தற்கொடையாளரின் நெஞ்சுறுதி கண்ணுற்று உலகே வியக்கின்றது


யுலை! இது கரும்புலிகள் மாதம்.
யாரிந்தக் கரும்புலிகள்?

காலக் கருக்கலில் வந்துதித்த நெருப்புச் சூரியர்கள்!


கந்தகத்தை நெஞ்சில் சுமந்து சாவுக்கு தேதி குறித்து சிரித்தபடி கையசைத்து விடைபெறும் சந்தன மேனியினர். அணுவாயுதங்களை அழித் தொழிக்கப் பிறந்திட்ட உயிராயுதங்கள்! 1987 ஆம் ஆண்டில் தேசியத் தலைவனின் எண்ணக்கருவில் பிரவசமான நெருப்புக் குழந்தைகள்.

செயற்கரிய ஈகத்தை மிக எளிதில் செய்து விட்டு முகம் காட்டாமலே செல்கின்ற ஈசைக் செம்மல்கள்.
விலை மதிப்பற்ற மனித உயிர்களை எதிர்கால சந்ததியினரின் சுதந்திரத்திற்காகவும் சுபீட்சமான நிம்மதியான வாழ்வுக்காகவும் ஈகம் செய்து சரித்திரத்தில் நிலையான இடத்தினைப் பிடித்தவர்கள்.
'கொடைக்குக் கர்ணன்" என இயம்பிய இலக்கியங்கள் இன்று கொடையில் உயர்ந்த தற்கொடைக்கே இலக்கணமாகத் திகழும் கரும்புலிகளை மேற்கோள் காட்டி 'ஈகத்தின் இலக்கணங்களாக"ப் போற்றுகின்றன.

தமிழீழப் போராட்டத்தில் காலத்திற்குக் காலம் எதிர்வரும் தடைகளை நீக்கிட 'தடைநீக்கிகளாக" தேசியத் தலைவனின் எண்ண வீச்சிலிருந்து உருவானவர்கள் கரும்புலிகள்.

எப்பேர்ப்பட்ட படைகளையும் தூசெனவே எண்ணித் தகர்த்தெறியும் மாபெரும் சக்தியாக கரும்புலிகள் தம்வசம் உள்ளனராதலால் இன்று படைச் சமபலத்தோடு எதிரிகளுடன் களத்தில் போரிட்டு வெற்றிகளைக் குவிக்கின்றனர் தமிழீழ விடுதலைப் புலிகள்.

உலகே வியக்கின்றது, தற்கொடையாளரின் நெஞ்சுறுதி கண்ணுற்று. வாழ்தலின் ஆசை உயிரினத்தின் பொதுவிதி.
மரணத்துடன் போராடும் இறுதிக் கணத்திலும் வாழும் ஆசை எஞ்சி நிற்கும். ஆனால் இவர்களோ தமது சாவுக்குத் தேதி குறித்து போட்டியிட்டுச் செல்கின்றனரே.... எப்படி இது சாத்தியமாகின்றது?

வாழும் ஆசைகளின்றி பிறந்த அபூர்வப் பிறவிகளா இவர்கள்? இல்லை! இல்லவே இல்லை! நெடுநாள் வாழும் ஆசை அவர்களுக்குள்ளும் உண்டு.
ஆனால், அதைவிட தாய்மண்ணின் சுதந்திரமே அவர்கள் இலட்சியமாக மேலோங்கியுள்ளது.
இன்றைய எம் மண்ணின் சிசுக்களேனும் நாளை சுதந்திர தாயகத்தில் ஆடிப்பாட வேண்டும் என்பதற்காக தமது இளமைக் கனவுகளையும் ஆர்ப்பரித்தெழும் யௌவன ஆசைகளையும் மனதின் அடிவாரத்தில் ஆழக்குழி தோண்டி புதைத்தவர்கள்.

மானுட ஆய்வாளர்களால் ஆராய்ந்தறிய முடியாத ஆழ்சுரங்கம் அவர்கள் மனங்கள். அவர்களது மனத்தின் திண்மை உலக சமுதாயத்தில் எம் இனத்தை உயர்த்தி வைத்திருக்கின்றது இன்று.

