.08)

Comments