அரசியல் அறிவிலிகளின் கைகளில் அகப்பட்டுள்ள போர் நிறுத்த விமர்சனம்

சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்ட பத்து நாள் போர் நிறுத்தம் பல்வேறு மட்டங்களிலும் வெவ்வேறு வகையான பரபரப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

அவற்றில் ஒரு பகுதியாக, அரசியல் ஆய்வாளர்கள் என்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் - கள யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத - கணனிக்கு முன்னால் இருந்து கொண்டு கள பரிமாணங்களை எடைபோடும் சில நாற்காலி 'ஜெனரல்களின்' விமர்சனங்கள் வேடிக்கையாக உள்ளன.

அதாவது, விடுதலைப் புலிகள் தற்போது அறிவித்திருக்கும் போர் நிறுத்தம் வடபோர்முனையில் பாரிய மாற்றம் ஒன்றை கொண்டுவரப்போவது போலவும் விமர்சனங்களை அள்ளிவீசும் இந்த 'ஆய்வாளர் பெருந்தகைகள்' மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், விடுதலைப் புலிகளின் நகர்வுகள் மற்றும் உத்திகள் குறித்து சரியான எதிர்வுகூறல்களை வழங்கும் விமர்சகர்களையும் இந்த ஆய்வாளர்கள் எனப்படுபவர்கள் விமர்சனம் செய்து தமது 'ஜம்பத்தை' மக்கள் மத்தியில் அரங்கேற்ற விளைகிறார்கள்.

சார்க் மாநாட்டை முன்னிட்டு விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள இந்த போர் நிறுத்தம், இன்றைய களநிலையில் வித்தியாசமான கோணத்தில் பார்க்கப்படவேண்டியது.

வடபோர்முனையில் தற்போது ஒரு பாரிய போர் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், விடுதலைப் புலிகளின் இந்த போர் நிறுத்தம் ஒரு இராணுவ விடயமாக தெரிகின்றபோதும், இது உண்மையில் ஒரு இராஜதந்திர நகர்வு என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

போர் நடைபெறாத ஒரு காலப்பகுதியாக இருந்தால்கூட, சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்திருப்பார்கள்.

இந்த போர் நிறுத்தத்தின் ஊடாக விடுதலைப் புலிகள் கூறவிழைந்துள்ள விடயங்கள் என்ன?

முதலாவது, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் நடைபெறும் மண்ணில் அனைத்துலக மாநாடு ஒன்று நடைபெறவிருக்கின்ற இந்த வேளையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பிராந்திய நாடுகளுக்கு, உரிமைக்காக போராடும் எமது மக்கள் நேசக்கரங்களை நீட்டியுள்ளார்கள்.

இரண்டாவது, இந்த மாநாட்டை குழப்புவதற்கு பல்வேறு வகையிலும் முயற்சி செய்துவரும் சிங்களப் பேரினவாத குழுக்கள், எதையாவது செய்துவிட்டு அந்தப் பழியை விடுதலைப் புலிகளின் தலையில் கட்டிவிடும், தமது 'பாரம்பரிய' வழக்கத்தை அரங்கேற்றிவிடக்கூடும். அதற்காக, சார்க் மாநாடு குறித்த தமது பாதுகாப்புக் கொள்கையை விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளார்கள்.

மூன்றாவது, தெற்காசியப் பிராந்திய நாடுகளுக்கான இந்த மாநாடு நடைபெறும் காலப்பகுதியில், அந்த மாநாடு சுமூகமாக நடைபெறுவதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளதன் மூலம், தமிழர் தேசமும் இந்த மாநாட்டுடன் இணைந்திருக்கிறது என்பதை விடுதலைப் புலிகள் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

நான்காவது, சிறிலங்காவில் இராணுவத்தீர்வு ஒன்றை காண்பதற்கு தனக்கு வல்லமை இருப்பதாக சார்க் மாநாட்டில் பறைசாற்றவிருந்த சிறிலங்கா அரசு தலைவர்களின் பிரசார போருக்கும் விடுதலைப் புலிகள் ஆப்பு வைத்திருக்கிறார்கள். தாம் பிராந்திய நலனிலும் பாதுகாப்பிலும் என்றுமே அக்கறை கொண்டவர்கள் என்பதையும் விடுதலைப் புலிகள் இந்த போர் நிறுத்தத்தின் மூலம் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

பார்க்கப்போனால், விடுதலைப் புலிகள் நாடு நாடாக சென்று பரப்புரை செய்யவேண்டிய இந்த விடயத்தை, இந்த நாடுகளுக்கெல்லாம் சிறிலங்காவிலேயே வைத்து விடுதலைப் புலிகள் தெளிவுபடுத்துவதற்கு சிறிலங்கா அரசு ஒழுங்கு செய்தது போல, உயர் இராஜதந்திர நகர்வு ஒன்றை புலிகள் மேற்கொண்டுள்ளார்கள்.

அதேவேளை, பத்து நாட்களுக்கு மாத்திரமே இந்த போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என்று விடுதலைப் புலிகள் தெளிவாக கூறியுள்ளார்கள். ஆகவே, இந்த போர் நிறுத்தத்துக்கு, சிறிலங்கா அரச படைகளின் போருக்கு அஞ்சி எடுக்கப்பட்ட முடிவு என்று அர்த்தம் வழங்குவது அபத்தத்திலும் அபத்தம்.