ஆயுத பலத்தாலும் ஆட்சி அதிகாரத்தாலும் மிருகத்தனமாக தமிழீழ மக்களை அவர்கள் தேசத்திலேயே அடக்கி ஒடுக்கி சித்திரவதை, படு கொலைகள், பாலியல் வல்லுறவுகள் எனவெல்லாம் மிலேச்சத்தனமாக அழித்தொழித்து வரும் இனவாத சிங்களக் கூலிப்படைகளின் கொட்டமழித்து ஓட ஓட விரட்டிடவே தீரமிகும் மகாசக்தியாக உருமாறியவர்களே கரும்புலிகளாவர்.

1987 ஆம் ஆண்டு யூலை 5 ஆம் திகதி நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டு எம் மக்களுக்கு இடையூறு பல விளைவித்து வந்த சிங்கள இராணுவத்தினரின் முகாமினுள் புகுந்து சின்னாபின்னமாக்கிய முதல் கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் நினைவாக ஆண்டு தோறும் யூலை 5 ஆம் திகதி கரும்புலிநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மிகக்குறைந்த உயிர் இழப்புகளுடன் மிகப் பெரிய சேதத்தை எதிரிகளுக்கு உருவாக்கும் பொருட்டு தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட உன்னதமான போர்வடிவமே கரும்புலித் தாக்குதலாகும். உலக அதிசயங்களுள் எட்டாவது அதிசயமாகப் பதியப்பட வேண்டிய ஒன்றே கரும் புலிகளின் ஈகைச் செயலாகும்.

எரிமலையைச் சுமந்தவண்ணம் எதிரிகளின் பாசறைகளை நோக்கிச் செல்கையிலே என்னென்ன எண்ணுவரோ? யாரை நினைப்பரோ?

தமிழீழக் கனவோடு உடல் சிதறி மண்ணோடு மண்ணாக, காற்றோடு காற்றாக, கடலோடு கடலாக கலந்து நிலைத்து வாழும் கரும்புலிகளின் நினைவுகள் ஆழத் தடம் பதித்து எம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்பது உறுதி. வரலாற்றினை வழிநடத்த வரலாறாகவே ஆனவர்களை நின்றொரு கணம் நினைத்தொரு பொழுது விழி உகுக்கும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து இரும்புப்பூக்களைத் தொழுதெழும் காலமிது.

எமது இனம் எம் மண்ணில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எம் மக்கள் தினந்தினமும் செத்துக் கொண்டிருக்கின்றனர். எமக்காக கரம் நீட்டி உதவவோ குரல் கொடுக்கவோ உலகில் எவருமே எமக்கு இல்லை.
ஆனாலும் எமக்காக நிலத்திலும் புலத்திலும் உறுதியாக கை கோர்த்த வண்ணம் நாம் இருக்கின்றோம். நாமோ நமது பலம். நம்மைச் சுற்றி அசுர பலம் கொண்ட எதிரிகள் பலர் உள்ளனர்.
அவர்களுக்கு பக்கபலமாக இந்த உலகே கண்மூடி வாய்கட்டி காதுகளைப் பொத்தி அநீதியை நிலை நாட்டிட கங்கணம் கட்டி துணை நிற்கிறது.

நிர்க்கதியாக நிற்கும் எம்மக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவும் தற்பாதுகாப்புக்காகவும் மக்களே இன்று ஆயுதமேந்தி பயிற்சிகளும் பெற்று வருகின்றனர். எம்மக்களை இன அழிவிலிருந்து மீட்டெடுக்கும் வலிமை மிக்க ஆயுதங்களாக கரும்புலிகள்.

எதிரிகளைப் புறமுதுகிட்டோடிடச் செய்யும் தீரம். கரும்புலிகளின் காலத்தின் பின்னர் நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். ஒவ்வொரு கரும்புலியின் மரணத்திலும் ஓராயிரம் கரும்புலிகள் உருவாகின்றனர்.
அச்சத்தின் ஆணிவேரை அகத்திலிருந்து அறுத்தெறிந்து விட்டு வீரத்தின் விதையை மனங்களுள் விதைத்த வண்ணம் கரும்புலிகளின் கனவுகளைத் தமது தோள்களின் சுமந்த வண்ணம் இலட்சியப் பயண வீறுடன் புதிது புதிதாக இணையும் கரும்புலிகள் அவர்கள் வீட்டுச் சென்ற பணியை முன்னெடுக்கின்றனர்.

வீரர்களுக்கு நடுகற்கள் அமைத்து தெய்வங்களாகப் போற்றி வணங்குதல் பழந்தமிழர் பண்பாடு. இன்று எம் தேச எல்லைகள் மாவீரரின் நடுகற்களால் வரையப்பட்டு வருகின்றன. காவல் தெய்வங்களை உளமாரப் பூசித்து வீரத்தை வரமாகப் பெறுகின்ற காலமிது.

கரும்புலித் தாக்குதலுக்கு செல்கின்ற ஒவ்வொரு கரும்புலியும் தாயினும் மேலாக தாம் போற்றும் தேசத்தலைவனுடன் ஒரு நாளில் தமது பொழுதுகளை கழிப்பது வழமை.

எவராலுமே அணுக முடியாத தலைவருடன் அருகமர்ந்து கதைபேசி அகமகிழச் சிரித்தாறி ஒன்றாக உணவருந்தி உணர்வுகளைப் பரிமாறி கடைசியில் விடைபெறும் வேளை வரும்போது கட்டியணைத்து வழியனுப்பி வைக்கையிலே கண்ணீரை மறைத்த வண்ணம் தலைவனின் குரல் கணீரென ஒலிக்கும்.
'நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால வருவன்" என.

ஒவ்வொரு கரும்புலியுடனும் சிலபொழுது உளமாரப் பழகி விடைபெற்றுப் பின் அவரின் வீரமரணச் சேதி தன் வீடு வந்து சேருகையிலும் எம் தேசத்தலைவரின் ஆன்மா ஒரு கணம் நடுங்கும்.
விழியோரம் நனையத் துடிக்கும். மறுகணமே உணர்வுகட்கு அப்பாற்பட்ட உரிமைச் சுதந்திரத்திற்காக தானைத் தலைவன் விழிகள் நிமிரும். விழிகள் அனல் கக்க வரலாற்றை வழிநடத்த எம் தலைவன் எழுச்சியுடன் எழுந்து நடக்கின்றான்.
எம்மக்களும் அவன் பின்னால் எழுச்சியோடு அணி திரள்கின்றனர். கரும்புலிகள் ஈகத்தை எண்ணுகின்ற நெஞ்சமெல்லாம் உறுதி கொள்கின்றன.

காலங்காலமாக தமிழ் இலக்கியங்கள் பொழிந்தது போல் ஆண்மைக்கு மட்டுமல்ல, பெண்மைக்குள்ளும் களவீரம் உண்டு எனப் புதிய இலக்கணம் படைத்தவர்கள் புலிகள். காங்கேசன்துறை துறைமுகத்தில் 45 அடி ஆழம் கொண்ட நீர்ப்பரப்பில் நிலை கொண்டிருந்த 6300 தொன் எடை கொண்ட அதிசக்தி வாய்ந்த ராடர்களை பொருத்தியிருந்த நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை தனி ஒரு பெண்ணாகத் தகர்த்தெறிந்த கடற்புலி அங்கயற்கண்ணியின் தீரத்தினை வரலாறு ஒருபோதுமே மறந்திட முடியாது.

அவளைப் போல எத்தனையெத்தனை பேர்.... ஆணென்றும்..... பெண்ணென்றும்... ஒருவர் இருவரா எழுத்தில் ஒரு சில பக்கங்களுள் அடக்குவதற்கு?

நீண்டு கிடக்கும் பட்டியலில் ஒவ்வொரு கரும்புலியுமே நிலையான சரித்திரமாக நிலைத்து நிற்க தொடர்கிறது. ஈழத்தமிழரின் சுதந்திரப் போராட்ட சரித்திரம் இன்னமுமே.... விறு கொண்டே....