அத்துடன் இக்காலப்பகுதியில், களத்தில் சிறிலங்கா அரசு போரை நடத்தும் போது புலிகள் வாழாதிருப்பார்கள் என்று கருதினால், அவ்வாறு எண்ணும் அரசியல் ஆய்வாளர்கள் உட்பட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதே இப்போதைக்கு சரியாக இருக்கும்.

இணையத்தளத்தில் செய்திகளை பார்த்துவிட்டு - ஒரு சில களமுனை செய்திகளை படம் பிடித்துவைத்துக்கொண்டு - களத்திலிருந்து செய்தி வெளியிடுவதில் அங்குள்ள ஊடகவியலாளர்களுக்கு இருக்கின்ற சிரமத்தை தமக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டு - பத்தாம் பசலித்தனமான விமர்சனங்களை வெளியிட்டு, மக்களை குழப்பும் வேலையில் ஈடுபடும் 'குதர்க்க குருமார்' இவற்றை புரிந்துகொள்ள வேண்டும்.

வடபோர்முனையில் நடைபெறும் சண்டையில் விடுதலைப் புலிகளின் அடுத்த அடி எப்படி அமையப்போகிறது என்பதில் அங்குள்ள மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

படையினரின் இப்போதைய வெற்றிகள் எனப்படுபவை தற்காலிகமானவை என்ற தெளிவு அங்குள்ள மக்களுக்கு நிறையவே உள்ளது.

1999 ஆம் ஆண்டு வன்னியின் கிழக்கு பகுதிக்கும் மேற்கு பகுதிக்கும் இடையில் பத்து கிலோமீற்றர் இடைவெளியே இருந்தது. அங்குதான் மக்கள் தமது இருப்பை பேணிக்கொண்டார்கள்.

அந்தக்காலத்தில் நடைபெற்ற 'ஓயாத அலைகள் மூன்று' சிங்களப் படைகளை வட்டக்கச்சிக்கு அருகிலிருந்து ஒமந்தைக்கு விரட்டியது. மறுபக்கம், பரந்தனிலிருந்த படையினர் முகமாலைக்கு விரட்டப்பட்டனர்.

அன்று வன்னிக்குள் ஆழக்கால் பதித்த படையினர் காட்டிய முன்நகர்வுடன் ஒப்பிடுகையில், அதில் 50 வீதத்தைக்கூட இன்று சிறிலங்கா இராணுவம் எட்டவில்லை.

விடுதலைப் போராட்டங்களில் பின்னடைவுகள், கள இழப்புக்கள் என்பன ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

சீனத்தலைவர் மா சேதுங் புரட்சிகால கட்டங்களில் போர்க்களங்களில் 6,000 கிலோமீற்றர் தூரம்வரை பின்வாங்கிச்சென்றார். பின்னர் வென்றார்.

எரித்திரிய போராட்டத்தின் போது தொடக்கத்தில் கொஞ்சக்கிராமங்கள் மட்டும் போராளிகளின் கைகளில் இருந்தன. கடைசியில் அவர்கள் வென்றார்கள். பெருவெற்றியை பெற்றார்கள்.

ஆகவே, ஈழ விடுதலைப் போராட்டம் என்ற விடயத்தை ஒரு தோப்பாக பார்க்கவேண்டும். தனிமரமாக பார்த்து விமர்சனம் செய்வது என்பது இந்த போராட்டத்தில் இருந்து இவ்வளவு காலமாக நாம் கற்றுக்கொண்டது இவ்வளவுதான் என்பதையே எடுத்துக்காட்டும்.

இதில், சில ஆய்வாளர்கள் என்று தம்மை கருதுபவர்கள் சார்க் மாநாட்டுக்கான போர் நிறுத்தம் ஏதோ போர் நின்று போய்விட்டது போலவும் புலிகள் ஓய்ந்து விட்டார்கள் போலவும் காட்டுகின்றார்கள்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் நீண்டகாலம் அவதானிப்புக்களை மேற்கொண்டு வரும் ஆய்வாளர்களின் கணிப்புக்களை - தாக்குதல் உத்திகள் குறித்த தமது சரியான ஆய்வுகளை - கொச்சையாக்கும் நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையை குழப்பும் நடவடிக்கையையே இவர்கள் மேற்கொள்கின்றார்கள்.

களத்தில் மக்கள் எவ்வளவுதான் இடம்பெயர்ந்து அவலப்படுகின்ற போதிலும் மீண்டும் தாம் தமது நிலங்களுக்கு செல்வோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.

இது தொடர்பில் களத்தில் உள்ள மக்கள் பிரதிநிதி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது -

"விடுதலைப் புலிகள் தொடர்பில் சரியாக கணிப்பிட முடியாதவர்கள் மக்களை குழப்ப முயல்கின்றார்கள். போரில் இழப்புக்கள், நிலம் விடுபடல் எல்லாம் ஒரு கட்டம் வரைக்கும் இருக்கும். ஆனால், வெற்றி உறுதி என்பதில் எல்லோரும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.

"உளம் தளராமல் தமது பணியைத்தொடர வேண்டும் என்பது தாயகத்தில் இருக்கும் மக்களின் வேண்டுகோள்" - என்று அவர் குறிப்பிட்டார்.


Comments