களத்துக்கவி புதுவை இரத்தினதுரை

'பகைவனே!
படுக்கையைத் தட்டிப்பார்
கட்டிலுக்குக் கீழே
கரும்புலி இருப்பான்"

எனத் தன் கவிதையொன்றில் கூறியது போன்று காற்றுக்கூட உட்புகாத இடங்களுக்குள் கரும்புலிகள் நுழைந்திருக்கின்றனர் என்பதற்கு அண்மைக்கால நிகழ்வுகளே தக்க சான்றுகள்.

'கரும்புலிகளுக்கு எட்டமுடியாத சிகரங்கள் எதுவும் இல்லை.
தொட்டசைக்க முடியாத சுமைகள் இல்லை"
எனக் கவிஞர் கூறியது போல் 'இல்லை என்றொன்று இல்லை" என நிரூபித்துக் காட்டியவர்கள் கரும்புலிகள்.

தாமில்லாத போதும் என்றோ ஒருநாள் நிச்சயமாக தம் கனவுகள் நனவாகும் என்பதை உறுதியாக அவர்கள் நம்பியதனால்தான் தாயகத்தைக் கனவு கண்டவர்கள் தம் தாயகத்தினை மீட்டு சுதந்திர தேசத்தில் தாம் வாழுமுன்பே விழிமூடினர்.

அவர்கள் ஒவ்வொரு தமிழர்மீதும் தம் ஒப்பற்ற தலைவன் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டதனால் தான் ஈகத்தின் உச்ச வடிவினராக தம் உயிரையே எம் தேசத்திற்காக ஈய்ந்திடத் துணிந்தனர்.
அந்த உயிர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை எம்மாலான தேசத்தொண்டினை ஒவ்வொரு தமிழனும் செய்வதுவேயாகும்.

கரும் புலிகளைக் கண்களால் எம்மால் பார்க்க முடியாது. ஆனால் தவழ்ந்து வரும் தென்றல் போல் அவர்களின் ஈகையினது பெருமையை எம்மால், எம் சுவாசத்தால் உணரலாம். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு தமிழனையும் கரும்புலிகளின் ஈகச் சாவு ஒருகணமேனும் அதிரச் செய்யும்.

சாதாரண மனிதர்கள் போன்றதல்ல விழி மூடிய இந்த மனிதத் துறவிகளின் உன்னத உயிர்கள். விலைமதிப்பற்ற கிடைத்தற்கரிய ஆன்மாக்களைக் கையசைத்து விடைகொடுத்து விட்டு,
காலாட்டிச் சோற்றுப் பிழைப்புக்காக வாலாட்டி வாழ இனியும் முனைவாயோ தமிழா?
இது தமிழன் தலை நிமிரும் கரும்புலிகள் சகாப்தம். எம் முன்னவரின் உயிர்களின் விலைகொடுப்புகளிற்கு எல்லாம் 'பொருள்" ஈட்டிட வேண்டும்.

இன்னுமொரு கரும்புலி தன் இன்னுயிரை ஈவதைத் தடுத்திட வேண்டுமெனில் நிலத்திலும் புலத்திலும் உள்ள உலகத் தமிழரெல்லாம் சுதந்திரத் தமிழீழத்தை தம் உயிர்மூச்செனக் கொண்டு உழைத்திடல் வேண்டுமிங்கு. காற்றில் கரைந்தவர்களுக்கு நடுகல் நட்டு தொழுதெழும் வேளை அவர்கள் கனவுகளை நனவாக்கிட உறுதியெடுத்துக் கொள்வோம்.
காலமாய் ஆனவர்களின் கல்லறைகள் முன்னால் காலமினிச் சொல்லட்டும் ஓர் இனிய சேதி தமிழரின் தாயகம் மீட்கப்பட்டதென....
அதுவரையில் நானும்.... அவர்களும்.... இவர்களும்.... ஒன்று படுவோம!; தாய் மண்ணின் விலங்கொடிப்போம்!

Comments